தமிழில் மொழிபெயர்ப்பாளர்கள் சிலரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் முக்கியமாக கவியோகி சுத்தாநந்தபாரதியார், சுவாமி விபுலாநந்தர், திரு கா திரவியம் போன்றவர்கள் தமிழுக்குப் பிறமொழி நூல்களை மிக்க நயத்துடனும் மொழி அழகுடனும் கொண்டு வந்தவர்கள். சுத்தாநந்த பாரதியின் ’இளிச்ச வாயன்’, ‘ஏழைபடும் பாடு’, சுவாமி விபுலாநந்தரின் ‘சுவாமி விவேகாநந்தரின் சம்பாஷணைகள்’ திரு கா திரவியத்தின் ’இராதாகிருஷ்ணன் பேருரைகள்’ - இவையெல்லாம் மொழிபெயர்ப்புக்கு இலக்கணமானது. இவர்கள் எல்லோரையும் விஞ்சி அதிசய சாதனையாய் இருப்பது என்னவோ கவிஞர் திருலோக சீதாராம் மொழிபெயர்த்த ‘சித்தார்த்தன்’ என்பது வேறு விஷயம்.
கா திரவியத்தின் ‘இராதாகிருஷ்ணன் பேருரைகள்’ பல தொகுதிகளாக 1966ல் வந்தது. மீண்டும் அச்சு போட்டார்களோ தெரியவில்லை. பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பு. பழனியப்பா அற்புதமான பல நூல்களைப் போட்டவர்கள். கொத்தமங்கலம் சுப்புவின் ‘ராவ்பகதூர் சிங்காரம்’ ஏன் இன்னும் கிடைக்காமலேயே இருக்கிறது தெரியவில்லை. அதுவும் பழனியப்பா பிரதர்ஸ் என்று நினைக்கிறேன். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் பல இடங்களிலும் உலகில் நிகழ்த்திய உரைகளையெல்லாம் மிக அருமையாக மொழிபெயர்க்கிறார் கா திரவியம். டாக்டர் ராதாகிருஷ்ணன் தத்துவத் துறையில் பெரும் பேராசிரியர். அவர் பேச்சில் இருக்கும் தத்துவ இயல் சார்ந்த கடுநடை ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் வெற்றிகரமாக வருவது கடினம். ஆனால் திரவியம் சாதித்துக் காட்டியிருக்கிறார் 1966லேயே.
உதாரணத்திற்கு
“மெய்யுணர்வியல் அறிஞர் ஒவ்வொருவரும் பகுமுறை அறிஞரும் (analyst) அதே சமயத்தில் இருத்தல் நிலை வாதியும்(existentialist) ஆவார். அறிவுசார் மனசாட்சி உடைய கவிஞர் அவர். இலட்சியத் தெளிவு (vision) இல்லாத பகுமுறை, ஆன்மக் உணர்வை வீணாக்குவதாகும்; நுண்ணுணர்வை விரயமாக்குவதாகும்.”
“இந்தியத் தத்துவ சிந்தனையில், இருத்தல் நிலையான துன்பமும் (existentialist distress), அறிவு சார்ந்த தியானமும் ஒருங்கே அமைந்துள்ளன.”
“அறிவைப் பயன்படுத்துவதன் மூலம், சீர்திருத்தத்தை எதிர்க்கும் போக்கிலிருந்து சமயத்தை விடுவித்து, மூட நம்பிக்கைக்கு மேலாகப் பக்தியை உயர்த்தி மேம்படுத்த இந்திய சமயத் தத்துவம் பாடுபடுகிறது.”
“வாழ்வு என்பது ஒரு கருத்தல்ல, அனுபவங்களில் மிக்க உறுதியான, உருவான அனுபவம் என்று கார்ல் ஜாஸ்பர்ஸ் கருதுகிறார். அருவமான கருத்துகளிடம் உள்ள தன்மை வாழ்வில் இல்லை.”
இரண்டாவது தொகுதியே சுமார் 675 பக்கங்கள் தமிழுக்கு உயரிய வரவு இந்தத் தொகுதிகள். ஆனால் 1966ல் வந்தது பின்பு கிடைக்கவே இல்லை.
***
No comments:
Post a Comment