Thursday, October 21, 2021

பிணந்தனைப் போற்றேல் !

மொட்டை மாடி ரொம்பவும் அப்படியே சாந்தமும், வசந்தமும் தவழும் சூழ்நிலை என்று யாரும் கருதி விட வேண்டாம். சமயத்தில் குலைநடுங்கும் விஷயங்களும் கூட திடீரென்று ஏற்படும். இப்படித்தான் பாருங்கள் ஒரு சமயம் ஏதோ ஐரோப்பிய காதல் கவிதைகளின் தொகுப்பு ஒன்றினைப் படித்துக் கொண்டே அதன் கவிஞர்கள் விதவிதமாகத் தங்கள் உள்ள நெகிழ்ச்சிகளைப் புலப்படுத்தும் மார்க்கங்களைக் கண்டு வியந்தபடியும், (உங்களிடம் உண்மையைச் சொன்னால் என்ன... அது போல் காதலம் பெண்ணெழில்கள் நமக்கு வாய்க்கவில்லையே.. கவிஞர்கள் சத்யத்தைத்தான் பேசியிருக்கிறார்களா என்று பின்னர் எப்படித்தான் தெரிந்து கொள்வது, வெறும் ஏட்டுக் கல்வியினால் என்ன பயன் என்று பெரியோர்கள் சொன்னது இந்த விஷயத்தில் உடன்பாடாகத்தானே இருக்கிறது..) என்றெல்லாம் எண்ணமிட்டபடியும் சொல்லாட்சிகள், உள்குறிப்புகள் இவற்றின் ஆட்சி நயங்கள் ஆகியவற்றை ரசித்தபடியே ஆழ்ந்திருந்தேனா, அப்பொழுது ஓர் அல்ப ஆசை மாய மாந்திரீக பாணியில் மனத்தில் ஓடியது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படியே வானத்திலிருந்து ஒரு கந்தர்வ நாட்டு இளவரசி அப்படி எழிலாக இறங்கி, 'உன்னை எங்கெல்லாம் தேடுவேன்? உலகின் நவ கண்டங்களையும் அலசிப் பார்த்து வருகிறேன். நீ எங்கோ இந்த பூமியில் இருக்கிறாய் என்று தெரியும். எங்கு என்பது ஊர்ஜிதம் ஆகவில்லை. அப்பாடா! என் வாழ்வின் தேடல் முடிந்தது. வா இப்பொழுதே. என் கையைப் பிடித்துக் கொள் விடாமல். உனக்கும் வான வெளியில் பறக்கும் வல்லமை வந்துவிடும். அங்கு நம் நாட்டுக்குப் போனவுடன் உனக்குப் பெரும் மந்திர தந்திரவித்தைகள் எல்லாம் தெரியப்படுத்தி, அரச பீடத்தில் ஏற்றி மறுநாளே நமக்கு காந்தர்வ மணம். உன்னைக் கண்டுபிடிக்கும் வரை அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு வந்திருக்கிறேன். அவ்வப்பொழுது மனத்திரையில் தந்தை வேறு வந்து 'சீக்கிரம்மா. எவ்வளவு காலம் தேடுவாய்?' என்று வேறு தொணப்புகிறார். வா வா எழுந்திரு. நீ இந்த மண்ணைச் சேர்ந்தவனே இல்லை. உனக்கும் எனக்கும் யுகம் யுகமாக சிநேகம். ஏதோ சில காரணங்களால் அதுவும் நீ அடம் பிடித்ததால் இங்கு வந்தாய். கிளம்பு' என்று சிணுங்குவது போன்றும், கண்ணெல்லாம் வாயாக அவள் எழிலைப் பருகி அந்த சௌந்தரியக் கள்வெறியில் குரல் குழம்பாகிச் சன்னமான வீணையின் விள்ளல் போல் எனக்கே அதி சுநாதமான இசைக் கீற்று போல் ஒலிக்க, என் குரலொலியாகிய நாதம் பரப்பிய அந்த சப்த தடாகத்தில் நானும் அவளும் அன்னப் பட்சிகள் போல் மிதந்துகொண்டு..... என்னவெல்லாமோ பேய் பிடித்த கற்பனை சுழன்று சுழன்று....

இந்த அணில் பிள்ளைக்குக் கொஞ்சம் கூட இங்கிதம் என்பதே தெரியாது. ச...நான் ஏதொ ஓர் உலகத்தில்.....

'அவன் வந்திருககன் பாரு பாரு பாரு பார்க்கலை, பார்க்கலை.. பக்கட்துல அக்கம்பக்கம்,பக்கக்ம் பக்கம் அக்கம்பக்கம் பார்க்கலை

என்பது போல் அது தொணப்பிய நச்சரிப்பில் சட்டென்று விழித்துக் கொண்டேன். அதுவும் அதன் ஜோடி அணிலும் இரண்டும் சேர்ந்து என் பின்னால் அதையோ காண்பதும், பின்னர் எனக்கு எதையோ உணர்த்தத் துடித்த குரல் ஜாவளிகளை எழுப்புவதும்... அப்பொழுதுதான் எதோ விபரீதம் நடந்திருக்கிறது போலும் என்று. பாவம்! நான் பகற்கனவு காண ஆரம்பித்தால் வீட்டில் உள்ளாரே யாரும் எழுப்புவது கடினம். அப்படி இருக்க அசாத்திய முயற்சி எடுத்து இந்த அணிலார் என்னை விழிப்பிற்குக் கொண்டு வந்துவிட்டது. நானும் கொஞ்சம் என்னவோ ஏதோ என்று பதறிப் போய்த்தான் திரும்பிப் பார்த்தேன்.

அப்படியே பயத்தில் உறைந்து விட்டேன். ஓ என்ன கொடுமை! ஐயய்யோ இது எங்கே இங்கு வந்தது? இவ்வளவு பெரிய பிணந்தின்னிக் கழுகு, படத்தில் மட்டுமே பார்த்திருக்கக் கூடிய கிராதகக் கழுகு, அதான் இந்த பிபிசி டாக்யுமண்ட்ரியெல்லாம் இந்தப் பறவைகளைப் பற்றியெல்லாம் பார்த்து வியந்திருக்க கூடாது! பார்...இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ராஜகுமாரா.. என்பது போல் நேரடியாகவே வந்துவிட்டது. ஐயய்யோ...ஏதாவது பூனை அல்லது நாய் அடிபட்டு இறந்து போய் நம் வீட்டுக் காம்பௌண்ட் சுவருக்குள் விழுந்து விட்டதா என்னவோ தெரியல்லியே.... என்ன ஒய்யாரமா கைப்பிடிச் சுவரில் கால் பதித்துக் கவ்வியபடி உட்கார்ந்திருக்கிறது! ச...ச.. விரட்டணுமே... சனியன்...எங்கேயிருந்து வந்தது...எல்லாம் ஆஃப்ரிக்கன் பாலைகளில்தானே சுற்றும். இங்கே எப்படி? அதுவும் நான் இருக்கும் இடத்திற்கு, இந்த மொட்டை மாடிக்குத்தானா வரவேண்டும்? துரத்தினா திரும்பி கொத்திடுமோ? எதற்கும் வாசப்படிக் கிட்ட வாட்டமா நின்று கொள்ள வேண்டும். ச... மொட்டை மாடியாவது ஒன்றாவது. பேசாமல் கீழே இருந்திருந்தால் நமக்கு இந்தப் பிரச்சனையே இல்லை. மக்களோடு மக்களாக நாமும் டேய் பிணந்தின்னிடா என்று கல்லை விட்டு எரியவில்லை என்றாலும் பார்த்து விட்டு சூ என்று வாயால் ஓட்டிவிட்டு உள்ளே போய்க் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டால் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு சூழ்நிலையே மாறிப் போகும். என்ன எழவுடா இது! என்னமோ நிம்மதியா இருக்கேன்னு இங்க வந்து உட்காரப் போயி, இது என்னடா என்றால் பார்வையைப் பாரு, பார்க்கற விதத்துலயே பிராணிகள் பட்டுன்னு போயிடும் போல இருக்கு...இப்பொழுது பார்த்து கைக்கு வாட்டமா குச்சிகள் கிடைக்காது. கிடைச்சாலும் அடிக்க முடியுமா? ஏதோ நமக்கு ஒரு பாதுகாப்பு. கையில் ஒரு கல் கிடைச்சாலும் போதும். ச அதுக்கு மேல போடக் கூடாது. சும்ம அப்படி அடிக்கறா மாதிரி ஓங்கினா பக்கத்துல விழறா மாதிரி போட்டா போகாதோ? தேடி ஒரு கல் கண்ணில் பட்டு எடுப்பதற்கும்...

'இதுதான் விருந்து உபசாரம் பண்ற அழகா?'

எனக்கு உள்ளெல்லாம் வியர்த்து, உடலெல்லாம் நடுங்கத் தொடங்கிவிட்டது. காரணம், குரல் அந்த பிணந்தின்னிக் கழுகிடமிருந்து..!!

'ஏதோ... மிகவும் துணிச்சலான பேர்வழி என்று நினைத்து உன்னைப் பார்க்கலாம், சில வார்த்தைகள் பேசிவிட்டுப் போகலாம் என்று அந்தரிக்ஷத்தின் மேல் ஸ்தாயியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நான் மெனக்கெட்டு கீழே வந்தது வீண் என்று இப்பொழுது புரிகிறது. எல்லாரும் வார்த்தைகளில் வீராதி வீரம், துணிச்சல் காட்டுகிறீர்கள். ஒரு பழக்கமற்ற தோற்றம் கொண்ட பெரிய பறவை வந்ததும் உங்கள் எலும்பே எட்டுக் கட்டையில் நடுங்க ஆரம்பித்து விடுகிறது...'

எனக்கு அசிங்கமாகப் போய் விட்டது. ச.. மனம் வேலை செய்யும் ஒரு பறவையிடம் நான் கோழை என்பதை அசிங்கமாக நானே பதிவு செய்தது போல்... கொஞ்சம் பிடி தளராமல் இருந்திருக்கலாம்... ஏன் அப்படி நினைக்க வேண்டும்? எதற்கு நான் கோழையாக இருந்தேன் என்றால் அப்படியே அது பறவையாய் இருந்தால் என்ன, மனிதராய் இருந்தால் என்ன வெளியில் தெரிந்து விட்டுப் போகட்டுமே...எதற்கு என்னிடம் இல்லாத ஒன்றை இருப்பது போல் பூசி மொழுகிக் காட்ட வேண்டும்? என்ற எண்ணம் எழுந்ததும் சுதாரித்துக் கொண்டேன். உண்மை உணர்வுதான் எவ்வளவு அலாதி. உடனே எதைப் பற்றியும் இலட்சியம் இல்லாத துணிச்சல் உண்டாகியது. இன்னும் சொல்லப் போனால் அலட்சியம் உண்டாகியது. குரலும் சாதாரணமான பஞ்சமத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது.

