Thursday, May 2, 2019

படிப்பின் நறுமணங்கள்

என்ன முயன்றும் என்ன உழைத்தும்
ஏதோ ஒன்று நிற்கிறது
செய்யப்படாமல் போகிறது
முடியாச் செயலில்
அன்றைய பகலும் போகிறது
அடுத்த உதயமும் வருகிறது.
படுக்கையோரம், படிக்கட்டில்,
நுழையும் வாயிலில் நிலைக் கதவில்
முறைத்துக்கொண்டும், முனகிக் கொண்டும்
முனிவன் போலே காத்துக்கொண்டும்
சற்றும் நகராமல் நிற்கிறது
சொல்லிப் பயனிலை
காத்துக்கொண்டே நிற்கிறது.
நேற்றைய கவலைகள் சேர்ந்ததனால்
இன்று சுமந்து கனக்கிறது
போகப் போகப் பாரம் கூடி - நம்
பலத்தையும் விஞ்சிப் போகிறது
கனவின் சுமையெனக் கனக்கிறது
காணும் இடமெலாம் நெருக்குவது.
நின்று கழியும் நாள் தோறும்
நெருக்கிய காலக் குள்ளர்களாய்
வடபுலக் கதைகளில் வருவதுபோல்
வானைச் சுமக்கும் அடிமைகளாய்
வெறிதே செல்லும் நம்காலம்.
(லாங்ஃபெலோ அவர்களின் Something Left Undone என்ற கவிதையின் தமிழாக்கம்)

*** 
Whittier என்ற கவிஞர் எழுதிய The Common Question என்ற கவிதையின் தமிழாக்கம்.

மாலையில் எங்கள் உணவறையில்
மங்கிய நிறத்தில் ஒரு பறவை
கூடியுண்டபின் கிளம்பியது
வட்டமிட்டொரு வாகினிலே
வளைந்த கூரலகைத் தேய்த்துக்கொண்டே.
சிறகுகளசைத்துச் செவ்வாலாட்டி
சிரத்தை ஒருபுறம் ஒருக்களித்தே
சில்லெனும் குரலில் பொறுமையற்றே
கேட்டது,
"சின்னப்பயலுக் கென்னவேண்டும்?"
பதில்சொன்னேன், "உதை! சிறு புள்ளே!
புதை உன் தலையை சிறகுக்கிடையே
துயில்வதி! போ" என சொன்னாலும்
மறுபடி மறுபடி கேட்டது
முதலில் கேட்ட அதையேதான்.
புன்சிரிப்பில் நான் எனக்குரைத்தேன்:
மனிதரும் பறவையும் ஒன்றுதானோ!
அது சொன்னதைத்தானே
நாம் சொல்கின்றோம்.
செயலிலோ அல்லது சொற்களிலோ
சாட்டைப் பம்பரம் பறையுடன் சிறுவரும்
தாண்டுகயிறு பாவையுடன் சிறுமியரும்
நிலங்களும் வீடும் கொண்டே மனிதரும்
கேட்கும் ஏழமைக் கேள்வியும் அதுதானே!
போட்டுப் பிதுங்கி வெளியில்வந்தாலும்
பைக்குள் எதையோ திணிக்கின்றோம்;
வீசும்வலையும் நிரம்பிவிட்டாலும்
வராத மீனுக்கும் ஏங்குகிறோம்
வானம் திறந்து கொட்டித் தந்தாலும்
வரையற்ற ஆசை விட்டுவிடாது
தான் என்ற ஆசைப் பூத யந்திரத்தில்
தளராமல் பிரார்த்தனை மாவரைக்கும்.
அருள்மிகும் கடவுள்
அனைத்தையும் கேட்டே
ஐயோ பாவம் என்றுரைப்பார்;
நம் தேவைகள் அனைத்தும் அவர் அறிவார்;
கண்ணை மூடி நாம் கேட்பதையே
தருவதும் மறுப்பதும் அவர் அருளே.
எனவே நானும் சமயத்தில் நினைப்பதுண்டு;
நம் பிரார்த்தனை அனைத்தையும் ஒன்றாக்கி
கூட்டில் வீட்டில் குலவுமிடத்தில் கோயிலினில்
கேட்பது ஒன்றே,
"உன் சித்தம் போலே நடக்கட்டும்."

No bounty of indulgent Heaven
The vague desire can stay;
Self-love is still a Tartar mill
For grinding prayers alway.

indulgent Heaven -- கொடுக்க வேண்டும் என்று மனம் கனிந்த தெய்வம்.
bounty -- செல்வப் பெருக்கம்
vague desire -- போதும் என்ற நிறைவு இல்லாத பேராசை
Tartar Mill -- நேரடியாக அந்தக் காலத்தில் அந்த நாட்டுப் பிரயோகம் என்ன
என்று தெரியாது போயினும் யூகிக்கலாம். Tartar என்பது மிக அதிகத் திறமை
கொண்டவற்றுக்குப் பயன்படுத்தப் படும் சொல். He met a Tartar -- என்றால்
தன்னைவிட மிகவும் அதிக திறமையுள்ள போட்டியாளரோடு மோதினார் என்ற பொருள்.
எனவே Tartar Mill என்றால் மிக அதிக திறன் கொண்ட மில் என்று பொருள்
கொண்டேன். எதற்கு மில்? எதை அரைப்பதற்கு? தான் என்ற பேராசை எதிலும்
திருப்தியைத் தராமல் மேலும் மேலும் இது வேண்டும் அது வேண்டும் என்ற
பிரார்த்தனைகளை அரைத்துக் கொட்டிய வண்ணம் இருக்கிறது. அதுவும் பூதாகாரமான
வேகத்தில். அதுதான் தான் என்ற பேராசையின் கொடுமை.
And so I sometimes think our prayers
Might well be merged in one;
And nest and perch and hearth and church
Repeat, "Thy will be done."

இந்தப் பேராசையின் தீங்கை உணர்ந்தால், இறைவன் இவை எல்லாவற்றையும்
பார்த்து சிரித்துக்கொண்டு தன் மிக்க அருளால் நல்ல வேளையாக நாம் கேட்ட
அனைத்தையும் கொடுத்துவிடாமல் நமக்கு எது நன்மை பயக்குமோ அதை மட்டுமே
கொடுக்கின்றான். சமயத்தில் அதைப் புரிந்துகொள்ளாமல் நாம் கேட்டதைத்
தரவில்லை என்று தெய்வத்தையே நொந்துகொள்ளுகிறோம். என்னே!
அதனால்தான் கவிஞர் கூறுகிறார் -- பேசாமல் ஒன்று செய்வோம். நமது ஆசைகள்
அபிலாஷைகள் அனைத்தையும் மூட்டை கட்டி வைத்துவிடுவோம். வீட்டிலோ நாட்டிலோ,
கோயிலிலோ, மக்கள் குலவும் இடங்களிலோ நமது ஒரே பிரார்த்தனையாக 'இறைவா!
உனது சித்தம் என்னவோ அதுவே நடக்கட்டும்' என்ற ஒரே பிரார்த்தனையே எங்கும்
எழட்டும் -- என்று கூறுகிறார்.

ஆரம்பத்தில் பறவைக்கு gray bird என்று ஏன் சொல்லப்படுகிறது? இங்கு பறவை
என்பது மனிதனின் அடங்கா ஆசைக்கு ஒரு நினைவூட்டியாகப் பயன்படுகிறது. vague
desire என்பதற்கு பிரதி ஒலியாக இருக்கவேண்டி gray bird என்பது வருகிறது.
gray என்பது வண்ணத்தில் தெளிவில்லாமல் இருக்கும் நிலை. vague என்பது
இன்னது போதும் என்ற நிதாநம் இல்லாமல் இருக்கும் நிலை.

*** 

2600 வருஷங்களுக்கு முன் ஒரு பெண் தனக்குப் பிடித்த மனிதனைப்
பார்த்துவிட்டாள். அந்த மகிழ்ச்சியில் அவளுக்கு ஊழிக்காற்றும், ஊற்றி
வெள்ளமெனப் பொழியும் விடாத மழையும் தன் உள்ளக் கிளர்ச்சிக்கு நல்ல பக்க
வாத்யமாகத் தெரிந்தது போலும்.
அதுவும் அந்தப் பெண் சீனப் பெண். கதை நடப்பது சீன தேசம். 2600
ஆண்டுகளுக்கு முன்னர்.
அவள் பாடுகிறாள். தானாகக் கவனம் செய்ததா அன்றேல் வழிவழியாக வரும்
நாட்டுப் பாடலா, எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் காலத்தின்
போக்கிலிருந்து தப்பி நமக்குக் கிடைத்திருக்கிறது.
2600 ஆண்டுகளுக்கு முன் என்றால், அப்பொழுது கிரேக்க தேசத்தில் சாக்ரடிஸ்
சந்தைகளில் நண்பர்களுடன் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார் என்று
வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் சீன தேசத்தில் ஒரு பெண் இப்படிப்
பாடுகிறாள்.
ஊதையடிக்குது காற்று
உறைபனி போலே
ஊற்றியடிக்குது மழையும்
கோழிகள் இரைந்து
கொக்கரிக்கின்றன இங்கே
என் நல்ல மனிதனை மீண்டும்
நான் கண்டுவிட்டேன்
எத்தனை அமைதி என் இதயத்திலிங்கு!
சீழ்கையடிக்குது காற்று
சிதறியடிக்குது மழையும்
கோழிகள் குஷியாய்க்
கொக்கரிக்கின்றன இங்கு
என் நல்ல மனிதனை
நான் கண்டுவிட்டேன் மீண்டும்
எத்தனை இலகுவாய் ஆனதென் இதயம்!
கவிந்து இருண்ட வானத்தில் இங்கு
புரட்டி எடுப்பன காற்றும் மழையும்
கோழிகள் கொக்கரிக்கின்றன
நிறுத்தாமல் இங்கே
நல்ல என் மனிதனை மீண்டும்
நான் கண்டு விட்டேன்
எத்தனை மகிழ்வாய்
என் இதயமும் துள்ளுது இங்கே.
1100 கிமு விலிருந்து 600 கிமு வரை பிரபலமாய் இருந்தப் பாடல்களின்
தொகுப்பைச் சீன தேசம் பாதுகாப்பாய் வைத்திருந்ததே, அதைச் சொல்ல வேண்டும்.
கொட்டும் மழை, வீசும் காற்று -- காதலனைக் கண்ட பெண் உள்ளம் களிக் கூத்தாடுகிறது.
கோழிக்குத் தெரியும் இந்த உள்ளக் குறும்பு. ஏதோ தன்னால் முடிந்த
பேச்சுத்துணை. கோழியும் தோழிதானே.
துறை -- கோழியின் தோழிக்கூற்று என்று வைத்துவிடலாமா

*** 

பண்டைய நாளும் இன்றைய பொழுதும்

சென்றதினி மீளாது மூடரே!
நீர் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையென்னும்
படுகுழியில் விழுந்து குமையாதீர்!
இன்று புதிதாய்ப் பிறந்தோம்
என்ற எண்ணமதைத் திண்ணமுற
இசைத்துக்கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர் --
என்கிறார் பாரதி.
தீப்ஸ் நகரத்தில் மயானத்து சிப்பந்திகளை மேற்பார்வை பார்க்கும் ஒருவர்.
பெயர் இன்ஹர்காவி. காலம் கி மு 1160.
எகிப்திய கல்லறைகளில், இன்ஹர்காவியின் கல்லறையில் ஒரு பாடல் கிடைத்தது.
பாடுகிறார் இன்ஹர்காவி --
நாளைப் பிடித்துக்கொள்
விடுமுறையை விட்டுவிடாதே
சோர்ந்து போகாதே
நிறுத்திவிடாதே
உயிர் ததும்ப நில்
நீயும் உன் காதலுமாய்;
புவிவாழ்க்கையில் இதயத்தால் என்றும்
நொந்துபோகாதே;
கடந்து செல்லும் நாளை
விட்டுவிடாமல் பிடித்துக்கொள்.

*** 
என்றோ இழைத்த பண்கள் இன்றும் வந்து ஒத்திசை நல்குகின்றன.
நம் வாழ்வையும் பண்களாய் இசைக்கக் கற்றால்
காலம் கனிந்து நம் இசைக்கருவியாய் ஆகாதோ!!!

***
நான்கு நூல்களைப் பற்றி நாம் காணப் போகிறோம். நான்கு நூல்களுமே மக்களால் கவனிக்கப் படாமல் போனவை. நல்லவை. நன்மக்களால் இயன்றவை

1) திருவேங்கடத்தான் நூற்றெட்டந்தாதி 

ஆசிரியர் பேராசிரியர் தி வேங்கடகிருஷ்ணய்யங்கார்

நாங்குனேரி ஸ்ரீவானமாமலை மடத்தின் ஆஸ்தான கவிஞராய் இருந்தவர்

1992 இலவச வெளியீடாய் வந்தது

ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்துறை, போன்று பல வகைகளில் பாடல்கள் மிளிர்கின்றன. பண்டைக் கவிஞர்களில் அமைந்திருக்கும் இயற்கைத்தன்மை இன்றைய கவிஞர்களிடம் காண்பது அரிது. பார்த்துக்கோ! யாப்புதானே கேட்ட? சரியா இருக்கா எண்ணிக்கோ -- என்பது போன்ற செயற்கைத் தன்மை எங்கோ ஒருவிதத்தில் தலைகாட்டும் இன்றைய மரபுக் கவிஞர்களின் செய்யுள்களில். ஆனால் இவரிடத்தில் பெரும்பாலும் அந்தத் தொல்லை இல்லை

