Friday, May 3, 2019

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை

முத்கலரின் கதை வெறுமனே கதைதானே என்று நினைக்கலாம். ஆனால் நடந்த சம்பவம் ஒன்று ஸ்ரீவைஷ்ணவ ஆசிரியர்களின் வாழ்வில் பழம்பதிவுகளில் வந்துள்ளது. நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

அநந்தாழ்வான் என்பவர் ஸ்ரீராமாநுஜரின் சிஷ்யர்களில் ஒருவர். ஒரு சமயம் அனைவருக்கும் உபதேசம் செய்து கொண்டிருந்த போது ஸ்ரீராமாநுஜர் தமது சீடர்களைப் பார்த்து, "திருமலையில் புஷ்பங்கள் கிடைப்பது மிகவும் அரிதாக இருக்கிறது. யாராவது அங்கு சென்று நந்தவனம் அமைத்து திருவேங்கடமுடையானுக்கு வேண்டிய புஷ்பங்கள் கிடைக்கும் வழிக்குத் தொண்டு செய்ய முன் வந்தால் நன்றாக இருக்கும். உங்களில் யாருக்கு அதில் விருப்பம்?" என்று கேட்டார். அன்றைய நாட்களில் திருமலை என்பது சென்று சேர்வதற்கும், அங்கு உறைந்து வாழ்வதற்கும் மிகவும் இடர்ப்பாடுகள் நிறைந்த இடமாக இருந்தது போலும்! யாரும் முன் வரவில்லை.

"என்னது! இங்கு துணிச்சல் மிக்க ஆண்பிள்ளைகள் இல்லையா?" என்று தூண்டிக் கேட்டார் ஸ்ரீராமாநுஜர். அப்பொழுது ஒரு சீடர் எழுந்து தாம் ஒருப்படுவதாகச் சொன்னார். ஸ்ரீராமநுஜரோ மிகவும் மகிழ்ந்து, "நீர்தானய்யா ஆண்பிள்ளை!" என்று கொண்டாடினார். அந்தச் சீடர்தான் அநந்தாழ்வான். அநந்தாழ்வானின் ஆசாரிய பக்தி எல்லை கடந்தது என்று நூல்கள் தெரிவிக்கின்றன. 

அநந்தாழ்வனுடைய சிஷ்யர்கள் சிலர் பட்டணங்களிலிருந்து திருமலையைத் தொழுவதற்குச் சென்றார்கள். வழியில் வளத்தான் மங்கலம் என்று ஒரு கிராமம். அங்கு ஒரு செல்வந்தனுடைய வீட்டு வாசல் திண்ணையில் ஓர் ஓரமாகத் தங்கள் மூட்டைகளை வைத்து விட்டு இளைப்பாறினார்கள்.

அந்த செல்வந்தர் அவர்களை நோக்கி, "எங்கு போய்க் கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு இந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமலையைத் தொழப் போய்க்கொண்டிருக்கிறோம் என்றார்கள். செல்வந்தர் தாமும் கூட வருவதாகக் கூறி அவர்களுடனே சேர்ந்து கொண்டார். சில தூரங்கள் கடந்தபின்னர் செல்வந்தருக்கோ இவர்கள் பேசுவதும், இவர்கள் கூறுகின்ற கருத்தும் மிகவும் மனத்திற்குப் பிடித்துப் போயிற்று. ஆனால் தாம் இவற்றில் அறியாதவர் ஆகையாலே தாமும் பேச வேண்டும் என்பதற்காகத் தாம் அறிந்த விஷயங்களைப் பற்றிக் கூறிக்கொண்டு போனார். ஆனால் அந்த விஷயங்களோ இந்த ஸ்ரீவைஷ்ணவர்களின் நிஷ்டைக்கு உகந்ததாக இல்லை. மேலும் செல்வந்தரை அறிவுரை கூறித் திருத்தலாம் என்றாலோ என்ன நினைத்துக் கொள்வாரோ என்று அச்சம். சரி எதற்கு வம்பு என்று செல்வந்தரை விட்டுத் தாங்கள் மட்டும் தனியாகப் பயணம் தொடர வழி தேடினார்கள். இதை கவனித்த செல்வந்தர் தாம் ஏதோ நினைக்க அது இவர்களுடைய தொடர்பைத் தம்மிடமிருந்து விலக்குவதற்கு வழியாகி விட்டதே என்று வருந்தித் தம்மையும் ஸ்ரீவைஷ்ணவராக ஆக்கித் தம்மையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டினார்.

ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. தாமே நன்கு பக்குவம் அடைந்தவர்களா என்று தெரியவில்லை. இதில் தாங்கள் யார் பிறரைத் திருத்திப் பணிகொள்வதற்கு என்று அமைதியாக இருந்து விட்டனர். பயணம் தொடர்ந்தது பழையபடியே. திருமலையை அடைந்து அநந்தாழ்வனை சேவித்து உரையாடிக் கொண்டிருந்தனர். அநந்தாழ்வானும் சில வார்த்தைகள் சொல்லிவிட்டு அவர்களைத் திருவேங்கடமுடையானைச் சேவிக்கச் சொல்லி அனுப்பினார். அப்பொழுது செல்வந்தர் அந்த சீடர்களிடம், "என்னை அநந்தாழ்வான் அவர்களிடத்தே அறிமுகப்படுத்தி என்னையும் சீடராக ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும்" என்று விண்ணப்பித்தார். அதைக் கண்ட அநந்தாழ்வான், 'என்ன உங்களுக்குள் பேச்சு நடக்கிறது? யார் இவர்? என்ன சொல்கிறார்?' என்று கேட்டார். சீடர்களும் தொடக்கம் முதல் செய்திகளைக் கூறி, செல்வந்தரின் ஆசையையும் கூறினார்கள்.

அநந்தாழ்வானும் மிகவும் மனமிரங்கி அந்த செல்வந்தரை நோக்கி, 'அப்படியா? உமக்கு என்னிடத்தே உயிரின் நற்பேற்றுக்கான உபதேசங்கள் பெற வேண்டுமோ?' என்று வினவினார். செல்வந்தரும் எப்படியாவது தம்மை அங்கீகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதற்கு அநந்தாழ்வான் அவரை நோக்கி, "ஐயா! நீங்கள் என்னிடம் உபதேசம் கேட்டால் உம்முடைய செல்வமெல்லாம் உம்மை விட்டுப் போய் விடுமே! என்ன செய்வீர்?' என்றார். அந்தச் செல்வந்தரோ அது போனால் போகட்டும் என்றும் தமக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை என்றும் சொல்லிவிட்டார். அநந்தாழ்வன் அவரை நோக்கி, "ஆனால் ஒன்றைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லை. நீங்களும் நான் எந்த மோக்ஷ உலகிற்குச் சென்று எந்தப் பேறு பெறுவேனோ அதை நீங்களும் அடைவீர்கள். அது நிச்சயம்" என்றார்.

உபதேசம் ஆயிற்று. நெல்லானது பால் வற்ற வற்ற முதிர்ந்து தலை வணங்குவதைப் போல, சரணாகதி என்னும் தத்துவம் அந்தச் செல்வந்தரின் நெஞ்சில் ஏற ஏற அவருக்குப் புது உலகமே திறந்தது போல் ஆயிற்று. அநந்தாழ்வானிடம் அவருக்கு மிஞ்சிய பக்தி எழுந்தது. ஊருக்கு வந்தார். அவருடைய மாற்றம் கண்டு அவருடைய சொந்தக்காரர்கள் ஓ இவரும் ஸ்ரீவைஷ்ணவராகிப் போனார் என்று வியந்தார்கள். அவரின் அணுக்கமான உறவினர்கள் அவரை அணுகி, 'ஐயா! நீங்கள் ஸ்ரீவைஷ்ணவரானதும், உங்களை நாடி ரிஷிகளைப் போல் இருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்து போவதும் சிறப்புதான். அதையெல்லாம் நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் உங்களையே நம்பி இருக்கிற உமது உற்றார்களாகிய எங்களையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எங்களுக்கும் ஏதாவது வழிவகை செய்ய வேண்டும்" என்று கேட்டார்கள். செல்வந்தரும் தமது செல்வம் அனைத்தையும் உறவினர்களுகெல்லாம் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தாம் அநந்தாழ்வான் திருவடிகளே தஞ்சம் என்று கிளம்பித் திருமலைக்குச் சென்று விட்டார்.

அநந்தாழ்வன் அவரைப் பார்த்தவுடன், "ஐயா! முன்னரே சொன்னேன் அல்லவா! என்னிடம் உபதேசம் கேட்டால் உம்மை விட்டுச் செல்வம் அகன்றுவிடும் என்று. நீர் கேட்கவில்லையே பாரும் என்னாயிற்று என்று" என்றார்.

செல்வந்தர் கூறினார், "ஐயா! தாங்கள் இரண்டு உத்தரவாதங்கள் தந்தீர்கள். செல்வம் போய்விடும் என்பது ஒன்று. நீங்கள் என்ன உயர்ந்த கதிப்பேற்றைப் பெறுவீர்களோ அதே பேறு கிடைக்கும் என்பது மற்றொன்று. இரண்டையும் நன்கு பாதுகாப்பாக கிழிச்சீரையில் தநம் (இடுப்புத் துணியில் முடிந்த கைப்பணம்) என்று முடிந்து வைத்துக் கொண்டேன். ஒன்று பலித்துவிட்டது என்பதைக் கண்டேன். எனவே மற்றொன்றும் நிச்சயம் பலிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை பிறந்துள்ளது. எனவே தங்களுடைய தொண்டிலேயே மீதி வாழ்வைப் போக்க வந்துள்ளேன்' என்றதும் அநந்தாழ்வான் அவருடைய உறுதியைக் கண்டு வியந்து, 'அப்படியானால் நீர் இங்கேயே தங்கிவிடும்' என்று கூறினார்.

இன்றைய நிலவரங்கள் எப்படி இருக்கின்றன உலகெங்கும் என்பது நாமறிந்ததே, பொது நிலவரத்திற்கு விலக்காக அருளாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் அன்றைய நிலைமையை நினைத்தால் எத்தகைய விழுமிய மாற்றம் என்று வியப்பாகத்தான் இருக்கிறது! செல்வந்தருக்குத் தமது செல்வம் சிறிதும் மதிப்பே அற்றது ஆன்மிகச் சூழல்களில் என்பதைச் சொல்லாலும் செயலாலும் கருத்தாலும் புரியவைக்கும் ஆசிரியர்கள் அன்று இருந்தார்கள்.

'அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு' என்று திருவள்ளுவர் கூறினார். அதாவது இவ்வுலகத்தில் பொருள் இல்லாமல் வாழ்க்கை நடவாது என்பது போல அவ்வுலக வாழ்க்கை என்று கருதப்படும் தெய்வ அருளையே முழுவதும் நம்பி வாழும் வாழ்வு என்பதற்குப் பொருள் பயன்படாது. அருள் இல்லாமல் அவ்வுலக வாழ்க்கை நடைபெறாது என்றார். அதை மெய்ப்பிக்கும் ஆசிரியர்களும் அந்தக் காலத்தில் இருந்தனர். அன்று செல்வத்தையும் அதன் உரிய மதிப்புடன் போற்றினார்கள். ஏழ்மைக்கும் மதிப்பு இருந்தது. வாழ்க்கையின் தீங்காக வரும் ஏழ்மையை அகற்றினார்கள். அருள்வாழ்விற்கு உரிய விரதமாக ஏழ்மையைப் பயின்றார்கள். ஏழ்மையை மதிக்கவும் கற்றார்கள். அருள் வாழ்க்கைக்கு உகந்த ஏழ்மை மதிப்பில் உயர்ந்ததாக இருந்தது. இன்று பொதுவாக எங்கும் அங்கும் இங்கும் வறுமையே மலிந்துள்ளது.

***

No comments:

Post a Comment