பல ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம். ரயிலில் போய்க் கொண்டிருக்கிறேன். பொதுவாகப் பகலில் பயணத்தை விரும்புபவன் நான். நானிருந்த இருக்கைகளைச் சுற்றிக் கல்லூரி இளைஞர்களின் கூட்டம். ஏதோ நிகழ்ச்சிக்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள் போலும். ஒரே ரகளையான பேச்சு, சத்தம், சிரிப்பு. நானோ வழக்கப்படி ஜன்னல் ஓரம். கையில் புத்தகம். பல நேரங்கள் புத்தகம் படிப்பதை விட, படித்த ஓரிரு வாக்கியங்களில் சிந்தனை இழுக்க வெளியில் எதிரும் புதிருமாக ஓடிவரும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே, மனம் சிந்தனையில் லயிப்பது என்பது ஒரு போதையான விஷயம். ஆரம்பத்தில் பல முறை கல்லூரி இளைஞர்கள் நானும் சிரிக்கின்றேனா என்று பல தடவை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டதும் எனக்குத் தெரிந்தது. ஆனால் என் சிந்தனை பலமாக என்னை எங்கோ இழுத்துக் கொண்டு போனதால் எதுவும் உறைக்கவில்லை.
பல ஸ்டேஷன்கள் வந்தன. ஏற்றம் இறக்கம். எல்லாவற்றினூடும் கொஞ்சம் அடங்கி, பின்னர் எழும் கல்லூரிக் கிளரொளி இளமையின் சப்த ஜாலம். நன்றாகத்தான் இருந்தது தள்ளி நின்று படாமல் உரசும் சத்தம்.
ஒரு நிலைக்கு மேல் அதில் ஒரு இளைஞருக்குப் பொறுக்க முடியவில்லை போலும். என்னிடம் வந்து, 'சார்! சாரி. உங்களுக்கு நாங்கள் தொந்தரவாக இருக்கின்றோம். எல்லாம் காலேஜ் குஷி. ஒன்றும் தவறாகக் கொள்ள வேண்டாம்...' என்று இழுத்தார். நான், 'அதெல்லாம் எனக்கு ஒன்றும் தொந்தரவு இல்லை. என்னால் உங்களுக்குத் தொந்தரவு இல்லையே..' என்றேன்.
இன்னொரு குரல் - 'சார் அதெல்லாம் அவருடைய கல்லூரி நாளில் நம்மைவிட ரகளை பண்ணியிருப்பார்டா..'
முதல் இளைஞர் - 'ஏன் சார்! நீங்களும் எங்களோடு கலந்து கொள்ளலாமே. இல்லை...நான் கவனித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் என்ன சத்தத்திலும் பாதிக்கப்பட்டவராய்த் தெரியவில்லை. எதையோ யோசித்துக் கொண்டிருந்தீர்கள். எங்களைத் தொந்தரவாக நீங்கள் நினைத்திருந்தால் எப்படியும் உங்கள் முகம் காட்டிக் கொடுத்திருக்கும். நான் கூட நினைத்தேன். அப்படி என்ன இவர் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருப்பார்' என்று. சாரி, உங்கள் பர்ஸனல் விஷயத்தில்...'
நான் ஏதோ ஒரு மூடில் இருக்கும் போது அந்த இளைஞர் அப்படிக் கேட்டிருக்க வேண்டாம். பொதுவாக இளைஞர்கள், இளம் பெண்கள் இவர்களைக் கண்டால் எனக்கு ஒரு வித பச்சாதாபமும், சிறிதே சுய குற்ற உணர்வும் ஏற்படும்.
ஐயோ! இந்த உலகத்தை இவர்களுக்குப் பயன்படும் விதத்தில் எனக்கு வந்து சேர்ந்த வாழ்க்கையில் மேலும் நன்கு விளக்கி வைத்து, இன்னும் நன்மைகள் நிறைந்த உலகமாக ஆவதற்கு என்னால் ஆவன செய்யாமல் என் வாழ்நாள் போய்க் கொண்டிருக்கிறதே' என்ற உணர்வு தலை தூக்கும். பாவம்! அவர்கள் நான் அடைந்த எவ்வளவோ நன்மைகளைக் கேள்விக் கூடப் படுவதற்கு வாய்ப்பில்லாமல் வளர்கிறார்களே. இனி பல விஷயங்கள் இவர்கள் நினைத்தாலும் இவர்களுக்குப் பாந்தமாக யார் வந்து விளக்குவார்கள்' என்றெல்லாம் ஒரு நெகிழ்வுணர்வு என்னை வாட்டும். அது போன்ற ஒரு மூடில் அந்த இளைஞர் அப்படிக் கேட்டிருக்க வேண்டியதில்லைதான். என்ன செய்வது!
நான் சொன்னேன் :- "இல்லை பிரதர்! நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள். கடவுள் உங்களுக்கு சிறப்பான வரம் கொடுத்திருக்கிறார். எனக்கு அப்படி இல்லையே என் செய்வேன்!'
'சார்! எங்களுக்கு என்ன வரம் சார்? நீங்க வேற..'
'இல்லை. முடிவே வராத நிலைத்த நித்தியமான வாழ்வை உங்களுக்குத் தந்திருக்கிறார். எனக்கு அளவிடப்பட்ட வாழ்நாள்தான். அந்த அளவு என்னது என்பதும் எனக்குத் தெரியாது. அளவு என்று முடியும் என்பதும் தெரியாது. எனவேதான் மரணத்தின் சந்நிதாநத்தில் இருந்து கொண்டே என் வாழ்நாளின் ஒவ்வொரு கணத்தையும் செலுத்துகின்ற ஆளாகிப் போனேன்.'
சார்! என்ன சொல்றீங்க? புரியலை.
ஆமப்பா! இந்த வாழ்க்கை முடியப் போகிறது இதோ அடுத்த கணம் என்று நினைத்துப் பார். உன் நிலைமை என்ன? நீ இல்லை. காணும் கேட்கும் முகரும், தொடும் உலகம் இல்லை. இல்லையா இருக்கா என்று அறிய நீ இருப்பாயா தெரியாது. இந்த மொத்த காண்பான் காட்சி காணும் அனுபவ கோளம் முற்றும் இல்லையாகிப் போகும் கணம். அதன் விளிம்பில் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த நிலையைப் பற்றி ஏதேனும் நான் அறிய வேண்டுமா, அதையும் இந்த ஒட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டுதான் அறிந்தாக வேண்டும். அறியப்படும் உலகம் ஒட்டுத் திண்ணையின் இப்பக்கம்தான். ஒட்டுத் திண்ணையின் அப்பக்கமோ..ஃபட்...இருட்டு. அதை மறந்துவிட்டு..எப்படி...
சார்! நீங்க சொல்றதைப் பார்த்தா...ஏதோ ஒரு உபநிஷத்துல... அந்த யமனையே போய்ப் பார்த்து...அது எந்த இதுன்னு நினைவு இல்ல...
ஆம். நீங்கள் சொல்வது சரி. இதுதான் உண்மையில் நசிகேத வித்தை. கட உபநிஷத்தைச் சொல்கிறீர்கள். ஆமாம். மரணத்தின் முன்னால் அமர்ந்து பாடம் படிப்பது வாழ்க்கையிடம் என்பதுதான் நசிகேத வித்தை என்பது. Learning Life in the presence of Death! மரணம் வந்து நிற்கும் போது எதற்குப் பொருள் சொல்லுங்கள்? காசு, வசதி, இன்பம், பெரும் செல்வம், வீடு, தோட்டம், வாய்ப்புகள், ம்..ம் எல்லாம் காணாமல் போய்விடும் நேரம் மரணத்தின் மூச்சுக் காற்று படும் கணம்.
அதான் சொன்னேனே... It was a bad mood....பாவம் அந்த இளைஞன்!. ஆனால் எங்கோ அவன் சுண்டப்பட்டு விட்டான் என்பதை அவனுடைய தனக்குத்தானே விரிந்து விழிக்கும் விழிகள் காட்டின.
நல்ல வேளை! அவன் மேலும் அவஸ்தைப் படுவதற்குள் மற்ற இளைஞர்கள் எல்லாம் இறங்கும் இடம் வந்தது என்று சொல்லி அவனையும் துரிதப் படுத்தி இறங்கிச் சென்றனர். நானும் இறங்க வேண்டிய இடம் அதுதான் ஆகையால் என் ஒற்றைப் பையைச் சுமந்த வண்ணம் இறங்கினேன். நல்ல கூட்டம்! பாவம் அவன். நானும் கொஞ்சம் அமைதியாக இருந்திருக்கலாம்.... எப்படியோ கூட்டத்தில் ஒருவரை ஒருவர் இருப்பது தெரியாமல் முன்னும் பின்னுமாக புடைபெயரும் கூட்டத்தின் மறைவில் என் காதில் விழுகிறது அவனை அவர்கள் தெருட்டும் குரல்கள்:
'நான் தான் சொன்னேனே அப்பவே...வேற எங்கயாவது போலாம்டான்னு... நீதான் கேட்கலை... இந்த மாதிரி ஆள்களையெல்லாம் பேச்சு கொடுக்கக் கூடாதுடா....அப்பறம் நாம ஒழுங்கா போக முடியாது. பாரு...பேயறைஞ்சவன் மாதிரி வந்துக்கிட்டுருக்கான்...பெரிய இவுரு மாதிரி...அவுருகிட்ட இவரு பேச்சு கொடுக்கறாராம்...பார்த்தாலே ஒரு மாதிர்யா இருக்கானுகளா நான்....பேசாம அந்தப் பக்கம் போயிடுவேன்...இவனை மாதிரி வாயைக் குடுத்து....ஏய்..ஏண்ட அடிக்கற...உண்மையைத் தானே சொல்றேன்...உனக்கு வேணுமா இது....
பரவாயில்லை. என் காரணமாக ஒரு தொடர் நகை விளைந்த வண்ணம் இருக்கும். நல்லதுதான். என் மனதும் தானாக, 'சம்ப்ராப்தே சந்நிஹிதே காலே..நஹி நஹி ரக்ஷதி...(அதாவது - முடிவுக் காலம் வந்து பக்கத்தில் முன்னால் நிற்கும் போது எதுவும் எதுவும் காப்பாற்றாது') என்ற வரியை உருட்டிக் கொண்டு வந்தது.
எதற்குச் சொல்ல வந்தேன் இதை?... ஹாங்...பாருங்கள் ஸ்ரீபராசர பட்டரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம். படித்தால் எனக்கு இது நினைவுக்கு வந்து விட்டது. ஸ்ரீரங்கத்தில் தெருவிலே பட்டரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாக வந்து கொண்டிருக்கிறார்கள். சிறுவர்கள் ஒரே விளையாட்டு. கூச்சல். கேலி. ஓட்டம். துரத்தல். சூழ்நிலையே மறந்து சிறுவர்களின் கும்மாளம்.! அப்பொழுது பேசிக் கொண்டு வருகிற ஸ்ரீபராசர பட்டர் அவர்களைப் பார்த்து ரசனையுடன் சொன்ன எதேச்சையான வார்த்தையைக் கவனமாகப் பதிந்து வைத்திருக்கிறது வார்த்தாமாலை.
ஸ்ரீபராசர பட்டர் சொன்னாராம்: 'ஏய் பசங்களா? என்னடா இவ்வளவு இறுமாப்போட சிரித்து மகிழ்ச்சியில் திளைத்து விளையாடுகிறீர்களே... என்ன நினைப்பு உங்களுக்கு? ஏதோ ஸ்ரீமந் நாராயண மந்திரமாகிய திருமந்திரத்தில் பிறந்து விட்டீர்களா என்ன?' என்று நகையுடன் கூறியிருக்கிறார். திருமந்திரத்தில் பிறந்தால்தான் அத்தகைய இறுமாப்பு கொள்ளல் நியாயமா? அப்படியென்றால் திருமந்திரத்தில் பிறத்தல் என்றால் என்ன? அதாவது இந்த மாதிரியான சம்ப்ரதாயச் சொற்களை இட்டுச் சொல்லும் போது யதார்த்தமான தத்துவ ப்ரக்ஞை என்பது அந்தச் சொற்களை அர்த்தம் பண்ணுவதுதான் என்று ஆகிவிடுகிறது. ஆனால் அதைச் சொன்னவருடைய மனோபாவம் என்னவாக இருந்திருக்கும். எந்தக்கணத்தில் அவ்விதம் சொல்லியிருப்பார் என்பதை யோசிக்கும் கணத்தில் வாழ்க்கையின் மர்மங்கள் சொற்களையும் தாண்டி வந்து நம்மீது ஒரு மௌனத்தைப் போர்த்துகிறது. எட்டெழுத்து நாராயண மந்திரமாகிய திருமந்திரம் என்ன சொல்கிறது? அதில் ஒருவருக்கு ஆழ்ந்த உணர்வு ஏற்படுவதைத்தான் ஸ்ரீபராசர பட்டர் பிறத்தல் என்று பொருள்படுத்துகிறார். அவருக்கும் முன்னால் ஆழ்வாரும் அன்றுநான் பிறந்திலேன்; பிறந்தபின் மறந்திலேன்' என்று சொல்லும் போது அதைத்தான் சொல்ல வருகிறார். ஸ்ரீபராசர பட்டரின் நேர் வார்த்தையிலேயே அது எப்படிப் பதியப் பட்டிருக்கிறது என்று பார்ப்போம்:
"பட்டரும் ஸ்ரீவைஷ்ணவர்களுமாகத் திருவீதியில் எழுந்தருளியிருக்கச் செய்தே, விளையாடிக்கொண்டு வருகிற பிள்ளைகளைப் பார்த்து, "பிள்ளைகாள்! திருமந்திரத்திலே பிறந்தாற் போலே உங்களுக்கு இத்தனை செருக்கென்?" என்று அருளிச் செய்தார்.
(வார்த்தாமாலை, 46)
***
No comments:
Post a Comment