Friday, October 22, 2021

பனிப்பெயல் நறுமலர்

ஹேயன் காலம் என்று அழைக்கப்படும் ஜப்பானியப் பாடல்களின் காலங்களில் ஒன்று சுமார் 790 தொடங்கி 1190 வரை எனலாம். அப்பொழுது பாடப்பட்ட ஒரு பாடல் ஒனா டக்கமுரா என்பவர் இயற்றியது --

“பனிப்பெயல் அடர்ந்து
நின்னிதழ் நிறத்தை மூடினும்
நன்மணம் வாய்த்த நறுமலரே!
பரவும் மணத்தால்
பாருனை அறியத் தருவாய்.”

எத்தனை செறிவு! சிறுபாடலில் பெரும் பொருள் அடக்கும் வல்லபம் ஜப்பானியக் கவிதையில் உண்டு. ஒருவருடைய பெருமையும் புகழும் சூழ்நிலைகளால் அறியப்படுவதும் உண்டு அன்றி மறைக்கப் படுவதும் உண்டு. எது போல்? ஒரு மலரின் நிறம் தூய ஒளியில், சுத்தமான வெளியில் நன்கு கண்ணுக்குப் புலனாகும். ஆனால் பனிப்பொழிவு அடர்த்தி என்னும் பொழுது, ஒளி மங்கி, சூழலும் கருத்து இருக்கும் போது? நிறம் யாங்ஙனம் புலப்படும்? அதுமட்டுமின்றி, கண்ணுள்ளோருக்கு மட்டுமே நிறம் புலனாம். ஆனால் நறிய மணமோ கண்ணற்றோருக்கும் நாசிகள் புலப்படுத்தும் செய்தியாகும். ஒருவருடைய மெய்ப்புகழும் பெருமையும் சூழ்நிலைகளால் மறைக்கப்படினும் உள்ளார்ந்த பெருமையின் சுகந்தம் உரியவரை அடைந்து தன் மூலத்தை உணரவைக்கும். கண்டதே காட்சி என இருப்பார்க்கும் காலத்தின் தேவை என்பதால் ஒரோவழி உணர வைக்காமல் இருக்காது. ஆம். ஒளி உதவவில்லை என்று மலரே அயராதே. நின் மணம் அதற்கு ஏது தடை? அதைப் பரப்பி நின்னை அறியத்தா!

மூலப்பாடலை, அதாவது ஆங்கில நடுவாங்கியை, பார்த்தே ஆகவேண்டும் என்று ஒரு வேளை நீங்கள் அடம் பிடித்தால் -

”Masked by the snowflakes,
The colour of your petals
May well be hidden:
Yet still put forth your scent
That men may know you flower.” (Ono Takamura)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment