இதற்கு அகரம் என்பதன் இயல்பைச் சிறிது புரிந்துகொள்ள வேண்டும். உடல் மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன் - என்றார் திருக்குருகூர் நம்பி.
மொத்த தமிழ் எழுத்துகளின் அமைப்புமே இந்த உடல் உயிர் கருத்தில் அமைந்ததுதான். தமிழின் இலக்கணத்தில் புலவர் பெருமக்கள் அமைத்து வைத்த சூட்சுமமும், சடகோபன் செந்தமிழ் விண்டு விளக்கிய சூத்திரமும் ஒன்றே என்பதைத்தான் செந்நாப்போதார் செப்பேடாக்கினாற்போல் சொல்லிப் போந்தார். இந்தக் கருத்தில் அமைந்தது போல்தான் தொல்காப்பியனாரின் சூத்திரமும் பேசுகிறது.
“மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்”
இங்கு மெய்யின் இயக்கத்திற்கு இரண்டு வகைகளைக் கூறுகிறார் நச்சினார்க்கினியர்.
என்ன அந்த இரண்டு வகை? நாவால் கருத்துப் பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கம். மூவகையால் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கம். இந்த இரண்டு இயக்கமும் அகரமொடு சிவணும். (மூவகையால் - வன்மை, மென்மை, இடைமை) சிவணும் என்றால் பொருந்தி நடக்கும்.
அதாவது தனி மெய்யைச் சொல்லிக் காட்ட வேண்டும் என்றாலும், கண்ணுக்குப் புலப்பட எழுதிக் காட்ட வேண்டும் என்றாலும் அகரம் துணைகொண்டுதான் அவற்றைச் செய்ய முடியும். இக். இச், இப் என்பது போன்ற செவிக்குப் புலப்படாத அதாவது பொருள்படாத அரவமாக இன்றி உருவு கொண்டு துலங்கும் ஒலியாகக் காட்ட வேண்டும் என்றால் ககரம், சகரம், பகரம் என்று சொல்ல வேண்டும். மெய்யெழுத்துகள் அனைத்தையும் அகரம் கொண்டுதான் ஒலித்துக் காட்ட முடியும். சரி எழுதிக் காட்டுவோம் என்றால் என்ன எழுதுவோம் தனி மெய்யைக் குறிப்பிட்டுக் காட்ட?
க், ச், ப் -- என்று எழுதிக் காட்டுவோம்.
காட்சிப் படும் இந்தத் தனி மெய்யின் வடிவுகளைக் காணுங்கள். முதலில் க என்று அகரத்தோடு சிவணிய வடிவில் எழுதிப் பின்னால் தனி மெய் என்பதைக் குறிக்கப் புள்ளி குத்திக் காட்டப் படுகிறது. கருத்துப் பொருளாகிய உருவு, காட்சிப் பொருளாகிய வடிவு என்று உருவு >< வடிவு என்பதை conceivable >< visible என்ற நுட்பமாகக் காட்டியிருக்கும் நச்சினார்க்கினியர் திறம் வியக்கத் தக்கது.
அகரம் தனிமெய் எழுத்துகளைக் காட்டும்போதும் அவற்றுள் கலந்தே உள்ளது. உயிர்மெய் எழுத்துகளில் அகரம் சிவணுவது வெளிப்படை. இங்கு ஒரு கேள்வி. மெய்யெழுத்துகளில் அகரம் கலந்து நிற்கிறது என்பதைப் போல உயிர் எழுத்துகளிலும் அகரம் கலந்து நிற்குமோ? ஆம். ஆனால் அதனை அவரவரே உணர்தலன்றிப் பிறரால் பிறர்க்குக் காட்டுதல் அரிதாம். எந்த உயிரெழுத்தின் ஒலி வடிவிலும் அகரம் அடிப்படையாக அமைந்து வாயில் நா, அண்பல், இதழ்கள் ஆகியவற்றின் மாற்றங்களாலும், நெடுமை, குறுமை அடைவதாலும் வேறுபடும்.
இவ்வாறு அகரம் மெய்யிலும், உயிரிலும் கலந்தும், அவைதாமாகவே ஆகியும், அவற்றோடு கலந்த காலையும் அவற்றால் திரியாமலும், மெய்யின் இயக்கம் தன்னால் என்னும் படி அமைந்தும், உயிரின் இயக்கம் தன்னால் என்பதை உணர்தலன்றிக் காட்ட இயலாத தன்மைத்தாக இருப்பதும் ஆகிய தன்மைகளால் அகரத்தை இறைவனுக்கு ஏற்ற உதாரணமாகக் காட்டுகிறார் திருவள்ளுவரும், கண்ணனும். இந்த நுட்பத்தை மிக அழகாக நச்சினார்க்கினியர் விளக்கிக் காட்டுகிறார்.
“எனவே ஒருவன் தனிமெய்களை நாவால் கருத்துப்பொருளாகிய உருவாக இயக்கும் இயக்கமும், மூவகையால் காட்சிப் பொருளாகிய வடிவாக இயக்கும் இயக்கமும் அகரத்தோடு பொருந்தி நடக்கும் என்றவாறு”
“இங்ஙனம் மெய்க்கண் அகரங் கலந்துநிற்குமாறு கூறினாற்போலப்
பதினோருயிர்க்கண்ணும் அகரங் கலந்து நிற்குமென்பது ஆசிரியர்
கூறாராயினார், அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு
உணர்த்துதல் அரிதாகலானுமென்று உணர்க. இறைவன்
இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணுந் தனிமெய்க்கண்ணுங் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்பமுடிந்தது.
'அகரமுதல' என்னுங் குறளான், அகரமாகிய முதலையுடைய
எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து
உலகமென வள்ளுவனார் உவமைகூறிய வாற்றானுங், கண்ணன்
எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானேயெனக் கூறியவாற்றானும் பிற
நூல்களானும் உணர்க.” (பகுதியை அச்சுகொட்டிக் காட்டியிருக்கிறேன்)
***
No comments:
Post a Comment