மொழி என்று சொன்னாலே "இலக்கணம் படித்திருக்கிறாயா? இலக்கியம்? அந்த காவியம்? இந்தக் கலம்பகம்? இதிகாசம்? அந்தப் பாடல்கள்? அந்தக் காலக் கட்டத்து நூல்கள்? மரபுச் செல்வங்களில் எவ்வளவு தூரம் உங்களுக்குப் பரிச்சயம்? '
அதாவது மொழி என்பதை கடந்த கால ஆக்கங்களுக்கான ஷோ கேஸ் ஆக, ம்யூஸியமாக ஆக்கும் வேகத்தைத்தான் பார்க்கிறோம்.
"இந்தச் சொல்லா? இது முதன் முதலில் எந்தக் காலத்தில் உபயோகத்திற்கு வந்தது? அப்பொழுது அதன் அர்த்தம் என்னவாக இருந்தது? பாருங்கள். எவ்வளவு மாறிவிட்டது இந்தச் சொல்லின் பொருள் பார்த்தீர்களா? '
'சார்! சும்மா...சொல்லை உங்க இஷ்டத்துக்குப் பயன்படுத்த முடியாது சார். அது அதுக்கு ஒரு பெரிய சரித்திரமே இருக்கிறது. அதன் பொருள் பரப்பு உணர்ந்துதான் நாம் பயன்படுத்த வேண்டும். '
"அதெல்லாம் பண்டைய இலக்கியங்கள் நிறைய படித்திருக்க வேண்டும் சார். சும்மா நானும் எழுதறேன் என்று எழுத முடியாது.'
இப்படிப் பட்ட ரியாக்க்ஷன்ஸ் மக்களிடையே எழுவதைப் பார்க்கிறோம். எந்த அளவிற்கு இந்த விதமான மொழிப் பார்வை அப்பழுக்கே அற்ற சான்றுத்தன்மை கொண்டது அல்லது பொருத்தப்பாடு கொண்டது? அதாவது இந்தப் பார்வையில் பிழை, ஓட்டை என்பதே கிடையாதா?
இதுதான் சரி என்றால் மொழி என்பது காலம் ஆக ஆக பெரும் சுமைகள் கூடிக்கொண்டே போய் அடுத்த அடுத்த பிற்காலத்தில் வரும் அந்த மொழியாளர் வெறுமனே காலச் சுமையை ஒவ்வொரு சொல்லுக்கும் சுமந்தபடி, நூல்களில் தீர்மானித்தவிதம் மிகச்சரியாகப் பேசுகிறோமா என்று விளையாட்டில் விதிகள் மீறாமல் ஆடும் வெறும் பயிற்சி பெற்ற ஆட்டக்காரர் அவ்வளவுதானா?
ஒரு விஷயம் பார்ப்போம். ஆதி காலத்தில் மனிதர் குகைகளிலும், காடுகளிலும் திரிந்த காலத்தில் ஒரு வித சொற்களையும் அவற்றுக்கான பொருள்பரப்பையும் கொண்டிருந்தனர். பிறகு நாம் காவிய காலம், எபிக் காலம் என்று சொல்லக் கூடிய இலக்கண இலக்கியத்தோடு கூடிய விதிகள் அமைக்கப்பட்ட காலம் வந்தது. அப்பொழுதும் வாழ்ந்தவர்கள் தங்கள் அனுபவங்களுக்கு உரிய சொற்களைப் பயன்படுத்த தமக்கு முன்னால் காலத்தில் இருந்த குகைவாசிகள் பயன்படுத்திய அதே சொற்கள், பொருள்கள், அவற்றைத்தான் தாமும் பயன்படுத்த வேண்டும் என்று நினைத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? அவர்கள் தங்கள் கால அனுபவங்களைச் சொல்லியிருக்க முடியுமா?
அவர்களும் ஒவ்வொரு சொல்லுக்கும் குகைவாசியும் காட்டு வாசியும் பயன்படுத்திய சொல்லும் பொருளும்தான் சான்று உடையது என்று கடந்த கால வழிபாட்டாளர்களாய் இருந்திருந்தால், தங்கள் கால அனுபவத்தைச் சுயச்சான்றோடு தங்களுக்கு வேண்டிய சொற்களைத் தாமே புதிதாகப் புனைந்து கொண்டு சொல்லியிருக்க முடியாது. நிச்சயம் அவர்கள் காலத்திய அனுபவத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு பழங்காலத்திய குகை, காடு காலத்திய சொற்றொடர்கள் ஒரு நாளும் பொருந்தியிருக்க மாட்டா?