'ஆம் நீ சொல்வது சரிதான். கொஞ்சம் பயந்து போய்விட்டேன். சிறு வயதில் நான் வளர்ந்த பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது. உன்னை ஒரு பறவை என்று பார்ப்பதற்கு பதிலாக பிணந்தின்னிக் கழுகு, இது வந்தால் ஐயொ ஆகாது..துரத்து துரத்து என்பது போல் பழைய பாட்டி பயங்கள் ஓங்கிவிட்டன. ஒரு கணம் என்னைக் குலைத்து விட்டது. உண்மைதான். அதற்கு நீ சொல்லும் விமரிசனம் முற்றிலும் நியாயம். உணர்த்தியதற்கு நன்றி,'

ஆமாம். என்னைப் பிணந்தின்னிக் கழுகு என்று வெறுக்கிறாயே! அப்படி என்றால் நீங்கள் எல்லாம் பிணத்தைப் போற்றிக் காப்பாற்றிக் கொண்டிருப்பவர்கள் என்றுதானே பொருள்?'

பிணத்தைப் போற்றுபவர்களா?

ஆமாம். பார் எந்தத் துறை ஆகட்டும். மதம், இலக்கியம், தொழில், வாழ்க்கை முறைகள், ஒருவருக்கொருவர் கொள்ளும் அபிப்ராயங்கள், ஆண் பெண் உறவு நெறிகள், பொருளாதாரக் கொள்கைகள், சமுதாயம், அரசியல் என்று எதை எடுத்தாலும் உங்கள் நாட்டிலும், இன்னும் சில நாடுகளிலும் பிணங்களை விடாமல் போற்றுகிறீர்கள். பிணங்கள் நாறி, அழுகி ஆரோக்கியமெல்லாம் கெட்டாலும் கூட பிணங்களை விடமாட்டேன் என்று வெறியோடு போற்றுகிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு என்னைப் பார்த்ததும் பிணந்தின்னிக் கழுகு என்று அருவருப்பு தோன்றுகிறது. உங்கள் நாட்டுக் கவிஞர் வெளிப்படையாக உடைத்து உண்மையைச் சொல்லியிருந்தாலும் நீங்கள் காதில் வாங்கவில்லை.'

யாரு?

ஆம் 'பிணந்தனைப் போற்றேல்' என்று உங்கள் நாட்டுக் கவிதானே சொல்லியிருக்கிறார்?

என் நிலைமையை யோசித்துப் பாருங்கள்! பாரதியை மேற்கோள் காட்டி.. ஒரு கழுகிடம்... சாரி...யாராய் இருந்தால் என்ன? நியாயம் என்றால் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

ஆம்.

பின்னால்...? நீங்கள் எல்லாத் துறையிலும் செய்வது என்ன? பிணத்தினைப் போற்று. அதுதானே? பாருங்கள். ஒரு துறையிலாவது உயிர் நடமாடுகிறதா? உயிரற்ற வழக்கங்கள், உயிரற்ற சடங்குகள், உயிரற்ற கொள்கைகள், உயிரற்ற ஆட்சி முறைகள், உயிரற்ற மத நம்பிக்கைகள், உயிரற்ற தத்துவக் கோட்பாடுகள், உயிரற்ற இலக்கிய ஆக்கங்கள், உயிரற்ற சமுதாய நெறிகள், உயிரற்ற தொழில் மார்க்கங்கள் - ஒன்றிலாவது பிணங்கள் தவிர வேறு எதை நீங்கள் போற்றுகிறீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்!

அதனுடைய தீட்சண்யமான கண்களைப் பார்க்கக் கூச்சமாக இருந்தது. ஆனால் அதன் பார்வை என் நிணங்களையும் தாண்டி மனத்தில் குழிந்துள்ள பிணக்குவியல்களையும் தாண்டி, உயிரற்ற மாமூல் அஹங்காரத்தின் நரம்புகளைப் போய்த் தைத்துக் கொண்டிருந்தது என்பது புரிந்தது. இதையா பிணந்தின்னிக் கழுகு அசிங்கம் என்று நினைத்தேன்! நான் நினைத்தது கொஞ்சம் கூட நியாயம் இல்லை என்பது கணம் அடுத்துக் கணம் எனக்கு மேலும் ஊர்ஜிதமாகிக் கொண்டு வந்தது. இன்னும் சொல்லப் போனால் அதன் முன்னர் சிறிதும் போலித் தனமற்ற ஒரு தூய்மையை உணர முடிந்தது.

ஆம் நீங்கள் சொல்வது.... நீ சொல்றது... உண்மைதான். இப்பொழுது புரிகிறது. பிணம் போற்றும் கழுகுகளை விட பிணந்தின்னிக் கழுகுகள் எந்த விதத்தில்...

பிணம் போற்றும் மனிதர்கள் என்று சொல். கழுகுகளில் பிணம் போற்றுவது கிடையாது, அது முற்றிலும் மனித குலத்தில் காணப்படும் பழக்கம்.

நெத்தியடி...இப்படி முகம் முகமாக அறை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று....

நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. உண்மை ஏற்றுக் கொள்கிறேன். உணர்த்தியதற்கு நன்றி. முதலில் உணராமல் உன்னை பிணந்தின்னிக் கழுகு என்று கேவலமாக நினைத்ததற்கு மன்னித்துக் கொள்.

இப்பொழுதுதான் நீ உயிரினத்தில் சேர்ந்தவனாக ஆகிறாய். உண்மையை உணர்வது உயிரினத்திற்கு அடிப்படை. நாங்கள் மற்ற உயிரினங்கள் ஓரளவிற்கு உணர்கிறோம். நீங்கள் மனிதர்கள் பெரும் அளவிற்கு உணர முடியும். ஆனால் எங்கள் அளவிற்குக் கூட உணர்வதில்லை என்பது வேதனையான உண்மை. இதை உங்களில் யாருக்காவது உணர்த்த முடியுமா என்று தொலை தூரத்திலிருந்து நெடுநாள் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்று உன்னைப் பார்த்ததும் ஏதோ நமபிக்கை பிறந்தது. ஆனால் வந்து அமர்ந்தவுடன் நீ நடந்து கொண்டது எனக்கு முற்றிலும் சலிப்பைக் கொடுத்தது. பரவாயில்லை. நான் நம்பியது அவ்வளவு பிழையில்லை என்பதை உன் உண்மையை ஏற்கும் அடக்க உணர்வு காட்டியது. இனி ஒருகாலும் எந்த உயிரினத்தைக் கண்டும் இப்படிக் கோழை போல் ஆத்திரப் படாதே!

கிளம்புவதற்கான ஆயத்த வீச்சுகள் சிறகுகளில் தெரிந்தன. எனக்கு அதை விட்டுப் பிரிய விருப்பமின்றி ஒரு வேதனை...'ஏன் என்ன அவசரம்? இன்னும் சற்று நேரம்....'

இல்லை. கிளம்ப வேண்டும். நேரத்திற்குப் போய்ச் சேரவில்லை என்றால் எங்களுக்கு உணவு கிடைப்பது கடினம். அங்கு இரண்டு மிருகங்கள் ஒன்றை ஒன்று வீழ்த்தும் முடிவோடு நெடுநேரம் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. சரி. அவை தமக்குள் ஒன்று விழட்டும் என்று அந்த நேரத்தில் உன்னைப் பார்க்க வந்தேன். ஆச்சு. ஒன்று விழுகின்ற நேரம். போனால்தான் முந்த முடியும். சில நாட்களாக சரியான உணவு கிடைக்கவில்லை. அல்ப சொல்ப ஆகாரமே. இன்று அதைப் பிடித்துவிட்டால் இன்னும் ஒரு வாரம் தாங்கும். பார்ப்போம்.

அதன் ஓசைகள் என் காதில் பீஜாக்ஷரங்களாக ஹ்ரீங்கரித்துக் கொண்டிருந்தன. காளியின் சிரிப்பே பீஜாக்ஷரங்களோ?

மொட்டை மாடியில்தான் என்ன என்ன அநுபவங்கள்!

***


No comments:

Post a Comment