Thursday, May 2, 2019

சங்கத் தமிழில் எனது கவிதை முயற்சியும், அதற்கான உரைமுனைப்பும்

பாலைத் திணையில் ஒரு பாடல்.
துறை -- அருஞ்சுரத்து உடன்போகிய மகளைப் பற்றி வினாவிய தாயர்க்கு முக்கோல் பகவர் உரைத்தது. 

வில்லிடை யாத்த மறவர் வாளி
கல்லிடைக் கரந்த கூற்றென வீழ்த்த
நடுகல் எழுத்தின் எருவை நீழல்
படுநர் வதியும் அருஞ்சுரம் பெயர
நீர்ப்பசை யறியா நிலத்துமிழ் குருதி
வேர்ப்பசை உண்டு வேய்பயில் பிறங்கல்
பெருங்களி றேய்ப்பப் பரிதிவெம் அரிமா
உருகெழு பகல்செய்க் குடுமிவான் தயங்க
உன்னரும் கடுவழி உயிர்ப்பொதி சுமந்து
முன்னர் யாத்த முடுகுவல் வெவ்வினை
கடத்தற் கரிதால் கதநாய்ப் புரையர்
அடலரும் வெஞ்சுரம் அணைகொள் மீளி
அருங்காப் பினளே நின்மகள்
தருமளி தந்துநாண் விடலையின் மருங்கே. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 
பாலை என்பது ஒரு நிலம் உண்டா? 
"நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு 
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே". 

நடுவுநிலைத்திணையாவது என்ன? பாலைக்கு என்று நிலம் ஓதாது நாநிலங்களிலும் வேனிற் காலத்து நிகழ்வன பாலைக்குக் கருப்பொருளாய்க் கொண்டனர் இளம்பூரணர்.

"முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்"

என்று சிலப்பதிகாரமும் விளக்குகிறது. பாலை என்றாலே பிரிவுதானே.? பின் உடன்போகிய மகளைப் பற்றித் தாயர் வினாவுதல் யாங்ஙனம்? என்னில்

"கொண்டுதலைக் கழிதலும் பிரிந்தவண் இரங்கலும்
உண்டென மொழிப ஓரிடத் தான"

கொண்டுதலைக் கழிதல் நிலம் பெயர்தல் என்ற காரணத்தால் புணர்தலோடும் சேர்க்காது, உடன்கொண்டு பெயர்தல் என்ற காரணம் பற்றிப் பிரிதல் என்பதனிலும் அடக்காது, 'ஓரிடத்தான' என்பதனால் பாலைக்கண் நிகழும் என்று சூத்திரம் கூறியது. பாலைக்குத் தலைமக்கள் பெயர் மீளி, விடலை.
நடக்கும் செயல்கள் ஆறலைக் களவு, வழிப்பறி முதலியன. பறவை எருவை, பருந்து. 

இங்குத் தலைமகள் தலைவனுடன் உடன்போக்கில் பிரிய தாயர் ஆற்றாமையாலே அரும்சுரம் சென்றும் எதிர்வரும் முக்கோல் பகவரை 'கண்டீர்களா எம் மகளை?' என்று கேட்பதுபோல் பாவம். முக்கோல் பகவரை வினவுதல் கலித்தொகை ஒப்பிய சித்திரம். முக்கோல் பகவர் எனப்படுவோர் பாஞ்சராத்திர ஆகம வழியில் திருமால் நெறி பயிலும் ஸ்ரீவைஷ்ணவத் துறவிகள். இவர்களுக்கு முக்கோல் என்னும் த்ரிதண்டம், நூல், சிகை முதலியன உண்டு. 

வில்லிடை யாத்த மறவர் வாளி
கல்லிடைக் கரந்த கூற்றென வீழ்த்த
நடுகல் எழுத்தின் எருவை நீழல்
படுநர் வதியும் அருஞ்சுரம் பெயர 

வில்லிடை அம்பு பொருத்தி எய்யும் மறவர்கள் மலைச் சார்புகளில் மறைந்து நின்று வழிச்செல்வோர்மீது எய்து பொருளும் உயிரும் கவ்வுவர். மலைக் கற்களின் இடையில் கூற்றுவன் ஒளிந்திருப்பதுபோல் தோன்றும். அந்த அம்பினால் இறந்தோர் தம் பொருளும், உயிரும் இழந்தவராய், முன்னரே அவ்வண்ணம் இறந்து தம் உறவினரால் அங்கேயே நடுகல் வைத்து அதில் எழுத்துப் பொறிப்புண்டு கிடக்கும் இடங்களில் அந்த நடுகல் மீது எருவை புதிதாக இறந்தவர்களின் உடலை உண்டு தம் சிறகுகளை வீசி உலர்த்தா நிற்கும். அந்த நிழல் அன்றி வேறு நிழல் அறியாராய்க் கிடப்பர் அந்த ஏதிலி மாக்கள். அத்தகைய அருஞ்சுரம் பெயர, கடத்தற்கு மிகவும் அரியது. 

