*
அருமையான தமிழ்ப் பாட்டுகள். அந்த அழகுத் தமிழுக்குள் ஆய்ந்த வேதாந்த நுண்பொருள்கள். எத்தனை சிறப்பு! 'படர்ந்த வேதாந்தம் என்னும் பாற்கடல் மொண்டு முந்நூல் குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்கள் எல்லாம்; காய்ச்சிக் கடைந்து எடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை' என்று சொல்கிறார் ஸ்ரீமத் தாண்டவராய சுவாமிகள். இதற்கு உரை எழுதும் ஸ்ரீமத் ஞானகுரு யோகி இராமலிங்க சுவாமிகளும், அதற்கு முன்னர் ஸ்ரீ அருணாசல் சுவாமிகளும் 'முந்நூல் குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்' என்னும் பகுதிக்குப் பொருள் எழுதுங்கால் முந்தைய நூல்களில், முதன்மையான நூல்களில் என்றெல்லாம் கூறுகின்றனரே அன்றி ஏன் வெட்ட வெளிச்சமான பொருளை எழுதாது விட்டனர் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
'முந்நூல் குடங்களில் நிறைத்து வைத்தார்' என்பதன் பொருள் நேரடியானது ஆயிற்றே! பிரஸ்தான திரயம் என்னும் மூன்று சான்று நூல்கள் வேதாந்தத்திற்கு உண்டு எனவும், அவை உபநிடதங்கள், ஸ்ரீபகவத் கீதை, ஸ்ரீபிருஹ்ம சூத்திரங்கள் ஆகிய மூன்றாம் எனவும் பழங்காலம் தொட்டே அறிஞர் உலகம் அறிந்த ஒன்றுதானே? ஏனோ அவர்களுக்கு அப்பொருள் உதிக்காது போயிற்று என்பது ஆச்சரியமே. இந்த நூலை மேற்கோள் காட்டி ஓரிடத்தில் திருலோக சீதாராம் எழுதிய நினைவு.
*
பொன் நிலம் மாதர் ஆசை
பொருந்தினர் பொருந்தார் உள்ளம் தன்னில்
அந்தரத்தில்
சீவ சாக்ஷி மாத்திரமாய் நிற்கும்
எந்நிலங்களினும் மிக்க
எழுநிலம் அவற்றின் மேலாம்
நன்னிலம் மருவும்
ஏக நாயகன் பதங்கள் போற்றி.
என்று தொடங்குகிறது கைவல்லிய நவநீதம். ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளில் வேதங்கள் உரைக்கும் ஏழு நிலங்கள் பற்றிப் படித்த ஞாபகம். ஆனால் அந்த ஏழுநிலங்களின் பெயர்கள் என்ன என்ன என்று குறிப்பு இந்த நூலின் உரையில் கிடைத்தது. ஏழு நிலங்களாவன : சுபேட்சை, விசாரணை, தநுமானசி, சத்துவாபத்தி, அசம்சத்தி, பதார்த்தாபாவனை, துரியம். 11 ஆவது பாடல். இதுதான் திருலோக சீதாரம் ஒரு தடவை மேற்கோள் காட்டியிருந்தார்.
சாதனமின்றி ஒன்றைச் சாதிப்பார்
உலகில் இல்லை.
ஆதலாம் இந்த நான்கும் அடைந்தவர்க்கு
அறிவு உண்டாகும்.
நூதன விவேகியுள்ளே நுழையாது
நுழையுமாகில்
பூதசன்மங்கள் கோடி
புனிதனாம் புருடனாமே.
அதாவது நித்யப்பொருள் எது அநித்யப்பொருள் எது என்ற விவேகம், இம்மை மறுமைச் சுகங்களின்பால் வைராக்கியம், புலனடக்கம், மனவடக்கம் முதலிய பயிற்சிகள், முத்தியடைய வேண்டும் என்ற தீவிர இச்சை என்பன சாதன சதுஷ்டயங்கள் எனப்படுவன. இவை இருந்தால்தான் ஆன்ம அறிவு உண்டாகும். புதிதாக விவேகியாய் இருப்பார்க்கு இந்த அர்த்தஙக்ள் உள் நுழையாது. அப்படி நுழைந்தால் அதற்கு முன் ஜன்மங்களில் செய்த சாதனங்கள் பலித்தன என்று கொள்ள வேண்டும் என்கிறார். ஆனால் இதில் ஒரு கேள்வி. வஸ்து புறத்தில் இருந்தால் பரவாயில்லை. ஆன்மா என்பது யார் அறிய வேண்டுமோ அவருடைய உண்மையான இயல்புதானே. அது எப்பொழுது வேண்டுமானாலும் உள்ளிருந்து ஏற்படக் கூடுமே. பாசம் விலகினால் தெளிந்த நீர் தெரிவது போன்று. புறச் சாதனங்கள் செய்தவர்க்கன்றி உண்டாகாது என்பது எப்படிச் சரியாகும்?
ஆனால் வேதாந்தம் என்பதைத் தமிழ்ச் செய்யுள் நூல் ஒன்றை வைத்துக்கொண்டு நன்கு ஆழமாக வரிவரியாக சான்று விவாதம் ஆகிய முறையில் கற்க நினைப்போருக்கு இந்த நூல் அருமையான அளவுடைய நன்னூல். அத்வைத வேதாந்தம் என்றாலும் வேதாந்த அணுகுமுறை என்ன என்பதும் நன்கு விளங்கும். மொத்த பாட்டுகள் சந்தேகம் தெளிதல் படலத்தில் - 185, தத்துவ விளக்கப் படலத்தில் 108; ஆக மொத்தம் 293. அருமையான தமிழ்ச் செய்யுட்கள்.
தத்துவம் அல்லாத சராசரங்கள் எங்கண்உள?
தத்துவத்தைச் சோதித்துத் தான்ஆதற்கு - இத்துறையே
அன்றிப் பிறிதுஇலையால் ஆய்ந்துய்மின் இந்நூலை
அன்றிச் சுருக்கம் எஃதாம்?
உண்மைதான். அனைத்து அறிய வேண்டிய கருத்துகள் தன்னகத்தே கொண்டு கற்றலுக்கு இனிதாகி, அளவுடைத்தாகிய அருநூல் கைவல்லிய நவநீதம்.
*
உபநிஷதங்கள் தமிழில் பழைய பதிப்புகள்:
உபநிஷதங்கள்தாம் ஹிந்து மதத்தின், அதுவும் வேதாந்த சம்ப்ரதயங்கள் அனைத்துக்கும், வேதங்களைப் பிரமாணமாய் ஏற்கும் ஆகமங்களுக்கும் ஆதாரமான நூல்கள் என்பது அனைவரும் அறிந்ததே. 'பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே!' என்கிறார் பாரதியார். இந்த உபநிடதங்களுக்கு இந்தியாவின் பல மொழிகளிலும் விளக்கங்கள் காலத்தில் வந்த வண்ணம் இருந்தன, இருக்கின்றன என்பது சொல்ல வேண்டியதில்லை. தமிழிலும் உபநிடதங்களை மொழிபெயர்த்தும், விளக்கியும், வடமொழி உரைகளுக்குச் சுருக்கமாக தமிழில் சாறான பொருள் தந்தும் எழுதப்பட்ட நூல்கள் குறைவு என்று சொல்ல முடியாது. உபநிஷதங்களுக்கு மூன்று தத்துவப் பள்ளிகளின் விளக்கங்களையும் நிரல்படத் தந்து ஒரு தமிழ் மொழிபெயர்ப்பும் உண்டு. (கு அநந்தாசாரியார் பதிப்பு என்று நினைவு.) அதே வரிசையில் இடம் பெறக் கூடிய நூல் ஒன்று. ஒன்றா? இல்லை ஆறு நூல்களின் தொகுப்பு. அதாவது நாராயணோபநிடதம், பரமஹம்ஸோபநிடதம், அமிர்தபிந்து உபநிடதம், அமிர்தநாதோபநிடதம், அதர்வசிரோபநிடதம், அதர்வசிகோபநிடதம் என்னும் ஆறு உபநிடதங்களுக்கும் மொழிபெயர்ப்பும், விளக்கங்களும், தேவையான இடத்தில் வடமொழிச் சொற்களுக்கான இலக்கணக்கொத்தும் பெய்து நூல்கள் 1899 - 1900 கால இடைவெளியில் வெளிவந்திருக்கின்றன. இந்த அரும் செயலைச் செய்திருப்பவர் சிதம்பரம் பிரம்மவித்யா பத்திராதிபரும், பரசமய பஞ்சானன பண்டித பாஞ்சஜன்ய ப்ரம்மஸ்ரீ கு ஸ்ரீநிவாஸதீக்ஷிதர் அவர்கள். நடுக்காவேரி ஜகத்குரு யந்திரசாலையில் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது.
