Thursday, May 2, 2019

லாஜிகாமிக்ஸ்

அறிவும், பித்தும்

காமிக்ஸ் என்ற கலை வடிவத்தில் வாழ்வின் சிக்கல்களைத் தரலாம் வரிசைக் கட்டமிட்ட வடிவ அணிகளாய்.

ஆனால் அளவையியல், கணிதம், தத்துவம் ஆகிய முயங்கும் நுண்ணிய கருத்துத் தளங்களில் புழங்கிய மனிதர்களின் வாழ்வையும், கருத்தையும் அவர்களின் உணர்ச்சிகளையும் கருத்தில் கொண்டு இப்படிக் காமிக்ஸ் ஆக்குவதென்றால் கொஞ்சம் தைரியம் வேண்டும்

ஆக்கினது மட்டுமின்றி, அதை மிகவும் மயித்தைப் பிடிக்கும் விறுவிறுப்புடன் அமைப்பதென்றால் உண்மையில் அந்த நபரோ, குழுவோ மிகவும் பாராட்டுக்குரியவர்களே.

பெட்ராண்ட் ரஸ்ஸலின் வாழ்க்கை வளர்ச்சியையும், அவர்தம் கருத்துப் பரிணாமங்களையும் இப்படி கதைபடச் சித்திரத் தொடராக ஆக்கித் தந்திருக்கிறார்கள் 

Apostolos Doxiadis, Christos H. Papadimitriou ,
Alecos Papadatos , Annie Di Donna
என்ற இந்த குழு

ஆக்ஸியம்ஸ்(axioms) என்பதை எதிர்த்து முதலில் சிந்தித்தவர்களில் ஒருவர் ரஸ்ஸல். மிகவும் சரியாக நிரூபிக்கப் பட்ட விஞ்ஞான அணுகுமுறையாக கணிதம் அமைய வேண்டுமானால் அதில் அடிப்படையில் அமைந்து வரும் 'நிரூபணம் தேவையில்லாத தன்னைப் போல் வாஸ்தவமாகக்' கருதப்படும் ஆக்ஸியம்ஸ் உள்பட நிரூபணங்களுக்கு உட்படுத்தியாக் வேண்டும் என்று சொன்னவர் ரஸ்ஸல்

செட் தியரியைக் கண்டுபிடித்த காண்டர், பூலேயின் கணித வாய்பாடுகளுக்கு மேல் கணிதத்தைக் கொண்டு சென்ற கோட்லப் ஃப்ரெக், இன்னும் பலர் பிற்றைய வாழ்வில் உளவியல் ரீதியான மருத்துவத்திற்கு ஆளானார்கள் என்பது யதேச்சையானதா என்பதை நூலாக்கக் குழுவின் வாதப் படிவங்கள் நூலுக்குள்ளேயே அமைக்கப்பட்டு சித்திர நூலுக்கு பெரும் ஆழத்தை ஏற்படுத்துகிறது

தத்துவ இயல் அறிஞர் ஆல்ப்ரட் வொயிட் ஹெட்டின் ஊக்கம் ரஸ்ஸலின் ஆக்கங்களுக்குப் பக்கபலமாய் இருந்திருக்கிறது. விட்கன்ஸ்டைன்னின் வளர்ச்சிக்கு ரஸ்ஸலின் ஊக்கம் அமைந்திருக்கிறது

உணர்ச்சியற்ற கணிதம் என்பது வெளியிலிருந்து நாம் காணும் தோற்றப் பிழை. அதில் ஈடுபடுவோரின் உணர்ச்சிகளுக்கும் ரத்தமும், சதையும் இருக்கிறது என்பதை நூல் நன்கு நம் மனத்தில் பதிய வைக்கிறது

'தன்னில் தான் அடங்காதவை அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய கோளத்தில் போட்டு வைப்போம். இப்பொழுது இந்தக் கோளம் தன்னில் தான் அடங்கிய ஒன்றா? இல்லையே. அப்படியென்றால் தன்னில் தான் அடங்காதவை என்ற தொகுதியுள் சேர்ந்து விடும் தானே! அப்படி சேர்ந்து விட்டால், தன்னில் தான் அடங்காதவை எல்லாம் இந்தக் கோளத்துள் அடக்கம் என்ற நியதியின் படி தன்னில் தான் அடங்கியதாய் ஆகிவிடும் தானே?' 

இதுதான் குத்து மதிப்பா சொன்னா ரஸ்ஸல் புதிர் சிக்கல் என்பது. இதன்படி ஸெட் தியரியே கேள்விக்குள்ளாக ஆகிவிட்டது

கோட்லப் ஃப்ரெக், ஸெட் தியரியை வைத்துத் தாம் எழுதிய அல்ஜீப்ரா பற்றிய தம் நூலின் இரண்டாவது பாகத்தை முடித்து வெளிக்கொணரும் நிலையில் இந்த ரஸ்ஸலின் மறுப்பால் தம் கொள்கை முழுவதும் அடிப்படை அற்றதாக ஆக்கப்பட்டதை உணர்ந்து கோட்லெப் ஃப்ரெக் உடனே பதிப்பகத்தாரிடம் போய் அச்சுக்கு ரெடி செய்த அத்தனை அச்சுக் கோப்பையும் அழித்து விடும் படி சொல்லிவிட்டார். பதிப்பகத்து நல்ல மனிதர் கெஞ்சிக் கேட்கவே, சரி என்று நூலை அச்சடிக்கச் சொல்லிவிட்டு கடைசி பக்கத்தில் தம் நூல் வெளி வரும் நிலையில் ரஸ்ஸலின் மறுப்பு வெளிவந்து அதனால் தம் நூல் அடிப்படையற்றதாக ஆகிவிட்டதாக வெளிப்படையாகக் கூறினார். (இதெல்லாம் பார்த்து ஆச்சரியப் படவில்லை என்றால் என்ன பயன்?) 


ஒரு நல்ல நூல். அளவையியல், கணிதம், தத்துவம் ஆகியன ஒன்று சேரும் தளத்தில் ஆழ்ந்த வேலை செய்து தம் வாழ்வை ஈடுபடுத்திய தற்கால விஞ்ஞான அறிஞர்களின் வாழ்வும், கருத்தும் -- அனைத்தும் சேர்ந்து ஒரு புதிய கலைப் படிவத்தில் ஒரு புதிய முயற்சி

முயற்சி புதிது எனினும் ஈடுபாடும், திறமையின் வெளிப்பாடும் நூலைப் பெரும் வெற்றியாக்கித் தந்திருக்கிறது.


கணிதம், அளவையியல், தத்துவம் இதனூடே நெளிந்து, குழைந்து, தழைத்து, நசுங்கி பல அனுபவங்களுக்குள்ளாகும் வாழ்க்கைகளைலாஜிகாமிக்ஸ்நன்றாகவே சித்திரம் ஆக்குகிறது, படங்களாலும், சொற்களாலும்

ரஸ்ஸல் தன் கருத்துகளால் பலரைச் சந்திக்கிறார் என்று ஆசிரியர் குழாம் சமயத்தில் நடக்காத சந்திப்புகளையும் பக்கங்களில் நடந்ததாகக் காட்டும் பொழுது அந்த உத்தி ரீதியான பொய்மை பல மெய்மைகளை வெளிச்சம் பெய்து காட்டுகிறது

விட்கன்ஸ்டைனின் கருத்துலகம் ரஸ்ஸலின் ஊன்றுகோலைப் பிடித்து எழுவது. ஒரு நிலையில் ரஸ்ஸலின் ஆயிரக்கணக்கான பக்கங்களின் உழைப்பையே வ்யர்த்தம் ஆக்குவது. ஆனால் ஒன்று ஒன்றை இல்லையாக்கிவிடுமா? விஞ்ஞானம் இல்லை என்று தூர எறிந்து போனாலும், கலை ஒவ்வொன்றின் முக்கியத்வத்தை உணர்ந்து பேணிக்காக்கும்

இந்தக் கருத்தை அடித்து வீழ்த்தி அந்தக் கருத்து, அந்தக் கருத்தை அடித்து வீழ்த்தி மற்றொன்று என்று போகும் விஞ்ஞான முன்னேற்றம் ஒரு நிலையில் மிகச் சரியான ஒற்றை வழி என்பதே கிடையாது என்று நிதானிக்கும் நிலை வரலாம் என்பதை கணித இயல் ஆய்வுகளில் மூழ்கிய அறிஞர்களின் வாழ்வுகளிடை அவர்களின் பரிமாற்றங்களில் வைத்துக் காட்டும் போது க்ளைமாக்ஸின் இருள் கூம்பில் ஒரு நிதர்சனம் மெல்லத் தெரியத் தொடங்குகிறது

அறிவின் கறாரான துறைகளான கணிதம், அளவையியல் ஆகிய துறைகளில் ஆழ்ந்து போகும் பெருசுகளின் வாழ்க்கைகளிலோ மன நோய்ச் சிக்கல்கள். உளத்தின் விஷப்பிளவு வேதனைகள். உலக சிக்கல்கள் அனைத்தையும் ஒற்றைச் சமன்பாட்டில் தீர்க்க வழி தேடும் புண்ணியவான்களின் அன்றாட வாழ்க்கைகள் சமனபாடு குலைந்து தடுமாறும் அவலங்கள். எந்தத் துறையானாலும் மனிதன் தன்னுடையது எதையேனும் பலி தந்துதான் தன் நோக்கத்தை அடைய வேண்டியிருக்கிறது

மனித குலத்திற்கு நெருப்பு கொண்டுவந்த ப்ரொமித்யூஸ் பாறைகளிடைக் கட்டுண்டு, பருந்துகள் கொத்த நொந்துதான் ஆகவேண்டும் என்ற காலத்திலிருந்து, ஹிட்லரின் சர்வாதிகார அழிகர உலக ஆட்டத்தில், அவன் அனுப்பும் செய்திகளை ரகசியக் கட்டை உடைத்து ஆராய, புதிர்நீக்கி யந்திரங்களைக் கண்டுபிடித்து அதன் மூலம் கணினிகள் ஏற்பட வழிவகுத்த ஆலன் டூரிங், ஓரினச்சேர்க்கை இச்சைக்காக வலுக்கட்டாய மருத்துவம் ஆஸ்பத்திரியில் அடைக்கப்பட அதனால் மனம் நொந்து தற்கொலைக்குப் போன இன்று வரையும் -- மனிதன் தரவேண்டிய பலி மாறுவதில்லை

எல்லாவற்றையும் பிளந்துகட்டி யோசித்த விட்கன்ஸ்டைன் தன் கோடிக்கணக்கான டாலர் சொத்தை வேண்டாம் என்று தன் சகோதரிகளுக்குக் கொடுத்துவிட்டு எங்கோ ஆல்ப்ஸ் மலைப் பள்ளத்தாக்கில் பள்ளிக்கூடத்து வாத்தி உத்யோகம் பார்க்கப் போனான் என்று வியக்கும் அதேகணம், அவன் அங்கு சிறந்த கல்வி கற்பிக்கும் முறையாகக் கண்டதுவாத்யார் பிரம்புதான் என்பதை நாம் அறியும் பொழுது எங்கோ பெரும் மலையிலிருந்து உருட்டிவிட்டது போல் உணர்கிறோம்

சரி அதற்கு மாற்றாக ரஸ்ஸல், தன் வீட்டையே புதிய கல்வி போதிக்கும் வழியை பரிசோதிக்கும் தளமாக ஆக்கித் தன் மகனையும் சேர்த்து அனைவருக்கும் தானும் தன் புதிய மனைவி டோராவும் ஆசிரியர்கள் மட்டுமே என்று சொல்லி, சுதந்திரம் என்பதே கல்வி வழி என்று ஆக்கினாலும், நிதர்சனத்தில் கல்வி வழி தோற்றது, பெற்றோரின் பாசம் இன்மையால் மகன் மனப் பிளவிற்கு ஆளானான் -- இதுதான் கடைசியில் கண்ட பலன்

அறிவின் ஆகப்பெரிய கறார்த்தனத்திற்கும் டேக்கா கொடுக்க வல்லமை பெற்றது நிஜ வாழ்க்கை -- இதைத்தான் பெரும் பாடமாகக் கற்கின்றனர் கற்பிக்க நினைத்த வல்லுநர்கள்

செப்படி வித்தைகள் செய்த பின்னும் - கோடி 
சென்மம் எடுத்துச் சிறந்த பின்னும் 
எப்படி வாழ்வது என்பதே யிங்கு 
யார்க்கும் விளங்கா ததிசயமே” 

என்று பாடுகிறார் திருலோகம்

ஆன்மிகமும் தவமும் காட்டில் கண்மூடி அமர்ந்த நிலையில்தான் உண்டு என்று நம்பும் நாம், மேலை நாடுகளின் வரலாறுகளில் அறிவுத் துறையிலும் வாழ்வின், உலகின் பொருள் காண வேண்டி எத்தனை விதங்களில் தியாகமும், கடுந்தவமும் புரிந்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டால் நம் பூனைக்கனவு நீங்கும். அதற்குக் கைக்கெட்டிய வழிதான் இந்த லாஜிகாமிக்ஸ்

***  

No comments:

Post a Comment