Thursday, May 2, 2019

அம்மா

இன்று எழுந்ததிலிருந்தே மனம் மிகுந்த குதியாட்டத்தில் இருக்கிறது. ஏனெனில் இன்று அன்னை ஸ்ரீசாரதா தேவியாரின் ஜயந்தி. என்ன என்னவோ பழைய ஞாபகங்கள். ஸ்ரீரங்கத்தில் தாயார் சந்நிதிதான் நகபத் ஜாகை என்று கருதி அங்கு பங்குனி சேர்த்தி மண்டபத்தின் முன்னர் தூணை ஒட்டி உட்கார்ந்து பொழுது போன காலங்கள், ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த இலக்கியங்களை எடுத்துச் சென்று கோவில் ஏதோ என் சொந்த வீடு போன்ற எண்ணத்தில் மூலைக்கு மூலை அமைதியான கவாண்களில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த நினைவுகள். அந்த வில்வ மரம் அதற்கெல்லாம் சாட்சி சொல்லுமோ? இல்லையென்றால் திவ்ய தம்பதிகள் என்னை மறந்தால் போன்று அவையும் மறந்துதான் விட்டிருக்கும்.

ஆமாம். வந்து செல்லும் கோடானு கோடி உயிர் வெள்ளத்தில் ஓர் உயிரின் ஞாபகம் எம்மாத்திரம்? அப்படித்தான் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறோம்? அவர்கள் வந்தார்கள். வாழ்ந்தார்கள். அந்த வாழ்க்கை மக்களிடம் பரவி, அச்சு ஏறி, மீள் அச்சு ஆகிக் கொண்டே வந்து, ஏதோ சூழ்நிலைகள் எங்கோ இருந்த என் கண்ணிலும் கருத்திலும் பட்டு, அதில் ஈடுபட்டு, எவ்வளவு நாள் ஆகியும் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு வித பித்தனாக என் செய்கையில் யார்தான் யாரை ஞாபகம் கொள்ள வேண்டும்? இன்னும் நான் அவருடைய அறைக்குள் போகவில்லை. போனால் மட்டும் என்ன? அரை நினைவில், சமாதியில் ஆழும் நிலையில் நிலைகுலைந்தபடி கேட்பார்: 'இன்னும் நரேன் வரவில்லை?'. நரேன் விவேகாநந்தராகி எல்லா சரித்திரமும் நடந்து முடிந்து இன்று 2014 டிசம்பர் 13 என்றால் அவர் காதில் விழவா போகிறது?

எதோ ஒரு கிராமத்தான். படிப்பு அறிவு என்பதெல்லாம் கிடையாது. காளி கோவிலில் பூசாரி வேலைக்கு வந்தான். ஒரு கல்லூரி மாணவன். பெரும் வக்கீல் வீட்டுப் பிள்ளை. நாகரிகன். இந்தப் பையனைப் பார்த்ததும், 'நீ நாராயணன். ஏன் இவ்வளவு நாளாக வரவில்லை?' இப்படி ஒரு பூசாரி கேட்டது அதோ அந்த இடத்தில்தான். 'சரியான கிறுக்காக இருக்கும் போல!' என்று நினைத்துதான் அந்த இளைஞனும் போனான். சரி அதெல்லாம் பழங்கதை.

இன்று அம்மாவின் பிறந்தநாள். இவள் யாருக்கு அம்மா? அவரவர்க்குப் பெற்ற தாய் இல்லையா? யாரோ ஒருவரை எங்கோ வந்து உட்கார்ந்து கொண்டு, அம்மாவின் பிறந்தநாள் என்று சொல்லத் தோன்றினால் என்ன பொருள்? பெற்ற தாய் என்பதற்கும், தாயும் சேயும் என்ற பாசத்திற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? சொந்தத் தாய்தான். பிறந்த குழந்தையைக் கருணையே இல்லாமல் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டுப் போகவில்லையா? பிறவியினால் தாய்மையும், சேய்மையும் கூடும் என்றால் அங்கு என்னாயிற்று? சில குழந்தைகள் பெற்ற தாயைக் கண்காணாத இடத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு கார் எடுத்துக்கொண்டு ஓடிவிடுகிறது, அயல்நாடுகளுக்குத் தாம் போகத் தொந்தரவாக இருக்கிறது என்று என்றும் படிக்கிறோமே! பிறவியினால்தான் அம்மா குழந்தை என்று சொல்லத் தோன்றினாலும் அதில் உண்மை இல்லை என்றுதான் படுகிறது.

