கதை சொல்லிகள் நம் கிராம வாழ்க்கையில் பழக்கம்தான். இரவின் கடையாமம் வரை ஒயிலாடும் காடா விளக்குகள் அவிந்து தூபமாய்க் கேட்ட கதைகளை அசைபோடும். ஆயினும் சிறுகதை நம் வரலாற்றில் புதுசுதான். காரணம் சிறுகதையில் இருக்க வேண்டியது கதை அன்று. கதையின் ஒரு சிறு அம்சம் மட்டுமே. சரி விவரணைகளோ என்னில் இல்லை. விவரணையின் ஒரு தோற்றமே. அது மட்டுமன்று. சிறுகதை என்பது கவிதையின் ஒரு மூர்ச்சனையையும் தன்னுள் கொண்டது. கவிதை என்றால் கற்பனை; தரையில் கால் பாவாக் கிறக்க மொழிதலோ என்னில் அதுவுமன்று; யதார்த்தத்தின் நங்கூரம் கழண்டுவிடக் கூடாது. எனவேதான் சொன்னேன் நம் வரலாற்றில் சிறுகதை முற்றிலும் புதியது.
நமது சிறுகதை ஆசிரியர்களில் பலரும் சிறுகதை என்ற பேரில் நெடுங்கதை, குறுங்கதை, அளவுக் கதை என்றுதான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை கேட்கும் ஜோரில் நாமும் அதில் பழகிப் பழகி நமக்கு உண்மையான சிறுகதையைப் படித்தால் ஆச்சரியமாக இருக்கக் கூடும். 'இதில் என்ன இருக்கிறது? பெரிசாகச் சொல்கிறார்களே இதைப் பற்றி' என்று. அதாவது 'கதை சிறுத்து...' என்பதுதான் சிறுகதையின் உயிர்நாடி. கொடி இடையாளை 'இடை சிறுத்து' என்பார்கள். அதாவது இடை இருக்கிறதோ இல்லையோ என்று சந்தேகிக்க வேண்டும் படி இருக்கிறதாம். உடலின் மேற்பகுதியும், கீழ்ப்பகுதியும் இருப்பதால் இடை என்று ஒன்று இருக்கிறது என்று யூகிக்க வேண்டியுள்ளதாம். இது எந்தக் கொடி இடையாளுக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால் 'கதை சிறுத்து' என்பதில் இதைப் பொருத்திப் பார்த்தால் ஓரளவிற்குச் சரிப்படும். அதாவது சிறுகதையில் கதை இருக்கிறதாக ஊகிக்கும்படி இருக்க வேண்டும். நன்றாக உப்பி, இளந்தொந்தி, பெருந்தொந்தி என்றபடி கதையம்சம் இருந்தால் அது சிறுகதை என்பதற்குச் சேராது என்பது நான் பார்த்த வரையில் மேலை நாட்டுச் சிறுகதைகளின் ரீதி, கொள்கை. ஆனால் நாங்கள் சுதேசிப்பற்று மிக்கவர்கள்; எங்கள் நாட்டில் நெய்த கதை எப்படி ஆயினும் அதையே மகிழ்ந்து, அதிலேயே பரவசமாகி நிற்போம் என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது. சிறுகதை என்பது நம்மைவிட்டு நழுவியபடியே இருக்கும்.
சிறுகதை என்பதில் கதை சொல்வது எப்படி ஒரு விடமுடியாத பழக்கமாக நம்மவரிடத்தில் தொற்றிக்கொண்டுள்ளதோ அதைப் போலவே கட்டக் கடைசியில், 'நச்' சங்கதிகளும். அதாவது நிகழ்வின் ஓட்டங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். அதெல்லாம் முக்கியமில்லை. எல்லாம் சேர்ந்து கடைசி ஒரு புள்ளியில் போய் கண்ணாடி போட்டு உடைத்தாற்போன்று ஒரு டணார். அதற்காகவே நம் மனமும் காவு காத்துக்கொண்டு இருக்கும். இதுதான் சினிமாத்தனம். அல்லது இந்தக் கதை கேட்கும் பழக்கத்தைத்தான் பின்னால் சினிமா வந்து காசாக்கிச் சினிமாத்தனமாக ஆக்கிவிட்டது என்று சொல்லலாம்.
அதாவது நாட்டுப்புறத் தெம்மாங்கு இசைக்கும் இசையியல் நுணுக்கம் மிக்க யாழிசை காட்டும் 'பிடிக்கும்' உள்ள வித்யாசம் இந்தக் கதை சொல்லல்களுக்கும், சிறுகதை என்பதற்கும் உண்டு. நமது மக்கள் கடந்த பல பத்தாண்டுகளாகவே சினிமா அபிமானம் அதிகப்பட்டு வருகிறார்கள் என்பதன் விளைவு சிறுகதை என்று வந்ததும் சும்மா சின்னக் கதையா சொல்லணும் அவ்வளவுதானே என்ற எண்ணம் பரவத் தொடங்கிவிட்டது. நமது சிறுகதை உலகத்தில் மிகக் குறைவானவைகளே சிறுகதைகளாகத் தேரும். மற்றவை எல்லாம் வெறும் கதைகளே. சிறுகதையாளர்களின் லிஸ்டும் மாறும். இந்தக் குழப்பம் இங்கு மட்டுமன்று. வடக்கே, கிழக்கே எங்கு பார்த்தாலும் எல்லாரும் குட்டி வியாசர்கள் வால்மீகிகளாக இருக்கின்றார்களேயன்றி, சிறுகதை என்ற டெக்னிகல் பர்ஃபெக்க்ஷன் அதைப்பற்றிப் பெரிதும் பிரக்ஞை இருப்பதாகவும் தெரியவில்லை. இவர்களிடம் இதுதான் சிறுகதை என்று உலகத்தரம் வாய்ந்த சிறுகதை ஒன்றைக் காட்டினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
ஒரு அடர்ந்த செடியின் நடுவே ஒரு முத்து விழுந்துவிட்டது. நீங்கள் இதோ இந்த இடத்தில் அந்த முத்து இருக்கிறது என்று செடி கொடிகளை விலக்கிக் கண்ணுக்கு அந்த முத்து மட்டும் தென்படும் வகையில் காட்டுகிறீர்கள். அவ்வாறு காட்டுவதில் நீங்கள் வெற்றி பெற்றால் உங்கள் முயற்சி சிறுகதை. வாழ்க்கையின் அடர்ந்த அனுபவங்கள் மிக்கச் செடிகொடிகளிடை நீங்கள் காட்ட விரும்பும் ஏதோ முத்துப் போன்ற அம்சம் எப்படிக் காட்டப் படுகிறது? அனைத்தையும் விலக்கினால்தான் தெரியும். அப்பொழுதுதான் விண்ணொளியும், கண்ணொளியும் அங்கு விழுந்து அந்த முத்தின் இருப்பை உணரும். கதை சொல்லல் என்பது முத்தைக் காட்டுவது ஆகாது. செடி கொடி எல்லாவற்றையும் விவரிக்கும். அந்தச் செடியில் வந்தமர்ந்து சென்ற பறவையினங்களைப் பதியவைக்கும். உள்ள செடி கொடி ஒரு புதர் என்றால் கதை என்பது அதைக் காடாக்கும். ஒண்டிக்கொண்டிருந்த விலங்கு திடீரென்று வெளிப்பட்டு ஓடிய நிகழ்வைப் பேசும்; அங்கு பூத்த மலர்கள், காய்கனி வகைகள் இவைபற்றியும் தெரிவிக்கும். ஆனால் முத்து? ஆம் அதுவும் அங்கே எங்கோ உள்ளேதான் விழுந்து கிடக்கிறது.
அதாவது கதை என்பதில் எங்கோ இதிகாசத் தனமை உள்ளேயே புதைந்து கிடக்கிறது. நாம் இதிகாசத்தை விட்டு வெளிவரும் பொழுதுதான், இதி ஹ ஆஸம் – இது இவ்வாறு நடந்தது என்னும் ஒன்றிலிருந்து வெளிவரும் போதுதான் சிறுகதை நம் கண்ணில் படுகிறது. உண்மையில் வியாசர் என்ற அந்தப் பெரும் கிழவர் மிக விவரமானவர். படைப்புலகில் இன்றும் அந்தக் கிழவனை விஞ்ச ஆளில்லை. இதிகாசமாக ஒரு முக்கியக் கதையை ஓடவிட்டுவிட்டு அப்புறம் என்ன செய்கிறார் பாருங்கள்? ஏகப்பட்ட சிறுகதைகள். மனித வாழ்வின் தோய்விலும், தொய்விலும் கருவைத்த எத்தனையோ முத்துக்கள் அவரால் சிறுகதைகளாகப் பொதிந்து வைக்கப் பட்டுள்ளன. உண்மையில் அவைதான் வியாசரின் பர்ணசாலை.
நாவல் எழுதுவது எப்படி என்று வழிகாட்டிகள் இருக்கலாம். நெடுங்கதை, குறுநாவல், கதை இவற்றிற்கு கைட் போடலாமாக இருக்கும். ஆனால் சிறுகதை எழுதுவது எப்படி என்று வழிகாட்டி போடுவது ஒரு வித ஹாஸ்யமே. ஏனெனில் சிறுகதை என்பது பார்வை சார்ந்த விஷயம். கவிதையைப் போலவே சிறுகதையும், ஒரு கலைஞன் சிறுகதையைப் பார்க்கிறான் என்பதைச் சார்ந்தது. மற்றவர்களுக்கு மொட்டையாகத் தெரியும் இடத்தில் சிறுகதையைப் பார்ப்பவன் எழுதுவது சிறுகதை. கவிதை எழுதுவது எப்படி என்பது எவ்வாறு வெட்டிப் பொழுது போக்கோ அப்ப்டியே சிறுகதை எழுதுவது எப்படி என்ற வியாபாரமும்.
ஹென்றி டேவிட் தோரோ கூறியது கண்ணில் பட்டது. Not that the story need be long, but it will take a long while to make it short. நெடுநேரம் பேசிக்கொண்டு இருப்போம். சரி இப்ப முடிவா என்ன சொல்ல வரேன்னா...என்று சொல்வோம். இந்த மாதிரியான சந்தர்ப்பத்துக்குத்தான் to make the long story short என்ற வழக்கப்படியான சொற்பொருள் கோவை பயன்படுகின்றது. இங்கு கொஞ்சம் தோரோ அந்தச் சொலவடையைச் சிறிதே திருப்புகிறார். It takes a long while to make it short என்று.
என்ன சொல்ல வருகிறேன் என்றால் to make the long story short கதையைச் சுருக்குவது என்பது மிக நெடிய நேரத்தை எடுத்துக் கொள்வது. இங்கு சுருக்குவது என்றால் precis writing அன்று. ஜ்ழானரில் கதையம்சம் தொட்டுக்கொ தொடைச்சுக்கோ என்று இருக்கும்படி ஒரு மானிட வாழ்வின், உயிர்க்குல புழக்கத்தின் இண்டு இடுக்குகளில் காணாமலே போய்விடும் சில மறைகணங்களை அப்படியே பிடித்து அதை மெருகு துலக்கி, மைக்ராஸ்கோப் வைத்துக் கண்ணுக்குக் காட்டுவது. நாவல் என்பது panoramic view என்றால் அதற்கு நேர் பிரதிகோடி சிறுகதை.-- microscopic view . தூர தரிசனியில், காட்சிமாலை தரிசனியில் எவ்வளவு அதிகப்படியான பரிமாற்றங்களின் கொண்டு கொடுத்தல்களைக் காட்ட முடிகின்றதோ அது நாவல். Telescopic view, the big view சராசரி வாழ்விலேயே கண்ணுக்கும் கருத்துக்கும் புலப்படாமலே போய்விடும் நுணுக்கமான மனித சுபாவப் பரிமாற்றங்களின் உள்புறங்களைத் தோன்றி மறையும் கணத்திற்குள் பிடித்துக் காட்டிவிடும் நுண்தர்சனி சிறுகதை.
கதை என்றால் என்ன என்பது கேள்வி கேட்கும் வரை நன்றாகப் புரிகின்ற விஷயம். அது என்ன என்பது எப்படி முடிவானாலும் எனக்குச் சம்மதமே. கதை என்றால் என்ன என்று முடிவு பண்ணி அதில் சின்னது சிறுகதை என்று முடிவுக்கு வரமுடியாது என்பது நான் உணர்த்த வரும் விஷயம். அதைப்போல சிறுகதை என்றால் கதை அங்கு இல்லை. கதை ஏதோ இருப்பதாக ஊகிக்க மட்டுமே முடிகிறது என்று பொருள்.
சிறுகதை இலக்கணம் வைத்துக்கொண்டுதான் கதை எழுதணுமா? படைப்பு எந்த இலக்கணத்தையும் ஒப்பு நோக்கிப் பிறவாது. அதாவது, நிறைய பக்கங்கள் வரும்படி நெடுங்கதையாக எழுதுவதற்கு நடுவில் ஒரு சின்ன சம்பவம், ஒரு விவரிப்பு, மனத்தைத் தொடும் ஒரு நிகழ்வு இதைச் சுருக்கமாகச் சொல்லி ஒரு பத்துப் பதினைந்து நிமிடத்திற்குள் படித்துவிடும்படி எழுதினால் அது சிறுகதை என்று பேர் வந்திருக்கும். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய ஆலாபனை? என்று உங்களுக்குத் தோன்றினால் அதிலும் தவறில்லை. ஏனென்றால் எதேச்சையான தொடக்கங்கள் அப்படித்தான் அமையும். ஆனால் அங்கிருந்து சிறுகதை என்ற வடிவம் எந்த நிலைக்கு வளர்ந்து நிற்கிறது என்பதுதான் வியப்பு. தான் இது இல்லை, அது இல்லை என்று தன்னைத் தன் வகைப்பாட்டைத் தவிர பிறிதொன்றோடு ஒரு சேரக் கட்டுவதைத் தவிர்க்கும் போக்கில் சிறுகதையின் பிரத்யேகத் தன்மையை இனங்காண முடியுமா? என்பதுதான் கேள்வி. ஏதோ நல்ல கதையாகப் படித்தோம். ரசித்தோம் என்று போகாமல் இலக்கிய இன்பம் என்பது ரசிப்பதோடு சேர்த்து, இலக்கிய வகைப்பாடுகளை நன்கு அறுதியிடுவதிலும் அறிவின் ஊக்கம் செயல்படுவது ரசனையை ஆழப்படுத்துவதும், திறம் மிகச்செய்வதும் அல்லவா?
கதைகளின் நடுவே கதையற்ற புள்ளிகளைக் காண்பதும் காட்டுவதும் சிறுகதை. வால்மீகி சொல்லும் ஸ்ரீராமனின் கதை நெடுகப் போகிறது. அடுத்து அடுத்து ஒன்றைத் தொடர்ந்து ஒன்று என்று கதை பின்னிப் போகிறது. ஆனால் சிராவணனின் உபாக்யானம். அங்கு கதை அற்றுப் போய் நின்று விடுகிறது. அது சிறுகதை. வில்லில் சரம் தொட்டு விட்ட தசரதனின் குறி சிராவணன் அன்று. அம்பும் அவனைக் குறிக்கொண்டு போகவில்லை. எந்த அசுரனையும் இலக்கு வைத்து தசரதன் எய்யவும் இல்லை. வேட்டை, உல்லாசம், வேந்தர்தம் பொழுதுபோக்கு, அதில் கொடிய விலங்கு இறந்தால் ஒரோவழி நாட்டுக்கும் உபகாரம். ஆனால் இறந்த விலங்கு என்ன விதத்தில் கொடியது? அதுவும் அது தண்ணி குடித்தது என்றால் அதனால் நாட்டிற்கு என்ன தீங்கு? ஒன்றும் இல்லை. சப்த வேதி என்ற அஸ்திரத் திறமை தெரியும். அதை நிரூபித்துக் காட்ட ஒரு யதேச்சையான சந்தர்ப்பம். சப்தத்தை அறிந்தான் தசரதன் ஆனால் சப்தார்த்தம் பிழையாகி விட்டது. நதியின் பிழையன்று நறும்புனலின்மை. அதுதான் சிறுகதை. பெரும் காதையைச் சொல்லவருகின்ற வால்மீகி ஏன் இவ்வாறு கதையே அற்று, ஸ்தம்பித்த இந்தச் சூன்ய கணத்தைப் பதிவு செய்தான். அங்குதான் அவன் சிறுகதை ஆசிரியன். கிரௌஞ்ச பட்சியைக் கொன்ற அம்பு வேடனின் இலக்கு. ஆனால் சிராவணனைக் கொன்ற அம்பிற்கு இலக்கு எதுவும் இல்லை. நட்ட நடுவானில் நம் கண்ணை உறுத்துகின்ற கூர் முனை அம்பாக இன்றும் தழல்கிறது சிராவணன் என்னும் சிறுகதை.
அந்தச் சிறுகதை முடிந்ததும் நீள்கதை மீண்டும் பாய்கிறது. ஸ்தம்பித்த கணம் விட்டு அனைத்தும் நகர்கின்றன. அந்தச் சிராவணனைக் கொன்றதால் தசரதன் தன் மகனைப் பிரிய நேர்ந்தது. -- இப்படிச் சொன்னதும்தான் கதைக்கு ஒரு பெருமூச்சு!. அப்பாடா எல்லாம் ஒழுங்காகத்தான் இருக்கிறது என்று. ஆனால் சிறுகதை புரியாத புள்ளியில் மூர்த்தண்யத்துடன் நிற்கும். சால்சாப்புச் சொல்லி மழுப்பாது. ஏனெனில் அதற்குக் கதையைப் பற்றிச் சிறிதும் இலட்சியமே இல்லை. கதை சிறுத்த காரணத்தால் அதன் கண் தீட்சண்யம் மிகுந்து மனித வாழ்வின் கதையற்ற கணங்களின் கடுமையில் காலூன்றி நிற்கிறது. இறகு ஒடிந்த சம்பாதி சிறுகதை. அதன் பார்வையின் தீட்சண்யத்தில் அசோகவனம் தெரியும்.
கதை சொல்வது ஆதிகால ஊக்கம். மனிதர் கதை சொல்லிகள்தாம். மனத்தில் அடர்ந்து மண்டி வளர்ந்து பெருகுவதும் கதைகள்தாம். கதைகளுக்கு நடுவில்தான் மனிதன் பிறக்கிறான். முலைப்பால் கிட்டாத குழந்தை இருக்கலாம். ஆனால் மனத்தில் கதை ஊட்டாத குழந்தை இல்லை. எனவேதான் நம் மனமே நம்மைப் பற்றிச் சிந்தனைகள் இடும்போதே பாருங்கள் குட்டிக் குட்டிக் கதைகளாகப் பின்னிக்கொண்டே போகும்.
ஒன்றுமில்லை. கடைத்தெருவுக்குப் போகவேண்டும்; ஒரு வேலையாக என்று நினைக்கும் போதே அங்கும் உள்ளே ஒரு கதை ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு குட்டி கிளைமாக்ஸ், ஒரு சின்ன ஆண்டி கிளைமாக்ஸ், ஒரு குட்டியூண்டு ப்ளாட் எல்லாம் அதுபாட்டுக்கு மினி எம் எம்மில் ஒரு பக்கத்தில் ஓடும். மனிதன் கதையாடுவது சுபாவம். கதைகளின் நடுவே தன் இருப்பைக் கற்பனை செய்து ஒரு பாதுகாப்பைத் தேடிக்கொள்வது உளவியல் ஒத்தடம். ஆனால் இந்தச் சர்வ ஜன பொதுமையிலிருந்து அந்தர்முகமான பாதைக்கு மாறுகிறது, மாற்றுகிறது கதையாடல் போன்ற ஒன்று. ஆனால் அங்குக் கதையாடல் இல்லை. கதைகள் ஓய்வு பெறுகின்றன. சுழலும் பம்பரம் சுற்றி ஓயும் கிடைவட்ட அசைவு மட்டுமே அந்தச் சொல்லாடலில் தோற்றும் கதைத்தோற்றம். இதற்கு உண்மையில் 'அகதா' என்று பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் சிறுகதை என்று வளர்ந்துவிட்டிருக்கிறது.
புத்தர் வீட்டைத் துறந்து காட்டுக்குப் போனதைக் கதையாகச் சொல்ல முடியும். ஆனால் புத்தர் போதி மரத்தின் அடியில் சட்டென்று குமிண்சிரிப்புத் துலங்க ஸ்தம்பித்த கணத்தைச் சிறுகதையால்தான் குறிப்பு காட்ட முடியும். மகள் வந்தது; அவள் சொன்னது; எங்கும் திரிந்தது; அனைவரும் சேர்ந்து பல கொட்டங்கள் அடித்தது; -- கதை. மகள் கிளம்பிப் போன இரவு விமானம் ஏற்றிவிட்டு வந்து படுத்துக் காலை விழித்ததும் அவள் விட்டுச் சென்ற பொருள், ஆளுக்கு ஒரு மூலையைப் பார்த்த வண்ணம் விடும் நெட்டுயிர்ப்பு, கனத்த கலைக்க விரும்பாத மௌனம், நிரம்பி வழியும் வெறுமை -- சிறுகதை.
***