Thursday, October 21, 2021

இந்த அகங்காரம் இருக்கே !

இந்த அகங்காரத்தை மாதிரி கவன ஈர்ப்பு தீர்மானம் போட யாராலும் ஆகாதுயா சாமீ! எப்பப் பாரு, என்னைப் பார் என் அழகைப் பார், என்னைப் பார் என் அழகைப் பார்...ஓயரதே இல்லை... நான் இதைச் செய்தேன் நான் அதைச் சொன்னேன் நான் அங்க போனேன் நான் அதைச் செய்யலை...நானாவது அங்கப் போறதாவது...நான் என்ன நினைக்கிறேன் என்றால்....நான் சொல்ற மாதிரி செய்ங்கோ, நான் தான் அப்பவே சொன்னேனே, நான் அதெல்லாம் கரெக்டா இருப்பேன், நான் கொஞ்சம் அசந்துட்டேன்,..இல்லன்னா..

ஊனக்குரம்பையின் உள்ளெலும்பிற்குள் ஒரு சட்டி கவித்த வெண்பொதிக்குள் இந்த நான் தான் சதா அரி ஆசனம் (அரி ஆசனம் - வினைத்தொகை, அரிக்கும் ஆசனம், அரித்த ஆசனம் அரி ஆசனம்) வீற்ற ஒரே சக்ரவர்த்தி.

குட்டை ராஜாங்கம், தூங்கினாலும் விட்றதில்ல.....கனவுல வேட்டைக்குப் போவாரு, கண்டதைக் கண்டு பயந்து தலை தெறிக்க ஓடி எங்கயோ விழுந்து, பறந்து, அண்டத்தின் ஆதி ஆந்தை அலறும் போது, சகிக்காம போய் அதன் வாயைப் பொத்துவாரு... பார்த்தா....நனவுல....அலாரம் டைம் பீஸ் உருண்டு கீழ விழுந்து ஓடும். அப்பவும்...அடடா கையைச் சரியாத்தான் நீட்டினேன்...என்ன ஒட்டுல இருந்துது போல இருக்கு...கொஞ்சம் தவறிடிச்சு....அதெல்லாஃம் தூக்கத்துலயும் சாக்கிரதையா இருப்பமுல்ல....

பாருங்க...இதை எழுதிப் போட்டுவிட்டேனா... ஒரு நாலு நாளைக்கு இந்த மண்டையோட்டு சர்வாதிகாரி, யார் இதற்குப் பதில் போட்ராங்கன்னு...உட்கார்ந்து தினைப்புனம் காக்கும் பாருங்க.....இதனோட கேவல கம்பீரம் இருக்கே... எதுவும் இதுக்கு ஈடாகாது.... அடி சுருண்டு விழுந்தா, அம்பேல் தூக்கத்துல ஆழ்ந்தா, கை ஒரு பக்கம் கால் ஒரு பக்கம்....

எனக்கு என்னமோ...என்னதான் சொலுங்க... இந்த அகங்காரத்தை ரொம்பவே பிடிக்கும்.... பாவம் அதனோட பொறப்பு அப்படி...அது என்ன பண்ணும் பாவம்..... கண்ணு தெரியாது காது கேட்காது ஆனால் எல்லாம் அதுக்குத் தெரியும் போல ஒரு நினைப்பு.....அதுல மட்டும் அகங்காரத்துக்கு சந்தேகம் வரதே இல்லை....நாமதான் கொஞ்சம் அனுசரனையா அதைச் சொல்லி, மெதுவா பல விஷயங்களில் மூட்டி, நல்ல வழிகளில் கொண்டு போய் விட்டு, பாவங்க...என்னதான் இருந்தாலும் நம்ம வீட்டு ஜீவன்... நாமே வெறுத்தா ஆவுமா?

***

No comments:

Post a Comment