Thursday, May 2, 2019

Qui Jin - சியூ சீன், சீனாவின் முதல் பெண்ணிய வீராங்கனை.

Qui Jin - சியூ சீன், சீனாவின் முதல் பெண்ணிய வீராங்கனை.
கட்டுப்பெட்டியான சீன குடும்பம். சிறு வயதிலேயே கால்கட்டு போட்டுவிடும் பழக்கம். கால்கட்டு என்றால் உருவகமாகத் திருமணத்தைக் குறிக்காமல் உண்மையிலேயே கால் பாதங்களைக் கட்டிப் போட்டு விட்டால், அப்படியே சூம்பிப் போய்ப் பின்னர் நடக்க கொள்ள வாழ்க்கையில் கஷ்டம். பெரிதும் பிறரை நம்பித்தான் காரியம் செய்ய வேண்டும். ஆணின் தேவைக்கான காரியங்கள், வீட்டுக் காரியங்களுக்கு மட்டும் பயன்பட முடியும். ஆனால் தனக்கென்று ஒரு வாழ்வு என்பதை பெண் எங்காவது நினைத்துக் கூட பார்த்து விடக் கூடாதே என்ற நல்ல எண்ணம் பாவம், சமுதாயத்திற்கு! எந்த இடத்தில்தான் சமுதாயம் வாழ்ந்தது? உலகில் எங்கு போனாலும் பண்டைய கலாசாரம், மரபு, ஆன்மிகம், யிங்யாங், கன்ஃப்யூஷியஸ், தாவோ எல்லாம் சரிதான். ஆனால் உலக உருண்டையில் பெண்ணை மிகவும் மரியாதையின்றி, வாழ்வுரிமையே இன்றி அடித்துத் தன் சௌகரியத்தையெல்லாம் கறக்கும் இதயமற்ற ஆணியத் திமிரால் ஆன சமுதாயம்தான் எங்கும்.

ஆனால் நல்ல வேளை. பெற்றோர்கள் நன்கு கற்றவர்கள். பெண்ணுக்கும் கல்வியை போதித்து விட்டார்கள். இது நடந்தது 1875ல் ஷாவோஸிங், ஸெக்கியாங் பிரதேசத்தில். சகோதரர்களிடம் குதிரையேற்றம் எல்லாம் கற்றுக்கொண்டார். மல்யுத்த வர்மக் கலைகளும் பயிற்சி பெற்றார். போதாக் குறைக்கு ஒரு கட்டத்தில் மேற்கத்திய உடையில் துணிந்து உலவ ஆரம்பித்து விட்டார். இத்தனைக்கும் அங்கு எந்தப் பெண்மணியும் அவ்வாறு செய்ததே இல்லை. கணவருக்கு மானம் போயிற்று. 'கண்ணாடி ஏரி வீராங்கனைக்கோ' வாழ்க்கை இலட்சியம் நன்கு புரிந்து போயிற்று. இனி இந்தச் சீனத்தில் பெண்களை மாற்றியே தீர வேண்டும். ஆணுக்குப் பெண் சமமான சான்றாண்மை கொண்ட வாழ்வுரிமை மிக்க உயிர் என்பதை நிலை நாட்டியே தீர வேண்டும். தன் நகையெல்லாம் விற்றுப் பணம் திரட்டி ஜப்பானுக்கு மேற்கல்விக்குச் செல்ல திட்டமிட்டார். கணவரையும், இரண்டு குழந்தைகளையும் என்ன செய்வது? பார்த்தார். இப்படி யோசித்துக் கொண்டிருந்தால், சமுதாயத்திற்கு இன்னொரு அடிமைதான் கிடைக்கும். பெண்களுக்கு ஒரு நாளும் நியாயம் பிறக்காது என்று துணிந்தார். அனைவரையும் துறந்து தன் இலட்சியத்திற்காகப் போராடப் புறப்பட்டார்.

ஜப்பானில் மாணவர்களின் ரகசியச் சங்கங்களில் எல்லாம் சேர்ந்தாள். பெண்களுக்கான சமுதாய சுதந்திரம் அது ஒன்றுதான் அவளுக்கு மூச்சாய் இருந்தது.

"பெண்கள் வீரர்களாய் விளங்க முடியாது
என்று என்னிடம் கதையளக்காதே!
கீழைக் கடலின் வெட்ட வெளிக் காற்றில்
பல்லாயிரம் காவதம் தனியே கடந்தவள் நான்.
வானிலும் கடலிலும் என் கவிதைச் சிறகுகள் விரியும். .."