இதன் நியாயம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் இவ்வாறு எனில், நாம் ஏன் என்றோ பழங்காலத்தில் பயன்படுத்திய சொற்களை இன்றும் துடைத்துத் துடைத்துப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்? நம் காலத்திய அனுபவங்கள், சமுதாய நிலைகளின் மாற்றங்களினாலும், தொழில் நுட்பப் புரட்சியினாலும், விஞ்ஞான கருத்தாக்கங்களின் பொங்கு மலர்ச்சியினாலும் நம் அனுபவம் அந்தக் காலத்தவர்களை ஒப்பிட்டால் மிக விரிந்தது; தன்மை, வகை அனைத்திலும் மாறுபட்டது. அப்படி இருக்கும் போது இன்றும் பழைய காவியங்களையும், பழைய இலக்கணங்களையும் ஒருவர் மிக முக்கியமான கடமையாகக் கற்று, அதைத் தேர்ச்சி அடைந்து, அதன் வழியிலேயே சொற்களைப் பயன்படுத்துவதுதான் உத்தமம் என்பது உண்மையில் பிற்போக்குத்தனம் இல்லையா?
இன்று நம் அனுபவங்கள் என்னவோ அதற்கு ஏற்றால் போல் சொற்களைப் புதிதாக இயற்றிக் கொள்ள வேண்டாமா? இவ்வாறு நம் உலகத்தை நாமே நன்கு கவனித்துக் கருத்தில் கொள்வதைத் தடுப்பது எது? இது போன்ற மொழி ரீதியான பழமை போற்றும் மனப்பான்மைதானே? கடந்த காலம் கடந்த காலத்தோடு போகட்டும். இன்று நமக்கு என்ன அனுபவம் என்ன தேவைகள் அதற்குப் புதுச் சொற்களை நாம் புதிதாகப் புனைந்து கொண்டு போவோம். பழமையில் கழுத்தைப் புதைத்துக் கொண்ட நெருப்புக் கோழிகளாய் ஏன் நாம் மாற வேண்டும்?
ஒரு காலத்தில் சி சு செல்லப்பா, க நா சு ஆகியோர் கூறியதாக ஒரு கருத்தைக் கேள்விப் பட்டிருக்கிறேன். எங்கோ படித்ததாகவும் நினைவு. அதாவது மரபு நன்கு தெரிந்தவர் புதுக்கவிதை எழுத முடியாது அதாவது தகுதியற்றவர் என்பது போல. என் நினைவு தவறாக இருக்க கூடும். அப்படி அவர்கள் எதுவும் சொல்லவில்லை என்று நீங்கள் சொன்னால் ஓகே நான் திருத்திக் கொள்கிறேன். ஆனால் அப்படி ஒரு கருத்தை நான் கேள்விப் பட்ட பொழுது என்னது இது! என்று நினைத்தேன். ஆனால் அதில் ஏதோ ஒரு உண்மை இருப்பதாகத்தான் படுகிறது.
மரபு என்பது பழங்கால அனுபவ உலகைப் பற்றி வெளிப்படுத்த அந்தக் காலத்திய மக்கள் மொழியை எப்படிக் கையாண்டனர் என்பதன் ஒரு லாக் புக். நாம் இந்தக் காலத்திய நம் அனுபவ உலகை வெளிப்படுத்த அது எப்படி நம்மை நியமிக்கும் போலீஸாக இயங்க முடியும்? அப்படி அவர்கள் விஷயத்தில் அவர்களுக்கு முந்தைய காலச் சொற்கள் கண்ட்ரோல் செய்திருந்தால் காவிய காலச் சொற்களே கூட வந்திருக்காதே அல்லவா?
எனவே இன்று நாம் மொழியின் ஒரு பொதுவான கட்டமைப்பை மட்டும் தெரிந்து கொண்டு மற்றபடி நம் அனுபவ உலகை நாம்தான் புதிய சொற்கள் உண்டாக்கி மொழிப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது. நேரடியாக நம் அனுபவம் நம்மால் நம் மனத்தின் காரியத்தால் சொல்லாக உருமாறுகிறதா என்பதுதான் முக்கியமே அன்றி, பெரும் மரபு நூல்களையும், அகராதிகளையும், நிகண்டுகளையும் வைத்துக்கொண்டு, நம் அனுபவங்களுக்கு அவற்றில் சொல் தேட முனைந்து கொண்டிருப்பது நம் வாழ்வை நாம் புறக்கணித்து விட்டு என்றோ அவர்கள் வாழ்ந்த வாழ்வுக்கு முக்கியத்துவம் தருவது போல் இருக்கிறது.
இந்த சிந்தனை இதுவும் முற்ற முடிய இதுதான் சரி என்று சொல்ல வரவில்லை. இது விவாதிக்க வேண்டிய ஒன்றுதான். உங்களுக்கு இது அபத்தம் என்று பட்டால் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். இது இந்த மொழி அந்த மொழி என்று இல்லை. எந்த மொழியிலும் யோசிக்க வேண்டிய ஒன்று என்று தோன்றுகிறது.
*
இதனால் என்ன ஆகிறது.....இலக்கண வாய்ப்பாடுகள், அகராதிகள், சொல் தொகைகள் இவை கையில் இருந்தால் போதும், ஒருவர் எல்லாவற்றையும் அறிந்து விட்டது போன்ற பிரமையை வெற்றிகரமாக ஏற்படுத்திவிட முடிகிறது. பெரும் பெரும் கருத்தாடல்கள் எல்லாம் நடைபெறும், பெரும் சித்தாந்தங்கள் எழும் விழும், மனித வாழ்க்கையின் பல சிக்கல்கள் அல்லல் படுத்தும். அன்றாட வாழ்வின் பல அமைதிகள் உடைந்து பல புதுமைகளும், பொருந்தாமைகளும், சாதனைகளும் சறுக்கல்களும் மனித சமுதாயத்தையே வாட்டும்; கலங்கச் செய்யும். புதிய தொழில் நுட்பங்களால் கணந்தோறுமான வாழ்க்கை இதுவரை இல்லாத வடிவம் கொள்ளும். கடல்கள் நீச்சல்குளங்கள் ஆகும். கண்டங்கள் கொல்லைப் புறங்கள் ஆகும். வானம் வாயில் முற்றமாக ஆகும். ஆனாலும் மரபு, பழையபடி, கையில் பழங்கால இலக்கண வாய்ப்பாடுகள், எந்தக் காலத்திய அகராதிகள் இந்த ஆண்டிலும் மீள்பதிப்புகளாய், 'அது நீங்க....அப்படிச் சொன்னீங்கன்னா அது மரபுக்கு ஒத்து வராது. ஆண்டாண்டு காலமா இப்படிச் சொல்லிச் சொல்லி வருவதுதான் வழக்கம் பாருங்க....கொஞ்சம் அப்படி இப்படி மாத்திக்கலாம் அதுவும் ஏற்கனவே அதுக்கு ஆதாரமா பயன்பாடு இருந்தா...' என்று சிறிதும் பிரக்ஞையே இன்றிப் பேசக் கூடும்.
பெரும் வாழ்க்கை மாற்றங்கள் என்று இல்லை. இலக்கிய ஆக்கங்களிலேயே ஆகப்பெரும் அக்கறை மிகுந்த மொழிதல்களைக் கூடச் சிறிதும் குறைந்த பட்சம் கருத்துக்கான மரியாதையோ, கற்பனைகளுக்கான கௌரவமோ, அனுபவங்களைத் திறம்பட மொழி தெரிவிக்கிறதா என்ற லேசான மனிதாபிமானமோ கூட இல்லாமல் உயிரற்று இயங்கும் கணங்களைப் பார்த்திருக்கிறேன். பெரும் கவிதை, உலக அளவிலேயே மிகச் சிறந்த வியப்பு என்று எதையாவது, அல்லது வாழ்க்கையின் மர்மம் நிறைந்த கணங்களை உள்ளே வெந்து நொந்து அதைக் கவிதையாக்கி, மரபின் வடிவம் என்று மதிக்கத்தக்க ஒருவரிடம் கொண்டு காட்டிய போது, அவருடைய கைவிரல்கள் ஏதோ பத்து விரலுக்குள் பெரும் எண்ணிக்கையை எண்ணுவன போல் முகம் அப்படியே பெரும் கவலையாக எண்ணிக் கொண்டிருந்ததை என்ன என்று கேட்டால், தேமே புளிமா கருவிளங்காய் வாய்ப்பாடு சரியாக வருகிறதா பார்த்தேன் என்று சொன்னதும் இந்த இக்கட்டை நேரடியாக உணர்ந்த தருணம் இன்றும் நினைவை விட்டு அகல மறுக்கிறது.
ஆங்கிலத்திலும் ஓரனுபவம். ஏதோ பெரும் கணம் என்று கருதி மரபு சான்ற ஆங்கிலப் பேராசானிடம் காட்டப் போக அவர், இங்கு ஆன் வராது, அங்கு அப் வராது, இங்கு டௌன் போட்டால் நன்றாக இருக்கும் என்று இப்படியே சொல்லிக் கொண்டு வர, சமீபத்திய ஆங்கில அகராதிகள் சிலவற்றில் இந்த மாதிரியான பயன்பாடுகள் முன் வரிசைப்பாடுகளில் காட்டப்பட்டுள்லனவே என்று சொன்னதற்கு அவர், '50 வருஷங்களுக்கு மின்னாடி இதெல்லாம் பேட் இங்கிலீஷ்...இன்று எதை வேண்டுஇமானாலும் அலௌ செய்து விடுகிறார்கள். ஆங்கிலம் படு மோசமாகி விட்டது' என்று கடிந்து கொண்டார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஆங்கிலத்தில் காலத்திற்குக் காலம் இப்படி அலௌ செய்த ஒரு வடிவத்தைத்தான் அவரும் தம் காலத்தில் கற்றிருக்கிறார். ஆனால் அவர் கற்றதால், அவருக்குக் கற்பித்த ஆசான்கள் தயவில் அந்த வடிவம் சாஸ்த்ரோக்தமான வடிவம் ஆகிவிட்டது. அதற்கப்புறம் அலௌ ஆவதெல்லாம் மொழியின் சீர்கேடு ஆகிவிட்டது போலும்!
என்னவென்றால் மரபு கெட்டித்துப் போன தன்மை, மொழியை நுண் அரசியலுக்கான, ஒரு பிரிவினர் மக்கள் பொதுவின் பேரிலோ அல்லது பிறிதொரு கூட்டத்தின் பேரிலோ அதிகார நெடி கொண்ட தாக்கத்தைச் செலுத்தவே பெரும் பாலும் பயன்படுகிறதோ என்று தோன்றுகிறது.
*
மொழி என்பது மனிதர் மேல் ஆட்சி செய்து, இவ்வண்ணம்தான் நடக்க வேண்டும், மீறுவது குற்றம் என்று மிரட்டுகின்ற மந்திரக் கோடுகளா அல்லது மனிதர் சுகமாக இயங்குவதற்கு இடப்பட்ட உதவிக் கோடுகளா? மொழி என்பது மனிதருக்குள் கலந்துரையாடி, கருத்துகளையும், உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் பரிமாறிக்கொள்ள வாய்ப்பான சாதனமா? அல்லது மனிதரைத் தம்முடைய சட்ட திட்டங்களால் கண்ட்ரோல் செய்து அடக்கி ஆளும் நிறுவனமா?
மனிதரின் தனித்துவ இயல்பின் முக்கியத்துவத்தை மதிப்பதாக இருந்தால் நாம் மொழியை சாதனம் என்றுதான் சொல்ல வேண்டும். மனிதர் பரஸ்பரம் பரிமாறிக்கொள்ள, அதனால் தமது கூட்டு வாழ்வையும், தனி வாழ்வையும் மேம்படுத்திக் கொள்ள மனித சமுதாயத்தில் ஆழ நெடுங்காலமாக வளர்த்தெடுத்த சொற்களால் ஆகிய சாதனம். அதன் செயல்பாடே பார்க்கப் போனால் மனிதர் தம் அனுபவத்தை நேரடியாக மொழியாக மாற்றித் தெரிவித்தல். எனவே அனுபவங்கள், தொடர்ந்த வாழ்க்கையின் அனுபவம் மொழியைத் தனக்கு ஏற்றால் போல் மாற்றிக்கொண்டே போக வேண்டும். அந்தந்தக் கால அனுபவங்கள் மொழியில் தம் பதிவுகளைத் தம் சொந்த சான்றாண்மையில் ஏற்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் மனிதருக்கும் மொழிக்குமான சமன்பாடு சீராக இருக்கிறது என்பது சாத்தியம்.
இவ்வாறன்றி, மொழிக்காகத்தான் மனிதர், அவர்களுடைய வாழ்வு, மனித வாழ்க்கையின் அனுபவம் மொழிக்கு ஒவ்விய விதத்தில்தான், அதாவது ஏற்கனவே காலம் காலமாகப் பதிவுகளாய் ஏறி, மரபு என்னும் வடிவை அடைந்து, மனித வாழ்வை ஆட்சி செய்யும், நியமிக்கும் மறைமுக அதிகார தொனி உடையதாக ஆகிவிட்ட மொழி என்ற நிறுவனமயமாக்கத்திற்கு ஒவ்விய விதத்தில்தான், அமைய வேண்டும்; அவ்வாறு அமையாத மனித வாழ்க்கையின் அனுபவக் கூறுகள் மொழியின் அமைதி கருதி, மரபின் தாண்டக் கூடாத மந்திரக் கோடுகளுக்குப் பணிந்து கைவிடப் பட வேண்டியவை என்ற நிலை மனிதருக்கும் மொழிக்குமான சமன்பாடு சீராக இன்றி, சாதனமான ஒன்று அதிகார மையமாக நிலைப்பாடு கொண்டு விட்டது என்பதைக் குறிக்கிறது.
தனித்துவ இயல்பு மனிதரிடையே முக்கியத்துவம் இழக்கும் நேரத்தில் எல்லாம் இவ்வாறு துணைக் கருவிகளாகவும், துணைக் கருத்துகளாகவும் இருக்கும் விஷயங்கள் அதிகார தொனியும், ஆக்கிரமிப்பு வேகமும் கொண்டு தம்மை மையப்படுத்திக் கொள்ளும். அதுகால் மொழி என்பது சாதனம் என்ற நிலை மாறி, தெய்வம், உறவு, பயாலஜி என்னும் கற்பனை வடிவங்களைக் கொள்ளும்.
***
இருப்பதை அவசியப்பட்ட இடத்தில் புதுக்கலாம். இல்லாததை உருவாக்கலாம். நல்ல மரபுக்கவிஞர்கள் பலர் நல்ல புதுக்கவிஞர்காள இருக்கிறார்கள். இரண்டுக்குமிடையே பெரிய பகையுணர்ச்சியை உருவாக்கியவர்கள் சில ஆய்வாளர்கள். அது மட்டும் இல்லமலிருந்திருந்தால் இன்று இரண்டையும் ஒருவனே எழுதுவான். பிறகு விவரமாக எழுதுகிறேன் இலந்தை
ReplyDeleteபுலவர் இராமமூர்த்தி
ReplyDeleteகாலந்தோறும் செய்யுள் மாறி மாறி வளர்ந்தது. சங்க காலத்தில்
தனிச் செய்யுள்கள், நீண்ட அகவல்கள், கலி, பரிபாட்டு.
தொடர்ந்து விருத்தங்கள். தொடர்நிலைச் செய்யுள்கள்.தாழிசை துறை
எனப் பலவேறுபட்ட படைப்புக்கள் பின்னர் விருத்தக் காப்பியங்கள் --
பிரபந்தங்கள் , பல்வேறு வகை விருத்தங்கள் -- அவற்றின் நீட்சியாக
சந்தப் பாடல்கள், திருப்புகழ், கட்டளைக் கலித்துறை, நான்மணி மாலை
தாயுமானவர் கிளிக்கண்ணிகள் - வள்ளலார் கீர்த்தனைகள்-- பாரதியாரின்
வசனகவிதைகள்- புதுக்கவிதைகள் - ஹைக்கூ - சென்ரியூ - ............
எல்லாமுயற்சிகளும் மரபு வேரில் முளைத்தெழுந்த வண்ண மலர்கள் தாம்
சுஜாதா உரைநடை-- கிரேசியின் ''இங்வெண்பா'' உட்பட ..
அன்புடன் இராமமூர்த்தி.