1) நாராயணோபநிடதம் - கு ஸ்ரீநிவாஸ திக்ஷிதரால் இயற்றப்பட்ட நாரயணோபநிஷத்விருத்தி என்னும் வடமொழி வியாக்கியானத்துக்கிணங்க அவராலேயே மொழிபெயர்க்கப்பட்டது - ஆண்டு 1899
2) பரமஹம்ஸோபநிடதம் - வடமொழி வியாக்கியானம் ஹம்ஸ தொனிக்கிணங்க தமிழில் மொழிபெயர்ப்பு - ஆண்டு 1899
3) அமிர்த பிந்து உபநிடதம் - வடமொழி வியக்கியானம் அமிர்தபிந்து உபநிஷத் பிரகாசம் என்பதற்கு இணங்க தமிழ் மொழிபெயர்ப்பு - ஆண்டு 1900
4) அமிர்த நாத உபநிடதம் - அமிர்த நாத உபநிஷத் பிரபை என்ற வியாக்கியானத்திற்கு இணங்க தமிழ் மொழிபெயர்ப்பு - ஆண்டு 1899
5) அதர்வசிரோபநிடதம் - அதர்வசிரோலகுதீபிகை என்னும் வியாக்கியானத்திற்கு இணங்க தமிழ் மொழிபெயர்ப்பு - ஆண்டு 1900
6) அதர்வசிகோபநிடதம் - அதர்வசிகா பத விவிருதி என்னும் வியாக்கியானத்துக்கிணங்க தமிழ் மொழிபெயர்ப்பு - ஆண்டு 1900
உதாரணத்திற்கு, பரமஹம்ஸ உபநிடதத்தில் ஒரு மந்திரத்தை எடுத்துக் கொள்வோம் -
ஸர்வாநுகாமாந் பரித்யஜ்ய அத்வைத பரமே ஸ்திதி: ஜ்நாந தண்டோத்ருதோ யேநஏக தண்டீ ஸ உச்யதே ||
இதன் பொருள்,
எல்லாக் காமங்களையும் விட்டொழித்து பரமாத்வைத நிஷ்டையில் இருப்பவனாய் ஞான தண்டத்தையேற்றவன் ஏகதண்டியெனப்படுவான்.
ஆசிரியர் உபநிடதங்களுக்கு அப்பைய தீக்ஷிதர் போன்ற சிவாத்துவைதிகள் கொண்ட அத்வைத வழியின் கொள்கைக்கு ஏற்ப பொருள் செய்யப்பட்டிருப்பதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். ஆசிரியரின் தமிழ் நடை இன்றும் புரிந்து கொள்ளக் கூடிய நடையில் இருக்கிறது. கொஞ்சம் பண்டைய உச்சரிப்புகளை நாம் புரிந்து கொண்டால். உதாரணம் இந்த சுலோகத்திற்கான விளக்கமாக ஆசிரியர் எழுதுவது -
எல்லாக் காமங்களையும் = காம்மியப் பொருளனைத்தையும்; விட்டொழித்து = துலைத்து, அதனிடத்தே விருப்பத்தை ஒழித்து என்பது பொருள்; பரமாத்வைத நிஷடை = எவ்வகையிலு துவைத வாசனையில்லாது சுத்தாத்வைத நிஷ்டை. அதாவது மீக்ஷியற்ற பரமாநந்த நிலைமை. அது இங்கு ஞானம் என்று உபகரிக்கப்பட்டது. இஃது எவனால் தரிக்கப்படும் அவனே முக்கியமான தண்டி. அதாவது உத்தமமான சன்னியாசி என்பது கருத்து.
தமிழில் வேதாந்தம் என்பதற்குப் பல ஆக்கங்கள் பலராலும் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகிறது.
***
No comments:
Post a Comment