ஜிகுப்ஸு எப்பொழுதாவதுதான் வருவார். ஆனால் வந்தாலும் நேரடியாக எதற்கும் பதில் சொல்ல மாட்டார். சொன்னாலும் நமக்குப் புரியாத மாதிரி ஏதாவது சொல்ல வேண்டியது. அதை விளக்கம் கேட்டாலும் பதில் பலசமயம் கிடைக்காது. கிடைத்தாலும் ஏன் கேட்டோம் என்பது போல் இருக்கும். ரொம்ப நாளாக வரவில்லை. நல்லதாகப் போயிற்று என்று நானும் கொஞ்சம் நிம்மதி. ஆனால் அவர் திடீரென வந்ததும் ஒரு குஷிதான் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆமாம். சரி ஏதாவது சத்விஷயமாகக் கேட்போமே என்று
'ஆன்மிகக் கதை ஒன்று சின்னதாகச் சொல்லுங்களேன் என்றேன்.
விரல் நுனியைக் காட்டி இவ்வளவு சின்னாதா என்றார். சரி ஆரம்பிச்சாச்சு என்று பேசாமல் இருந்து விட்டேன். அவராக ஆரம்பித்தார்.
ஒரு ஊரில் ஒரு ஆஸ்பத்திரி. இல்லை அந்த ஊர்தான் ஆஸ்பத்திரி. அந்த ஆஸ்பத்திரிதான் உலகம். (பின்றார்... கடவுளே ஏன் கேட்டோம்..) அந்த ஆஸ்பத்திரியில் பைத்தியம், வியாதி, ரோகம், ரணம், புண் என்று சர்வ கஷ்டங்களும் ஒவ்வொருவர் ஒவ்வொரு கஷ்டம் சிகிச்சை. ஆனால் ஆஸ்பத்திரியை ஒட்டின வராண்டாவில் அத்தனை மருத்துவர்களும் தலையில் கைவைத்துக் கொண்டு வெறுத்துப் போய் நின்று கொண்டு பரிதாபமாக உள்ளே வேடிக்கை பார்க்கின்றனர்.
(ஏன்?
குறுக்கே பேசாதே..
வேண்டியதுதான் நமக்கு)
எந்த நோயாளிகளும் தங்களுக்குத் தங்கள் தங்கள் நோய் தீர பக்குவம் கருதித் தரப்பட்ட மருந்துகள் எதையும் உண்ணாமல் எல்லாரும் வரிந்து கட்டிக்கொண்டு இந்த மருந்துதான் மருந்து அது ஒன்றும் இல்லை மண், எங்க டாக்டர்தான் டாக்டர், உங்க டாக்டர் வெறும் டர், இந்த மருந்தை எப்படிச் சாப்பிட வேண்டும் தெரியுமா, சாப்பிட்டா அதன் விளைவு என்ன தெரியுமா, என்றெல்லாம் ஒரே வாய் ஓயாமல் பேச்சு, சண்டை, சமயத்தில் கைகலப்பு - ஆனால் அத்தனை பேருக்கும் ஒரே ஒற்றுமை - யாரும் தங்கள் நோய்க்கு மருந்து உண்ணாமல் வியாதியால் துடித்துக் கொண்டே இவ்வளவு சண்டை, ரகளை வாக்குவாதம்.
(அப்புறம்?
விழுப்புரம்
இல்லை.. என்ன ஆச்சு
குழந்தை அழுதுது க்ரைப் வாட்டர் கொடுக்கச் சொல்லு...
அடடா.... கதையின் முடிவு?
அவள் ஒரு தொடர்கதை, கதை ஒரு அவள் தொடர் அவன் தொஇடர் எல்லார் தொடர்....
மீண்டும் இதைத் தொடர்ந்து சொல்றீங்களா
மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு
மௌனமெ மேல்
அதைத்தான் முன்னமேயே சொன்னேன், நீதான் கேட்ட. அப்ப்றம் என்னை வாயை மூடு என்கிறாய்.
சரி... நேராகப் பதில் சொல்லாதவர்களிடம் என்ன மெனக்கிட்டால் என்ன.. பலன் இல்லை. என்று மௌனமாக வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன். அநேகமாக அவர் வந்தவழியே போயிருப்பார் என்று நினைத்தவனுக்கு ஆச்சரியம்.
என்ன பார்க்கிறாய்? என்றார்.
சொன்னா பதில் கிடைச்சுடுமா? சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்காப் பணம் என்று வாங்கிக் கட்டிக்கணும்.
பதில் கிடைச்சாத்தான் கேள்வி கேட்பேன் என்று நினைப்பது வெறும் வியாபாரத்தனம். கேள்விபாட்டுக்குக் கேட்டுடணும். பதில் அது எப்ப கிடைக்குதோ கிடைக்கும். கேள்வி பிறந்தது அன்று.. நல்ல பதில் கிடைத்தது இன்றூஉ..ஊஉ
(அய்யொ... இதுல பாட்டு வேறயா...)
நீ என்ன பொட்டிக்கடையா நடத்தற? பெரிய அறிவு விசாரம் என்று சொல்லிண்ட? எல்லாம் லாபமா நஷ்டமா வியாபாரம்தானா? உண்மையான அறிவு நாட்டம் கிடையாதோ?
(என்னை மூக்குல குத்தணும் இன்னிக்கு ஜிகுப்ஸுக்கு. அதான் இந்த போடு போடுது..)
சரி.. பதில் வந்தா சரி வரலை என்றாலும் சரி நான் கேட்டு வைக்கிறேன்.
பரவாயில்ல இப்பத்தான் முதல்படி பாஸ் பண்ணிருக்க... குட் பாய்..
(தலையெழுத்துடா சாமி)
கேள்வி - அந்தக் கதையின் தொடர்ச்சி உண்டா இல்லையா? அந்தரத்துல தொங்குது. வேண்டாம் எனக்குப் பதில் வேண்டாம். கேட்டுட்டேன்.
மௌனம்
,மௌனம்
ஏதோ சலனம்...
உண்டு.
நன்றி.
ஏன் நீ கொஞ்சம் முசுடோ?
(யாரு? நானு? தேவைதான்)
அந்த மருத்துவர்கள் எல்லாம் ரிஃப்ரெஷிங் ரூம்ல போய் ட்ரஸ் சேஞ்ஜ் பண்ணிக்கப் போவா. அங்கப் பார்த்தா எல்லா மருத்துவர்களின் முகங்கள் போன்ற முகமூடிகளைக் கழட்டி வைத்துவிட்டு ஒரே ஒரு மருத்துவர்தான் இருக்காரு. அவருதான் இத்தனை முகமூடிகளை அணிந்து பல மருத்துவர்கள் போன்று அவரவர்களுக்கு பக்குவம் அறிந்து மருந்து கொடுக்கறது. மருந்துண்ணாமல் வியாதிக்காரர்கள் சண்டைக்காரர்கள் ஆயிட்டாங்களே என்று கவலைப் படுவது எல்லாமே ஒரே ஆளுதான்.
அவர் பேரு?
யாருக்குத் தெரியும்?
எப்படி இருப்பார்?
யாருக்குத் தெரியும்?
(சரி ஆரம்பிச்சுடுச்சி.... குலைகுலையா முந்திரிக்கா...கூடகூட சுத்திவா...)
...........
மௌனம்
.......
எனி மோர் க்வெஸ்சன்ஸ்?
(தமிழ்லயே வெளங்குது. இதுல இ ந்கிலீஷ் வேற)
பேருன்னு ஒன்று உண்டா இல்லையா? வேண்டாம் பதில் வேண்டாம். வெறும கேள்வி.
.........
மௌனம்
பரவாயில்லை... ஆளைக் காணோம்... இனி வரமாட்டார் என்று நிம்மதியாய் இருந்ததுதான் எவ்வளவு பொய்யாய்ப் போயிற்று!
ஆனால் பட்ட அவஸ்தையினால் கப்சிப் என்று இருக்க முடிவு செய்து (விதி எங்கே விட்டது!) கண்டு கொள்ளாதது போல் மும்முரமாக வேலை, பிஸி என்று இருந்தேன். ஓரக்கண்ணால் போய்விட்டாரா என்று கவனம் கொண்டபடி.
அவருக்கு நான் இருக்கிறேனா என்ற கவலையே இல்லை போலும்.... ஏதோ தாம் மட்டும் தனியாய் இருப்பது போல் ஜிகுப்ஸு நடந்து கொண்டது எனக்குக் கொஞ்சம் எரிச்சல்.... நானும் அப்படித்தான் காட்டிக் கொள்கிறேன். ஆனால் நமக்கு அப்ப்டி ஒருவர் காட்டி நடந்தால் என்ன எரிச்சல் வருகிறது. அதான் அகங்காரம் ஆயிரம் முளை என்பார்கள்! பேசாமல் பொறுத்துக் கொண்டு அப்படியே இருந்திருக்கலாம்.... ஆனால் அவரிடமும் பேச்சு கொடுக்காமல், நானும் சுதந்திரமாக நடந்து கொள்வது போல் பாவனை பண்ணி, திடீரென எதற்கோ அதிசயப்பட்டு விய்அங்கோளாகப் பேசுவது போல் உரக்க விளிக்குரலித்தேன்.
என்ன நீ இருக்கிறாய்... என்னைக் கவனிக்காமல் இருக்கிறாய்... அதை எனக்குக் காட்ட வேண்டி இப்படி ஒரு பாவனை ஆக்டா?
மீன் தொட்டியை முழுக்க ஜலத்துடனும் மீன்களுடனும் தொபீர் என்று தரையில் போட்டு உடைத்தது போன்ற திடீர் அசௌகரிய எரிச்சல் அசிங்க ஏமாற்ற குப் என்னும் வியர்ப்பு....
யூ ஸீ யூகாண்ட் கெட் ஆன் வித் ஸம்படி அட் ஆல்... (எனக்குள்தான்)
கேட்கணும்னா நேரக் கேளு.. அதைவிட்டு உள்ள தொட்டிக்குள்ள மீனைத் துளாவற வேலை வேண்டாம்.
இந்தப் பூர்ண சங்கடம் இதுக்கு எப்படி தெரியறது... ஒவ்வொரு எண்ண அசைவும்... உருவகம், கருத்து ஒலி ச ச...
ஆமாம் கேட்கணும். ஆனால் சும்மா எக்குத்தப்பா முக்குல குத்தறதே வழக்கம்னா கேட்க முடியாது. உங்களுக்குத் திருப்தி என்றால் இந்தாருங்கள் மூக்கு முகரை எல்லாம் எவ்வளவு வேண்டுமோ குத்தி மகிழ்ந்து செல்லுங்கள்.
போன பிறவியில் நீ பொல்லாத மாமியார்கிட்ட மருமகளா மாட்டிண்டு இருந்திருப்ப போல இருக்கு...
ஓகே தாங்க்ஸ்... எனி மோர்?
எனிமா கொடுக்காத ஆள் மாதிரி ஏன் உர்ர்னு வச்சுக்கற எப்பவும் மூன்சியை...?
சாரி.... படைத்த பிரம்மாவைக் கேட்கணும்...
அப்படீன்னா நீ எவல்யூஷன் தியரியை ஏற்கறதில்லையா? கிரியேஷனிஸ்ட் தியரியா?
அப்படிப் பேச்சுக்குச் சொல்றது...படைத்த பிரம்மா என்றால் கிருயேஷனிஸ்ட் வகையிலும் சேராது, எவல்யூஷன் தியரிக்கும் முரண் ஆகாது.
அப்படின்னா உன்னை மாதிரியே நிச்சயம் இல்லாத மனப்பான்மையா?
சரி நன்றி. என் வேலையைப் பார்க்கிறேன். உங்களைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சொல்ல வேண்டாம். நீங்கள் தொடர்ந்து உங்கள் திருப்பணியைச் செய்யலாம்.
சரியான தொட்டால் சுருங்கி....
........
சரி போன தடவை ஆன்மிக விஷயம் கேட்டியே.. சொல்லலாமே என்று பார்த்தேன்.....
கொக்கி ஜாக்கிரதைஐஐஐஐஅ... விதி வலியது... ---------- என்ன சொல்லுங்கோ?
நோ பேச்சு....
நானும் நோ பேச்சு....
இரண்டு பேர் நிம்மதியானவங்க.....
யார்னு சும்மா பார்த்த்தேன்... கேட்டா ராங்கிக்கும்
ஒருத்தனுக்குப் பிரச்சனை தெரியாது அதுனால நிம்மதி. மற்றவன் பிரச்சனை தீர்ந்தவன் அதுனால நிம்மதி. மற்ற ஆள் விஷயம் எல்லாம் ஒரே நாற்றம் தாங்கலை....
எங்க சொல்றீங்க?
ஆச்பத்திரியில்தான்.... நோய் என்னன்னு சந்தேகம் வராதவன் நிம்மதியா இருக்கான். அவன் பாட்டுக்கு அவன் வேலையைப் பார்க்கிறான். பூச்சி பறக்கிற விஷயம்னா உஷாரா தள்ளிப் போய்ட்றான். மண்டையை உடைச்சுக்கறது கிடையாது. அதுனால இதுவா அதுவான்னு உளைச்சல் கிடையாது.
அப்படியே இருந்தான்னால் அது மொத்தமா உயிரை வாங்கிடுமே....?
தெரிஞ்சுண்டா மாத்திரம் உயிர் வாங்காம திருப்பிக் கொடுத்துடுமா?
இல்லை... அது சரி....
தெரிஞ்சுக்காதவரைக்கும் நிம்மதி, தெரிஞ்சுக்கத் தொடங்கினா என்ன வியாதி ஏன் வந்துது என்ன மருந்து என்ன பத்தியம், இந்த சிஸ்டமா அந்த சிஸ்டமா, எதுல குணம் பூர்ணம், - இந்த விசாரமே வாழ்க்கைன்னு ஆகி முதலில் இருந்த அந்த அஞ்ஞான சுகமும் போய், தெரிஞ்சவனுக்குத் தோலெல்லாம் அரிப்புன்னு கதையாகி...
ஐயய்யோஒ ஆமாம்... சரி அது யாரு மற்றவன்?
அதான் குணமானவன். அவன் பாடும் நிம்மதி பிரச்சனை என்னன்னு தெரிஞ்சு குணமாகி மறைஞ்சு போச்சு, இனிமே மருந்து, சிகிச்சை ரணம் புண் சீழ் கட்டு நாற்றம் வலி துடிக்கிறது - எதுவுமே கிடையாதே முடிஞ்சு போச்சு....இந்த நடுவுல தெரிஞ்சு குணமாகாம, கட்டு கட்டிண்டு, மருந்து பத்தியம் அறுவை சிகிச்சைன்னு போராட்றானே அவனோட பிரச்சனைதான் நாற்றம் பிடுங்கும்...
சரி.. எதாவது ஆஸ்பத்திர்யில வேலைக்குச் சேர்ந்திருக்கீரா? ஒரே டாக்டர், பேஷண்ட் மருந்து பேச்சா இருக்கே...
என்னது நீ எந்த ஆஸ்பத்திரியில அட்மிட் ஆயிருக்கியோ அந்த ஆஸ்பத்திரியிலதான் நானும் இருக்கேன்... என்னமோ நீ ஆஸ்பத்திரியைப் பார்காதவன் மாதிரி பேசற?
நான் எங்க...
இந்த உலகம்தான் ஆஸ்பத்திரி.....
அப்ப....
ஆன்மிகமா ஏதாவது சொல்லுன்னு கேட்கற... சொன்னா யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு புரிஞ்சுக்கற....
ஓ ஒஇது ஆன்மிகமான பொருளா?
எது யானைக்கு அர்ரம் குதிரைக்கு குர்ரம்னு சொன்னதா? நீ வேற....
கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டேன். உனக்கு வேண்டும் உனக்கு வேண்டும். நல்ல வேணும்...
ஜிகுப்ஸுக்கு என்ன? கண்ணை மூடிக்கொண்டு சீட்டி அடித்துக்கொண்டிருக்கிறது !
*
உண்மையிலேயே பயங்கர வேலை. இதில் சிலவற்றைப் படித்து முடிக்க வேண்டும். சில ஏரியாக்களில் அடுத்த கட்ட நகர்வுகளை யோசிக்க வேண்டும். புதிய ஃபார்மேஷன்ஸ் தோன்றும் போது பழைய நிச்சயமான தத்துவ அமைப்புகள் புதுவிதத்தில் பூத்து, தாம் இதுவரையில் அந்த அர்த்தப்பாட்டில்தான் இருந்து கொண்டிருந்ததாகவும், இவ்வளவு நாள் வேலை மெனக்கெட்டுப் படித்துத் தோண்டிய நான் கடைசியில் இதைத் தவற விட்டுவிட்டது போன்றும் இந்த நாட்டியம் இருக்கிறதே, அது மிகவும்... என்ன சொல்வது.... 'கடுப்பேத்தறார் யுவர் ஆனர்' தான்.
இந்தக் கவலையில் எப்பொழுது ஜிகுப்ஸு வந்தது, ஏன் ஒன்றும் சத்தமே காணவில்லை, அதிசயமாக அமைதியாய் இருக்கும் ஜிகுப்ஸு இயற்கைப் பிழை அல்லவா?
'என்ன பேச்சே காணவில்லை?' (பெருகியோடும் கரிசனத்தில் உள்ளே சன்னமாக ஒரு எச்சரிக்கை விளக்கு மினுமினுவென்று சிமிட்டியதை கவனிக்கவில்லை.
இல்ல ஒன்றுமே புரியல்ல.......
என்னது...! உனக்கு......? அப்படி என்ன புரியல்ல....
உனக்கு எதுக்கு அது? சொல்ல ஆரம்பிச்சா கடுப்பேத்தறார் யுவர் ஆனர் என்று வடிவேலு கணக்கா கத்துவ....
(எனக்கு இந்த மாதிரி 'ஈவு மிச்சம் எல்லாம் கீழே போடுவதெல்லாம்' பழகிவிட்டது.)
சரி. அதுனால என்ன.... உனக்குப் பழகிப் போனதுதானே... சும்ம சொல்லு...
ரியலி? பரவாயில்லியே நீ கூட கடைசியில்... ஹி ஹி..
என்ன புரியல்ல?
ஆஸ்பத்திரிதான்.
ஓ என்ன பண்றார் வாசுதேவ கிருஷ்ணா எம்பிபிஎஸ்?
யார் அது?
(யார் அதா? யோசிக்காம ஏதோ வாயால கேட்கறதா?) அதான் அந்த ஒரே ஒரு டாக்டர் என்று சொன்னியே... அவர் பேரு கூட....
உனக்கு என்ன பிரமையா? அவர் பேர் என்ன உருவம் என்னன்னு தெரியாதுன்னு சொல்றேன்.... அப்பறம் நீயா ஒரு பேரைச் சொல்லி....
ஹலோ ஹல்லோ.... சும்மா உடக்கூடாது..... அவர் டேபிளில் கூட ஒரு பழைய நேம் ப்ளேட் இருந்தது வாசுதேவ கிருஷ்ணா எம்பிபிஎஸ் என்று... அப்படீன்னு சொல்லலை?
உனக்கு என்ன பைத்தியமா? அவர் டேபிளில் ஒரு பழைய நேம் ப்ளேட் இருந்தது என்று சொன்னேன். உடனே அதுதான் அவருடைய பேரா? ஏன் பேப்பர் எல்லாம் பறக்காம இருக்க அவர் ஏதோ கையில கிடைத்த டேபிள் வெயிட்டா அதைப் பயன்படுத்தலாம். அங்க ஏதோ கிடந்திருக்கும்... சரி தூரப் போட வேண்டாமே என்று.... இதோ பார் ஒன்றை முடிவு செய்வதாய் இருந்தால், அனுமானத்துல தவிர்க்கவே முடியாத ஒன்றிற்கொன்று தொடர்பு என்று இருக்கணும். அப்படி இருந்தாத்தான் ஒன்றை வைத்து ஒன்றை அனுமானிக்க முடியும்....
இல்லை... இப்ப...
நீ என்ன பனியன் போட்டிருக்க?
எதுக்கு அது இப்ப?
சொல்லு
டாண்டக்ஸ்
உடனே உன் பேர் டாண்டக்ஸ் என்று யாராவது சொன்னால் எப்படி இருக்கும்? யாராவது தன் பேர் இல்லாம ஒன்றைத் தன் உடல் மீதே போட்டிருப்பாரா?
