Thursday, May 2, 2019

வேதம் பொது என்ற விமலர் ஜம்புநாதன்

1896ல் ஆகஸ்ட் 23ல் திருச்சியைச் சேர்ந்த மணக்காலில் நன்கு கற்ற வைதிக குடும்பம். அதில் பிறந்த திரு M R ஜம்புநாதன் வேதங்களைக் கற்றதோடு நிற்காமல் சமுதாய அக்கறையுடன் யோசிக்கத் தொடங்கினார். உலகின் மிகச் சிறந்த பண்டைய இலக்கியம் எனப்படும் வேதம் ஏன் அனைத்து மக்களும் கற்பதற்கு ஏற்ற வகையில் வழங்கப்படக் கூடாது? வேதம் என்பது சிலரால்தான் படிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தை யார் ஏற்படுத்தியது? அதை ஏன் இன்னும் கடைப்பிடித்துப் பலருக்கும் தெரிய வேண்டிய விஷயத்தை மூடி வைக்க வேண்டும்கல்வி என்பது சமுதாயத்திற்குப் போய்ச் சேர வேண்டும். இழப்பிற்கு ஆளான மக்களுக்கு அது ஈடுகட்டுவதாய் அவர்களுக்கு அறிவின் பயனை ஊட்டி, அதன் மூலம் பொதுவாகச் சமுதாயம் முழுவதும் விளக்கம் பெறச் செய்ய வேண்டும். அதற்குத் தடையாக எந்தப் பிரிவினைக் கருத்துகள் எதிர்ப்படினும் அறிவு அதை முறியடித்து மக்களின் நல்வாழ்விற்கான பாதையை மேலும் சுலபமாகவும், சுகமாகவும், சுதந்திர ஒளி மிக்கதாகவும் ஆக்க வேண்டும் என்பது அவருடைய மனத்தில் எழுந்த ஊக்கமாகத் திகழ்ந்தது.

இயல்பாக அவருக்கு ஆர்ய சமாஜத்து சுவாமி தயாநந்தரின் சத்யார்த்தப் பிரகாசம் என்னும் நூல் மிகவும் பிடித்துப் போயிற்று. அதை அவர் தமிழில் மொழிபெயர்த்து வழங்கவும் செய்தார். அவருக்கு எப்படியாவது நான்கு வேதங்களையும், அவற்றில் உள்ள மந்திரங்கள் என்ற பகுதியைத் தமிழாக்கி அனைத்து மக்கள் கையிலும் துலங்கச் செய்ய வேண்டும் என்ற ஆவல் ஓயாமல் வளர்ந்தது. திருப்பனந்தாள், திருவாவடுதுறை ஆகிய சைவ மடங்கள் அவருக்கு இந்த விஷயத்தில் மிகுந்த உதவி புரிந்தன. 'மதப் பிரிவினைப் பார்வைகள் விலக வேண்டும் என்னில் வேத விளக்கம் அனைவருக்கும் எய்த வேண்டும். அதற்கு அனைத்து பிராந்திய மொழிகளின் தொடுவானிலும் வேதம் என்னும் ஞாயிறு எழ வேண்டும்' என்பது அவர்தம் ஊக்கமிகு கருத்து.

வேதங்களைப் பற்றிய அறிமுகமாக (இது மிக அருமையான சுருக்கமான அறிமுகம்) வேத சந்திரிகை என்னும் நூல் 1934ல் அவரால் எழுதப்பட்டது. சாம வேதம், யஜுர் வேதம், அதர்வ வேதம் என்னும் பகுதிகள் அடுத்து அடுத்து அவரால் 1935லிருந்து 1940க்குள் கொண்டு வரப்பட்டன. அதுவரை வேதங்கள் என்பதைக் காதால் பொருள் புரியாத உச்சாடனமாய்க் கேட்டிருந்த மக்களுக்குக் கையில் நூல் வடிவில் நல்ல தமிழில் பண்டைய வேதங்கள் படிக்கக் கிடைத்தன. தமிழ் நாட்டிலும், இந்தியா எங்கும், உலகைச் சேர்ந்த அறிஞர்களும் திரு ஜம்புநாதனின் அயரா உழைப்பைப் பாராட்டினர். ஆனால் அவருக்கு இன்னும் மிச்சம் இருந்ததோ வேதங்களிலும் பண்டைய வேதமான அந்த ஆதி ரிக் வேதம். அதையும் தமிழில் கொண்டு வந்து மக்கள் பொதுவில் வைத்துவிட்டால்தான் தனக்கு நிம்மதி என்று பெரிதும் விழைந்தார்.

இதற்கிடையில், சமுதாயச் சேவைகள் என்பதில் 1918க்கும் முந்தியே ஈடுபாடு கொண்டிருந்த திரு ஜம்புநாதன் 1918ல் சென்னையில் தாழ்த்தப்பட்ட வகுப்புகளுக்கான மேம்பாடு இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். சுமார் இரண்டு ஆண்டுகள் அதை நடத்திவந்தவர் தமது வாழ்க்கையை மும்பாய் நகரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார். அங்கும் சென்று அரும்பணியை நிறுத்தினார் இல்லை. தாராவியில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஒன்று 1924ல் தொடங்க முக்கிய காரணமாக இருந்தார். அது தாராவியில் ஸ்லம்களில் வசித்து வந்த ஏழை நிர்கதியான தமிழ்க் குடும்பங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்தப் பள்ளிக் கூடத்தின் 50 ஆண்டு நிறைவும் அவரது கையாலேயே 1974ல் கொண்டாடப்பட்டது. ஆனால் அதற்குள் சுமார் 45 தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் மும்பாய் பிராந்தியத்தில் கிளர்ந்துவிட்டன என்பது அவருக்குப் பெரும் வெற்றியாகும்எழுத்தாளர் மாநாடு, இந்தியா எங்கும் நடந்த கருத்தரங்குகள், உலக நாட்டு கருத்தரங்குகள் என்று எங்கும் சென்று கலந்து கொண்டார். மிக அதிக அளவு கட்டுரைகள் வரைந்து பல இதழ்களுக்கும் அளித்தார். தமிழில் வேதங்கள் என்பதும் ஜம்புநாதன் என்பதும் ஒன்றோடு ஒன்று கலந்து ஒலித்த பெயர்களாக மாறின

திரு ஜம்புநாதன் அவர்களுக்குப் பிடித்த ஹாபி என்பது பண்டைய நாணயங்களைச் சேகரித்தல். அப்படி அவர் சேகரித்து அதை ரிசர்வ் வங்கி மானிடரி ம்யூஸியம் என்பதற்கு அவரது மகள் திருமதி இந்திரா அநந்தராமன் கொடையாக அளித்த போது அதன் அருமை பெருமைகளை அனவைரும் உணர்ந்து வியந்தனர். பல்லவர், சோழர், பாண்டியர், விஜயநகரம், பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பேனி, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பேனி, மைசூர் உடையார்கள், சுல்தான்காலம் என்று முழு சரித்திரமே அந்த நாணயச் சேகரத்தில் இருந்தது.

விடாமல் முயன்று ரிக்வேதம் மொழிபெயர்ப்பும் முடித்து விட்டார். ஆனால் 18 டிசம்பர் 1974 அவர் வேத வாழ்வை முடித்து விண்ணுலகு எய்திவிட்டார். அவரது மனைவி அவரது கனவை நிறைவேற்றும் வகையில் 15 ஜனவரி 1978ல் ரிக் வேதம் முதல் பகுதியை வெளிவரச் செய்தார்சத்யார்த்த பிரகாசம் என்னும் சுவாமி தயானந்த சரஸ்வதியின் நூலை மொழிபெயர்த்தவர், பல நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தார். குலிஸ்தான் என்பதை ராஜா தோட்டம் என்றும், கன்ஃப்யூஷியஸ் கருத்துகளை சீன வேதம் என்றும், திரிமூர்த்தி உண்மை, யோக ஆசனங்கள், மஜினியின் வாழ்க்கை வரலாறு, சதபத பிராம்மண கதைகள், உபநிஷதக் கதைகள் என்று அவர் புதிய புதிய நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தார்

1938ல் யஜுர் வேதம் தமிழாக்கத்தைக் கொண்டு வந்த திரு எம் ஆர் ஜம்புநாதன் அவர்கள் அதன் முன்னுரையில் எழுதும் கருத்து இன்று நாம் அதைப் படிப்பினும் நம்மை முன்னேற்றப் பாதையில் செலுத்த வல்லது. மிக எழுச்சி வாய்ந்த சொற்கள் கொண்டு எழுதக் கூடியவர் திரு எம் ஆர் ஜம்புநாதன்:-

'ஆரியமும் திராவிடமும் பல வருடங்கள் இணைந்திருந்த போதிலும் வேதம் தென் மொழியில் வராதது ஒரு பெருங் குறையாகவே இருந்தது. இக்குறையைப் பெரும் சந்தர்ப்பமாகக் கருதி பல அறிஞர்கள் இது தான் வேத ஆக்ஞை என தங்கள் மனம் போன வண்ணம் சொல்லி சமூகச் செழிப்பழிக்கும் பல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.....
.......................................................
இப்பொழுது வேதம் தென் மொழியில் வந்து விட்டபடியால் இக்கஷ்டம் நீங்கும். வேத விரோதங்களை இனி நீங்களே கண்டு பிடித்துத் துரத்துவீர்கள்............

புரிந்தாலும் புரியாவிட்டாலும் இதைக் கட்டாயமாக ஒரு முறை படியுங்கள். பன்முறை படனம் செய்யுங்கள்.
.............................
இவற்றின் பல மொழிகளைப் படித்து சற்று ஈசனை தியானம் செய்து புரோகிதர் உதவியன்னியில், விவாகம் முதலிய எல்லா சம்ஸ்காரங்களையும் நடத்துங்கள்............

இவ்வேதம் மானிட கோடிகளுக்கு சூரியன் ஒளிபோல், வீசும் காற்று போல் பருகும் சலம் போல் சொந்தம் ஆகையால் விரும்புவர்க்கெல்லாம் வேத இரகசியத்தை அறிவிக்கவும். வேதப் பிரசாரம் செய்வது உங்கள் கடமை என தித்திரி ரிஷி கூறுகிறார்.

திரு எம் ஆர் ஜம்புநாதன் அவர்கள் மொழிபெயர்த்த யஜுர் வேதம் என்னும் நூலிலிருந்து ஒரு வரி -

"பெண் பிள்ளையின் நிமித்தம் கருப்பத்தைக் குணமாக்கவும். பெண் பிள்ளைகள் பிற்காலத்தில் தாயைக் காக்கட்டும்."

உபநிஷத காலங்களில் பெண் பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகள் இருந்ததாக அறிஞர் கூறுவர். பெண்களுக்கும் கல்வி கற்கும் பிரமசரிய ஆசிரமம் அக்காலத்தில் நிலவியது என்றும் சொல்வார்கள். அதற்கு முந்தைய வேதங்களே சாட்சி பகர்வன போல் இந்த வரிகள்.

பென்ணுக்கு என்று இருந்த ஸ்த்ரீ தனங்கள் (மாதருக்கேயான சொத்துகள்) நன்கு பாதுகாக்கப் பட்ட காலங்கள் அவை.

'வேத வாழ்வினைக் கைப்பிடிப்போம்' என்று பாரதி உணர்ந்துதான் பாடினார். எது வேத வாழ்வு என்பதை அறிய வேதங்களைத் தமிழில் படிக்கத் தந்தார் திரு ஜம்புநாதன்.

இன்றும் அவருடைய பெயரைச் சுடர்மிகக் காட்டும் நூல்கள் நான்கு வேதங்களின் தமிழாக்கம், வேத சந்திரிகை, சத்யார்த்த பிரகாசம் ஆகியனஆம் வேதம் பொது என்ற விமலர் அல்லவோ திரு எம் ஆர் ஜம்புநாதன் அவர்கள். !

*** 

1 comment:

  1. பகிர்ந்தமைக்கு தன்யோஸ்மி

    ReplyDelete