Thursday, October 21, 2021

எழுதாமப் போனாலும் பிள்ளையார்தானா..!

பரவாயில்லை. ஒன்றும் எழுதாமல் பேசாமல் இருந்தாலும் நன்றாகத்தான் இருக்கிறது. தேவையில்லாமல் பிறருடைய அழுக்காறுக்கும், கோபத்திற்கும், மறைமுகத் தாக்குதல்களுக்கும், குறைந்த பட்சம்...உள்குத்து சாடைமாடைச் சாடல்களுக்கும் ஆளாகாமல் நிம்மதியாய் இருக்க முடிகிறது. நாமும் எதையாவது சமயத்தில் உளறிவைக்காமல் தப்பித்துக் கொள்ளவும் முடிகிறதுதான். எழுதுகிறவருக்குப் பல எதிரிகள், பெரும்பாலும் மறைமுகம் (பேய்நடமாட்டங்கள் எக்ஸ்ட்ரா..). எழுதாதவருக்கு அனைவருமே நண்பர்கள். உலகமும் சுகமான உலகம்.

ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வார் - ஒரு பறவை வாயில் மீன் எதையோ கவ்விக்கொண்டு பறந்தது. அதைத் துரத்தி ஏகப்பட்ட பறவைகள் நோக அடித்தன. ஒரு நிலையில் பார்த்தது பறவை - அடச்ச..என்று வாயில் கவ்விய மீனைப் போட்டு விட்டது. உடனே அத்தனை பறவைகளும் அந்தப் பறவையை நிம்மதியாய் இருக்க விட்டுவிட்டு விழுகின்ற மீனைப் பிடித்து, அவற்றுக்குள் துரத்தியபடிப் போய்விட்டன. இந்தப் பறவை யோசித்தது - அடடா! இது முன்னரே தெரியாமல் போயிற்றே! அப்பொழுதே இதைத் தூக்கி எறிந்துவிட்டு நிம்மதியாய் இருந்திருக்கலாமே! - என்று. அந்தக் கதையைப் போல்தான்  இருக்கிறது ஃபீலிங்..:-)

ஆனால் பிள்ளையாரப்பா! இந்த ஞானம் நிலைத்து இருக்குமா தெரியவில்லையே எனக்கு. ஓரக்கண்ணால் சிரிக்காதே! உனக்குப் பொழுது போக வேண்டும் என்றால் என்னை மாட்டிவிட்டு எதிலாவது ஓட விடுகிறாய். நீ மட்டும் அலேக்காக ஞானக் கனியை அலுங்காமல் நலுங்காமல் பெற்று இருக்கிற இடமே ஸ்வஸ்தானம் ஸ்தாபயாமி என்று ஜாலியாக இருக்கிறாய்.

அண்ணா! நடை சாத்தணும். கொஞ்சம் நேரம் இருப்பேளா?

இதோ கிளம்பிட்டேன்.....

தெரியுமே....குற்றம் சொன்னதுமே எப்படியோ ஆளைக் கழட்டி விட்டுவிடுவாயே....இவர் எத்தனையோ நாள் லேட்டா சாத்தறவர், இன்னிக்குன்னு அவர் மனத்தில் புகுந்து...என்னைத் துரத்துவதற்கு வழி....இல்லே?

அண்ணா! இன்னிக்கு...ஸ்பெஷல் பிரசாதம்...இந்தாங்கோ....முன்னாடியே வந்திருந்தா பெரிய அர்ச்சனையெல்லாம் பார்த்திருக்கலாம்.....

சிரிக்காத சிரிக்காத..... இந்த மழுப்பி மறக்கடிக்கற வேலையே வேண்டாம்.... சரி வருகிறேன்...அடுத்த தடவை வரும் போது மகாபாரதத்துல சில கேள்விகள்...உங்கிட்டதான் கேட்கணும்....இந்த மாதிரி...இது...அதுன்னு ஆளைத் துரத்தாதே....

கிலம்புவதற்குத் திரும்பினேன்....

அன்னிக்குப் பார்த்துக்கலாம்......

குரல் கேட்டுச் சட்டென்று திரும்பிப் பார்த்தேன்.....பிள்ளையார் குறும்பாகச் சிரித்தார் கண்களால்.

வெளியில் வந்து கொண்டிருந்த இரண்டு பேர் தமக்குள் பேச்சு.

விட்டு விடுதலை ஆகிநிற்பாய் அந்தக்
காணாமல் போன
சிட்டுக் குருவியைப் போலே...

என்று என் உள்ளத்தில் வரிகள் மிழட்டின....

***

No comments:

Post a Comment