நான் பெற்ற தாயிடம் கூட சில சண்டைகளைப் போடத் தயங்குவேன். ஆனால் இவளிடம் எனக்குக் கொஞ்சம் ஸ்வாதீனம். திக்கற்ற பல நேரங்களில் மானசிகமாக இவளோடு ஏகப்பட்ட வாக்குவாதம், சண்டை, கெஞ்சல், அழுகை என்று போட்டிருக்கிறேன்.

'அவர்கள் எல்லாம் என்றோ போய்ச் சேர்ந்து விட்டார்கள்? இன்னும் உன் மனத்தில் நீ போடும் சண்டைகளைக் கேட்டுக் கொண்டிருப்பார்களா?' என்று என்னைக் கேட்காதீர்கள். அவர்கள் இல்லை என்று நினைக்க என்னால் முடியவில்லை. அதுதான் விஷயம்.

'நீ சுத்த கிராக்கு!' என்கிறீர்களா? நியாயம்தான். பாருங்களேன். அந்த அறையிலும் அவர் இல்லை. இந்த நகபத்கானா இதிலும் இவர் இல்லை. தெரியும். இல்லை கடைசியில் வாழ்ந்தாரே. அந்த உத்போதன் ஆபீஸ் மாடி. அங்கு போனாலும் அவருடைய படம்தான் இருக்கும். ஆனாலும் 'நான் இருக்கிறேனே. குழந்தை இருந்தால், மகன் இருந்தால் தாயும் இருந்துதானே ஆகவேண்டும்?' என்று ஒரு குருட்டு லாஜிக் பேசுகிறது என் உள்ளம். நீங்கள் சொல்வது சரிதான். இது ஒரு வித பித்துதான். ஆனால் போயும் போயும் எனக்கு ஏன் பிடிக்கிறது என்பதுதான் எனக்கும் புரியவில்லை.


எதிர்பார்க்கிறோம். அங்கு இல்லை. அங்கு இல்லை என்பதை ஏற்க மனம் விரும்பவில்லை. நான் இருக்கிறேனே எனவே அவளும் இருந்துதான் ஆக வேண்டும் என்று நினைக்கிறது உள்ளம்.

எப்படி இல்லாமல் போக முடியும்? பஞ்ச பூதங்களும் சாட்சி சொல்கின்றன இல்லை என்று. பஞ்ச பூதங்களும் சாட்சி சொன்னால் இல்லை என்று அர்த்தமா? பஞ்ச பூதங்களும் சாட்சி சொல்லித்தான் நான் இருக்கிறேனா? அப்படி என்றால் பஞ்ச பூதங்களைக் கலந்து ஓரிடத்தில் வைத்தால் அங்கு நான் இருக்க வேண்டுமே? அப்படி நடக்கிறதா? அப்படியென்றால் நான் இருக்கிறேன் என்பதற்கும் பஞ்ச பூதங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றுதானே அர்த்தம்? உள்ளம் பிடிவாதம் பிடித்தால் அதனோடு யார் பேச முடியும்? சரி. புலம்பட்டும் என்று விட வேண்டியதுதான்.

பாருங்கள் சுவாமி அபேதாநந்தர், அம்மா மீது ஒரு சுலோகம் இயற்றியிருக்கிறார்.:

இயற்கையைக் கடந்தவளே!
உயர்ந்த இயற்கையாய் ஆனவளே!
அஞ்சற்க என்று அருட்கரம் காட்டி
வரம் தருபவளே!
மனித உருக் கொண்டவளே!
மாந்தர் துயர் தீர்த்தவளே!
புகலடைந்த தொண்டர்தமை
மகிழச் செய்பவளே!
உலகிற்கே உயர்ந்த அன்னை நீ!
உன்னை வணங்குவனே.

(ப்ரக்ருதிம் பரமாம் அபயாம் வரதாம்
நரரூப தராம் ஜன தாப ஹராம்
சரணாகத சேவக தோஷ கரீம்
ப்ரணமாமி பராம் ஜனனீம் ஜகதாம்)

ஆனால் இப்பொழுது புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் இப்படி வாழ்ந்தார் அப்படி வாழ்ந்தார், தியாகமே வாழ்க்கையாக வாழ்ந்தார், ஏதோ ஒரு ஒண்டு மூலையில் ஒடுங்கியே தம் வாழ்நாளைக் கழித்தார். மணவாழ்க்கை என்று பெயர்தான். அதனுடைய துயரங்கள்தாம் உண்டே அன்றி, அதனுடைய இன்பங்கள், குழந்தைச் செல்வம் என்னும் மகிழ்ச்சி, தன்னை தான் பெற்ற குழந்தை அம்மா என்று கூப்பிடும் அந்தத் தாய்மை ஏங்கும் சுகம் இதெல்லாம் ஒன்றும் அந்தக் கிராமத்து அப்பாவிச் சிறுமிக்குக் கிடையாது. கணவர் அப்பழுக்கற்ற நூற்றுக்கு நூறு தெய்விக மனிதர் என்பதைத் தவிர என்ன பெருமை புக்ககத்து அந்தஸ்து என்று என்ன உண்டு? ஒன்றும் இல்லை.

