Friday, October 22, 2021

அழகான சுலோகம்

ஸ்ரீமந் மஹாபாரதத்தில் இல்லை இந்த சுலோகம். எனினும் வழக்கமாக அநுசந்தானத்தில் இருக்கிறது என்கிறார் ஸ்ரீ ஸ்ரீநிவாசராகவன் சுவாமி. ஆனால் அழாகான சுலோகம். பகவந் நாமங்கள்தாம் அநேகம். அவற்றில் பிரதானம் மூன்று என்று குறிப்பிடப்படும் மூன்று நாமங்களையும் ஒருசேர அநுபவிக்கத்தரும் சுலோகம் இது. 

பலதரப்பட்ட குணங்களாகிய மாயையை வனமாலை என்று கழுத்தில் அணிகிறார். ஓஜஸ், ஸஹஸ், பலம் இவற்றால் ஆன பிராணன் என்பதையே கதையாகத் தரிக்கிறார். காலரூபமே சார்ங்கம் என்னும் வில். நீர்த் தத்துவமே அவருடைய சங்கம். தேஜஸ் தத்துவமே சக்கிரம். ஆகாய தத்துவமே அவருடைய குற்றமற்ற நந்தகம் என்ற கத்தி. உயிர்களைக் காப்பாற்றும் படியும், ஜீவர்களின் குற்றங்களைக் கண்டு அவற்றைப் பரம்பொருள் கைவிட்டு விடாதபடி அவன் அருளுக்கும், தயைக்கும், க்ஷமைக்கும் இலக்காகும்படியும் செய்தருளும் தாய்மை என்னும் ஸ்ரீ என்னும் தத்துவம் என்றும் தன்னை விட்டு நீங்காமல் இருக்கும் ஒரு பெரும் தத்துவத்தின் பெயரோ நாராயணன், விஷ்ணு, வாஸுதேவன் என்பதாகும். ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணு: வாஸுதேவ: என்று மூன்று பகவந் நாமங்களையும் திருமகள் முன்னின்றருள்வதாக அநுசந்திப்பது சிறப்பு. அந்த பகவத் தத்துவமாகிய வாஸுதேவன் நம்மை நன்கு காக்கட்டும்.
இத்தகைய உன்னத அர்த்தம் நிறைந்த சுலோகம் வழிவழி அநுசந்தானத்தில் வந்துள்ளது நமக்குப் பேறு. 

வனமாலீ கதீ சார்ங்கீ சங்கீ சக்ரீ ச நந்தகீ |
ஸ்ரீமாந் நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது ||
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment