தொல்காப்பியத்தில் அணி இலக்கணம் உண்டா? அலங்கார சாத்திரக் கருத்துகளுக்கும் தொல்காப்பியம் கூறும் உள்ளுறை உவமம், ஏனை உவமம், இறைச்சி ஆகிய கருத்துகளுக்கும் என்ன ஒப்புமை வேற்றுமை? வடமொழி காவிய சாத்திரம் என்றே பெரும் துறை பெருகி, பல பள்ளிகள் அவற்றில் எழுந்திருக்கின்றனவே. தொல்காப்பியத்திற்குப் பின் ஏன் திணைக் கோட்பாட்டை மையமாக வைத்து அணி இலக்கண நூல்கள் எழவில்லை. பின்னாளில் எழுந்த தண்டியலங்காரம் என்பதெல்லாம் காவிய சாத்திர உலகின்றும் தருவித்த மொழியாக்கம்தானே? இதைப் போன்ற பல கேள்விகள் இருமொழிகளிலும் உள்ள அணி இலக்கணத் துறைகளை, கவிதை இயல் கோட்பாடுகளை ஒப்புமை/வேற்றுமை நோக்கில் கற்போருக்கு எழுகின்ற கேள்விகள். இப்படித்தான் என்று முடிவுறப் பெறாமல் தொடரும் கேள்விகளும் ஆம். இந்த ஒப்பியல் நோக்குக் கவிதைத் திறனாய்வியல் என்னும் விதத்தில் டாக்டர் கே மீனாக்ஷியின் நூல் ஒன்று மிகவும் முக்கியமானது. Literary Criticism in Tamil and
Sanskrit, Dr K Meenakshi, International Institute of Tamil studies. மொத்தம் 152 பக்கங்களே கொண்ட நூல், ஆங்கில மொழியில் அமைந்து, தன் பொருளடக்கத்தால் பெருநூலாக அமைந்திருக்கிறது.
Introduction, Tolkappiyam-Porulatikaram, Saanskrit Alankara Texts,
Literary Criticism in Tamil and Sanskrit: A Comparison, Conclusion என்று ஐந்து தலைப்புகளில் நுவல் பொருளை ஆய்கிறது இந்த நூல். அமைந்த முகவுரையும், ஆன்ற குறிப்புதவி நூல் நிரலும், அருஞ்சொல் அகரமுதலி நிரலும் அமைந்து நூலின் பயன்பாட்டை வசதிமிக்கதாய் ஆக்குகின்றன. தம் நூலின் நோக்கு குறித்து டாக்டர் மீனாக்ஷி அவர்கள் முகவுரையில் கூறும் கருத்து நம்மை முதலிலேயே தயார்படுத்துகிறது.
Comparative studies attempted earlier take the common topics such
as ullurai, iraicci, and dhvani and try to point out the similarities in Tamil
and Sanskrit. It requires some rethinking since the common topics treated in
Tamil and Sanskrit may not be similar in their treatments as well. A careful
study of Tolkappiyam-Porulatikaram shows that the treatment of these topics in
Tolkappiyam differs from that of Sanskrit Alamkarikas.
இதற்கேற்பவே ஆசிரியரின் ஒப்பியல் அணுகுமுறையும் அமைந்து அவர்தம் முடிவுரையில் அறுதியிடும் போதும் அவர் கூறுவது -
Tolkappiyar's contribution to the subject is original and
uninfluenced by Sanskrit theories of poetry, since more differences can be
observed between these two traditions in their approaches.
Though Tolkappiyar was knowledgeable in Sanskrit tradition, his
description of literary themes show that it is within the framework of tinai
concept. This concept is unique in Tamil.
ஆசிரியர் நூலில் எழுதியுள்ள தொல்காப்பியம் பொருளதிகாரம் என்னும் பகுதி உவமம், கூற்று, உள்ளுறை, இறைச்சி என அனைத்து கருத்துகளையும் அழகுற ஆங்கிலத்தில் சுருக்கி வரையும் பகுதியாகத் திகழ்கிறது. சுட்டிக்கூறா உவமை, பொருளே உவமம், வேறுபட வந்த உவமம், ஒரீஇக்கூறும் உவமை, பயனிலை புரிந்த வழக்குவமை, தடுமாறு உவமம்,அடுக்கிய தோற்ற உவமை, உவமைப் போலியும் அதன் ஐந்து வகைகளும், உள்ளுறை உவமம், கூற்று, இறைச்சி ஆகிய பகுதிகள் ஆங்கிலத்தில் நன்கு சுருக்கமாகவும் தெளிவுபடவும் நூலில் வந்துள்ளன.
சம்ஸ்க்ருத காவிய சாத்திர உலகை வெகு அழகுறச் சுருக்கி முக்கியமான பெயர்களும் கருத்துகளும் விடுபடலின்றி ஆசிரியர் தந்துள்ளார். காவிய சாத்திர உலகம் என்பது மிகவும் விரிந்தது. பல பல தொகையான ஆசிரியன்மார்களின் பெயர்கள், பல பள்ளிகளின் வழிவழிப் பிரிவுகள் என்று மிகுந்த பிரமிப்பையும், அயர்ச்சியையும் ஊட்டக் கூடிய உலகம் காவிய சாத்திர உலகம். அதைச் சிறு ஆடியில் அகண்டவான் பிரதிபலிப்பதொப்பக் காட்டிய ஆசிரியரின் திறன் போற்றுதற்குரியது. பாரதர், பாமஹர், தண்டி, உத்படர், வாமனர், ருத்ரகர், விஷ்ணுதர்மோத்தர, அக்னி புராணப் பகுதிகள், ஆனந்தவர்த்தனர், குந்தகர், ராஜசேகரர், அபிநவகுப்தர், மஹிமபட்டர், ருத்ரடர், தனஞ்ஜயர், மம்மடர், க்ஷேமேந்திரர், போஜர், விசுவநாதர், ஜகந்நாதபண்டிதர் என்று பெயர்கள் நீளுகின்றன. பரதர், ஆலங்காரிகர்கள், ரீதி, த்வனி, ரஸம் என்று பள்ளிகள் பல்துறையின. ரூபகம் என்னும் நாடக சாத்திரமோ பத்து வகையான நாடக வகைகளைப் பற்றி ஆயும். நாடகங்களின் கதைக்கரு என்னும் வஸ்து, பாத்திரங்களின் ஆய்வு, கதையின் கட்ட வளர்ச்சி என்பன தனித்தனி ஆய்வுக்கு உட்படுவன. இது போன்று தமிழ், சம்ஸ்க்ருதம் என்னும் இருமொழிகள் சார்ந்த பல கவிதைத் திறனாய்வியல் கோட்பாடுகள், காவிய சாத்திரக் கருத்துகள் அனைத்துக்கும் சாளரமாக இந்தச் சிறு நூல் அமைந்து பெரும்பயன் உடைத்தாய்த் திகழ்கிறது.
***
No comments:
Post a Comment