Saturday, May 4, 2019

’தான்’ ‘நாம்’ ஆக மலர்தல் !

தனியொரு மனிதன் தன் கதிப்பேற்றிற்கு முயல்வது என்ற உபாஸனையானது மிக இயல்பாகக் கர்ம காண்டத் தொடர்ச்சியாக ஏற்படுவது. தனது சுகத்திற்காகவும், தனது புண்ணியத்திற்காகவும் கர்மங்களைப் புரிந்த மனிதன், வேள்விகள் யாத்த மனிதன், தனக்காக வேண்டி நித்ய சுகமான வீடு என்பதற்கும் உபாஸனா மார்க்கத்தில் புகுவதுதானே முறை? ஆனால் ஆகம நெறிகள், என்று தர்மம், வேத வேதாந்த தத்வ நிச்சயங்கள் ஆகியவற்றை, அவற்றின் உள் சாரம் என்ன என்று ஆராயத் தொடங்கியதோ அன்றே வேத ரிஷிகளின் உண்மையான ஹ்ருதயம் நன்கு செயல்முறையில் வரத் தொடங்கிவிட்டது எனலாம். ஏனெனில் 'ஸம் கச்சத்வம், ஸம் வதத்வம், ஸம் வோ மனாம்ஸி ஜானதாம்' -- நாம் ஒன்றுறப் பழகுவோம்; நாம் ஒன்றுறப் பேசுவோம்; நாம் நம் மனங்களால் ஒன்றுற உணர்வோமாக -- என்று ரிஷிகள் வேண்டிப் பாடியது பலித்தது எப்பொழுது என்று பார்த்தால் வேதாந்த ஆகம சமரஸம் மலர்ந்த தருணத்தில் எனலாம். 

ஆகமங்கள் இந்த ஆன்மிகச் சமுதாய ஒருமைப்பாட்டைக் கோயில் என்பதை மையப்படுத்தி சாதித்தன. கோயில்கள் சமுதாயத்தையும், ஆன்மிக உபாஸனை என்பதையும் இணைக்கும் பாலங்களாக விளங்கின. ஆன்மிகச் சமுதாயம் என்பதை இலட்சியமாகக் கொண்ட ஊக்கத்தில், தனி மனிதரின் வீடு பேறு என்பது அங்கமாக ஆகிவிட்டது. 
தன் மறுமைக்கான நற்கதியைப் பற்றிய அக்கறை நிச்ரேயஸம் என்றும், சமுதாய நலன்களை மிகச் செய்தல் அப்யுதயம் என்றும் இருந்த நிலை மாறி, நிச்ரேயஸமே அப்யுதயமாக ஆகிவிட்ட நிலை உருவானது. தனி ஒருவன் வீடு அடைவது சிறப்புதான். ஆயினும் அடியவரோடு சேர்ந்து ஆண்டவனை அடையும் சமுதாய வீடு பேறு என்பதுதான் மிகச் சிறந்தது என்ற எண்ணம் நன்கு ஆழமாக எழுந்தது ஆகமங்களின் அரும் முயற்சியினால்தான் எனலாம். இந்த மனித குலத்தின் ஒருங்கிணைந்த ஆன்மிக பரிணாமமே ரிஷிகள் கண்ட கனவு. அதைத்தான் ஆகம முனிவரர் உணர்ந்து செயல்வடிவம் ஈந்தனர். 

ரிஷிகள் கண்ட கனவு இது, வேத தாத்பர்யம் இது என்பதை நம் காலத்தில் விண்டுரைத்தவர் விவேகாநந்தர். அவரை அடியொற்றி ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீசுப்ரமணிய பாரதி ஆகியோர். ஆனால் ஆகமங்களின் இந்தத் தெளிவான வேதப் புரிதல் ஆகமங்களை அடியொற்றி எழுந்த ஸ்ரீவைஷ்ணவ, சைவ, சாக்த நெறிகள் அனைத்திலும் விரவியிருக்கக் காணலாம். ஹிந்து மதம் தன்னை மேலும் மேலும் விளக்கமுறச் செய்ததில் ஒன்றை நாம் நன்கு கவனிக்கலாம். உள்ளது சிறத்தல் என்ற அம்சமே இங்கு துலங்கக் காணலாம். அதாவது புதிதாக ஏதோ ஒன்று வெளியிலிருந்து உடைத்துக்கொண்டு உள்ளே வருவது என்பது இருக்காது. உள்ளே மறைபொருளாய் இருந்ததுதான், உள் தாத்பர்யமாக இருந்ததுதான், சரியான காலங்களும், மனிதர்களும் அமைந்ததும் வித்திலிருந்து மரம் வெளிப்படுவதுபோல் மலர்ந்து வெளிப்படுகிறது. 

எனவேதான் ஹிந்து எப்பொழுதும் விடைகளை உள்ளே தேடுபவன் என்று கூறுகிறார் விவேகாநந்தர். அதாவது ரிஷிகள் தனக்குச் சிறப்பான பாரம்பரியத்தைத் தந்திருக்கின்றனர், தான் தான் அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தோற்றுப் போயிருக்கிறோம் என்று உணர்ந்து, ரிஷிகளின் உண்மையான ஹ்ருதயம் என்ன என்று அவ்வக் காலங்களில் ஆசாரியர்கள் வழிகாட்ட, தனக்கான முன்னேற்றத்தை தனக்குள்ளிருந்தே ஹிந்து பெறுகிறான் என்ற பொருளில் அவ்வாறு கூறுகிறார். இது பெருமளவிற்கு உண்மை என்றுதான் படுகிறது. ஆனால் அந்த உள் நோக்கிய விசாரத்திற்கான புறத் தூண்டுகோல் சூழ்நிலைகளாகச் சில புறக் காரணங்களும் அமையும் என்பதை மறுக்க முடியாது. ஆக தனிமை என்பது மத ஊக்கத்தின் தன்மையாக இருந்தது மாறி, கூட்டம் என்பது, அதாவது சமுதாயம் என்பது மத ஊக்கத்தின் சிறப்பாக மாறும் கணம்தான் வேதாந்த ஆகம சமரஸமான ஹிந்து மதத்தின் வெளிப்படையான வடிவம்.

*** 


No comments:

Post a Comment