Thursday, May 2, 2019

சித்தாந்தப் பிரகாசிகை


சித்தாந்தப் பிரகாசிகை என்னும் நூல் திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடு எண் 15 ல் வந்தது. வந்த ஆண்டு மூன்றாம் பதிப்பு 1963. மொத்த பக்கங்களே ௧௦ + 42, அதாவது 52 பக்கங்கள். ஆனால் நூலோ மிகுந்த மதிப்புடையதுசித்தாந்தப் பிரகாசிகை என்பது வடமொழியிலே சர்வாத்ம சம்பு சிவாசாரியராலே எழுதப்பட்ட நூல். அந்த நூலின் இறுதியில் 

இதி சர்வமதேஷு இஷ்டா ஸா ஸித்தாந்த ப்ரகாசிகா
ஸர்வாத்ம சம்புனாக்யாதா கல்பிதா ஸைவ ஸந்மதா || 

என்று வருவதிலிருந்து இயற்றியவர் பெயர் தெரிகிறதுஇந்தச் சிறு நூல் சைவ சித்தாந்த நுட்பொருள் அனைத்தையும் அற்புதமாகப் பிழிவென அடக்கித் தருகிறது. இந்த வடமொழி மூல நூலைத் தூய தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் வேறு யாருமில்லை. சிவஞான போதத்திற்கு என்றென்றும் பெருமை துலங்க சிவஞான மாபாடியம் என்னும் பேருரை வரைந்த வள்ளல் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள்தாம் அருமையிலும் அருமையான மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தமிழ் மொழியை வேதாந்தத் தத்துவச் செறிவின் செழிப்படைய உதவிய பல மகான்களில் நமது யோகிகளும் முக்கியமானவர். என் சிந்தை கவர்ந்த ஆசான்களில் ஒருவர்

சைவா கமத்தின் மெய்யுணர் காட்சி 
அருட்சர் வான்ம சம்புவா சிரியன் 
தருசித் தாந்தப் பிரகா சிகையினை 
அம்முறை மொழிபெயர்த் தறைகுவன் 
செம்மனத் தமிழோர் தெளிதரற் பொருட்டே 

என்று கூறுகிறார் ஸ்ரீமாதவ சிவஞான யோகிகள்இந்தச் சிறு நூல் 1947ல் முதற்பதிப்பு வந்துள்ளது. பிறகு 1963ல் மூன்றாம் பதிப்பு. ஸ்ரீ யோகிகளின் படம் ஒன்று நூலை அலங்கரிக்கிறது

இயங்கியற் பொருளும் நிலையியற் பொருளும் 
படைத்துடன் விராய்ப்பசு பாச மாற்றிய 
முப்புரப் பகைஞன் முழங்குகழல் நோன்றாள் 
மெய்ப்படப் பரசுதும் வீடுபெறற் பொருட்டே

என்று கடவுள் வாழ்த்திலிருந்து அனைத்தையும் தெள்ளுதமிழில் அழகாகத் தருகிறார் ஸ்ரீயோகிகள். 'வடநூற் கடலும் தென்றமிழ்க்கடலும் முழுதுணர்ந்து அருளிய முனிவரன் துறைசை வாழ் சிவஞான மாதவன்' என்று சொல்வது மிகவும் பொருத்தம் என்பது ஸ்ரீயோகிகளின் நூல்களில் திளைத்தார்க்குப் புலனாம்நூல் மொத்தம் ஏழு பிரகரணங்கள் கொண்டதுவாய் இலங்குகிறது. தேகப்பிரகரணம், தத்துவப்பிரகரணம், அத்துவாப்பிரகரணம், ஆதமப்பிரகரணம், சாஸ்திரப்பிரகரணம், தீக்ஷாப்பிரகரணம் என்பன ஏழு

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் குறிப்புரைகளுடன் இந்தச் சிறுநூல் பெருநூல் அன்ன பெரும் பயன் தந்து நிற்கிறது. இதுவும் மீண்டும் வந்துள்ளதா தெரியவில்லை. என்றும் பெரிதும் பயன்படக் கூடிய நல்லதொரு நூல் இது. என்னிடம் உள்ள காப்பி தாள் தாளாக வருகிறது. ஆனால் பயன்படுத்த முடியும்

*** 

No comments:

Post a Comment