என்ற பெருமிதக் கவிதை வரிகள் அவருடையது.

ஜப்பானில் சிறந்த தலைவரான சன் யாட் சேன் அவர்களுடன் தோழமை பூண்டார். சீனாவின் வீராங்கனை என்று கடைசி வரை சியூ சீன் அவர்களைப் போற்றியவர் சன்யாட் சேன்.

சீன வம்சாவளி அரசுகளை ஒரு தனிப் பெண் எதிர்த்து எவ்வளவு நாள் நிற்க முடியும். இந்த ஒரு தீப்பந்தம் எங்கும் பற்றி எரியத் தொடங்கிவிடும் என்று பயந்த சீன அரச வம்சப் படைகள் ஒரு வழியாகச் சுற்றி வளைத்தன. காட்டிக் கொடுத்துவிடு, விட்டுவிடுகிறேன் என்று நயம் காட்டின. ஆனால் சியூ சீன் எழுதிக் காண்பித்த ஒற்றை வரிக் கவிதை -
'கார்காலக் காற்றும் கார்கால மழையும் இதயத்தை வாட்டி நலியும்' 1907 ஆம் ஆண்டு இவரைப் படைகள் பலிகொண்டன. 31 வயது வீராங்கனை. மூவாயிர ஆண்டுகாலமாக பெண்ணுக்கு இழைக்கப்பட்ட ஈனத்தைத் துடைக்கத் தன்னையே களப்பலி ஆக விட்டாள்.

இவளைப் பற்றித் தமிழில் அந்தக் காலத்திலேயே உடனே அறிமுகப் படுத்துகிறார் பாரதி. அதுவும் பெண்கள் கூட்டம் ஒன்று போட்டு, அதில் தம்முடைய பெண் தங்கம்மாவை லியொனெல் கிப்ஸ் என்பார் ஓர் மேல்நாட்டு இதழில் சியூ சீன் குறித்து எழுதிய கட்டுரையைப் படிக்கச் சொல்லி, சியூ சீன் எழுதிய கவிதை ஒன்றைத் தாம் மொழிபெயர்த்ததைத் தம் பெண் சகுந்தலா மூலம் படிக்கச் சொல்லி மகளிருக்கு அறிமுகப் படுத்தும் நேர்த்தி அருமை.

அந்தப் பாடல்,பாரதியின் தமிழில், அதுதான் 'பெண் விடுதலை' என்ற தலைப்பில் நாம் படிக்கும் பாடல் -

விடுத லைக்கு மகளிரெல் லோரும்
வேட்கை கொண்டனம்; வெல்லுவ மென்றே
திடமனத்தின் மதுக்கிண்ண மீது
சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம்.
உடையவள் சக்தி யாண்பெண் ணிரண்டும்
ஒருநிகர் செய்து உரிமை சமைத்தாள்.
இடையி லேபட்ட கீழ்நிலை கண்டீர்,
இதற்கு நாம் ஒருப் பட்டிருப் போமோ?
திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்;
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்;
குறைவி லாது முழுநிகர் நம்மைக்
கொள்வர் ஆண்கள் எனில் அவரோடும்
சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்
திரும்ப வெல்வதிற் சேர்ந்திங்கு உழைப்போம்;
அறவி ழுந்தது பண்டை வழக்கம்;
ஆணுக்குப் பெண் விலங்கெனும் அஃதே.
விடியு நல்லொளி காணுதி நின்றே,
மேவு நாக ரீகம்புதி தொன்றே;
கொடியர் நம்மை யடிமைக ளென்றே;
கொண்டு, தாமுத லென்றன ரன்றே.
அடியொ டந்த வழக்கத்தைக் கொன்றே.
அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர், நந்தேசத்து வீரக்
காரி கைக்கணத் தீர் துணிவுற்றே.
(Qui Jin அவர்கள் எழுதிய இதன் மூலத்தின் ஆங்கில வடிவம் எனக்குக் கிடைக்கவில்லை. யாரேனும் உதவினால் நன்று)
பாரதியின் பெண்ணியச் சிந்தனை, பெண் விடுதலை, பெண் எழுச்சி குறித்த அக்கறை உண்மையானதும், உள்ளத்தினின்று எழுந்த ஒன்றும், தொலை நோக்கு மிக்கதும் ஆகும்.
***

No comments:

Post a Comment