இய்லபான சொல் விழுக்காடுகள் அமைகின்றன

கோவில்கொண் டருள்பா லிக்கும் 
கோலநற் பதிகட் கெல்லாம் 
ஆவிபோல் மிளிர்வ தன்றோ 
அத்தன்வேங் கடத்தான் எம்மான் 
தாவிலாப் பெருமை சான்ற 
தானமாம் வேங்க டந்தான் 
ஆவலோ டதனை நாமும் 
அருந்திருப் பதியாய்க் கொள்வோம்

அந்நாளிங் கடைவ தற்கோ 
அழகிய வழிகள் இல்லை 
செந்நாயும் புலியும் சீறும் 
சிறுத்தையும் தின்னு மேனும் 
எந்நாளும் வேங்க டத்தான் 
இணையிலா அருளை நம்பி 
அந்நாளும் அடியார் கூட்டம் 
ஆர்வத்தோ டங்குக் கூடும்

கூடுமே வேங்க டத்தில் 
கோலமார் மலைக ளேழும் 
பாடுமே புட்க ளெல்லாம் 
பாலாஜி புகழை யென்றும் 
ஆடுமே மயில்கள் மேகம் 
கண்டுபே ரானந் தத்தால் 
மூடுமே படாமைப் போன்று 
வெற்பினின் முகட்டை மேகம்

என்றெல்லாம் அழகிய நடையில் ஆரம்பித்துச் செல்லும் அந்தாதி வேங்கடவனைப் பணிகின்ற பக்தியினைப் பைந்தமிழில் புகட்டும் விதம் அழகும், அமைதியும் கொண்டிலகுகிறது

வானோர் வணங்கும் வேங்கடத்தான் 
வையத் தார்க்கு வழங்கிடவே 
தானே யாகத் தோன்றியிங்கே 
தண்ணார் அருளைப் பொழிகின்றான் 
கானார் கோவர்த் தனமலையைக் 
கையால் தூக்கிக் காத்தவனே 
தேனார் சோலை வேங்கடத்தில் 
திருவோ டின்று திகழ்கின்றான்

என்று முழுக்கவும் ஒரே வேகத்துடன் செல்கிறது திருவேங்கடத்தான் நூற்றெட்டந்தாதி. கிடைக்குமிடம் 1992ல் 78, படேல் சாலை, பெரம்பூர், சென்னை 11. இப்பொழுதும் அங்கு கிடைக்குமா தெரியாது. ஒரு வேளை சீனி சம்பத்து அவர்களிடம் கிடைக்கலாம். அவரது ஷ்ட்டகர்தான் இந்த ஆசிரியர்

*** 

2) ஜீவாநந்தம் 

கலைவாணன் (அப்புலிங்கம்

கவிதாச்ரமம் 
திருவானைக் கோவில் 
1951 

தூய வெண்ணுடையுடன் துலங்கிய அப்புலிங்கம் நினைவில் வருகிறார். அவருடைய ஜீவானந்தம் என்ற அவருடைய இந்தக் கவிதை நூல் அவரை நினைவுக்குக் கொண்டு வந்துவிட்டது

இந்த நூலின் முகப்பில்  து சு யோகியார்நூன்முகம் தந்திருக்கிறார்

'ஆனை வனத்தரசி அடியார்தம் நெஞ்சமத 
யானைமிசை யேறிவரு மாணழகி -- ஞானவொளி 
அப்புலிங்கம் போற்றும் அகிலம்மை தன்னருளால் 
அப்புலிங்கம் யாத்த அமுது.' 

கலைவாணன் என்னும் அப்புலிங்கம் ஊக்கமிக்க கவிஞர். அவர் தம் மானஸி தேவியை வரவேற்கும் விதம் அலாதி

மூடிடும் இருள் முகத்திரை 
முழுவதும் விலக்கி 
ஆடிக் கீட்டிசை அழகுற 
அலர்ந்தசெம் மலர்கள் 
சூடிப் பொன்னுஷை சுந்தரி 
சோபனம் சொல்லத் 
தேடி வந்தனள் வாடீயென் 
நெஞ்சுறை தேவீ

காலை வானமுன் கள்ளிதழ் 
ஒளிநிறம் காட்டும் 
மேலை வானமுன் மேனியின் 
மெல்லொளி கூட்டும் 
சோலை மாமலர் சோபையுன் 
சொக்கெழில் தீட்டும் 
வாலை சக்தியென் வாழ்வெலாம் 
நின்விழி யூட்டும்

என்றெலாம் தம் நெஞ்சகத் தேவியை வரவேற்றவர், இந்த மானிட வீதியில் தேவ லோகத்து மலர்களை நயப்பவர் எவரும் இலர் என்பதை உணர்ந்த அயர்ச்சியில் வேறொரு பாட்டில் கூறுவது --- 

தூங்கு மானிட வீதியில் 
தோள்கள் கன்றித் துவண்டிடத் 
தாங்கு மாமலர்க் கூடையும் 
தானு மாக அலைந்தபின் 
வாங்கு வாரிலை யென்றுளம் 
வாத னைப்படச் சோர்வுடன் 
தேங்கி நிற்குமென் நெஞ்சகத் 
தேவி! இங்கு திரும்படி

சரி. யாரிவள்? அதையாவது சொல்லுமையா என்றால் மற்றொரு பாட்டில் கூறுவார் -- 

தன்னில் தானே யுதித்தவள் 
தானொன் றேபல வானவள் 
இன்னி லத்தினும் மூத்தவள் 
எனினும் என்றும் இளையவள் 
முன்னும் பின்னு மிலாதவள் 
மோக மோகன சுந்தரி 
கன்னி யாமிவ் வியற்கைதான் 
கால தேவனின் காதலி

சரி இப்படித்தானே எல்லாரும் எண்ணி வாழ்க்கையைத் தொடங்குவதே. அப்புறம் என்ன ஆயிற்று? இந்த இயற்கையே அனைத்தும் என்று கடைசி வரை இருந்துவிடுகின்றாரா மாந்தர்? அல்லது ஒருவேளை நாம் காணும் இயற்கை மட்டுமே அனைத்து இயற்கையின் மொத்தம் என்று கூறிவிட முடியாதோ

கூறுகிறார் -- 

கண்ணுக்கு மீறிய காட்சியு முண்டு 
எண்ணுக்கு மீறிய இச்சையு முண்டு 
பண்ணுக்கு மீறிய பாவுமொன் றுண்டு 
மண்ணுக்கு ளின்றிந்த மர்ம மறிந்தோம்

பின் என்ன

முந்தை வினையின் முடிச்சை யவிழ்த்தோம் 
பிந்திய காலத்துப் பேச்சைக் கடந்தோம் 
சிந்தை யுறங்கிடும் பந்த விளிம்பில் 
தந்தமி தோமெனத் தாண்டவம் செய்தோம்

இதுதான் ஜீவானந்தம். இவர்தான் க்லைவாணன் என்னும் பெயரிய அப்புலிங்கம்

மாலை வேலைகளில் இவர் வீட்டு ஒட்டுத் திண்ணையில் இவருடன் அமர்ந்து ஒரு வாண்டு பேசிக்கொண்டிருக்கும். அந்த வாண்டுப் பயலிடம் ஒரு கண்ணாகவே இருங்கள் எதற்கும்

*** 

3) சக்தி சரணன் (கே கே நரஸிம்ஹன்) 

கதர் ஜிப்பா, வேட்டி, கொஞ்சம் வெறித்த பார்வை, பின் தூக்கி வாரிய தலை. அளந்த அசைந்த நடை. பள்ளியில் தமிழ் வாத்யார் வேலை; இவரிடம் மணிமேகலை சாதுவன் நரமாமிசம் தின்னும் காட்டுமனிதர் தீவில் சிக்கிகொண்டு வெளிவந்த காட்சியைக் கேட்டு நாங்கள் ஒரு வழியாகக் கப்பல் பிடித்து வகுப்பறையை விட்டு வெளியே வந்தோம். சக்தி சரணனின் நடிப்பாற்றலும் அபாரம். ஆனால் இவர் போன்ற ஒரு க்ரூப்பே அன்று இருந்தது திருவரங்கம், திருச்சி ப்ராந்தியங்களில். இவர் ஒரு கவிஞர்

அன்னாளில் புதுக்கவிதை என்ற மோஸ்தர் பிரபலமாயிருந்த காலத்திலும் கூட மரபுக் கவிதை என்றே முழுமூச்சாய் இருந்தவர். நல்ல தமிழ் வித்வான்

அன்னாளில் கவிதை நூல் வெளிவந்திருக்கிறது என்றால் அந்த மனிதன் அப்புறம் அரை தேவன். காரணம் கவிதை என்பது கடவுள் தந்த வரம் என்ற எண்ணம் அன்று இருந்தது. அதற்கேற்ற மொழிப்புலமையும் இருந்தது

ஜீவபுராணம் என்ற கவிதை ஒன்றில் சக்தி கூறுகிறார், படைப்பில் நிலம் தோன்றிய அழகை -- 

பூமகள் தானும் புதுப் பொலிவு கொண்டிட்டாள் 
மாரி பொழிவதனால் மண்ணேந்திக் கொள்வதனால் 
நீரின் பரப்பாய் நிலமுழுதும் ஆயிற்றே 
பொங்கும் அலைகள் புரளும் பெருங்கடலாய் 
எங்கும் விளங்க புவனம் இருக்குங்கால் 
ஊசிமுனை போல உருக்கொண்ட நுண்ணுயிர்கள் 
பாசியுருக்கொண்டு புனலில் பரவினவே 
சின்னஞ்சிறு மீனாய்த் தோன்றித் திரிந்தவைதாம் 
பின்னர் பெருமீனாய் எங்கும் பெருகினவே 
ஊழிதான் மாறி உலகில் அமைதியுற 
ஆழியிடையே அழகுநிலம் தோன்றியதே

படைப்பில் பத்து அவதாரங்களுக்கும் என்ன இடம் என்பதை அழகுற அமைத்துப் பாடுகிறார் கவிஞர். உதாரணத்திற்கு ஓர் அவதாரத்தில் இரண்டு அவதாரமாகக் கிளர்ந்த வாமனனைப் பற்றி --- 

காலப் படைப்புக் கணந்தோறும் மாறுதலால் 
ஞாலத்தில் கால் வைத்தான் ஞானமிகும் மானிடனே 
குள்ள உருவத்தான் கூரறிவின் சாதனையால் 
உள்ளத் துறுதியால் இந்த உலகத்தைக் 
காலால் அளந்தான் ககனத்தை முற்றுந்தன் 
கோலால் அளந்தான் குறையாத ஊக்கத்தால் 
மண்ணுலகமுற்றும் வசமாக்கிக் கொண்டவனாய் 
எண்ணம் செயலாக்க ஏற்ற திறல் கொண்டான். 

அந்தக் காலத்தில் பாரதியின் குயில் பாட்டை விஞ்ச வேண்டும் என்ற வேகம் இந்தக் கவிஞர்களிடம் உள்ளூற இருந்ததன் விளைவு 'சந்திரிகை' என்ற நெடுங் கவிதை

திருச்சியில் இருந்து காவேரியைப் பாடாத கவிஞரும் உண்டோ

காலை எழுந்திடும் முன்னரென் 
கண்ணைக் கவர்ந்திடும் காவிரி 
ஞால சவுந்தரி அற்புத 
நாட்டியம் காணலென் பாக்கியம் 
கால மளக்கரும் நித்திய 
கன்னிகை இன்னெழில் புன்னகை 
வாலிபர் நெஞ்சினில் தேனினை 
வார்ப்பதை எங்ஙனம் சொல்லுவேன்

என் தந்தைக்கு இனிய தோழர். கவிஞர் திருலோகத்திற்கு உற்றவர்

பல நாள் இவரிடம் பேசிக்கொண்டிருந்த நினைவுகள் இன்றும் மறக்கவில்லை

*** 
4) சே நரஸிம்ம ராகவன் 

1988ல் 60 ஆண்டு முடித்த தருணம் தன்னை 61ஆம் ஆண்டு 'வாழ்வில் நீ என்ன சாதித்துவிட்டாய்?' என்று கேட்டதாகச் சொல்லித் தம் 'பூர்வ பக்ஷம்' என்னும் கவிதைத் தொகுப்பை முன் வைக்கிறார் நரஸிம்மராகவன்

பூர்வ பக்ஷம், சே நரஸிம்ம ராகவன், நெய்வேலி 17-12-88

தலைப்பே வினோதமானது. வேதாந்த வாத விவாதங்களில் புழங்கும் சொல்லை, பரபக்கம் என்று தமிழ்ப்படுத்தக் கூடிய சொல்லைத் தலைப்பாக வைக்கும் செயலே ஆளைப் பற்றியும் தெரிவிக்கும். ஆனால் மரபு சார்ந்த விஷயங்களில் மட்டும் இருந்துவிடாமல், தற்காலக் கவிதை, இலக்கியம் என்ற ஆர்வங்களும் திகழும் ஒரு ஜீவன் நரஸிம்மராகவன் என்பதை திரு டி என் ஆர் சொல்லக் கேட்டிருக்கிறேன். திருலோகத்தின் 'தேவ சபை' ஆட்களில் ஒருவர் என்பதும் கேள்விஎன் கைக்குக் கிடைத்த நூல் 'பூர்வ பக்ஷம்' ஒன்றுதான். இவரையும் நான் இதுவரை சந்தித்ததில்லை. ஒரு வேளை திருதிரு அவர்களுக்குத் தெரிந்திருந்தால் சந்திக்கலாம், கடவுள் சித்தம் இருந்தால்

'எம்மா துன்பம் நேரிடினும் 
இதயச் சுனையில் நீராட்டும் 
அம்மா திறத்தை என்னென்பேன் 
அன்னை நீயே அருள் புரிவாய்' 

என்று ஆரம்பமாகும் வரிகளில் 'எம்மா வீட்டுத் திறமும் செப்பம்' என்ற சடகோபனின் தீந்தமிழ் எதிரொலிக்கத்தான் செய்கிறது

கவிதையெனும் பூவை என்ன தருவாள்

காலச் சுருக்கங்கள் 
காணாத ஒளிமுகமும் 
மூலத்தின் விளக்கமிடும் 
மூத்த இளமையுடன் 
ஞாலம் தொழில் கேட்கும் 
நாவசையாப் பேச்சழகும் 
கோலக் குமிழ்ச் சிரிப்பும் 
கூட்டி அவள் தந்திட்டாள்

அன்றவளைக் காதலித்த ஆதாமாய்த் தான் நின்றதைக் கூறும் கவிஞர் 

என்னையுமென் உலகினையும் 
எள்ளின் முனையாக்கி.. 
என்னை அவளடியில் 
இட்டுப் பின் நகைத்தது காண் 

என்று தன்னை விஞ்சி நிற்கும் கவிதைக்குத் தான் தோற்றதை உவகையுடன் கூறுகிறார்

கவியணங்கே! கரையில்லாக் 
காட்டு மலரெழிலே
உவகையுடன் நான் தோற்றேன் 
உனக்குத் தான் என் வணக்கம் 

சில இடங்களில் அசத்திவிடுகிறார் நம்மை நரஸிம்மராகவன் -- 

ஏடா எழுதுவதை 
ஏன் விட்டாய் என்றவனைப் 
போடா எனக் கூறிப் 
போகவிட்டேன் அன்றொரு நாள்... 

காட்டிற் கிடக்குமொரு 
கல்லாய் இருந்திருப்பின் 
காட்டெருமை என்மீது 
கடும்தினவைத் தேய்த்திருக்கும் 
வீட்டில் கிடந்தபடி 
வீராப்புப் பேசியதும் 
ஏட்டைக் கெடுத்ததுமே 
என் பங்காய் அமைந்தது காண்

கவிஞரின் சில வரிகள் பிரமிப்பூட்டுவன. காலம் பற்றி எழுதும் போது 

காலப்பாழ் தனில் குழைத்த 
கறுமையின் அடிக்குழம்பாய் 
கோலச் சொல் தூரிகையைக் 
கொண்டே வரைந்திட்ட 

என்று காலம் பற்றிய தம் கருத்துகளைப் பதியும் போது 

இப்பொழுது தனையீன்றிங்கு
இறந்திட்ட ஓர்காலம் 
எப்பொழுது பிறந்ததென 
எவரேனும் அறிவாரோ
இப்பொழுதுதனில் தோன்றும் 
இனிவருமோர் நீள்காலம் 
எப்பொழுதுவரை நீளும் 
என்பதனையார் கண்டார்

என்ற வரிகள் வலிமையான வரிகள். ஆனால் ஏதோ மிஸ்டிஸிஸப் பார்வையும், விரக்தியும், தன்னை நோதலும், பெருங்கவிகளோடு பழகும் தாக்கமும் மட்டும் தீர்க்கமான கவிக்குரலைத் தந்துவிடாது. தான் பிறந்த தன் சூழலை ஒருவன் உண்டு செரித்து, உலகைப் புரிந்து கொள்ளும் உண்மையான தேட்டத்தில் மட்டுமே முறியாத கவிக்குரல் ஒலிக்கும் என்பதைக் கவிஞரின் முழு நூலும் புரியவைக்கிறது. இதைக் கவிஞரே சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ என்ற ஐயமும் நூலை முடித்தபின் எழுகிறதுஉலகம் அறியாமல் போன நான்கு கவிஞர்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்தேன். இன்னும் பலர். பின்னர் எழுதுவேன்

*** 

படித்தல் 

Cognitive Reading Theory - உணர்வார்ந்த படிப்புக் கோட்பாடு என்று சொல்லலாமா, அப்படிப்பட்ட ஒரு கோட்பாடு வாசிப்புத் திறனாய்வு உலகில் வளர்ந்து வருகிறது

இதன் அடிப்படையில் இரண்டு கேள்விகள் இருக்கின்றன

1) படிப்பு என்பது யாது

2) பனுவல் என்பது யாது

படிப்பு என்பது எதை வேண்டுமானாலும் படிப்பது என்ற சாத்தியத்தை உள்ளடக்கும்

நூல் என்ற வடிவம் மட்டும்தான் படிக்கப்பட வேண்டும் என்றில்லை

நரேந்திரநாதரின் கல்வியில் மூன்று அம்சங்களைச் சுட்டிக் காட்டுகின்றார் சகோதரி நிவேதிதை

முதலில் ஆங்கில, சம்ஸ்க்ருத மொழிகளின் மூலம் பெற்ற நூல் படிப்பு

பின் ஸ்ரீராமகிருஷ்ணரை அணுகி அவரை ஊன்றிப் படித்ததன் மூலம் ஆள் படிப்பு

அதன் பின்னர் நாடு முழுதும் திரிந்து சுற்றிக் கற்ற நாட்டின் படிப்பு

உணர்வார்ந்த படிப்புக் கோட்பாடு இந்த மூன்றும் பனுவல்களில் அடக்கம் என்கிறது

அது மட்டுமில்லை. ஓர் ஓவியம் பனுவலாக இருக்கக் கூடும்

ஓர் சந்தை கூட பனுவலாக ஆகக்கூடும்

காட்டில் மந்திகளின் கூட்டம் பனுவலாக ஆகக் கூடும்

அதாவது எது ஒன்று ஊன்றிக் கற்பதற்கான அர்த்தங்களை உற்பத்தி செய்ய வல்லதாக ஆகிறதோ அது அனைத்தும் பனுவல் என்பதில் அடங்கும்

அடுத்து படிப்பவன் 

திண்டில் சாய்ந்து கொண்டு, நன்றாகத் திறந்த கண்ணைப் பாதி மூடிப் பின்னர் முழு தூக்கத்தில் ஆழ்ந்து விடும் பயணிக்கான வாகனம் தான் படிப்பு. அவன் தான் படிப்பவன் என்ற இயக்கமற்ற தன்மையைக் கூறும் கருத்துகள் மாறிவிட்டன

CRT கருத்தின்படி படிப்பவன் என்பவனும் பனுவலுக்குள் தன் பங்குக்கான பார்வைகளைக் கொண்டு வருபவன் தான்

ஒவ்வொரு படிப்பவனும் படிப்பினுள் கொண்டு வருவது கண்ணுக்குத் தெரியாத அவனுடைய அனுபவ உலகத்தையும் தான்

அந்த அவனுடைய உலகம் அவனுக்கு விதித்த கோணத்தில் தான் அவனால் எந்த விதப் பனுவலையுமே எதிர்கொள்ள முடியும்

அதாவது நூல் ஒன்று ஆனால் அதன் பிரதிகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவனவாய் அநந்தம்

(அநந்தா வை வேதா: என்கிறது சுருதி

ஓதுவார் ஓத்தெல்லாம் என்கிறார் ஆழ்வார்


A Fisherman
Studying texts and stiff meditation can make you lose your Original Mind.
A solitary tune by a fisherman, though, can be an invaluable treasure.
Dusk rain on the river, the moon peeking in and out of the clouds;
Elegant beyond words, he chants his songs night after night.

(Ikkyu 1394-1481) 

பனுவல் படி 
நிட்டையில் நிலை 
நின் சொந்த மனத்தைத் 
தொலைக்கவும் கூடும்

ஆனால் 
மீனவன் ஒருவன் தனியே 
எழுப்பும் ஒற்றை இசையும் 
விலைமதிப்பில்லா 
பெருநிதியம் ஆகவும் கூடும்

ஆற்றில் அந்தி மழை
முகிலில் ஒளிந்து தெரிந்த 
வண்ணமாய் நிலவும்

வார்த்தைகள் எட்டா 
வடிவ நேர்த்தியில் 
ஒவ்வோர் இரவும் 
அவன் பண்ணிசைப்பு

***


No comments:

Post a Comment