Friday, May 3, 2019

ஸ்ரீராமநவமிச் சிந்தனைகள்

ஸ்ரீராமனின் நினைவு எழும் போது அஃது ஒரு ப்ரத்யேகமான பாவனத்தையும், வாழ்வின் அற முடிச்சுகளால் ஆய தீவிர அக்கறையின் கனத்தையும், தன் வாழ்வில் தர்மத்தின் பாற்பட்ட தயவு தாட்சண்யமற்ற கடுமையையும், அதே நேரம் பிற உயிர்கள் பால், மனிதர், மனிதரல்லாத என்ற வித்யாசமின்றி, எழும் தங்கு தடையற்ற கருணை, புரையறக் கலந்து பழகும் நீர்மை என்ற குணங்களையும் ஒருங்கே சிந்தனையில் உருவப்படுத்தி நிறுவிவிடுகிறது

வான்மீக முனிவனின் தியானமாகிய மலைச் சிகரத்தின் கொடு முடியினின்றும் பொங்கி எழுந்து வந்து நிலம் தோயும் புனித அருவிப் புனல் பாயும் புண்ணிய நதியாக ஸ்ரீராமாயணத்தைக் கூறுவது மிகவும் ஆழ்ந்து தோய்ந்த ரசிகனின் கூற்று என்பது அப்பொழுதுதான் புரியும்

பிரச்சனைகளையெல்லாம் தீர்த்த நிவாரணங்களாகத் தந்து தியான விஷயமாக ஆகும் தெய்வ வருகைகள் நிகழ்த்தும் மனத்தூய்மையை, ஸ்ரீராமன் எதிர்கொண்ட ப்ரச்சனைகளே நம் மனத்தில் ஏற்படுத்திவிடுகின்றன. தர்ம சங்கடங்கள் என்ற மனப்பயிற்சிகளில் தேரும் போது அங்கு நிகழும் சித்த சுத்திதான் பலன் என்பது புரிகிறது, அந்தத் தர்மச் சங்கடங்களில் கண்டெடுத்ததாக இதிஹாசம் காட்டும் தீர்வுகளில் நாம் அப்பொழுதைக்கு உடன்பட்டாலும் சரி, அன்றி உடன் படாது போயினும் சரி

சுமந்திரனை விடுத்துக் காட்டிற்குள் அண்ணலும், தேவியும், இளவலும் ஏகும் கட்டத்தைக் கம்பர் கவியாக்கும் போது

தையல் தன் கற்பும்தன் 
தகவும், தம்பியும்
மையறு கருணையும்
உணர்வும், வாய்மையும்
செய்யதன் வில்லுமே
சேம மாகக்கொண்டு 
ஐயனும் போயினான்
அல்லின் நாப்பணே

என்று கூறுகிறார்

அல்லின் நாப்பண் படித்த காலம் தொட்டு என் மனத்தில் அரற்றும் தீஞ்சொற் கோவைதேவியின் கற்பு, அதற்கேற்ற தன் தகவு, தம்மின் நிழலும் அடியிணைகளுமாகத் தொண்டு செய நோற்ற தம்பிமையறு கருணை -- இன்னார், இனையார், மனிதர், விலங்கு என்று பாராத கருணை
ப்ரதிபலன் எதிர்பார்க்காத கருணைதான் தெய்வம் என்று காட்டாது உலக உயிர்களோடு ஒன்றுற, காடும் வேடும் கலந்து பழகத் திரிந்த கருணை
அந்தக் கருணைக்கு அடிப்படையாக நிற்கும் விரிந்து பரந்த உணர்வு
ப்ரபஞ்சம் தழுவிய உணர்வின் செழுமைக்கு வேர்க் காலாய் நிற்கும் சத்திய தர்சனம்இந்தக் கருணைக்கும், உணர்வுக்கும், வாய்மைக்கும் உருவகமாகத் திகழும் செய்ய வில்கருணையின் காரணமாக மட்டுமே குவிகின்ற வில்
உணர்வு போல் சேய்மையைச் சிறிதும் கருதாது சென்று எய்யும் வில்
வாய்மைபோல் பொய்க்காது இலக்கினை அடைவிக்கும் வில்

தையல்தன் கற்பு, தன் தகவு, தம்பி -- 

மையறு கருணை, உணர்வு, வாய்மை -- 

மூன்று மூன்றாக அடுக்கிய கம்பர் செய்ய வில் என்ற ஒரே உருவகத்தில், ஒற்றைப் படிமத்தில் இந்த இரு மூன்றுகளைக் காட்டித் தரும் நேர்த்தி

செய்ய வில்லாகச் சேமம் செய்யும் தையல்தன் கற்பு, தன் தகவு, தம்பி -- இவர்தாம் துணை

செய்ய வில்லாகச் சேமம் செய்யும் மையறு கருணை, உணர்வு, வாய்மை -- இவைதாம் துணைஎதற்குஅல்லின் நாப்பண் செல்வதற்குஇருட்டுக்குள் போவதற்குத் துணையாகாட்டின் இருட்டுக்குள் போகக் கருணை, உணர்வு, வாய்மை, கற்பு, தகவு இதெல்லாம் எதற்குத் துணையாகஅப்பொழுது இந்தத் துணைகளுடன் ஐயன் புகுந்த அல்லின் நாப்பண் என்பது அந்த வெறும் கானக இருட்டா

கதையின் போக்கு, கானகத்தைக் காட்டும் எனினும், கதையின் நோக்கு காட்டும் அல்லின் நாப்பண் என்ன

தெய்வமே அவதாரம் எடுத்து வரும் பொழுது பவத்தின் இருளில் சேமம் செய்து வரும் துணைகளாக இவற்றைக் கவி காட்டுகின்றார் என்னும் பொழுதுதான் இந்த அல்லின் நாப்பண் எனபது ஸம்ஸாரக் கானகத்தின் பவ இருள் என்பது அர்த்தமாகிறதுஸ்ரீமத் பாகவதத்தில் தர்மம் என்பது கலியினால் நலியப்பட்டு அவதியுறும் நிலையைப் பசுவின் கால்கள் வெட்டுண்ணும் சித்திரமாகக் காட்டப் பட்டிருக்கும்தர்மம் நலிவெய்தத் தெய்வம் வந்து உயர்த்துகிறது என்ற கருத்தைக் கம்பரும் கட்டுகின்ற இடம் அருமை

மருமத்துத் தன்னை ஊன்றும் 
மறக்கொடும் பாவம் தீர்க்கும் 
உருமொத்த சிலையி னாரை 
ஒருப்படுத் துதவி நின்ற 
கருமத்தின் விளைவை உன்னிக் 
களிப்பொடு காண வந்த 
தருமத்தின் வதனம் என்னப் 
பொலிந்தது தனிவெண் திங்கள்

தர்மம், தன் மருமத்திலேயே கொண்டு வந்து தன்னை ஊன்றும் வன்முறையும், கொடுமையும் ஆன பாவத்தைத் தீர்க்கும் வழி அறியாது திகைத்த தருமம்
நெளிந்து நெளிந்து பாம்பு போல் தருமத்தின் மர்மத்தில் நோவு படுத்தும் பாவத்தின் உயிர் முடிக்கும் இடி போன்ற வில்லினை ஏந்தியவர்களைக் கண்டதும் தர்மம் உள்குளிரக் காண்கிறது போன்று இருக்கிறதாம் எது

பொலிகின்ற தனி வெண் திங்கள்

கூடாக் கூட்டத்தால் இதுகால் நலிந்து பனிபடு காரடைந்த திங்களாய் இருந்த தர்மம், மர்மத்தில் புகுந்த நோய்க்கு மருந்தாக வந்து நிற்பாரைக் கண்டதும் பொலிகின்ற தனி வெண் திங்களாக ஒளிர்கிறது(தர்மத்தைத் தம் மருமத்தே கொண்டு இலங்கும் மாட்சியினார் பாவத்தை முடிக்கும் உரும் என்ன சிலையைத் தாங்கி வந்தார் என்பதும் கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளத் தக்கதே'ராமோ விக்ரஹவான் தர்ம:' என்ற முனி வாக்கியத்திற்குப் பொருள் காட்டுவதாய் இருக்கும்)

அது வரையில் அற நெறி என்ற கடுமையில் பரிதி போல் வெம்மை காட்டி நின்ற தர்மம், அறத்தின் சிறப்பு தண்ணளி என்ற மருந்தால் நோய் தீர்க்கும் நீலவான் நிறத்து அண்ணலைக் கண்டு நெஞ்சு குளிரத் தண்மை ஊட்டி ஒளிரும் தனி வெண் திங்களாய்ப் பொலிந்ததுஇது போன்று பல சிந்தனைகள் ஸ்ரீ ராம நவமியில் தோன்றுகின்றன

கம்ப ராமாயணத்தில் மிகைப் பாடல்களில் கருத்து செலுத்தும் பொழுது சில பாடல்கள், சில வரிகள் சிந்தையைக் கவர்கின்றனகம்பர் பாடினாரா, இடைச் செறுகலா, வெள்ளியா, பித்தளையா அந்த வாதங்கள் ஒரு புறம் இருக்க, யாரோ காவியத்தைக் கற்ற மாந்தர் தம் கருத்துகளை, உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், மார்ஜினல் நோட்ஸ், கோடபத்ரம் என்ற வகையில் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்

'நாராயணாய நம' என்னும் நல்நெஞ்சர் 
பார் ஆளும் பாதம் பணிந்து ஏத்தும் ஆறு அறியேன்
கார் ஆரும் மேனிக் கருணாகர மூர்த்திக்கு 
ஆராதனை என் அறியாமை ஒன்றுமே

நாரணன் விளையாட்டு எல்லாம் 
நாரத முனிவன் கூற 
ஆரணக் கவிதை செய்தான்
அறிந்த வான்மீகி என்பான்

நாடிய பொருள் கைகூடும்
ஞானமும் புகழும் உண்டாம்
வீடு இயல் வழி அது ஆக்கும்
வேரி அம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை 
நீறுபட்டு அழிய, வாகை 
சூடிய சிலை இராமன் 
தோள் வலி கூறுவோர்க்கே

எங்கும் பொலியும் பரஞ்சுடர் ஆகி
எவ்வுயிரும் 
மங்கும் பிறவித் துயரற
மாற்று நேசம் 
தங்கும் தருமத்து உரு ஆகி
தரணி மீது 
பொங்கும் கருணைப் புத்தேள் கருத்து 
யாம் எவன் புகல்வோம்

வேதம் அதனுள் விளை பொருள் 
விகற்பத்துள் அடங்காச் 
சோதி மயமாய்த் துலங்கி
தொல்லுயிர்த் தொகை பலவாய்
ஓது புவனம் உதரத்துள் 
ஒடுக்கியே, பூக்கும் 
ஆதி முதல்வன் அமர் இடம் 
அயோத்தி மா நகரம்

உந்தி அம்புயத்து உதித்தவன் 
உறைதரும் உலகும்
இந்திராதியர் உலகமும்
நடுக்குற இரைத்து
வந்து தோன்றினள் வரநதி
மலைமகள் கொழுநன் 
சிந்திடாது, ஒரு சடையினில் 
கரந்தனன் சேர

புல் நுனித் தரு பனி என
வர நதி, புனிதன் 
சென்னியில் கரந்து ஒளித்தலும்
வணங்கினன், திகைத்து 
மன்னன் நிற்றலும், 'வருந்தல்; நம் 
சடையள், வான் நதி இன்று
என்ன விட்டனன், ஒரு சிறிது
அவனி போந்து இழிந்தாள்

ஒரு பங்குனி உத்திரம் 

ஒரு பங்குனி உத்திரம்அதற்கு முதல் நாள்நல்ல இரவுநிலவு காய்கிறது
காய்தல் கதிரவரின் செயல் அன்றோநிலவுக்கு ஏன் செயல் மாறாட்டம்
நல்ல தாகம்நீர் நிலை கண்ணுக்குத் தெரிகிறதுஆனால் இறங்கும் வழி எதுவும் புலப்படவில்லைஅந்த நிலையில் இருக்கிறாள் ஓர் ஆடக வளைக்குயில்உயிர் நிலை இறங்கித் தெருவில் நடந்தது ஒப்ப நம்பியைப் புறத்தே கண்டவள் அகத்திலும் கண்டால் அமைதி ஏதுஇரவோ இளைத்தவரை நலியும் இழிதகைமை கொண்டது போல் நின்று நலிந்து நகர மாட்டேன் என்கிறதுஇரவு நகர்ந்தால்விடிவு புலர்ந்தால்விரிகதிர் எழுந்தால் ஒரு புதுமையான சூரிய உதயம் ஆகுமேஎன்னது ! கதிரோன் உதித்த பின்னையும் ஒரு புது ஞாயிறாஆம் ஒளி ஞாயிறு உதிப்பதைத்தானே உலகம் கண்டிருக்கிறதுகரு ஞாயிறு உதிப்பதைக் கண்டிருக்குமா உலகம்

உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே என்னும்படி மறைபொருள் தெளிந்தாரை அன்றோ உலகம் என்று சொல்வதுமறைகளே அவனைக் காண்பம், அவனைக் காண்பம் என்னும் பெருநசையாலே சென்று இன்னும் தொடர்ந்த வண்ணமே இருப்பன அன்றோஅந்த மறையில் வல்லவர்களுக்கு இது அபூர்வ வாய்ப்பாயிற்றேமறை காணாத பரம்பொருளை மன்னுலகில் அடி பயிலக் காணும் கரு ஞாயிறாய்க் கண்டு விடலாமேஆயினும் அவன் காட்டினால்தானே அவன் பரம்பொருள் என்பதைக் காணவும் முடியும்உரு ஞாயிறை ஊனக்கண் கொண்டு காணலாம்பத்துடை அடியவர்க்கு எளியவன்
பிறர்களுக்கு அரிய வித்தகன் என்னும் படியான கரு ஞாயிறைக் காண 
அவன் அன்றோ விழியும், பார்வையுமாகி நிற்க வேண்டும்ஆனால் என் மனமோ பெரும் துப்பு துலக்குவதில் மிகத் திறமை சாலி போலும்அவனுடைய திருவடிகளே கதி என்று பிடித்துக்கொண்டால் ஒரு நாளும் இழவோம், அவனும் நமை விட்டு மறையான் என்பதை உணர்ந்தன்றோ

'கரு நாயிறு போல்பவர் காலொடு போய் 
வரு நாள் அயலே வருகிறது இந்த மனம்

ஆம் மனம் அவருடைய திருவடிகளையே பற்றாசாகக் கொண்டு வரும்இன்னும் ஒரு நாழிகைதான் இருக்கிறது விடியஆனால் அந்தோ அது ஒரு நாழிகையாபொங்கிப் பொங்கி அலை வீசா நிற்கும் ஏழ் கடலின் வேலையையும் இந்த ஒரு நாழிகையே காட்டிவிடும் போலன்றோ உளதுஇது ஒரு நாழிகைப் போதில் பல்லூழிக் காலத்தையே காட்டி நிற்கும் கரு நாழிகை
கடல்களோ தாம் நீரை கார்மேகத்திற்குக் கொடுத்துப் பின் அவற்றிடமிருந்து வளையமாகப் பெற்று நீர் அளவு மிகுந்து அதனால் இன்னும் அலையெறியும் முடியா புணரி

அது போல் இந்தக் கரு நாழிகையும் என் வினைகளோடு கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொண்டு தம் காலத்தின் நீட்சியை முடிவின்றி ஆக்கிகொண்டு விட்டன. அதனால் இது ஒரு நாழிகை இல்லை
கரு நாழிகை. 

கனை ஏழ் கடல் போல், கரு நாழிகைதான்
வினையேன் வினையால் விடியாவிடின் 

என் செய்வதுநிலவுக்கென்று ஒரு வெய்யில் உண்டுவேல் என நீளும் அதன் கதிருக்கென்று ஓர் அனலும் உண்டுஇப்பொழுதோ நிலவு காய்கிறது. ஆம் கதிரவன் போன்று வெம்மை மிகுந்து காய்கிறது

