Thursday, May 2, 2019

பிரமாண ரக்ஷணம்

பிரமாணம் என்பது Ways and Methods of Knowing அதாவது Epistemology என்னும் பொருளுடையதுஒரு மதத்திற்கோ, ஒரு சித்தாந்தத்திற்கோ சான்று நூல்கள் யாவை என்பதும் பிரமாணம் என்பதற்குப் பொருளாக ஆகும். ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்திற்கான சான்று நூல்கள், ஆதாரமான கிரந்தங்கள் என்பவை ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய ப்ரமாணங்கள் எனப்படும்.

பிரமேயம் என்பது அறிவதற்கான சான்று நூல்களைக் கொண்டு, கற்று, நன்கு சிந்தித்து, ஐயம் திரிபற ஒருவர் பெறும் நிச்சயமான திட அறிவு. அந்த அறிவின் பயனாக அவர் கொள்ளும் தீர்மானமான உறுதிப்பாடு என்பதைக் குறிப்பது பிரமேயம் என்பது.

'வேதார்த்தம் அறுதியிடுவது ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்களாலே' என்று பிள்ளை லோகாசாரியர் கூறிய வரிசையில் பார்த்தால் சுருதி, ஸ்ம்ருதி, இதிஹாஸங்கள், புராணங்கள், ஸ்ரீவைஷ்ணவ ஆகமங்கள், ஆழ்வார்களின் அருளிச்செயல்கள், பூர்வாசாரியர்களின் கிரந்தங்கள் என்று ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாய பிரமாணங்கள் பெருகி இருக்கக் காணலாம்.

இதில் வேதங்கள் பிரமாணங்கள் என்னும் போது அவற்றின் சிறப்பான பிரமேயம் பரம்பொருளின் பரத்வ நிலை என்பதாகும். அதாவது வேதங்களில் சிறப்பாகத் தெரியவரும் கடவுள் கருத்து மனம் மொழி கடந்த பரத்துவ நிலை என்பதாகும்புராணங்களின் மூலமும், இதிஹாஸங்களின் மூலமும் நமக்குத் தெரியவருவது அந்தப் பரம்பொருள் எப்படி உயிர்களை உய்விப்பதற்காகப் பல பிறவிகளை ஏற்று அவதாரம் செய்கின்றது என்னும் விபவ நிலை
ஆகமங்களின் மூலம் நாம் அறிந்து கொள்வதோ அந்தப் பரம்பொருள் எப்படி பரவாஸுதேவன், சங்கர்ஷணன், அநிருத்தன், ப்ரத்யும்னன் என்னும் வ்யூஹ மூர்த்திகளாகத் தன்னை நிறுத்திக்கொண்டு ஜகத் ஸம்ரக்ஷணம் செய்கிறது என்னும் கருத்தாகும்ஸ்ம்ருதிகளின் மூலம் நாம் அறிந்து கொள்வது நமது உடலுக்குள்ளேயே எப்படி பரமாத்மா நமது ஜீவனுக்கு உள்ளே அந்தர்யாமியாய் நின்று எப்பொழுதும் அருள் பாலிக்கிறது என்னும் கருத்தை ஆகும்ஆழ்வார்களின் அருளிச்செயல்களான திவ்ய ப்ரபந்தங்களின் மூலம் நாம் அறிந்து கொள்வது கோவில்களில் என்றும் எக்காலத்தவரும் கண்ணால் கண்டு தொழத்தக்க நிலையில் அருளும் அர்ச்சாவதார நிலையாகும்.

நாராயண: பரோஜ்யோதி: என்னும் பரஞ்சோதி ஓரொரு காலத்தில் ஓரொருவர் காணத் தோன்றிப் பின் மறைந்து விடுதல் என்ற கணக்கில் இன்றி, பின்னானாரும் வணங்கும் சோதியாக திவ்ய தேசத்தில் நிலையாக நின்று அருள் பாலிக்கும் நிலையான அர்ச்சாவதாரத்தில் நோக்காக இருக்கும் பிரமாணங்கள் என்று பார்த்தால் திவ்ய ப்ரபந்தங்கள் ஆகும்.

பூர்வாசாரியர்கள் இரண்டு விஷயங்களைப் பாதுகாத்துப் பேண வேண்டும் என்கிறார்கள். என்ன என்னபிரமாண ரக்ஷணம், பிரமேய ரக்ஷணம் என்னும் இரண்டுரக்ஷணம் ரக்ஷணம் என்றால் பாதுகாத்து, வளர்த்து, போற்றி, பேணுதல்.

பிரமேயங்கள் என்னும் வரிசையில், பரத்வம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்னும் பிரமேயங்களைப் பார்த்தோம். இவை ஒன்றோடொன்று வேறின்றி ஒன்றிலொன்று நிறைந்தது என்று கொள்ள வேண்டும்கோயிலைக் காப்பாற்றுவது என்பது அனைத்து பிரமேயங்களையும் நன்கு பேணுவது என்பதையும் குறிக்கும்கோயிலை நன்கு காப்பாற்றுவது பலருக்கும் புரிந்த விஷயம் எனலாம்எனவே ஓரளவிற்கு கவனமாகவே பிரமேய ரக்ஷணம் நடைபெறுகின்றதுஆனால் இங்கு சொல்ல வந்தது பிரமாண ரக்ஷணம் என்பதைப் பற்றித்தான்.

ஏன் பிரமாணத்தை ரக்ஷிக்க வேண்டும்இல்லையென்றால் எது பிரமேயம் என்பதே தெளிவாகத் தெரியாமல் போய்விடும்பிரமாணத்தை எப்படி ரக்ஷிப்பதுஉருவெண்ணி, ஓதி, உற்றவர்க்கு ஓதிவைத்து, வாசித்தும், எழுதியும், தெரித்தும் நூல்களை மறைந்து போக விடாமல் காப்பாற்றல். பெரிய ஜீயர் காலத்தில் இரவில் பந்தமேற்றி அவரே கைநோகப் படிகள் எடுத்து நூல்களைக் காப்பாற்றினார் என்று படிக்கிறோம்இன்று அச்சு, மின் நூல்படி, கைமின் படிப்பி, ஒலிமின் படிப்பி என்று பல சௌகரியங்கள் ஏற்பட்டுள்ளன.

இவையெல்லாம் நூல் வடிவத்தை மாத்திரம் நன்கு காப்பாற்றப் போதிய வசதிகள்ஆனால் பிரமாணம் என்பது நூலின் வடிவத்தை முக்கியமாகக் குறிப்பது அன்றுநூலினுடைய உண்மையான பொருள் என்ன என்பதுதான் பிரமாணம் என்பதால் குறிக்கப்படுவதுநூலின் அர்த்த ஸ்வரூபமே உண்மையில் பிரமாணம் என்பதற்கு நேர் பொருளாகும்அதை எப்படிக் காப்பாற்றுவதுஆக பிரமாண ரக்ஷணம் என்பது நூல்களின் வடிவம், பொருள் ஆகிய இரண்டையும் பல விதங்களிலும் நன்கு பேணிக் காப்பாற்றுதல் என்பதாகும்.

ஹிந்து மதம் என்னும் பெரும் ஜ்னத்திரளில் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் என்பது மிகச் சிறுபான்மையான கூட்டம். அதிலும் பொருள் பிறழ்வின்றி உன்னத ஸாரமான ஸ்ரீவரவரமுனி சம்பரதாயம் என்னும் உபய வேதாந்த ஸ்ரீவைஷ்ணவ சத் சம்ப்ரதாயம் என்பது மிக மிகச் சிறு எண்ணிக்கைஇதிலும் கிரந்தங்களை உள்ளபடி வாயால் வாசிக்கும் திறன் உள்ளோர் என்று பார்த்தால் மிகக் குறைவு. அதிலும் சில காலக்ஷேப கிரந்தங்களையாவது ஓரளவு கற்றோர் என்றால் கேட்க வேண்டாம்.

ஒரு காலத்தில் பெரும் வித்வான்கள் இருந்தார்கள், பலர் கேட்டார்கள் என்பதெல்லாம் இன்று கனவும், பழங்கதையுமாய் ஆகியிருக்கிறது. ஏதோ சிலர் சொற்பொழிவுகளின் மூலம் சரிக்கட்டிய்வண்ணம் பாடுபடுவது பாராட்டிற்குரியதுஆனால் நவீன படிப்பு, நாகரிகம், மேலை நாடுகளில் வேலை, இங்கும் இரவு பகலாக ஐடி கம்பெனிக்களில் உழைப்பு என்று உள்ள பல இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோருக்கு அவர்களின் அறிவுப்பசி தீரும்படியாக, அவர்களின் ஆர்வத்தைக் குலைக்காமல் சம்ப்ரதாய விஷயங்களைச் சொல்ல முடிகிறதா?

பலரும் என்ன நினைக்கிறார்கள்? இவங்க இப்படித்தான். ஏதாவது கேட்டா தங்களுக்கும் புரியாம நமக்கும் புரியாம ஏதோ வித்யாசமான மொழியில் ஏதாவது சொல்லி நம்மைக் குழப்பியடிப்பார்கள் - இவ்வாறு கருதிப் பல இளைஞர்கள் அமைதியாக வேறு வழிகளில் போய்விடுகிறார்கள். சில குடும்பங்களில் வேறு மதங்களுக்கே போய்விடும் நிலைமையும் உண்டுஇது எதைக் காட்டுகிறதுநாம் ஒழுங்காக பிரமாண ரக்ஷணம் பண்ணவில்லை
ஏதோ சில சந்தைகளை நெட்டுருப்பண்ணி, சில நூல்களைப் பயின்று, நாம் ரசிக்கும் மறைந்த பெரும் விதவான்கள் போலவே அதே மாதிரியே மணிப்ரவாளச் சொல் தொடர்களைப் பேசிவிட்டால் எல்லோருக்கும் எல்லாம் புரிந்துவிடும் என்று நினைக்கிறோம்.

We never rethink and re-interpret the texts and passages. We just repeat and sometimes tactfully alter the pattern and again REPEAT.

இது தவறு இல்லை. இதுவும் ஒரு கிரமம். ஆனால் இன்றைய பெரும் பிரச்சனைக்கு இது காணாதுஇன்றைய சமுதாயத்தின் பிரச்சனை என்னவென்றால் -- நாம் மீண்டும் பிரமாணங்களைப் புதிதாக அடிப்படையிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும். மீண்டும் விளக்கம் காண வேண்டும். மீண்டும் நம் மொழியில் அவற்றை விசாரம் நடத்தியாக வேண்டும்
இவ்வாறு செய்து பூர்வாசாரியர்கள் காட்டும் தெளிவு என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்இன்று ஹிந்து மதத்தில் அது எந்த சம்ப்ரதாயமாக இருந்தாலும் சரி, விசாரம் கொள்பவர்களோ, விசாரம் நடத்துபவர்களோ கிடையாது. வெறும் கிளிப்பிள்ளைகளும், போலச் செய்விகளும்தான் உண்டு. விதிவிலக்குகள் ஒன்றிரண்டு ஒதுக்குப் புறமாக இருக்கலாம்ஆனால் தலைமுறைகளுக்கு நாம் இயற்ற வேண்டிய கடமையில் தவறிவிட்டுப் பின்னர் பகவானைக் குறை சொல்லிப் பயனில்லை.

'சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவன்'

*** 

பிரமாண ரக்ஷணம் என்பது வெறுமனே நூல்களை அச்சேற்றி, மின்னூலாக்கி, உருவேற்றி வைத்து இவையெல்லாம் செய்துவிடுவதால் மட்டும் ஆகிவிடும் காரியமா? இதற்குப் பதிலாக ஆம் - இல்லை என்று இரண்டும் பதிலாகச் சொல்லலாம்நூல்களைப் புறவடிவில் காப்பது மிகவும் அவசியம். கூடவே ஸ்ரீவைஷ்ணவ குடும்பங்கள் தமது வீட்டு நூலகத்தில் பிரமாண கிரந்தங்கள் சேமிக்கப்படுமாறு பார்த்துக்கொள்ளுதல் இன்னும் அவசியம்.

'என்ன சார்! அவரவர் புறாக்கூண்டு மாதிரி இடத்துலதான் குடும்பமே நடத்த முடியறது. நீங்க என்னடான்னா வீட்டு நூலகம் வரைக்கும் போய்விட்டீர்கள்' என்று முணுமுணுப்பது காதில் விழுகிறது. வாஸ்தவம்தான். அப்படித்தான் ஆகிப்போனது வாழ்வு. இதற்கு என்ன செய்யலாம்?

நம் காலத்தில் நல்ல வேளையாக மின்னூல் என்னும் வசதி ஏற்பட்டிருக்கிறது. நூல்களை மின் வடிவத்தில் சேமிக்க நல்ல வசதி. குறுந்தட்டுகளோ, கட்டைவிரல் மின்குளிகைகளோ அல்லது மின் வெளியில் தளத்தில் சேமித்தலோ நாம் செய்ய முடிகிறது. இதில் கூடுதல் சௌகரியம் ஒலி ஒளி பனுவல் சேமிப்புகள் என்று பல்லூடகச் சேமிப்பும் சாத்தியமாகிறது. அயோத்தி ஜீயர் உபந்யாஸத்தின் ஒலியை இன்று கேட்க முடியாது. யோகி பார்த்தஸாரதி ஐயங்கார் பேசிய பேச்சை இன்று கேட்க முடியாது. ஆனால் இன்று ஸ்ரீ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் பேசியதோ, வாக் அம்ருத வர்ஷியான வேளுக்குடி வரதாசார் ஸ்வாமி, ஸ்ரீ வே புத்தூர் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், டாக்டர் வே எம் வெங்கடகிருஷ்ணன், ஸ்ரீ வே வேளுக்குடி கிருஷ்ணன் என்று பலருடைய உபந்யாஸங்களைப் படித்தல் மட்டுமின்றி ஒலி ஒளிக் கோப்புகளாகப் பயனடைய முடிகின்றது. நிச்சயம் பிரமாண வடிவங்கள் ஏதாவது ஒரு விதத்தில் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை வருகிறது.

ஆனால் அந்த பிரமாணங்கள் கூறும் செய்திகள் என்ன, அவை இந்தக் காலத்தில் எப்படி இளம் தலைமுறைகளுக்குப் புரிய வைக்கப்பட வேண்டும், எளிமையாகவும் அதே நேரத்தில் சான்றாண்மை கெட்டுப் போகாமலும் எப்படி வரும் தலைமுறைகளுக்குக் கொண்டு செல்வது என்பது பெரும் சவாலாகத்தான் இருக்கிறதுஅதாவது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்து மக்களைப் பிரமாணங்களை நோக்கி இட்டுச் செல்லுதல், பிரமாணங்களை மக்களை நோக்கி இட்டுச் செல்லுதல் என்பது பெரும் மலைப்பு தரும் பணிதான். இதில் வெற்றியடைதல் என்பது பிரமாண ரக்ஷணத்தில் முக்கியமான அம்சம்.

'அராத்து! கேள்வி கேட்காதே. சொன்னதைச் செய். பெரியவா சொல்லியிருக்கான்னா அதுல ஏதாவது காரணம் இருக்கும். நாங்கள்ளாம் செய்யலை. பெரிய மனுஷாளாப் போயிட்டீங்களோ? எல்லாம் தறுதலைகள்!' -

