Prakrit Verses in Sanskrit Works on Poetics
in two volumes, Ed by V M Kulkarni M A Ph D
Bhogilal Leherchand Institute of Indology
Delhi, 1988
என்னும் இந்த நூல் ஒரு சிறப்பான தொகுப்பு நூலாகும். இரண்டு பகுதிகள். முதல் பகுதி வடமொழி, பிராகிருத மூலப் பனுவல். இரண்டாவது பகுதி ஆங்கில மொழிபெயர்ப்பு.. இரண்டு பகுதிகளும் சேர்ந்து சுமார் 1500 பக்கங்கள்.
தொகுப்புக்கான மையக் கருதுகோள் அருமையான ஒரு கருத்து. அதாவது வடமொழி காவிய சாத்திர நூல்களில், உதாரணமாகப் பல பிராகிருத செய்யுட்கள் கையாளப்பட்டிருக்கும். கவிஞர்கள், காவிய சாத்திரக் காரர்களால் பல பிராகிருத செய்யுட்களும் புனையப் பட்டிருக்கும். அது மாதிரியான அனைத்து உதாரண பிராகிருதச் செய்யுட்களையும் ஒரு சேரத் தொகுத்து நிரல்படக் கொடுத்து, விரிவான அனுபந்தங்கள், அட்டவணைகள் முதலியனவும் தந்து, மொழிபெயர்ப்பும், அரும்பதங்களும், குறிப்புகளும் நிரம்ப கொடுத்து திரு குல்கர்னி நூலை மிகப்பெரிய ஆய்வு விருந்தாகத் தந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட 3000 பிராகிருத, அபப்ரம்ஸ செய்யுட்களைத் தொகுத்து, அவற்றின் ஆகரங்கள், மாறுபடு ஆட்சிகள், அவற்றிற்கான வடமொழி வடிவமான சாயா ச்லோகங்கள் ஆகியன தந்து நூலைப் பெட்டகமாக ஆக்கியிருக்கிறார் திரு குல்கர்னி. வடமொழியில் மகாகவிகள் பிராகிருதத்திலேயே நூல்கள் செய்திருப்பதும் உண்டு. பதிப்பாசிரியர் சில பிராகிருத காவியங்களைப் பட்டியல் இடுகிறார்: ஹலரின் காதா சப்தசதி, சர்வசேனரின் ஹரிவிஜயம், பிரவர்சேனரின் சேதுபந்தம், வாக்பதிராஜரின் கௌடவாஹோ, மஹுமஹ வையா, கௌஹலரின் லீலாவயி, ஆனந்தவர்த்தனரின் விஷமபாணலீலை, ராஜசேகரரின் கற்பூர மஞ்சரி.
பிராகிருத செய்யுள் படிப்பதற்கு எப்படி ஒலிக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு -
ஸேல அ ஸு ஆருத்தம் முத்தாணா
பத்தமுத்த ஸஸிலேஹம் |
ஸஸிபரிட்டிய கங்கம்
ஸஞ்ஜாபண அம் பமஹணாஹம் ||
இதன் வடமொழி வடிவம் வருமாறு --
சைல ஸுதாருத்தார்த்தம்
மூர்த்தாபத்த புக்ந சசிலேகம் |
சீர்ஷ பரிஷ்டித கங்கம்
ஸந்த்யா ப்ரணதம் ப்ரமதநாதம் ||
இதன் பொருளை ஆங்கிலத்தில் இரண்டாம் புத்தகத்தில் தந்திருக்கிறார். இதன் பொருள் தமிழில்
மலைகளின் மேல் பிறந்த மாநதியை
சடைமுடியால் கட்டி நிலவோடே
தலைவைத்து கங்கை தாங்கும் நாதனை
வணங்கிடல் அந்தி தொழுதபின்னே.
இந்தச் செய்யுள் வருகின்ற நூல் ருத்ரடர் என்பவரின் காவ்யாலங்காரம். இதற்கு நமிசாது என்பவர் எழுதிய டிப்பணி உள்ளது. டிப்பணி என்பது குறிப்புரை.
ருத்ரடரின் காலம் 825 கி பி முதல் 875 கி பி. டிப்பணி எழுதிய நமிசாது என்பவரின் காலம் 11 நூற் கி பி. ருத்ரடர் குறிப்பிடும் ஒரு கருத்தை நம் கவனத்திற்கு அளிக்கிறார் திரு குல்கர்னி.
ருத்ரடர் எழுதுகிறார், தம் காலத்தில் சம்ஸ்க்ருதம் தவிர, பிரகிருதம், மாகதம், பிசாச பாஷை, சூரசேனி, அபப்ரம்ஸம் ஆகிய மொழிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.
மேற்காட்டிய செய்யுளை போஜர் அசரீரம் என்னும் குற்றத்தை விளக்க உதாரணமாகக் காட்டுகிறார். அதாவது செய்யுளில் வினைச் சொல் இல்லாமல் இருப்பது அசரீரம் என்பதாம்.
இவ்வாறு ருத்ரடர் என்பவரின் காவ்யாலங்காரம், த்வன்யாலோகம், லோசனம், தசரூபம், அவலோகம், வ்யக்திவிவேகம், ச்ருங்கார ப்ரகாசம், சரஸ்வதி கண்டாபரணம், காவ்யப்ரகாசம், அலங்கார சர்வஸ்வம் முதலிய அனைத்து வடமொழி காவிய சாத்திரங்களில் உதாரணமாகக் கையாளப்படும் பிராகிருத அபப்ரம்ஸ செய்யுட்களையும், அவற்றின் வடமொழி வடிவங்களையும், மொழிபெயர்ப்பையும், குறிப்புகளையும் தந்து நூலைச் சிறக்க்ச் செய்துள்ள திரு குல்கர்னிக்கு நம் நெஞ்சார வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக.
***
No comments:
Post a Comment