நீர்ப்பசை யறியா நிலத்துமிழ் குருதி
வேர்ப்பசை உண்டு வேய்பயில் பிறங்கல்
பெருங்களி றேய்ப்பப் பரிதிவெம் அரிமா
உருகெழு பகல்செய்க் குடுமிவான் தயங்க 

அந்தப் பாலை வனத்திலோ நீர்ப்பசை என்பதே கிடையாது. ஆனால் விண்ணுற ஓங்கி வளர்ந்த வேய்களைப் பார்த்தால் ஏதோ இறந்த மனிதரின் உடல்களினின்றும் பாயாநின்ற குருதியின் நீர்ப்பசையில் வேர் பிடித்து அவ்வண்ணம் வளர்ந்தன போலும் என்று வெருவும்படி பாலையாகி விட்ட முந்தைய குறிஞ்சி நிலத்துப் பாறை ஓச்சங்களோடு போட்டி போட்டு வளர்ந்து நிற்கும். அந்தப் பெரும் பாறைகளோ மிகப்பெரும் களிறுகள் வெப்பம் தாளாமல் மயங்கி விழுந்தன போல் தோற்றம் அளித்து நிற்கும். அந்தச் சிறுகுன்றுகளின் முடி மீது உச்சி வெய்யிலில் அனல் உமிழ்ந்து கனலும் பரிதி, தன் வேரிமயிரும், உளை மயிரும் அலைய யானையின் முடிமீது தாவி பொருகின்ற அரிமா போல் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட அருஞ்சுரம் கடத்தற்கரிது! 

உன்னரும் கடுவழி உயிர்ப்பொதி சுமந்து
முன்னர் யாத்த முடுகுவல் வெவ்வினை
கடத்தற் கரிதால் 

எதைப் போன்று அந்த அருஞ்சுரமானது கடத்தற்கரியது என்று உவமை கூற வேண்டுமானால், எங்களுக்குத் தோன்றுவது என்னெனில், இந்த உயிரானது பிறந்து, இறந்து மாறி மாறிப் போகும் பிறவிச் சுழலில், தான் செய்த வினைகளையும், முன்னர் செய்தவற்றில் பயன் தர முடுகிய வினைப் பயன்களையும் தனது உயிர்ப் பயணத்தின் கட்டுப்பொதியாகச் சுமந்து செல்லும் அந்த கர்ம கதி எப்படி நினைத்தற்கும் அரியதோ, அருளின் துணையின்றி கடத்தற்கரியதோ அப்படி அருமையும், கடுமையும் மிக்கது இந்த அருஞ்சுரம். 

கதநாய்ப் புரையர்
அடலரும் வெஞ்சுரம் அணைகொள் மீளி
அருங்காப் பினளே நின்மகள்
தருமளி தந்துநாண் விடலையின் மருங்கே. 

சினம் மிக்க நாய்களைக் கூட்டிக்கொண்டு திரியும் மிககொடிய புரையர் திரியும் இந்தச் சமாளித்தற்கு அரிய வெம்மை மிக்க பாலை வழியானது உன் மகளுக்கு எந்த அச்சமும், துயரும், தீங்கும் விளைவிக்க இயலாது என்று சொல்லலாம்படி உன் மகள் தகுந்த பாதுகாப்போடு செல்லுகிறாள். அவளுக்கு அரவணைப்பாக பாதுகாவல் தந்து செல்லும் தலைவன் மீளி என்னத் தக்கவன். இந்த நிலங்களின் வழி, குறி அனைத்தும் அறிந்தவன். அவன் உன் மகளுக்குப் போதிய பாதுகாவலாகத் தானே கண்ணும் கருத்துமாக இருந்தும், தன் நிமித்தம் அவளுக்கு இந்த வருத்தம் விளைந்துவிட்டதே என்ற நாணமும், தான தரும் காப்பும், அக்கறையும், அளியும் போதாது என்ற எண்ணத்தால் எழும் நாணமும் அவனை அங்கும் இங்கும் விலக ஒட்டாமல் அவள் மருங்கிலேயே இருக்கச் செய்வதால் நீங்கள் உங்கள் கவலையை எல்லாம் அகற்றி வீடு திரும்புமின்.! 

பயன்பாடு -- இவ்வாறு அருஞ்சுரத்தின் ஆபத்தும், வருத்தமும் தெரியாவண்ணம் உங்கள் மகளைக் கொண்டு செல்வோன், இதைப்போன்று ஆபத்துகளும், துயர்களும் நிறைந்த மனித வாழ்வில் அவளை மிகவும் அன்புடனும், அருளுடனும் பேணிக் கொள்வான் என்று தாயர் உணரவைத்தது. 
நடுகல் எழுத்து -- நடுகல் நட்டு எழுத்து பொறிக்கும் வழக்கம். 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment