Thursday, May 2, 2019

தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி

தொல்காப்பியப் பொருளதிகாரம் பற்றிப் பலரும் அறிந்திருப்போம். தொல்காப்பியம் முழுமைக்குமே பலரும் உரைகள் எழுதியுள்ளார்கள், பழங்காலத்திலும், நம் காலத்திலும். அத்தனையும் தொகுத்து உரைவளம் என்ற பதிப்புகளும் வந்துள்ளன. ஆனால் தொல்காப்பியத்திலும், உரைகளிலும் காணக் கிடைக்கும் பல அரிய பழஞ்செய்யுட்கள் ஆகியவற்றைத் தொகுத்து, அந்தச் செய்யுட்களுக்கான விளக்கங்கள் எங்கு எங்கு வந்துள்ளன என்ற அட்டவணை மாதிரி யாராவது செய்ததுண்டாஇலக்கண அகராதி என்று கல்விக்கடல் கோபாலய்யர் செய்து அது வந்திருக்கிறது. மேலும் இளவழகனார் என்று நினைக்கிறேன், துணை நூல் என்று செய்திருக்கிறார், நம் காலத்தில். கணினியின் உதவிகள் இருக்கும் நம் காலத்தில் இன்னும் கூட பல நூல்கள் சிறப்பாகக் கொண்டு வரமுடியும், துணைக் கருவி நூல்கள் என்ற முறையில்

ஆனால் 1935 ஆம் வருடத்தை நினைத்துப் பாருங்கள். என்ன தொழில் நுட்பம் இருந்தது? ஒரு துணை நூல் செய்ய வேண்டும் என்றால் எவ்வளவு மெனக்கிட வேண்டும்! ஆனால் சிரமம் கருதாமல் ஒரு தமிழறிஞர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அன்றும் செய்துள்ளார்

தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி முதலியன 
தமிழறிஞர் திரு நாகமணி சாது அச்சுக்கூடம், இராயப்பேட்டை, சென்னை 1935. அன்றையவிலையில் ராப்பர் பைண்டு 1-4-0, கலிகோ பைண்டு 1-8-0. 

முகவுரையில் எழுதுகிறார்

"புதியது தீது பழையது நன்றென்றல் 
பூமி யுள்ளோர் 
விதியது வேபொரு ளென்னன்மி னல்லோர் 
விருப்ப முண்டேற் 
புதியது நன்று பழையது தன்னினும் 
பூம டந்தை 
பதியதன் மேவிற் பருமுத் தொடா 
டையைப் பார்மின்களே

மேற்கோள் விளக்கம், பொருட்குறிப்பு, பேராசிரியர், நச்சினார்க்கினியர் வரலாறுகள் அடங்கிய இப்புத்தகம், பொருளதிகாரம் பயிலுபவர், ஆராய்ச்சி செய்பவர், பதிப்பிப்போர் ஆகியவர்களுக்குப் பெரிதும் பயன் தருவதாகும்

- என்று குறிப்பிடுகிறார். இது உண்மை

160 பக்கங்கள் 'தொல்காப்பியப் பொருளதிகார மேற்கோள் விளக்க அகராதி அட்டவணையே ஓடுகிறது. அட்டவணையில் ஐந்து தூணிடங்கள் உள்ளன. தொல்காப்பிய சூத்திர எண், சி வை தாமோதரனாரின் பதிப்பு பக்க எண், புதுப்பதிப்பு பக்க எண், மேற்கோள் முதற்குறிப்பு, விளங்கிய இடங்கள் என்னும் ஐந்து பகுபொருள்கள் ஐந்து தூணிடங்களை நிரப்புகின்றன

உதாரணமாக, 'அகமலியுவகையளாகி' என்ற சொற்றொடர் மேற்கோளாக தொல்காப்பிய சூத்திரத்தில் ஆளப்பட்டிருந்தால், அட்டவணை - சூ 261, சி வை 491, பு 813, அகமலியுவகையளாகி, அகம் 86 என்று அட்டவணைப் படுத்துகிறது. இவ்வாறு 160 பக்கங்களில் நூற்றுக்கணக்கான மேற்கோள்களைச் சிறப்புற அட்டவணையாக்கிப் பேருதவி செய்திருக்கிறது நூல்இதைத் தவிர 110 பக்கங்களில் அருஞ்சொற்பொருள் அகராதி வேறு தருகிறது. இதைத் தவிர பேராசிரியர் வரலாற்றையும், நச்சினார்க்கினியர் வரலாற்றையும் மிக விரிவாக குறிப்புகளுடன் ஆசிரியர் தந்திருக்கிறார்தவிர்க்க முடியாமல் நூலில் புகுந்துவிட்ட பிழைகளுக்கான திருத்தங்களையும் பட்டியலிட்டுத் தந்துள்ளார் ஆசிரியர்

*** 

No comments:

Post a Comment