கட்டிக் கொடுத்த பெண்ணின் தாயார் பெண்ணோடு வந்து தங்கிய காலத்தில், மற்ற சக பெண்கள் எல்லாம் குடும்பம், குழந்தைகள், அவர்கள் வீட்டு தாயார்கள் எல்லாம் பாட்டிகள் ஆகி, 'ஏண்டியம்மா, உன் பெண்ணை அந்தப் பூசாரிக்குக் கட்டிக் கொடுத்தியே, ஏதாவது விசேஷம் உண்டா?' என்று அவ்வப்பொழுது விசாரிக்கும் போது, மாப்பிளையின் தெய்விகம் எல்லாம் அங்கு ஏதாவது செல்லுபடியாகுமா? அதுவும் கிராமத்துத் தாய்க்குலம் என்றால் அது தனி குரலில் ஒரு இழுவையில், நீங்கள் சொல்லும் அத்தனை மகத்துவம் எல்லாவற்றையும் ஒரு ம்ம்ம்காரத்தில் இல்லையாக்கிவிடாதா? பாவம், மாமியார் மாப்பிள்ளையின் காதுபட அலுத்துக் கொண்டு பார்த்தார். மாமியார் சொல்வதில் பெண்ணுக்கு எங்கேனும் அது மாதிரியான ஏக்கம் பிடித்துவிடப் போகிறதே என்று, ஒரு நாள் சாரதாவைப் பார்த்து தாகுர் கூறினார்: 'உன்னை அம்மா என்று அழைக்கக் குழந்தைச் செல்வம் இல்லையே என்று நினைக்காதே! பார். உனக்குத்தான் கோடானுகோடி குழந்தைகள் அநவரதம் உன்னை அம்மா அம்மா என்று அழைத்தவண்ணம், நீயே அலுத்துப் போகும் அளவிற்குக் கூப்பிட்ட வண்ணமாகவே இருக்கப் போகிறார்கள்'.

ஆனால் அன்றாட வாழ்க்கை என்பது, தன்னுடைய தராசில், யாராய் இருந்தால் என்ன, எல்லாரையும் ஏற்றி நிறுத்தி தீர்ப்பு எழுதிச் சொல்லிய வண்ணம் நகர்ந்தவண்ணம் இருந்தது. அதன் தீர்ப்பில் கிராமத்து அரட்டைக் கண்ணீர்கள் நொந்துகொண்டன. 'பாவம்! பைத்தியத்துக்குக் கட்டிக் கொடுத்தா. பேரன் பேத்தின்னு ஏதாவது உண்டோன்னா ஒன்றும் இல்ல. என்னமோ பூசாரி உத்யோகம்! இதுல ஏதோ காளி பக்தியாம். திடீர்னு அழுகை, தன்னை மறந்து பரவசம்னு, ...என்ன பாவம் ஏதோ மனக் கோளாறு போல இருக்கு...நம்ம சாரதாவுக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்க வேண்டாம்....'

நீங்க நினைச்சுப் பாருங்க. பெரும் மகத்துவம், அன்னை என்பதெல்லாம் காலம் என்னும் சுருளில் பின்னாடிதான் காட்சிகள் வரப் போறது. அதுக்குள்ள அன்றாடம் என்னும் திரையில் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை என்பது நகர்வது இருக்கே என்ன கொடுமை! ஸ்ரீசாரதாமணி தேவியார் - என்பதெல்லாம் இன்னிக்குத்தான் தெரியறது. அன்னிக்கு என்ன தெரியும்? எல்லாம், 'பாவம்! அவாத்துப் பொண்ணு. மாப்பிளை சரியில்ல போல இருக்கு. கட்டி வைச்சா திருந்தும்னு பார்த்தா. அதான் இங்க வந்து பாண்டி விளையாடுமே, அதேதான் அந்த சாரதாவுக்குத்தான்.. பாவம்...'

அப்படிப் பேசியவர்கள் இன்று என்ன ஆனார்கள் என்பது பேச்சு இல்ல. அன்றைக்கு அவர்கள்தானே நாளொரு வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. ஆனால் கணவர் போகின்ற வழி மிகச்சரியான வழி, அவர் தனக்குக் காட்டுகின்ற வழியும் மிகவும் சரியான பாதை என்று இம்மியும் அசராமல், அந்த விசுவாசம், பக்தி அப்படியே வளர்ந்து வரும் என்றால், நினைத்துப் பார்த்தால் ஒன்றும் புரியவில்லை. சும்ம தெய்விகம் அவதாரம் என்றெல்லாம் சொல்லிப் புரிந்தால் போல் பாவனை பண்ணுவது குறைந்த பட்ச மனிதாபிமான நியாயமே இல்லை.

அது மட்டுமில்லை. அந்த நகபத்கானாவில் ஒடுங்கிக் கிடந்த வாழ்வு, பிறகு எப்படி மடாலயம் விஷயங்களில் விவேகாநந்தர் போன்றவர்களே வழிகளைப் பற்றிய குழப்பங்களில் தெளிவுக்கு வந்தால் மிகச் சரியான தெளிந்த திசையைக் காட்ட முடிந்தது, அமெரிக்கா போகலாமா என்று நரேன் குழம்பிய போது நகரமே பார்க்காத ஒரு பட்டிக்காட்டுப் பெண் எப்படி அவருக்குச் சரியான தெளிவைப் பிறப்பிக்க முடிந்தது, பின்னால் இலட்சக் கணக்கான மக்கள் அவளை ஆன்மிக வழிகாட்டலுக்கு அணுகிய போது எப்படி இன்றும் நாம் கண்டு வியக்கத்தக்க முறையில் ஆன்மிக உபதேசங்களைத் தர முடிந்தது - இது எல்லாமே புத்தகத்தில் படிக்கும் போது அடுத்த அத்யாயம் அடுத்த அத்யாயம் என்று ஓடியது. ஆனால் பாதி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பதற்குள் நமக்கே நாக்குதள்ளிப் போகும் போது யோசித்தால் அவளின் வாழ்க்கை புரியவில்லை.

எல்லாவற்றிலும் அவளுடைய பார்வை தனிப்படத் தெளிவான பார்வையாக இருந்தது. ஆனான படித்த துறவிகளே சமுதாய பழக்கங்களைக் கண்டு அதை எதிர்க்கத் தயங்கிய போது, அவள் எந்தக் கவலையும் இன்றி சமுதாய மூடத்தனங்களைத் தூக்கி எறிந்துவிட்டு நடந்து கொண்டாள். அம்மா என்ற சொல்லுக்கு உருகும் தாயாகக் கடைசி நாள்வரை வாழ்ந்தாள். மேலைநாட்டு சிஷ்யைகளான சகோதரி நிவேதிதா முதலியோரை அம்மாவுக்கு அறிமுகப் படுத்த விரும்பிய விவேகாநந்தர் முதல் முறையாக இரண்டு நேர் எதிரான சமுதாயங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கின்றனவே என்ன ஆகுமோ என்று தவித்துவிட்டார். ஆனால் எந்த வேறுபாடும் மனத்தளவிலும் கூட நிழலாடாமல், தன் சொந்தக் குழந்தைகளாகவே கடல் கடந்து வந்தவர்களை அம்மா நடத்தினார் என்று அறியவந்த விவேகாநந்தருக்கு போன மூச்சு திரும்பியது. அவருடைய வியப்பு கடைசிவரை ஓயவில்லை.

கணவர் என்னடா என்றால் கிராமத்தான். பள்ளிப் படிப்பறிவு கிடையாது. ஆனால் மாக்ஸ்முல்லர் போன்ற மிகவும் கற்ற பண்டிதர்களே வியந்து நூல் எழுதும் அளவிற்கு, இன்றுவரை உலகமெல்லாம் பெரும் பிரச்சனையாக இருக்கும் மத நல்லிணக்கத்திற்கான முழு தத்துவம் காரணம் நியாயம் அனைத்தையும் தம் போக்கில் யதேச்சையாகச் சாதித்து முடித்து விட்டார். அன்னையோ, எது நியாயமோ அதைத் துணிந்து செய்து கொண்டே போக வேண்டும். சமுதாயத்தின் ஏச்சுப் பேச்சுகளைச் சிறிதும் லட்சியம் செய்யக் கூடாது என்று தன் வாழ்க்கையினாலேயே அமைதிப் புரட்சியாகக் காட்டிவிட்டுப் போய் விட்டார். எனக்கு இந்த நாளில் அதெல்லாம் பெரிதாகத் தோன்றவில்லை. அவர்கள் தமது அன்றாட வாழ்க்கையை எப்படி வாழ்ந்தார்கள். என்ன மாதிரியான பொறுமை நிறைந்த புரிதல்! அலுப்பு தட்டும் அன்றாட நிகழ்வுகளில் லட்சியம் சிறிதும் மங்காமல் விலகாமல் அடிபிசகாமல் செல்ல வேண்டிய இலக்கை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாலும் சிறிதும் வாழ்க்கையில் சலிப்படையாமல்.... Great persons are proved in small things என்பார்கள். அது சரிதான்.

***

No comments:

Post a Comment