மிகவும் ரகசியமாக, தனிப்பட்ட முறையில் பேசுவதற்கென்று ஏற்பட்ட செல்பேசி, டவர் கிடைக்காத கோளாறு, ஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நல்லிருளாய் ஆனபின்பும் ஊருக்கே கேட்கும் படி ஒருவர் தமது சொந்த ரகசிய விஷயங்களைக் கூட உரக்கக் கூவ வைத்துவிடுகிறது. ஓர் இரண்டு மூன்று மாடிகள் தள்ளி ஒருவர் பாவம், தமது அந்தரங்கச் செய்தியையெல்லாம் ஊரே உறங்கிவிட்டது என்ற நிம்மதியில் பொங்கிப் பொழிந்து கொண்டிருக்கிறார். கோபம், தாபம், கேலி, வேட்கை, வெறுப்பு என்று மனித உள்ளத்தின் நிறமாலை மொத்தமும் அங்கு பட்டியடித்துக் காட்டுகிறது. அவர் பேசுகின்ற தனிப்பட்ட குறிப்புகள் பற்றி எனக்கு அக்கறையில்லாத காரணம் மனம் அதில் போகவில்லை. ஆனால் பேச்சின், அதாவது நமக்குக் கேட்பது கைக்கிளை பேச்சுதானே? அந்தப் பேச்சின் பொதுப் படிவம் கருத்தில் படுகிறது. எல்லாமே 'நான்' என்பதில் தொடங்கி 'நான்' என்பதில் முடிகிறது. அதாவது இங்கிருந்து நான் குத்து மதிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அவர் காதலிப்பது 'நான்' ஐ.
அவர் மட்டும்தானா? எல்லோருமே அப்படித்தானே? என்னதான் அடக்கம், நைச்சியம், தன்னை முன்னிறுத்தாமல் பின்னாடித் தள்ளிக் கொள்ளும் பான்மை என்றெல்லாம் எவ்வளவு முக்கினாலும் கடைசியில் தாய்ச்சிக் கோட்டை முந்திக் கொண்டு வந்து தொட்டு விடுவது ஒவ்வொருவருக்கும் அவரவர் 'நான்' தான். சதா சர்வ காலமும் ஒவ்வொருவரும் குளிப்பாட்டி, போஷணை பண்ணி, அலங்காரம் செய்து, தூப தீபம் ஏற்றி, என்னென்ன பதிகம் உண்டோ அத்தனையையும் தானும் சொல்லி, பிறரையும் எப்பாடு பட்டேனும் சொல்லச் சொல்லி நித்ய பூஜையாக நடத்திக் கொண்டிருப்பது அஹங்கார கும்பாபிஷேகம்தான்.
***
No comments:
Post a Comment