எவ்வளவு வேண்டும் என்றாலும் திட்டலாம். கோயில்களில் திரை சேர்த்திருக்கும் போது கூடிப் பேசும் போது ஒருவருக்கொருவர் சொல்லி அங்கலாய்க்கலாம். ஆனால் ப்ரச்சனையை சமாளிக்கிறது எப்படி? யாரோ தெருவில் போகும் ஆட்கள் சொன்னால் கண்டுகொள்ள வேண்டாம். ஆனால் சொந்த வீட்டில் நம் குழந்தைகளும், பேரன் பேத்திகளுமே இப்படியென்றால் என்ன செய்வதுகேள்விகள் எழத்தான் செய்யும். எங்கும் தகவல் பெருக்கம். அறிவின் பெருக்கம். அறிவு விழிப்பு. புதுப்புது இயற்கையின் உண்மைகள் வெளிவந்தவண்ணம் இருக்கும் காலகட்டம். தகவல் வினாடிக்கணக்கில் எங்கும் பரவும் தொடர்புத் தொழில்நுட்பம். இதில்தான் இளம் தலைமுறைகள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களைத் தேடியலைய வேண்டும். எனவே அவர்களைக் கரித்துக்கொட்ட்வதற்குப் பதில் நாம்தான் பொறுமையுடன் நம் பிரமாண கிரந்தங்களில் ஆழ் பொருட்களைச் சரிவர புரிந்துகொண்டோமா என்று நம் மனசாட்சி பொதுவாக யோசிக்க வேண்டும்.

ஓர் உதாரணம் சொல்கிறேன்1893ல் அமெரிக்காவில் சிகாகோ சர்வமத மகாநாட்டில் இந்தியாவிலிருந்து, அதுவும் சென்னை திருவல்லிக்கேணியிலிருந்து சுவாமி விவேகாநந்தர் என்னும் பெயர் பூண்ட, அதுவரையில் விவிதிஷாநந்தர் என்னும் சில பெயர்களில் இருந்த, கல்கத்தாவின் நரேந்திரநாத தத்தர் அனுப்பப்பட்டார் என்னும் செய்தி தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் அனுப்படும் முன் திருவல்லிக்கேணியில் நிலவிய சூழல் பற்றி ஏதாவது ஆவணப் பதிவுகள் உண்டா? அதே சிகாகோ மகாசபையில் பிள்ளை லோகாசாரியாரின் ஸ்ரீவசன பூஷணம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 100 காப்பிகள் விநியோகிக்கப்பட்டது என்பதும், அந்த ஸ்ரீவசன பூஷணத்தின் சுருக்கம் ஒரு பேப்பராக அதே மகாசபையில் வாசிக்கப்பட்டது என்பதும் எத்தனை பேருக்குத் தெரியும்? ஸ்ரீவசன பூஷணத்தை மொழிபெயர்த்து அனுப்பி, அந்த பேப்பரை எழுதியனுப்பியது நமது ஸ்ரீவரவரமுநி சம்ப்ரதாயத்து ஸ்வாமி ஒருவர் என்பது நாம் அறிவோமா? நடந்து 120 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. எங்கேனும் பதிவு உண்டா? நம் சம்பிரதாயத்துப் பெரியவர்கள் இதைப்பற்றி எழுதி, சொல்லி ஆவணப்படுத்தியதுண்டா? இதனால் என்ன பயன் என்கிறீர்களா? 100 வருஷங்களுக்கும் மேலாக நாம் சொல்லி, நமது சிறுவர்களுக்கே போதித்து வரும் நிகழ்வு நமக்கு மிகவும் சொந்தமான ஒன்று, அதையே நமக்கு அந்நியம் போல் நினைத்துவரும் இது விசித்திரமாக இல்லையா? நாம் கவனிக்கத் தவறிய, நம் முன்னோர் அலட்சியப்படுத்திவிட்ட தகவல்கள் பலதும் உண்டு. அவர்கள் செய்தது அவர்கள் காலத்திற்குச் சரி. ஆனால் இன்றைய உலகம் தகவல் உலகம். உங்கள் தகவல்களைச் சரியாக நீங்கள் வைத்துக்கொள்ளவில்லையேல் உங்கள் வாய்ப்பு வீணாகிவிடுகிறது

*** 

No comments:

Post a Comment