ச் யூ ஸீ எதுக்கும் எதுக்கும்....?
நீயே யோச்சிச்சுப் பாரு நீ கேட்கறது.... அங்க டேபிளில் பழைய கட்டை ஒன்று கிடந்தது நேம் பிளேட், அதுல பேர் ஒன்று இருந்தது என்று சொன்னால்... உடனே நீயாக.....
சரி விடு..... எப்படியோ போகட்டும்....
நீதான் சொல்லி ஆரம்பிச்சே... கடுப்பாக மாட்டேன் என்று....
கடுப்பெல்லாம் ஆகலை.... ஆனால் பூடகமா இருக்கணும்னு ஏதோ சொன்னா....
பூடகம் ஒன்றும் இல்லப்பா... நான் பார்த்த்தை அப்படியே சொல்றேன்... அவ்வளவுதான்... இன்னிக்குப் பார்த்தா இன்னும் தலையைச் சுத்தறது... சொன்னா நீ உடனே நான் பூடகமா சொல்றேன் என்று சொல்வாய்....
என்னது அது?
சில நோயாளிகள் குணமாகிப் போனாங்க. சரி என்று அவங்களைப் பின் தொடர்ந்து போனேன்... பக்கத்துல அதே பில்ய்டிங்க்லதான் ஒரு இடத்துல இருக்காங்களாம்... அவங்க தங்க இடத்துக்குப் போகும் பொழுது கதவைத் திறக்கிறாங்க.... அங்க உள்ள பார்த்தா இவங்க எந்த நோய் நொடியும் இல்லாம எங்கயும் நகராம கொள்ளாம இவங்களே இருக்காங்கப்பா.... அந்த ஆட்களைப் பார்த்ததும் இந்த குணமாகிப் போன ஆட்கள் காணாம மறைஞ்சு போயிட்டாங்க. அவங்க உள்ள இருந்தவங்க என்னடான்னா தங்க என்னிக்குமே நோய்வாய்ப்பட்டதாவோ குணமானதாவோ எந்த வரலாறும் இல்லாம அப்படியே கண்டின்யூ ஆறாங்க?
இல்லை இங்க ஒரு கேள்வி... நீங்க இரண்டு பேரையும் ஒரே சமயத்துல பார்த்தீங்களா? உள்ள இருந்த ஆளு, வெளியில் இருந்து குணமாகி உள்ள நுழைஞ்ச ஆளு.. இரண்டு பேரையும்?
இல்லை... இவங்க மறைஞ்சப்பறம்தான் உள்ள இருக்கற ஆள் தெரிஞ்சார்... ஆனால் நிச்சயம் வேற ஆள் கிடையாது.. இது மாதிரி நான் தொடர்ந்த ஒன்றிரண்டு பேர் விஷயத்துலயும் இப்படித்தான்....
அப்ப என்ன சொல்ல வர?
இல்லை என்ன தோணுதுன்னா.... உண்மையில நோய்வாய்ப்பட்டவங்க, கீழ வார்டு, மருத்துவம், மருந்து சிகிச்சை என்று எதுவுமே கிடையாதோ? ஆனால் ஏன் அவ்வளவு துல்லியமா எல்லாப் பிரச்சனையும் அப்படி அப்படியே நடக்குது?
நல்ல வேளை... நோயாளிகள் எல்லாம் பலபேர் கிடையாது... ஒரே நோயாளிதான்.. அவருதான் பல வேடங்களில் நோயாளிகளா நடிக்கிறாரு என்று சொல்வியோ என்று நினைச்சேன்...
இல்லையே அதை ஏன் கேட்கிறே? சரி உள்ளதானே இருப்பாங்க என்று நானா கதவைத் திறந்து பார்த்தா....
?
ஒன்றுமே இல்லாத வெட்ட வெளியா இருக்கப்பா!
ஆள் இல்லையா?
ஆளா சுத்தமா வெட்ட வெளி
இது என்ன இது ஜிகுப்ஸு... ஒன்றுமே புரியல்ல....!
அதான் நானும் ஒன்றும் புரியாம அப்படியே வந்து சாஞ்சிட்டேன்....
***
No comments:
Post a Comment