Thursday, May 2, 2019

குருக்கள் தந்த கொடை

(’வடமொழி இலக்கிய வரலாறு - பேராசிரியர் கா கைலாசநாத குருக்கள்’ நூலைப் பற்றி)

’செந்திறத்த தமிழ் என்கையாலே ஆகஸ்த்யமும் அநாதி.’

‘ அதாவது - ”செந்திறத்த தமிழோசை வடசொல்லாகி” என்று ஸம்ஸ்க்ருதத்தோடே ஸஹபடிதமும் ப்ரதமோக்தமுமாகையாலே அகஸ்த்ய ப்ரகாசிதமான மாத்ரங்கொண்டு ஆகஸ்த்யம் என்று சொல்லப்படுகிற த்ராவிடமும் அநாதியாயுள்ளதென்கை. இத்தால் அநாதித்வம் ஸம்ஸ்க்ருத த்ராவிட ஸாதாரணம் என்றதாய்த்து.’

என்று 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இயற்றிய ஆசார்ய ஹ்ருதயமும், அதற்குப் பாலோடு அமுதன்ன உரை வரைந்த ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகளது வியாக்கியானமும் பேசுகின்றன.

’நன்றாய்ந்த நீள் நிமிர்சடை முது முதல்வன் வாய்போகாது ஒன்று புரிந்த ஈரிரண்டின் ஆறுணர்ந்த ஒரு முது நூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் மெய்யன்ன பொய்யுணர்ந்து, பொய் ஓராது, மெய் கொளீஇ, மூவேழ் துறையும் முட்டின்று போகிய உரைசால் சிறப்பின் உரவோர் மருக!’ என்று சோணாட்டு பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார் பாடுகிறார், புறநானூற்றில். (௧௬௬).

வியாகரணம், சோதிடம், நிருத்தம், சந்தம், சீக்கை, கற்பம் என்னும் ஆறு அங்கங்களும் உணர்ந்து, ஸோமயாகம் 7, ஹவிர்யாகம் 7, பாக யாகம் 7 என வேள்வித்துறைகள் இருபத்தியொன்றையும் நன்கு இயற்றிய அந்தணர் ஒருவரை ஆவூர் மூலங்கிழார் பாடுகிறார்.

‘புரையில் நற்பனுவல் நால்வேதத்து அருஞ்சீர்த்திப் பெருந்தண்ணுறை நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி, யூபம் நட்ட வியன்களம் பலகொல்!’ என்று பாண்டியன் பல்யாசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடுகிறார். வடமொழியும், தமிழ்மொழியும் திகழ்ந்த ஊக்கமுடையவர்களாய், இருமொழிப் பண்பாடும் ஒருவழிப் படூஉம் சிந்தையராய்ச் சிறந்திருந்த தமிழகத்தைத்தான் நான் மேற்குறித்த காட்டுகள் காட்டாநிற்கின்றன. ஆயினும் வடமொழி இலக்கிய வரலாறு என்று தனிப்பட நூல் எவரும் பழங்காலத்தில் எழுதாதது ஏன் என்பது ஒரு கேள்வி ஆயினும், நன்கு புரையறக் கலந்த மொழிகளும் பண்பாடுகளுமாய் இருக்கும் நிலையில் ஒன்றைப் பற்றிய தெரிவிப்பு நூல் வேண்டுவோர் அங்கு யாரும் இல்லை என்பதையும் இது ஒரு வேளை காட்டுகின்றதோ! புராணங்கள், இதிகாசங்கள் தமிழில் ஆக்கப்பட்டவற்றின் மூலம் இந்தக்குறை ஓரளவிற்கு நீங்கியது என்பதும் உண்மையே.

ஸ்ரீவைஷ்ணவ வியாக்கியான நூல்கள், தர்சனங்களைப் பற்றிய பழைய சிறு அறிமுக நூல்கள், சைவ சித்தாந்த சாத்திர உரைகள், 20 ஆம் நூற்றாண்டில் எம் ஆர் ஜம்புநாதன் எழுதிய வேத சந்திரிகை போன்ற நூல்கள் வேத இலக்கியத்தை ஓரளவு அறிமுகத் தொகுப்பாகத் தரும் நூல்கள் ஆயினும் ஸ்ரீ பி எஸ் சுப்ரமணிய சாஸ்திரிகளின் வடமொழி இலக்கிய வரலாறு என்னும் நூலே முழு அளவிலான இலக்கிய வரலாற்று நூலாகும். இந்த வரிசையில் திரு கைலாச நாத குருக்களுடைய இந்த வடமொழி இலக்கிய வரலாறு என்பது தனித்த இடத்தை வகிக்கின்றது. காரணம், மேற்கத்திய வடமொழி ஆய்வுகள், வேத ஆய்வுகள் தரும் முடிவுகளைப் பெரும்பாலும் தழுவி உள்பெய்து யாத்த நூலாக அமைந்திருக்கிறது குருக்கள் தந்த கொடையான இந்த நூல். இருப்பினும், உள் பார்வையாக குருக்கள் அவர்களால் மரபு ரீதியான பார்வை என்ன என்பதையும் பதிவு செய்ய முடியும் என்பதை நினைக்கும் பொழுது, இயல்பான பார்வை தலை மடிய ஏன்று கொண்ட பார்வையாக மேலைய ஆய்வுகளுக்கு அடங்கிய அறிமுக நூலாக மட்டும் அமைந்துவிட்டதோ என்ற எண்ணம் இந்த நூலைக் கற்கும் பொழுது தவிர்க்க முடியாமல் எழுகிறது. மேலைநாட்டில் வடமொழி இலக்கிய வ்ரலாறு எழுதியவர்கள் பலர். மாக்ஸ்முல்லர், மேக்டொனல்ட், வெபர், யான் ஹோண்டா என்று பல ஆசிரியர்கள் எழுதிய இலக்கிய வரலாறுகள் உண்டு. இவற்றில் யான் ஹோண்டா எழுதியதும் அவர் பதிப்பாசிரியத் தலைமையின் கீழ் வந்திருக்கும் தொகுதிகளும் சிறந்தன என்பது என் கருத்து. தமிழில் இந்த வேத ஆய்வுகள், வடமொழி ஆய்வுகள் ஆகியவற்றின் செறிவை அறிமுகப்படுத்தும் நூல் கூட இல்லை என்பது பெருங்குறை. அந்தக் குறையைக் களையத் தொடங்கும் நாளில் அந்த முயற்சிக்கு என்றோ அங்குரார்ப்பணம் செய்திருக்கிறார் குருக்கள் என்பதைத் தமிழர் உணர்ந்தே தீருவர்.

'வடமொழி இலக்கிய வரலாறு சம்ஸ்கிருதம் கற்கும் மாணவர்களின் தேவை கருதி உருவாயிற்று. இனிய தமிழ் நடையில் தானே அமைந்த காரணத்தாலும் வேத இலக்கியம் பற்றித் தெளிவாக அறியத்தரும் நூலாக விளங்குவதனாலும் மாணவர்கள் மட்டுமின்றி, வைதிக இலக்கியம் பற்றி அறிய விழையும் இரசிகர்களும் சுவைத்துப் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதை உணரலானேன்.’ என்று திரு கைலாசநாத குருக்களே இரண்டாம் பதிப்புக்கான முன்னுரையில் கூறுகிறார். வேத இலக்கியம் என்பதை நான்கு வேதங்கள், பிராம்மணங்கள், ஆரணியகங்கள், உபநிடதங்கள், சூத்திரங்கள் எனப் பிரித்து அலசுகிறது குருக்கள் தந்திருக்கும் நூல். ஆனாலும் வேதம் ஒரே பனுவலாக இருந்ததைக் கற்போர் சௌகரியம் கருதி நான்காகப் பகுத்து வைத்தார் வேத வியாசர் என்னும் பண்டைக் காலம் முதல் வந்து சேர்ந்துள்ள உள் பார்வையை நூல் கருதுவதற்கு இடமில்லை போலும். காரணம் மேலைநாடுகளின் ஆய்வு முடிவுகளே நூலை வழிநடத்தும் கரமாகச் செயல்படுகின்றன. வியாசர் நான்காகப் பகுத்தார் என்பது வெற்றுச் செவிவழிச் செய்திதான் என்று ஒதுக்கிவிட முடியாத வண்ணம் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்து நச்சினார்க்கினியர் உரையின் முகப்புப் பகுதி அற்றை நாள் தொடங்கி இன்றளவும் சான்று பகர்கிறது:-

‘நான்கு கூறுமாய் மறைந்த பொருளும் உடைமையான் ‘நான்மறை’ என்றார். அவை தைத்திரியமும், பௌடிகமும், தலவகாரமும், சாமவேதமுமாம். இனி இருக்கும் யசுவும் சாமமும் அதர்வணமும் என்பாருமுளர். அது பொருந்தாது; இவர் இந்நூல் செய்த பின்னர் வேதவியாதர் சின்னாட் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு நான்கு கூறாக இவற்றைச் செய்தாராதலின்.’(தொல்காப்பியம் எழுத்ததிகாரம், சிறப்புப்பாயிரம் நச்சினார்க்கினியர் உரை). 

முகவுரையில், ‘எழுத்துக்கலை தோன்றுவதற்குப் பன்னெடுங்காலத்திற்கு முந்தியது வேத காலம்.’ என்று கூறுகிறார் ஆசிரியர். இதைக் கண்ணுறும்பொழுது ‘மந்த்ர த்ரஷ்டா’ என்னும் சொல் நினைவுக்கு வருகிறது. மந்த்ரத்தைக் கண்டவர்கள் என்னும் பொருளில் ரிஷிகள் குறிப்பிடப்படுவதை இது உணர்த்தும். மந்த்ரத்தைக் காண்டல் என்றாலே எழுத்து வடிவம் ஒன்று இருந்ததாகத்தானே பெறப்படும். ஒரு வேளை எழுத்து என்பது ஒரு கலையாகவும் பெருகிய பயன்பாடும் கொள்வதற்கு முன் என்று இந்த வாக்கியத்தைப் பொருள் கொள்ள வேண்டும் போலும்.

அடுத்து வேதங்கள் அபௌருஷேயங்கள் என்னும் கருத்தைக் குறிப்பிடும் இடத்தே ‘வேத நூல்கள் மக்களால் ஆக்கப்படாத தெய்விக நூல்கள்’ என்று குறிப்பிடுகிறார் குருக்கள். ஆனால் அபௌருஷேயம் என்பது தெய்வத்தினாலும் இயற்றப்பட்ட நூல் அன்று, எந்த ஆசிரியராலும், அது மனிதரோ, தெய்வமோ, எவராலும் இயற்றப்படாது நித்திய சப்தத் தொகுதியாய் உள்ளவை என்பதையே அபௌருஷேயம் என்னும் கருத்து உணர்த்தும்.

ஆசிரியர் பாணினி சூத்திரங்களைப் பற்றிய அறிமுகம் தந்திருக்கும் விதம் மிகவும் அருமையானது. அதுவும் ஓர் அறிமுக நூலில் இவ்வளவு விவரங்கள் பெய்திருப்பது சிறப்பு. “ ‘காவியங்கள் செய்யுள் வடிவத்தில்தான் அமைய வேண்டுவதில்லை; உரைநடையிலும் அமையலாம்’ என்ற கருத்து வடமொழியில் உள்ள அலங்கார நூல்களில்தான் முதன்முதலில் தோன்றியது எனத் துணிவாகக் கூறலாம்.” என்று ஆசிரியர் கூறியிருக்கும் கருத்து கவனத்திற்குரியது.

வேத இலக்கியங்கள் என்னும் பகுதியில் கூறிவருமிடத்தே, ‘இந்தியாவில் எழுந்த இலக்கியங்கள் எல்லாம் வேதங்களைக் குறிப்பிடுகின்றன. வேதங்களோவெனின், இதர இலக்கியங்களைப் பற்றி ஒன்றுமே கூறாதிருக்கின்றன. இதே வேதங்கள் பழமையானவை என்னும் கருத்தை வலியுறுத்தும்.’ என்னும் கருத்தும். ‘வேதங்களைப் பற்றிய அறிவு எல்லோர்க்கும் இன்றியமையாது வேண்டப்படும் என அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளார்கள்.... வேதங்களைப் போற்றாதது மட்டுமின்றி அவை கூறும் கருத்துகளைக் கண்டிக்கவும் முற்பட்ட புத்த மதத்தினரும், ஜைன மதத்தினரான சமணரும் தத்தம் மதங்களை ஆழ்ந்து அறிய விரும்பினால், முதலில் வேதங்களை நன்கு கற்றல் வேண்டும்.’என்று கூறுவதும் ஆழ்ந்த சிந்தனைக்குரியன.

வேதங்களைப் பற்றிய ஆழ்ந்த கல்வி நம் காலத்தில் சீரும் சிறப்புமாக வளர வேண்டிய ஒன்று. இத்தகைய கல்வி, மரபின்கண் சென்று புதைந்து அதன் வழிப்பட்ட கருதுகோள்களையே தன் நோக்கின் விழிகளாகப் பதித்துக்கொள்வது என்பது ஒரு நாளும் அறிவைச் சிறக்க வைக்காது. தற்கால, விஞ்ஞான காலத்து அணுகு முறைகளும், தரவுகளும், நெறிகளும் நெடுக நம்முள் வேரோட வேண்டும். அதனோடு அமைந்துவிடுதலும் சிறப்பன்று. மரபின் உள் பார்வைகளின் சிறப்புகளையும் நியாயங்களையும் அவற்றிற்கு உரிய அதிக பட்ச கௌரவத்தைத் தந்து நம் கல்வியில் செழுமையாக ஏற்றல் நாம் செய்ய வேண்டிய ஒன்று. இந்த இரண்டு விதங்களிலும் தரவுகளைச் செறிந்து பேணல் இலட்சியமான நிலை எனினும் ஆரம்பம் அறிவின் நிலையில் இருந்துதான் தொடங்க முடியும். அத்தகைய தொடக்கத்தின் பூர்வாங்கமாகத் திகழக் கூடியது குருக்கள் தந்த கொடையான இந்த நூல்.

இருக்கு வேதம் என்னும் பகுதியில் குருக்கள் அருமையாக ஆய்வுக் கருத்துகளையும், இருக்கு வேதத் தொகுதியில் சிறப்பாக அறிய வரும் விஷயங்களையும் நிரலிட்டுத் தொட்டுக் காட்டுகிறார். பார்வை முழுதும் மேற்கத்திய ஆய்வுச் சூழலில் நிலைகொண்டது எனினும் ஒரு துறைசார்ந்த கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ள விதம் அருமை. ஆயினும், ‘இயற்கைப் பொருள்கள் தெய்வங்களாக மாறும் நிலையை இப்பாடல்கள் தெளிவாகக் காட்டுகின்றன என்பது முன்னமே சுட்டப்பட்டது. இது, இருக்கு வேத சமயத்தின் மிகப்பழைய நிலை.’ என்று குருக்கள் கூறும் இடங்கள் எல்லாம் அவர் ஏன் மரபின் உள் வரலாறு கெழுமிய பார்வையின் நியாயத்தை நிறுவ முயலவில்லை என்ற எண்ணம் ஏற்படுவதை என்னால் தவிர்க்கக் கூடவில்லை.

‘வேதங்களை இயற்றியோர் இருஷிகள் என்னும் கருத்து வேத காலத்திலேயே நிலவிற்று’ என்னும் கருத்து பொருத்தப்பாடு உடைய கருத்தாகக் கருத முடியவில்லை. கால விசாரணையைப் பற்றிய தொகுப்புரை மிகவும் நிதானத்துடன் செய்யப்பட்டிருக்கும் ஒன்று. போதாயனர் என்னும் சொல்லை ஆங்கில வழி அடைமொழியாக Baudhayana என்பதை உச்சரிப்பது போல் பௌத்தாயனர் என்று எங்கும் குருகக்ள் வழங்குவது வினோதமாக இருக்கிறது.

இருக்கு வேதம் என்பதைப் பற்றிய கருத்துத் தொகுப்பு சிறந்திருப்பது போலவே அதர்வ வேதம் என்னும் பகுதியும் சிறப்பாக இருக்கிறது. த்ரயீ வேதம் என்று மூன்று கூறாய் வேதம் காணப்பட்ட நிலைக்கும், நான்கு வேதங்கள் என்று ஆன நிலைக்கும் உள்ள நுட்பங்களை ஆசிரியர் நன்கு விளக்குகிறார். அதர்வாங்கிரஸ், பிருகுவாங்கிரஸ் என்னும் பிரிவுகள் பற்றியும் குருக்களின் விளக்கம் நன்கு அமைந்திருக்கிறது. அதர்வ வேதத்திற்கான மாற்றுப் பெயர்களை நன்கு விளக்கியுள்ளார். மாய மந்திரங்கள் நிறைந்த பொது மக்களின் நம்பிக்கைகளின் பதிவுகளாகக் கருதப்படும் அதர்வ வேதத்தின்கண் கவிதைச் சிறப்பு மிக்க பகுதிகளும் இருக்கு வேதத்தோடு ஒக்க இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார். ஆப்ரீ சூக்தங்கள், குந்தாப சூத்ரங்கள், ரோஹித சூத்ரங்கள் முதலியன பற்றிய கவனத்தை நன்கு காட்டியிருக்கிறார் குருக்கள்.

யசுர் வேதம் என்னும் பகுதியில் கூறுகிறார் குருக்கள்: ‘யாகங்களில் கடமையாற்றும் பலவகைப் புரோகிதர்களின் தேவையை ஒட்டியே வேதங்களின் சங்கிதைகள் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அத்வர்யுக்கள் வேட்பவருள் ஒரு பிரிவினர். இவர்களின் தேவையை ஒட்டி எழுந்ததே யசுர் வேதம்.’ இது மரபின் உள்பார்வை செறிந்த கருத்து. இப்பொழுது வேதங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் காலக் கிரமத்தில் எழுந்தன என்பது அதன் பகுப்பிலும், மொழிநடையிலும் தெரிய வருகிறது என்று பிரபலமாக்கப்பட்ட மேற்கத்திய ஆய்வுலகக் கருத்து இதனோடு முரண்படுகிறதன்றோ!. இந்தப் பகுதியிலும் குருக்களின் கருத்துத் தொகுப்பு திறம்பட உள்ளது. அவர் கூறும் ஒரு கருத்து கவனத்திற்குரியது. ‘வழிபாட்டு முறையில் புதியதொரு திருப்பத்தை யசுர் வேதம் தோற்றுவித்துள்ளது. பிற்காலத்து வழிபாட்டு முறையில் உயர்ந்ததோர் தனியிடத்தைப் பெற்றுள்ளது. இம்முறை சிறப்பாகத் தென்னாட்டில் பெரிதும் கையாளப்படுகிறது.’ யசுர் வேதத்தைப் பற்றிய குருக்களின் மற்றுமொரு கருத்து - ‘தத்துவ நூல்களை நன்கு விளங்கவும் இதன் அறிவு இன்றியமையாது வேண்டப்படுவதொன்றே. இந்திய சமய வளர்ச்சியின் தொடக்க நிலையை மட்டுமில்லாமல், உலகத்துக்கே பொதுவான சமய வரலாற்றை எடுத்துக்கூறுவதற்கும் இது பெருந்துணை புரியும்.’- ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டக்கூடிய கருத்து இதுவாகும்.

சாம வேதம் என்ற பகுதியில் பலவகை கானங்களைப் பற்றியும், ஆர்ச்சிகம், ஸ்தோபம் பற்றியும் விளக்கும் பகுதி, அதுவும் எளிய தமிழில் குருக்களின் முயற்சி எத்தகையது என்று சொல்ல வல்லது. ‘பிராமணம் என்றால், வேள்வித் துறையில் வல்லவர்கள் கிரியைகளைப் பற்றி விரித்துக்கூறும் விளக்கம் எனப் பொருள்படும். இது தொகுத்துச் சுட்டும் பொதுப்பெயராக அமைவதுடன், பலர் கூறிய விளக்கங்களால் உருவான நூல் என்பதையும் உணர்த்தும்.’ என்று பிராம்மணங்களைப்பற்றிய பகுதியில் கூறுகிறார் குருக்கள். ‘இந்தியப் பண்பாட்டை விரித்து விளக்கி முதலிலிருந்து இறுதிவரை தொடர்ச்சியாகக் கூறும் வரலாற்று நூல் ஒன்றை நாம் எழுதுவோமேயானால், அதில் பிராமணங்கள் கூறும் கருத்துகள் முக்கியமான இடத்தைப் பெறும் என்பதில் ஐயமில்லை.’ என்று குருக்கள் கூறும் கருத்து மிகவும் சிந்திக்கத்தக்கது.

உபநிடதங்கள் கூறும் கருத்துகளை ஒரு பத்தியில் மிக அருமையாகச் சுருக்கி வரைகிறார் திரு கைலாசநாத குருக்கள்.

‘உபநிடதங்கள் கூறும் உயரிய குறிக்கோள் பிரமத்துடன் ஒன்றுதல். இது அவித்தை கெட, அதன் விளைவாய் எழும் உணர்வினால் அடையவல்லது. ஆன்மா, பரமான்மா ஆகிய இரண்டின் ஐக்கியத்தை உணர்ந்தவனே வீடுபேற்றை அடைவன். இவ்வீடுபேறு பிரமத்துடன் நெருங்கி ஒன்றி ஐக்கியம் அடைதல். நல்வினை தீவினையாகிய இரண்டினையும் எய்துவிக்கும் செயல்களை நீக்கினால் இந்நிலையை அடையலாம். வேள்வி முதலிய நற்செயல்கள் திரும்பத் திரும்பப் பிறப்பதற்குக் காரணமாய் உள்ளன. வித்தை ஒன்றே சம்சாரத்தில் இருந்து விடுதலை அளித்து என்றென்றும் ஒன்றாய் உள்ள உண்மைப் பொருளை அடைய உதவுவது.’

சூத்திரங்கள் என்னும் இறுதிப் பகுதி கூறவரும் பொருட்பரப்பு சுருங்க உரைத்தற்கு மிகவும் அரிய பகுதி. ஆயினும் அதிலும் ஆசிரியர் வெற்றி கண்டுள்ளார். க்ருஹ்ய சூத்திரம், ச்ரௌத சூத்திரம், கல்ப சூத்திரம், சுல்வ சூத்திரம் என்று வேள்வி பற்றிய நூற்பா நூல்களும், தர்ம சூத்திரங்கள் என்று வாழ்வின் ஒழுங்கு பற்றிய நூற்பா நூல்களும் மிகப் பெருக்கம் கண்டது வைதிக இலக்கியம். இதன்றியில், ஆறு தர்சனங்களும் தமக்கென்று நூற்பா நூல்களைக் கொண்டிலகுவன. வேதாந்தத்தின் மூல நூல் எனக் கொள்ளக் கூடியது பிரம சூத்திரம் என்று ஆசிரியர் கூறுவது மேலெழுந்தவாரியாக நோக்குழி சரி என்றாலும் உண்மையில் வேதாந்தத்திற்கான மூல நூல்கள் உபநிஷதங்கள் ஆகும்.

நூலின் இறுதியில் திரு கைலாசநாத குருக்கள் ‘சமயத்துடன் தொடர்பு பெற்றுச் சமய அடிப்படையிலேயே சாஸ்திரங்கள் தோன்றின எனினும் ஆசிரியர்கள் படிப்படியாக இவ்வழியினின்றும் விலகித் தனிவழி நின்று சமயப் பற்றற்ற நூல்களை எழுதும் மரபையும் தொடக்கி வைத்தனர்...’ என்பது போன்று எழுதிச் செல்லும் போது என்னால் ஒன்றைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்னவெனில், வேத இலக்கிய மரபில் தர்மம், மதம், சமயம் என்பன எல்லாம் மிக வேறுபட்ட பொருளை உடைய சொற்கள். மேலை நாட்டுப் பண்பாடுகளில் நிகழ்ந்தவண்ணம் ’ரிலிஜன்’ என்னும் சொல்லுக்கான பதிலிச் சொல் வேத இலக்கியத்தில் காணுதல் அரிது. காரணம் வேதப் பண்பாடும், அதன் அடிப்படையில் எழுந்த தர்சன சாத்திர நூல்களும், அதன் நெறிப்பட்ட வழிபாட்டு முறைகளும் தமக்கென்று ப்ரத்யேகமான பண்பாட்டு விழுமியம் கொண்டன.

வேத இலக்கியத்தின்படி சமயம் என்ற சொல் அவ்வப்பொழுதைய சமுதாய ஒப்பந்தம் என்பதைக் குறிப்பதோர் சொல். அதை மரபில் கிளர்ந்த மனம் ஒரு நாளும் ரிலிஜன் என்பதற்கு மாற்றாகப் பயன்படுத்தாது. ஆயினும் குருக்கள் மேற்கத்திய பண்பாடுகளின் தாக்கம் நிறைந்த பொருளில் சமயம் என்பதைக் கையாண்டு, சமயத்தோடு தொடர்பு கொண்டு சாஸ்திரங்கள் எழுந்த நிலை, பின்னர் அதனின்றும் விலகித் தனிவழி நின்று சமயப் பற்றற்ற நூல்கள் எழுந்த நிலை என்று அந்நியர் கருத்தைக் கடன்வாங்கியுரைப்பது போல் எழுதுவது எதற்காக என்று தெரியவில்லை.
விமரிசனக் கருத்துகள் ஒரு புறமிருக்க, வடமொழி இலக்கிய வரலாறு என்னும் இந்நூல் அதன் உள்ளடக்கத்தாலும், மொழியின் சரளமான நடையினாலும், குருக்களின் நுண்மாண் நுழைபுலத்தாலும் சிறந்து விளங்குவதோடு மட்டுமின்றித் தமிழில் ஓர் அரிய துறையைப் பற்றிய தெளிந்த அறிமுக நூலாகவும் நிலைத்து விளங்கக் கூடியதாகும்.

*** 

No comments:

Post a Comment