அயில்வேல் அனல் கால்வன ஆம்
நிழல் ஆய் 
வெயிலே என நீ விரிவாய், நிலவே

விடியாத கொடிய இரவு
வெய்யிலாகிக் காயும் நிலவு 
அயில் வேல் என நுழையும் 
கதிர்வாய் அனல் ஆகிப் புகும் நேரம் 
மிக மோசமான புலி ஒன்று 
தென்றல் என்னும் பெயர் கொண்டு 
இரை தேடுகிறது
தென்பொதிகைக் குகையில் அதன் வாசம்
மணமும் குளிர்ச்சியும் அதன் வாய் 
என்பது அதனைக் காணாதார் கூற்று
நெருப்புமிழும் வாய் கொண்ட அந்தப் புலி 
ஒளியுடைய நிலாக்கற்றைப் 
பற்களைக் காட்டி 
இரை தேடிய வண்ணம் திரிகிறது

ஆனால் என்ன இவர்
குல மன்னவர்தானே
இப்படியா கன்னியரை விடாமல் 
பகலும் இரவும் பக்கமும் எதிருமாகிச் 
சுற்றிக் கொண்டே இருப்பது
பகலில் கண்காண நடந்தும் 
இரவில் கண்ணுக்குள் நடந்தும் 
என்ன இவர்
குல மன்னவர் போன்றா நடந்து கொள்கிறார்
வீரருக்கும் வீரனாகிச் சேவை புரியும் 
ஒரு சேவகனாக அன்றோ 
விடாமல் நம்மைத் தொடர்கிறார் 
அல்லும் பகலும்
ஆனாலும் ஒரு சேவகனார் அன்றோ

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து 
உலகங்கள் உய்ய 
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற 
நம் சேவகனார் 

அன்றோநம்பியும் விடியலை நினைத்து ஏங்கிப் பின் திரு மஞ்சனம் ஆடி மணக்கோலம் பூண்கின்றான்மணக்கோலத்தை யாங்ஙனம் கூறுவது

முப்பரம் பொருளிற்குள் முதலை 
மூலத்தை 
இப்பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை 
அப்பனை 
அப்பினுள் அமிழ்தைத் 
தன்னையே ஒப்பனை 
ஒப்பனை உரைக்க ஒண்ணுமோ? 

மணத்தவிசில் வந்து பெருமாளும் பிராட்டியும் எய்தி இருந்த கோலம் எப்படி இருந்தது என்று எப்படி உரைப்பதுஉண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒன்றுரைக்கலாம்நம்பியின் கையது ஒரு மா வீடுஅந்த முத்திப் பேரின்பத்தை அவன் அளிக்க வேண்டும் எனில் நங்கை நல்லாளின் பரிவும், நமக்கு அவன் அருளும் முனைப்பில் அவன் மனத்தை யோகிக்கச் செய்யும் பரிந்துரையும் வேண்டும்இப்பொழுது சேர்த்தியாய் அமர்ந்த கோலம் முத்தி தரும் அவன் அருளும், அவன் அருளப் பரிந்துரைக்கும் அன்னையின் கனிவும் இணைந்து அமர்ந்த கோலம் இஃதன்றோமுக்தி ப்ரதானமும், புருஷகாரமும் சேர்த்தியாய் அமர்ந்த நல்லடிப் போது இதுவன்றோ

மன்றலின் வந்து
மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும்
ஆர்வத்து இன் துணை அன்னமும்
எய்தி இருந்தார்
ஒன்றிய 
போகமும் யோகமும் ஒத்தார். 

ஆயிர நாமச் சிங்கம் -- என்பது ஆயிர நாமம் கொண்ட அண்ணல்ஆயிர நாமங்களுக்கும் தன் ஒரு நாமமே ஈடாக உடைய சிங்கம்எழுந்திடு நரர்களில் புலியே -- உத்திஷ்ட நரசார்த்தூல -- என்று கூப்பிட்டு இன்புற்றான் ரிஷிஆயிர நாமச் சிங்கம் என்று அழைத்துத் தன் அகம் குளிர்கிறான் இங்கு கவி

பங்குனி உத்திரம் ஆன பகற்போது
அங்க இருக்கினில்
ஆயிர நாமச் சிங்கம் 
மணத் தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி
வசிட்டன் வகுத்தான். 

போகமும் யோகமும் ஒத்தாராம் திவ்ய தம்பதிகளின் சேர்த்தியில் இன்று அடிக்கீழ் அமர்ந்து புகுவோம்

***



No comments:

Post a Comment