திருவரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் யார் யாருக்கு எப்படி அருள்கிறார் என்று ஸ்ரீபராசர பட்டர் மிகவும் ரசித்து ஒரு சுலோகம் செய்திருக்கிறார். அதன் பொருள்:
’துயருற்றவர்களுக்குப் புகலிடம்;
பலன்களை வேண்டுவோர்க்குக் கற்பகத் தரு;
எவரும் சகிக்கவொண்ணா பிழை புரிந்தவர்க்கும் அருளும் பொறுமை;
புதிதாக வந்துற்றோர்க்கு வேண்டியன அருளும் காமதேனு;
ஆழ்வார்கள் போன்ற ஞானிகளுக்கு அனைத்துமாய் ஆனவண்ணம்;
எங்களுடைய மிக உயர்ந்த தனம்;
திருமகளாம் பெரிய பிராட்டியாரின் கண்ணாக நிற்பவர்;
பூதேவியாம் புவியின் பிராணன்;
அந்த ஸ்ரீரங்கநாதரை அன்புடன் சரணடைவோம்;
அவர் நெடுநாள் நீளவும் அரங்கத்தே அருள்செய்து
என் போன்றோரைச் சுகப்படுத்த வேண்டும்;
அவருக்குக் கைங்கரியம் செய்யும் பேற்றையும்
நெடுநாள் நீள தந்தருள வேண்டும்.’
என்று கூரத்தாழ்வானின் குமாரரான ஸ்ரீபராசர பட்டர் நமக்கெல்லோருக்கும் வேண்டிப் பிரார்த்தனை செய்து காண்பித்திருக்கிறார். நமக்காக இல்லாது போனாலும் ஸ்ரீபராசர பட்டரின் சொற்களுக்காகச் செவி சாய்ப்பவர் அன்றோ அரங்கன்!
நினைத்தால் மிகவும் ஆயாசமாய் இருக்கிறது. நிலைமைகள் மாறாதா ரங்கா என்று தாபம் எழுகிறது. ஆனால் அவனுக்கே தெரியும் எது எப்பொழுது எங்கே என்பதெல்லாம். அது புரிகிறது. ஆனாலும் சில நேரத்தில் ஏற்படும் கலக்கம்..! ..
'வன்பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண்ணுலகின் மனிசர் உய்யத்
துன்பமிகு துயரகல அயர்வொன்றில்லாச்
சுகம் வளர அகமகிழும் தொண்டர் வாழ
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்
இன்பமிகு பெருங்குழுவு கண்டுயானும்
இசைந்து உடனே என்று கொலோ இருக்கு நாளே.'
(பெருமாள் திருமொழி)
இப்படிக் கேட்பதற்கு எனக்குத் தகுதி கிடையாது என்றாலும் உள்ளத்திற்கு அது புரிய மாட்டேன் என்கிறது.
அரங்கர் பதில் கேள்வி போடாமல் என்று இருந்திருக்கிறார்? நாம் அவரிடம் என்று கொலோ என்று கேட்டால் அவர் பதிலுக்கு, ‘ஏன்? கோயிலில் மட்டும்தான் நாம் இருக்கிறோமா? அனைத்து உயிரினுள்ளும் உள்ளுயிராய் உன் இதயத்திலும் எப்பொழுதும் இருந்துகொண்டு தானே இருக்கிறோம்? அந்தர்யாமியாய் என்றும் உள்ளத்திலேயே இருக்கும் நம்மைச் சேவித்து ஈடுபட என்ன தடை?’
நியாயம்தானே அவர் கேட்பதும். என்ன ஒன்று. .. அவர் எல்லோரையுமே ஆழ்வார் என்று நினைத்துக் கொண்டு விடுகிறாரோ என்று தோன்றுகிறது. அதுவும் நல்லத்துக்குத்தான். ஏனெனில் அவர் ஆழ்வார் நினைவாகவே இருப்பதால் நாமும் அப்படியே ஒட்டிக்கொண்டு அருள் பெற வாய்ப்பு ஏற்படுகிறது. இல்லையென்றால் நம்மை முழு கவனத்துடன் பார்த்தால், நம் கணக்கு என்னாவது!
‘அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே !’
(திருச்சந்தவிருத்தம்)
என்ன வார்த்தைகள்! முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார். உலக இயலே தம்மை என்றும் அணுகாதபடி அதற்கு நேர் எதிர்த்தட்டான முத்தியே வடிவெடுத்தவராய் இருக்கும் முத்தனார். தம்மை நினைத்தோர்க்கு, தம்மை அணுகினோர்க்கும் தம் இயல்பிலேயே முத்தி விளையும்படியான இயல்புடைய முகுந்தனார். நாமாக அனுமதிக்க மாட்டோம் என்பதறிந்து நாம் என்பது உருப்படுவதற்கு முன்னமேயே நம்மைக் காக்க வேண்டி நம்முள் உள்புகுந்து உறைபவர். அப்படி இருக்க எதனால் இடர்ப் படுகிறாய் ஏழை நெஞ்சே! என்று ஆழ்வார் கேட்கிறார். நாமோ திருதிரு என்று விழிக்கிறோம். பார்க்கிறார் ஆழ்வார். அய்யோ பாவம்! இவர்களின் கதி என்ன? இவர்களுக்கு அரங்கத்தை விட்டால் வேறு கதி என்ன? இவர்களைத் திடீரென்று யோகத்தில் அமர்ந்து இதயத்தில் அந்தர்யாமியை தர்சனம் செய்யுங்கள் என்றால் என்ன செய்வார்கள்! என்று நம்முடைய விண்ணப்பத்தைத் தம்முடைய விண்ணப்பமாக வெளியிடுகிறார்.
‘பொன்னிசூழ் அரங்கம் மேய பூவை வண்ண மாய கேள்!
என்னதாவி என்னும் வல்வினையினுள் கொழுந்து எழுந்து
உன்னபாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர்
மன்ன வந்து பூண்டு வாட்டம் இன்றி எங்கும் நின்றதே.’
(திருச்சந்தவிருத்தம்)
உண்மைதான். உள்ளுயிராய் நீ நிற்கும் இருப்பு என்றும் இதயத்தில் திகழ்கிறதுதான். ஆனாலும் பொன்னிசூழ் அரங்கம் வந்து நின்பாதம் தரிசனம் செய்து, அடியார்கள் குழாங்களாய்க் கூடி உன்னைக் கொண்டாடும் போதுதானே வாட்டம் நீங்குகிறது, அல்லவா! ஆழ்வார் சொல்லும் போதே அரங்கனுக்கும் பெரும் உவகையாகிச் சிறப்பான ஒளித்திகழ்ச்சி அவனிடத்தில் ஏற்படுவதைக் கவனிக்காமல் இருப்பாரா ஆழ்வார்? ‘நீ என்னதான் வம்பு பேசினாலும் உனக்கும் எது உவப்பு என்பதைக் கவனித்து விட்டேன்’ என்று அரங்கனுக்கே குறிப்புணர்த்துவது போல் சொல்கிறார் - ‘உன்னபாதம் என்ன நின்ற ஒண்சுடர்க் கொழுமலர் மன்ன வந்து’ என்று.
அவர் உள்ளபடி ஆழ்வார்; நாம் உலகியலிலே ஆழ்வார் என்னும் வித்யாசத்தைக் கவனத்தில் அரங்கன் கொள்ளாதவரை நமக்கும் நல்லதுதானே!
'முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே!'
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment