Friday, October 22, 2021

வண்தமிழ் நூற்க நோற்றேன்

நெடுநாள் கெடா உடம்பு, இனிமை மாறா வாழ்க்கை, முடிவே இல்லை என்று கருதலாம்போல் நெடிய, மிக நெடிய, அலுக்காமல் நெடிய வாழ்க்கை - இதனை உடையவர் தேவர்கள். அதற்குக் காரணம் அவரிடம் இருக்கும் அமிழ்தம். அவர்களை ஒப்பிட்டால், அவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு எந்த உயிரினமும் இல்லை, எந்த அறிவுசால் வாழினமும் இல்லை. ஆனாலும் அந்த தேவர்களுக்கு, யாருக்கு?, அமிழ்தம் உடைய அந்த தேவர்க்கும் பொறாமை கொப்புளிக்கிறது! அவர்கள் கையில் உள்ளது வெற்றுநீர் போன்று தோற்றரவு கொள்ளும் அளவிற்குப் பொறாமை! ஏன்? அவர்கள் தமிழர்களைப் பார்த்துவிட்டார்கள்! அவர்களின் மொழியான தமிழைக் கேட்டுவிட்டார்கள். பின்னர் என்ன? பொருந்தி உட்காரக் கூடத் தோன்றாமல் அங்கும் இங்கும் அலைபாய்கிறார்கள். 

‘அமிழ்துடைய தேவர் அழுக்காறு கொள்ளத்
தமிழுடைய னாய தனிவேந்து - இமிழ்திரைசூழ்
மண்பேசு கீர்த்தி வளர்மாறன் நின்னகத்துப்
பெண்பேச விட்டானெம் பேறு.’
(பாரிகாதை, 181) 

ஏன் அழுக்காறு தேவர்களுக்கு? அவர்களின் அமிழ்தம் அவர்தம் உடலை நெடுநாள் பேணி வைத்திருக்கும். ஆனால் அவர்தம் உளத்தையோ, உயிரையோ மன்னும் சிறப்பு மிக்கதாய் ஆக்காது. உயிர்க்கும் உளத்திற்கும் உறுதி பயவா ஒரு மருந்தை நாம் பெற்று என்ன பயன்? அதுவும் அருந்தினால்தான் இந்த மருந்து. ஆனால் தமிழோ உயிர்க்கும் உளத்திற்கும் உறுதிபயக்கும் உற்ற மருந்து ஆகும். அருந்த வேண்டாம். செவியை மூடிக்கொள்ளாமல் இருந்தாலே போதும். 

நம்மாழ்வார் பாடுகிறார் - 

‘...
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் தன்னை
வண் தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்பமாரியே ‘ 

வண் தமிழில் நூல் செய்திருக்கிறேன் - என்று சொல்லவில்லை நம்மாழ்வார். வண் தமிழ் நூற்க நோற்றேன். வண் தமிழில் நூல் செய்யத் தாம் நோன்பு இருந்ததாகப் பேசுகிறார் என்றால்... ! 

‘..வளங்குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ்மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள், செவிக்கினிய செஞ்சொல்லே’
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment