Thursday, May 2, 2019

ஆங்கிலப் புத்தாண்டும் கல்பதருவும் ஆன்மிகமும்

கல்ப தருவாகிக்
காலம் கனிய நின்றாய்.
அல்பன் எனக்கும் அங்கு
இடம் உண்டா தெரியவில்லை.
விகல்பம் கூடியும் கூடாதும்
ஆழ்ந்த நிலை உன் இயல்பு.
விகல்பமே இல்லாது செல்லும்
விரசமாகிப் போன மயலது என் வாழ்வு.
அகண்ட ஆகாரமாகி
அருள்நிறை மாமர நிழல்கனிந்தாய்.
அப்பொழுதும் எனையொதுக்கும்
அக்கறைதான் எங்கு பயின்றாய்?
அருளுக்கும் விருப்பு வெறுப்பு உண்டென்றால்
மருளுக்கு விடிவேது?
மயலுக்கு முடிவேது?
அயல்தள்ளி வைத்த பயல்
முயல்கின்ற மொய்கழற்குப்
பயனற்ற வேட்கையோ அன்பு?
கயல்கண்ணிக் கோபப்
புயல்கண்ணிகாளி
செயல்தீர்ந்த சிவமீது ஆடி
உயக்கொண்ட நாளில்
உதவாத வாளும்
உதவிக்கு இன்றும் வருமோ?
உதவாத சேயென்று
மிதவாதம் அற்றெனையே
பிடிவாதமாக அருளா
உனையெண்ணி நிற்க ஒரு நாள்
எனைக் கண்ணில் படுகின்ற திருநாள்
மனப்புண்கள் தீருகின்ற பெருநாள்
நின்னடிக்கீழ் அமர்கின்ற அந்நாள்
இந்நாளே ஆகட்டும் நன்னாள்.

***

வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது. எளிமையானது அன்று. ஆனாலும் கடினமானது போலும் தோன்றாமல் இருப்பதால்தான் உயிர்கள் எவ்வளவு கஷ்டங்கள் எதிர்ந்தாலும் தாங்கி விடாமல் உற்சாகத்தில் வாழ்கின்றன. அவ்வப்பொழுது இன்பங்கள் வாழ்க்கையைப் பற்றிய பார்வையை ஈர்ப்புடையதாக ஆக்கியும் விடுவதால் எதிர்பார்ப்புகள் என்னும் யந்திரம் நன்கு எண்ணை போடப் பட்டது போல் சுளுவாக ஓட, வாழ்க்கை அடுத்து அடுத்து என்று உருள்கிறது.

பிரச்சனைகளை வெறுமனே எதிர்கொள்வதுதான் வாழ்க்கை என்றும் இல்லை. மனித உயிர்கள் தங்கள் சூழல்களைப் புரிந்து கொள்ளவும் திறன் கொண்டதாக இருக்கின்றன. புரிந்து கொண்டபடி அடுத்து வாழ்க்கையின் சுழற்சியை எதிர்பார்க்கவும் முடிகிறது. மேலும் எவ்வண்ணம் எதைச் சிறிதும் பெரிதுமாக மாற்றினால் ஓடுகின்ற ஓட்டம் அதிக உபத்திரவம் இல்லாமல் ஓடும் என்று கணிக்கவும் முடிகிறது. அதையும் விட ஒவ்வொரு முறை படும் அனுபவம், அதன் காரணமாக ஏற்பட்ட மாற்றம் அல்லது தாமே ஏற்படுத்திய மாற்றம் இவற்றை நன்கு நினைவில் வைத்திருக்கும் சக்தி மனித உயிர்களாகிய நம்மிடம் இருப்பது நமக்கு ஒரு பெரும் நன்மை. இந்த நினைவு கெடாதவண்ணம் அனுபவப் பாடங்களைப் பேணிக் காப்பாற்றிய முறைகள்தாம் பலபடியான ஏடுகள், கல்வி, குறிப்புகள், வாய்மொழிப் புகட்டல் என்று ஆகி வந்துள்ளன. இதனால் எல்லாம் காலம் காலமாக மக்களுக்கு தம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட அனுபவங்கள் மட்டுமின்றிப் பிறருடைய அனுபவங்களையும் ஒப்பிட்டு நோக்கி, தாம் நேரடியாக பட்டுத் தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொண்டு உணரும் வாய்ப்புகளும் கூடுகின்றன. உண்மையில் கல்வியினால் ஆய பயனே இதுதான் என்று சொல்லலாம்.

இதில் முதலில் ஆரம்பக் கட்டங்களில் மனித இனம் உடல் சார்ந்தே தன் தேவைகள், வாழ்க்கைச் சூழல்கள் என்பனவற்றை எதிர்கொண்டன. ஆனால் உடல்சார்ந்த இச்சைகளும் தேவைகளும் தாண்டி மனம் என்பதனுடைய இயக்கம் தன் வாழ்க்கையில் பெரும் அவசியமும், அவசரமும் கொண்ட இயக்கமாக மாறி வருவதை ஆரம்பகால மனித இனம் எப்படிக் கவனம் கொண்டிருக்கும் என்று நினைத்தால் பிரமிப்பாகத்தான் உள்ளது. ஐம்புல நுகர்வுகள், அவை சார்ந்த நிபந்தனைகள் என்பன தாண்டி, நுகர்வுகளின் நினைவுகளும், மனத்தால் புரிந்துகொண்ட செயல்பாடுகளின் விதிகளும், புதிய மாற்றங்கள் இயற்றும் திறன் தம்மிடம் உள்ளது என்பதைக் கண்டுகொண்ட உற்சாகமும் மனித இனத்தை மிகுந்த தற்பெருமை கொண்ட மனம்சார் உயிரியாக ஆக்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதில் ஏற்பட்ட ஒரு நல்ல விஷயம் என்னவெனில் மனித உயிர் தான் இந்த உடல் என்னும் அடையாளத்தோடு முடியும் ஓர் உயிரி அன்று. உடல் என்னும் தொடக்கத்தைத் தாண்டிய அறிதல் என்னும் நிலைப்பாடு கொண்ட -'பொருண்மை' என்பது அற்ற நிலையே- தனது இயல்பான உண்மை நிலை என்னும் உணர்வு எழுந்துகொண்டதுதான் மிகவும் பெரிய நன்மை ஆகும். இத்தகைய உணர்வு நன்கு செழித்து கனிந்த நிலையை நாம் ஆன்மிகம் என்று சொல்வோம்.

இந்த ஆன்மிகம் என்பதற்கும் மதங்கள் என்பனவற்றிற்கும் சம்பந்தம் இல்லை. மத நூல்களும், மதங்களும் இதைப்பற்றிப் பேசலாம். ஆனால் ஒரு மதத்தின் மூலமாகத்தான் ஆன்மிகம் என்பது அறியப்படும் என்பது இல்லை. பார்க்கப்போனால் மதங்கள் எதிலும் சாராமல் இருந்தாலே இந்த ஆன்மிகம் என்பது தெளிவுபடும்.

மனித இனம் காலம் காலமாக எந்த தனது இயல்பான அறிவுடைமையைக் கொண்டு பல உலக பாடங்களைக் கற்று வந்துள்ளதோ, எந்த பொது புத்தியால் தனக்கான நன்மைகளைத் தேர்ந்து வந்துள்ளதோ அந்த அறிவுடைமையே போதுமானது ஆன்மிகம் என்பதை உணருவதற்கு என்று சொல்லலாம்.

மனித இனத்தின் பொதுவான இயல்பு அறிவு என்பது இந்த ஆன்மிகம் என்பது. இதைப் பலரும் மதங்களுடனும், நெறிகளுடனும் போட்டுக் கலந்து யோசித்ததுதான் தேவையில்லாதது. மனித இனத்தின் இயல்பான வளர்ச்சியில் தானாக வந்து சேரக் கூடிய மன முதிர்ச்சி கலைந்து போய் தள்ளிப் போனதுதான் மிச்சம் எனலாம்.

இத்தகைய ஆன்மிக விழிப்பு என்பது அல்லது ஆன்மிக இயல்பைப் பற்றிய குழப்பங்கள் நீங்கிய தெளிவு என்பது நிலவ வேண்டும். மனித இனத்தின் அறிவுடைமை என்பது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிப் போகிறது என்பதை அது காட்டும். இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, தத்துவ இயல் வளர்ச்சி (மத நூல்களின் வளர்ச்சியை நான் சொல்லவில்லை), ஆன்மிக உணர்வியல்களின் வளர்ச்சி என்பதெல்லாம் மனித இனத்திற்கான பெருநன்மையை நோக்கி மனிதரைத் தெளிவுபடுத்துவனவாய் அமைந்து வருகின்றன.

எனக்குத் தெரிந்து மனித இனத்தின் ஆன்மிகம் என்ற பொதுமைப் பார்வையைப் பெரிதும் நிலைநாட்டியவர் என்று பார்த்தால் வங்காளம், தக்கிணேஸ்வரத்தில் இருந்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் எனலாம். அவர் அருள்விழைவால் ஜனவரி ஒன்றாம் தேதி ஆன்மிக நாட்டம் கொண்ட பலரும் ஆன்மிக உணர்வுகள் எழப்பெற்றார்கள் என்று சொல்வார்கள். அனைவருக்கும் ஆன்மிக உணர்வு நிலையை வழங்கியதால் அன்றைய தினம் கற்பகமரம் நாள் என்று ஸ்ரீராமகிருஷ்ண மடங்களில், ஸ்ரீராமகிருஷ்ண பக்தர்களின் இல்லங்களில் கொண்டாடுகிறார்கள்.

இந்த நன்னாளில் மனித இனம் ஆன்மிக உணர்வை நோக்கி முன்னேறவும், மதங்கள் சாராத, இனம், மொழி, நாடு, திசைகள் என்பன சாராத மனித இனப்பொதுவான அறிவுசார்ந்த ஆன்மிக நன்னிலை நிலவவும் நாமும் விழைவோமாக.

***

No comments:

Post a Comment