Sunday, May 19, 2019

அந்தப் ‘பேய்நபர்’ யார்?

இணையம், இப்பொழுது அல்ல, ஆரம்பத்தில் எழுதுவதற்குத் தோதாய் இருந்தது. ஒரு வேளை பழகிய புதிதோ தெரியவில்லை. கையால் எழுதி நமக்கே சிலகாலம் சென்றால் புரியாமல், யாரேனும் நண்பர்கள் விரும்பிப் போட்டால் உண்டு என்ற நிலை இல்லாமல், அடித்தோம் அடுத்த நிமிடம் அனைத்துலகப் பார்வைக்கு என்றால் பின்னர் ஒரு கிறக்கம் இருக்கத்தானே செய்யும்! அப்பொழுது ஒரு முடிவில் இருந்தேன். இணையத்துக்குப் புதிதானவற்றையே படிப்பு, நூல் இவற்றிலிருந்து சொந்தமாக உணர்ந்ததை மட்டும் எழுதி ஏற்றுவது என்னும் முடிவு. இது நான் படித்தறிந்த பல விஷயங்களை, துறைகளைப் பற்றியெல்லாம் எழுத ஊக்கம் தந்தது. அது மட்டுமின்றி, குழுமம் என்பது எனக்கு என்னமோ மிகவும் அமைந்து போயிற்று போலும், வெட்டிக் கதை பேசாமல் ஒரு குறித்த தலைப்பை அமைத்துக்கொண்டு நெடுகச் சிறிது சிறிதாக எழுதிப் போகும் பந்தா சௌகரியமாகவும் இருந்தது. பலருக்கும் அவ்வப்பொழுது எழுதிய மேட்டர் போய்ச் சேருவதால், பலரில் ஓரிருவராவது ஏதாவது சொல்லத் தலைப்படுவதும், பாராட்டு, கருத்து மாறுபாடு என்று ஏற்பட்டு போரடிக்காமல் இருந்ததும் ஒரு காரணம்.

பிறகு ஒரு நிலைக்குப் பின் தொடர்ந்த இணையப் பொழுதும், அதில் அமர்வும் பொருந்திவரவில்லை. வாழ்க்கையின் சக்கரங்களின் மாற்றம், அலைச்சல் என்று இப்பொழுதுவரையிலும் இணையம் படிப்புக்கு உகந்ததாக மாறிப் போய்விட்டது. யாருக்கு அதனால் நஷ்டமோ எனக்கு அதனால் மிகுந்த லாபம். ஏனெனில் ஒன்று எழுதும் நேரத்தில் பலவற்றைப் படிக்க முடிகிறது. இணையத்திலும் படிப்பதற்கு ஏராளம், சீரியஸ் துறைசார்ந்த விஷயங்களே குவிந்திருக்கின்றன என்னும் பொழுது நம் அறியாமையை நாம் நீக்கிக் கொள்ளாமல் நம் இத்துனூண்டு அறிவில் யாருக்கு எழுதி என்ன ஆகப் போகிறது என்ற எண்ணம். படித்துத் தீராது என்னும் பரந்து ஆழ்ந்த புதையல் கடலாய் ஆகிப் போனது இண்டர்நெட். படிக்க மட்டுமன்று, வீடியோ, ஆடியோ என்று பல்லூடகப் பேருலகு. இதுபோல் கல்வியை கட்டுக்குலையாமல் நிதர்சனப் படுத்தியது ஒன்றே மானிட மாபெரும் சாகஸம் என்றாலும் அதில் சற்றும் மிகையில்லை.

ஆனாலும் எல்லோரும் இந்தக் கல்வியைப் பயன்படுத்துகிறார்களா தெரியாது. ஏனெனில் இந்தக் கல்வியின் பக்கமே திரும்பாமல் வாழ்க்கை முழுவதையும் வெறும் சுகங்களான விஷயங்களிலும், ஓரணி எதிரணியைத் தாக்கும் அடி பதிலடி விஷயங்களிலுமே பொழுதை உட்கார்ந்தவாறே ஓட்டிவிட முடியும் இணைய உலகில் என்னும் போது... அதுவுமில்லாமல் ஏகப்பட்ட செயலிகள் வேறு, வாட்ஸப் போன்று. எல்லாருமே ’ஷேர்லாக்’ ஹோம்ஸ். நானும் பார்த்தேன் ப்ளாக்கில் நான் எழுதி வைத்திருந்ததையெல்லாம் பேசாமல் மூடிவைத்துவிட்டேன். எனக்குப் பிடித்த தொழில் படிப்பதில் தோய்ந்துவிடுவது. அது எந்த எந்த உலகங்களுக்கு ஆய்வும் சிந்தனையும் அழைத்துச் செல்லுமோ அங்கெல்லாம் யுலிஸிஸ் போன்று கிளம்பிவிடுவது - சிந்தனையில்தான்.

இப்படி இருக்கும் காலத்தில் ஒரு நண்பர் அடிக்கடி கேட்பது வழக்கம். ‘என்ன சார்.. உங்க ப்ளாக்கையே இப்படி க்ளோஸ் பண்ணிட்டீங்க்... என்ன பொக்கிஷம் அது...’ இப்படி அடிக்கடிச் சொல்லக் கேட்டால் நமக்கே லேஸாக நாம் பண்ணியது தப்போ என்ற எண்ணம் வந்துவிடுகிறது. அதுவுமில்லாமல் ஒவ்வொரு தடவை இந்தப் பேச்சை எடுக்கும் போதும் அந்த இன்னொருவர் கூட சொன்னார், ‘அவரிடம் எனக்குப் பிடிக்காத விஷயமே இதுதான். இவ்வளவு எழுதிவிட்டு ஏன் மூடிவைக்கிறார்... அது வந்து ரொம்ப அநியாயம்...’ இன்னொரு முறை அந்த மற்றொருவர்... இப்படியே சுருதி ஏறிக்கொண்டே போய் எனக்கே ஒரு குற்ற உணர்ச்சி வரத் தொடங்கிவிட்டது. ..இவ்வளவு பேர் ஆவலாக இருக்க நாம் நம் எழுத்துக்கே தடை போட்டது போல் செய்வது என்ன நியாயம்...நமக்கு என்ன.. அவர்கள் படித்து அதனால் பயன் பெறுகிறார்கள் என்றால் நாம் ஏன் குறுக்க நிக்கணும்.... சரி ஏதோ காமா சோமா என்று போட்டு வைத்தது. அதையெல்லாம் மீண்டும் தட்டிக் கொட்டிக் கொஞ்சம் செப்பனிட்டுத் திருத்தமுற ஒருவழியாக ப்ளாக்கைத் திறந்து அவரிடமும் அதற்கான லிங்கையும் அனுப்பினேன். நிச்சயம் படித்துவிட்டு மகிழ்வார், தாம் சொன்னதற்கு மதிப்பளித்தற்கேனும் பாராட்டுகள் வரும் என்று நினைத்தேன்.

ஆனால் வாழ்க்கை என்பது எப்பொழுதும் ஒரு மாதிரிதானே... நாம்தான் பக்குவப்பட வேண்டும். நண்பரிடமிருந்து பதில் இல்லை. நாட்கள் ஆயின. நன்றிகள் தொடர்ந்தவண்ணம் இருக்கும் பலரிடமிருந்தும் என்று நினைத்தால் முன்னைவிட பரம நிசப்தம். சரி என்று அவரைக் கூப்பிட்டு எப்படி இருந்தது சார் பார்த்தீங்களா... என்றதும்.... எது?,,,.. என்றார். எனக்குப் பாதி ஊக்கம்... இல்லை நீங்கள் சொன்னீர்களே ப்ளாக்கை ஓபன் செய்யச் சொல்லி... அதான் நெடும் பொழுது திருத்தங்கள் ஒருபாடு செய்து ஓபன் பண்ணி உங்களுக்கும் லிங்க் அனுப்பியிருந்தேன்.

ஓ அதுவா... பிரமாதம் சார்...

படித்தீர்களா?...

எங்க சார் நேரம்..... அதை மார்க் பண்ணி வைச்சிருக்கேன்... பொறுமையா படிக்கணும். உங்களுடையதை எல்லாம் அப்படி ஒரு தடவை படிச்சதும் புரிஞ்சிக்க முடியாது சார். ஆழ்ந்து யோசிக்கணும்... பல தடவை படிக்கணும். நீங்களும் கொஞ்சம் நடையை எளிமை படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும்... என்று அறிவுரை சொன்னார்.

படிக்கலையா... படிச்சா புரியலையா....

இல்லை சார்... ஒரே வேலை... படிக்க மார்க் பண்ணி வைச்சுருக்கேன்... நீங்க அப்படியே வைங்கோ... என்னிக்காவது... யாராவது அதைப் படிப்பா. யார் எப்ப படிக்கறான்னே சொல்லமுடியாது...

பாவம் நல்லவர்... ஆனாலும் புரியவில்லை. அப்படிச் சொன்னார் ஓபன் பண்ணச் சொல்லி.... ஓபனும் பண்ணி லிங்கும் கொடுத்தால் .. யாராவது என்னிக்காவது கண்டிப்பா படிப்பா என்று நம்மைத் தேற்றுகிறார்...

யார் அந்த ’பேய்நபர்’?

பார்த்தேன். சரி இது கதைக்குதவாது என்று பழையபடி மூடிவிட்டேன். இரண்டுநாள் கழித்து ஈமெயிலில் ஒரு கடிதம். யாரோ ஐரோப்பிய மாகாணம் ஒன்றில் இருப்பவராம். ‘நீங்கள் ஒரு ப்ளாக் முன்பு வைத்திருந்தீர்கள். அது இப்பொழுது படிக்க ஓபன் ஆக மாட்டேங்கிறதே.. மூடிவிட்டீர்களா... படிக்க என் செய்வது.. என்று கேட்டு.

ஒருவேளை பேய் இருக்கு என்று நிரூபணம் ஆகிவிட்டதோ...!

***

No comments:

Post a Comment