Friday, October 22, 2021

புத்தகங்கள் பற்றிய நினைவு

புத்தகப் பைத்தியம் இப்பொழுது பரவாயில்லை, ஹைடெக்காகப் போய்விட்டது, எத்தனை புத்தகமும் பைத்தியம் என்றாலும் இருக்கற இடம் தெரியாம, ரொம்ப போனா வேணா ஜிபி கொஞ்சம் உதைக்கும். அதுவும் செட்டுசிக்கனமான உதைதான். ஆனால் ஒரு காலத்தில் கைகொள்ளாமல், ஷெல்ஃப் கொள்ளாமல், ரேக் கொள்ளாமல் பின் ரூம் கொள்ளாமல் என்று போய், ஒரு நாள் எல்லாம் டாடா காட்டிவிட்டுப் போய்விட்டது. புத்தகங்களை சம்ரக்ஷணை பண்ணுவது.. யப்பா... இப்பொழுது நினைத்தாலும் ஆயாசமாக இருக்கிறது. அவ்வப்பொழுது எடுத்து தூசி தட்டி அடுக்கி வைக்கணும். கொஞ்சம் வேக்வம் க்ளீனர் வந்ததோ ஓரளவுக்குத் தூசில்லா கிளீனிங். பிறகு மாதம் ஒரு முறையாவது ஹிட் அடிக்கணும். கொஞ்சம் வேலை அசதி மறதின்னா, லேயர் லேயரா நுண் தூசி. ஹிட் விட்டுப் போச்சுன்னா அது ஒரு சில ஜீவராசிக்குத் தோதா போகும். இது எதையுமே லட்சியம் பண்ணாம எலியார் இஷ்டத்துக்கு வருவாரு. நாம் மேல் பரண் போல் இருக்கும் இடத்தில் ஒரு அடுக்கு வச்சிருந்தால் அதுக்குப் பின்னாடி போய் அவருடைய ஜாகை. அவரைக் குச்சி வைத்துக் கிண்டிவிட்டுத் துரத்தப் போனால் இங்க சரி இங்க என்று கொஞ்சம் விளையாஅடிவிட்டுத்தான் போவார். அவர் மீண்டும் வராமல் இருக்க எலி மருந்து வில்லை வைத்தால் மேல் அடுக்கில் போய் அம்பேல். மருந்து கடித்தால் வெளியில் ஓடிப்போய்த்தான் உயிர்விடும். அந்த அளவுக்கு மானஸ்தம் என்று விளம்பரம். ஆனால் நடப்பு என்னவோ நமக்கு இரட்டை வேலை. கவனிக்க விட்டுப் போச்சு என்றால் ச... பேஜார் வேலை. அடிக்கடி மருந்து ஹிட் என்றால் உடல் நிலை கெடும் என்று ஏதோ மூலையில் நம் கண்ணில் பட்டுத் தொலைக்கும். கொஞ்ச நாள் அஹிம்சை. பின்னர் வட்டியும் முதலுமா. இதில் வாங்கி வந்தப் புத்தகங்கள், பழம் புத்தகச் சேகரம், நூலகக் கடன் வரவுகள் என்று பல ரகம். ஒரு கார்டுபோர்ட் பொட்டியில் போட்டு பிளாஸ்டிக் பேப்பரால் மூடி உள்ளே ஹிட் அடித்து வைத்து மூன்று நாள் அடை காத்தால் கரையானாதி ஜீவவர்க்கம் சாகும் என்று ஒன்னாமத்து நூலகப் பிஸ்தா சொன்னதாகச் செவிவழிச் செய்தியால், கார்டுபோர்டு பெட்டி பெரும் தொழிற்சாலை போல் காட்சியளிக்கும். இதில் சில சமயம் வரும் தெரிந்தவர் அடிக்கும் கமண்ட் இருக்கிறதே கொடுமை. நீங்க நிறைய புத்தகம் படிப்பேளா... (நம் மனமும் அல்பம்தான். அந்தக் கமண்டுக்கே கொஞ்சம் மகிழ்ந்துகொள்ளும்) நாங்களும் அப்படித்தான் குமுதம் கல்கண்டு வார மாத பத்திரிக்கை ஒன்று விடமாட்டோம் அந்தக் காலத்துல. எங்க உடன் பிறந்தவர்கள் எல்லாம் ஒவ்வொரு பத்திரிக்கை எடுத்தா முடிச்சுட்டுத்தான் வைப்போம். அதான் இங்க பார்த்த உடனே அந்த ஞாபகம் வந்தது... (சரி விடு கடுகடுங்காத. வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்...) ஆனால் என்ன வாழ்க்கைடா... புத்தகம் புத்தகம் என்று அலைந்து கடைசியில்.. திக்கற்ற பார்வதி... சாரி... புக்கற்ற சாரதியாய்... சாரதியா.. சாரதி சொல்லலாமா.. சரி ஏதோ ஒன்னு... புத்தகம் இல்லா விடுதலை வாழ்வை சுவைக்க கணினிப் பிரளயமே நடக்க வேண்டியிருந்தது என்பது கொஞ்சம் ஓவர்தான். சரி சரி.. சர்வமும் ஸ்ரீகிருஷ்ணனுக்கே.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment