Thursday, May 2, 2019

Classics Reclassified

ஒரு புஸ்தகம். கொஞ்சம் நொறுக்குத் தீனி. அப்படி சாயறதுக்கு வாட்டமா ஒரு ஒட்டுத்திண்ணை. அப்பப்ப டீ, காபி ஏதாவது. சொர்க்கம் எல்லாம் வேணாம் சார். அது சுத்த போரு. எப்பவாவது உங்களை மாதிரி ஏமாளிங்க அங்க எட்டிப்பாத்தீங்கன்னா போட்டு ஒரு ஸ்பெஷல் ரம்பம். போறாது? காலம் ஓடிடும். அப்படி இருந்தா யமன் கூட வரமாட்டான்னா! எங்க ஊருல ஒரு வயசான கிழவி சொன்னா. அவனுக்கும் கொஞ்சம் அலர்ஜி இருக்காதா? முதல் முதல் செத்த மனுஷன் -- அவன் தான் யமனாக ஆனானாம். சொல்வாய்ங்க.

ஏன் செத்தான் தெரியுமா? அவங்க அப்பா போய்ப் படி ஏதாவது புஸ்தகத்தை என்று சொன்னாராம். பாவம் பையன் பயந்துபோயி செத்துப் போய்ட்டான். அப்ப எல்லாம் எதுவும் மேல் உலகத்துல டிபார்மெண்ட் எல்லாம் ஆரம்பிக்கலை போல இருக்கு. அதான் பார்த்தாங்க. இது எங்க வந்துது முந்திரிக்கொட்டை? என்று போ! போயி வரவங்க போறவ்ங்க கணக்கெல்லாம் பார்த்துக்க என்று சர்ட்டாம்பிள்ளை உத்யோகம் கொடுத்துட்டாங்க. படிக்காத பிள்ளைகளுக்குத் தானே வகுப்புல சட்டாம் பிள்ளை உத்யோகம் கொடுப்பாங்க, அந்தக் காலத்துல. அதுனால இப்பவும் புத்தகம் என்றால் போதும் யமன் கொஞ்சம் அங்கன வரவே பயப்பட்றதா கேள்வி.

சந்தேகமா இருக்கா? நீங்களே யோசிச்சுப் பாருங்க. நூல்கள் எதுவும் எங்கனாச்சும் சாவுதா? மறைஞ்சுப் போச்சுன்னு சொல்றாங்களேவொழிய.
சரி புத்தகம் எழுதின ஆளுங்க யாராவது உலகத்தைவிட்டு மறையராங்ளா? தாங்க எழுதின புஸ்தகத்துக்குள்ளயே குடில் கட்டிகிட்டு உட்கார்ந்துட்றாங்க.

ஊருல இருக்கறவன்லாம் தேட்றான். வால்மீகி எப்ப இருந்தாரு/ எங்கன பொறந்தாரு/. வியாசர் எங்க இருந்தாரு? அவரு எந்த இடத்துல பொறந்தாரு?
ஹோமரு, அவரு இவரு என்று அன்னிலேந்து இன்னி வரைக்கும் நூல் எழுதினவனை எல்லாம் தேட்றாங்க. எங்கயாவது அகப்பட்றாங்களா? ம் ம்
ஒன்றும் இல்லை. காலேஜ் பசங்க எப்படித் தேட்றாங்க பரிட்சையின் போது.
கிடைச்சா நாலு போடலாம்னு. எங்க இருக்காங்கன்னே யாருக்கும் தெரியல்லை. ஆனா அவங்க எழுதின புஸ்தகத்தைப் போய்ப் பாருங்க. பார்ட்டி பாதுகாப்பா உள்ளார குந்திகினு இருக்குது. 

அட இவ்வளவு ஏன்? எமகிங்கரனுகளே அவங்களோட கழட்டிப் போட்ட சட்டையை லவுட்டிக்கிட்டுப் போய் அங்க பொய்க்கணக்கு காட்டி எழுதிட்டாங்களாம். இவங்க எல்லாம் இறந்துடாங்க. நாங்க பிடிச்சுக் கொணாந்துட்டோம்னு. அங்க யமன் அவனுக வாயை எல்லாம் ஊதச்சொல்லிக் கேக்கறானாம். ஏதாவது படிப்பு வாசம் வருதான்னு. மவனே! எவனாவது படிப்பு வாசம் வந்துச்சு அவ்வளவுதான் முதல் ட்ராப் அவுட் இருக்காரே, அதாங்க நம்ம யமன்,.. கடுப்பாயிடுவாரு. அதுனாலேயே யமகிங்கரனுக போனவுடனே சத்தியம் அடிப்பானுகளாம்.

"சார்! நாங்க சித்ரகுப்தன் சாட்சியா அந்த என்னமோ எளுதி கிளுதி இருக்குமே கட்டி பைண்ட் பண்ணி சுத்தி வச்சுருப்பாங்களே! அந்தக் கருமாந்தரத்தை எல்லாம் மூந்து கூட பாக்கலை. அதும் பக்கமே நாங்க போகலை. உங்க சேவகத்துல இருக்கறதுனால என்னென்னிக்கும் போகவும் மாட்டோம்" அப்படீன்னு.

யமனுக்கே டேக்கா கொடுத்துட்டு பலே கில்லாடிகளாக 'காலம் வென்ற கனவுகளாய், கடவுளுக்கு ஓர் வெற்றியாய்' இருக்கும் ஜீவன்களை,
அவர்கள் ஒளிந்துகொண்டிருக்கும் புஸ்தகங்கள் என்ற மர்மத் தீவுக்குள் சென்றுதான் பார்க்கமுடியும். மர்மக் கப்பல்ல சீக்கிரம் இடம் பிடியுங்க. எல்லாம் ஒட்டுத்திண்ணை -- நொறுக்குத்தீனி -- டீ காப்பி தான். அதான் CODE WORD . போய் கோட் வேர்ட் சொன்னிங்கன்னா மர்மக் கப்பல் திறக்கும். முதல் விசிட் எதுக்குத் தெரியுமா? ஒரு நூதனமான, வினோதமான புஸ்தகத்துக்கு.

சின்ன புஸ்தகம்தான். ஆனா அது அடிக்குதுங்க பாரு லூட்டி! அடேயப்பா! ஒங்கூட்டு லூட்டி எங்கூட்டு லூட்டி இல்லை. THE CLASSICS RECLASSIFIED இதுதான் புஸ்தகம். எழுதினவரு -- RICHARD ARMOUR, BANTAM BOOKS 6th printing 1968 அதுல ஆர்மர் ஒரு டெடிகேஷன் வாசகம் எழுதியிருக்கிறார். பாருங்க

DEDICATED

to that amazing device, the Required Reading List, better even than artificial respiration for keeping dead authors alive.

முழிபெயர்ப்பு ---

சமர்ப்பணம்

அந்த ஆச்சரியமான யந்திரத்திற்கு, 'அத்யாவசியமாகப் படிக்க வேண்டிய புஸ்தகங்களின் வரிசை' என்று சொல்கிறார்களே, செத்துப் போன நூலாசிரியர்களை மூச்சு நிற்காமல் இன்னும் உயிரோடு வைத்திருப்பதற்கான யந்திரத்திற்கு. ----

சுத்த கிறுக்கன் இந்த ரிச்சர்டு ஆர்மர்.! எல்லாம் நம்ப ஃப்ரெண்டுதான். என்ன சிரிக்கிறீங்க? தோ பாருங்க எதா இருந்தாலும் சொல்லிட்டுச் சிரிங்க ஆமாம். இந்த ஆர்மருக்காக, இந்த அவருடைய ஒரு நூலுக்காக ஒரு ப்ளாகே ஓபன் செய்யலாம். அவ்வளவு தமாஷும், அர்த்தமும் நிறைந்த எழுத்து இந்தச் சின்ன புஸ்தகத்தில் இருக்கிறது. உலகக் காவியங்கள், இதிகாசங்கள், எழுத்தாளர்கள், நாடகாசிரியர்கள், கவிஞர்கள் என்று அனைவரையும் அப்படி அப்படிக் கொஞ்சம் கொத்து பரோட்டா போடுகிறார் நம்ம கிறுக்கர்! அதாவது இடத்தனமான பார்வை. congratulations என்றால் என்ன என்று ஒருவர் கேட்டார். ஒரு ஆங்கில எழுத்தாளர் சொன்னார் -- civilized form of envy. என்ன இடத்தனம்.! இப்படி இடத்தனம் மிக்க, கொண்ணாரவட்டைத் தனமான துடுக்கு மொழிகளுக்கே பல டிக்‌ஷனரிகள் உண்டு ஆங்கிலத்தில். அதாவது என்ன ரகசியம் என்றால் மனிதன் கிண்டல் என்பதை ஆத்மார்த்தமாக ரசிக்கத் தெரியவேண்டும்.

ஒன்றுமில்லை. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகிறீர்கள். நடை சாத்தியிருக்கிறது. சரி என்று வெளியே வருகிறீர்கள். நண்பர் ஒருவர் ஒரு துடுக்கு. (எல்லாரும் என்னைப் போல் சமோத்தாக இருப்பார்கலா என்ன?) உங்களைப் பார்த்துக் கேட்கிறார் ஏன் திரும்பி வந்துவிட்டாய் என்று. நீங்கள் ஒரு அப்பாவி. போனேன் சாத்தியிருந்துது என்கிறீர்கள். அவர் உடனே 'ஓ அவருக்கே பொறுக்க முடியலையா?' என்று சொல்லிவிட்டு நமுட்டுச் சிரிப்பு சிரித்தால் முதலில் தனனை மறந்து சிரிப்பவர் நீங்களாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நீங்கள் கற்ற இலக்கியம், ஆன்மிகம், கவிதை எல்லாம் பலன் இருக்கிறது என்று அர்த்தம். அதைவிட்டுவிட்டு அவன் எவ்வளவு துன்மார்க்கன், என்ன திமிர் இருந்தால் நம்மைக் குத்திக் காட்டுவான், அவனுக்குச் சரியான பாடம் புகட்டாமல் விடப்போவதில்லை என்றெல்லாம் கறுவ ஆரம்பித்தீர்கள் என்றால் பரிணாம ஸ்கேலில் நீங்கள் தடதட என்று கீழே போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அப்பறம் கல்லாகிப் பூடாய் புழுவாய் பல்விருகமாகி என்ற மாணிக்கவாசகத்தை நீங்கள் ரிவர்ஸ் கியரில் பாடவேண்டியதுதான்.

தமிழில் இத்தகைய ஹாஸ்ய மன்னர்கள், ஏன் மாவட்ட அதிகாரிகளே மிகவும் கம்மி. எண்ணினால் ஒரு கையில் பல விரல்கள் மிஞ்சும். இந்தச் சூழ்நிலையில்தான் உண்மையான ஹாஸ்யத்தின் சிங்கநாதத்தைத் தமிழுக்குள் கொண்டுவந்த முக்கியமான எழுத்தாளன் சுஜாதா. அதற்கு முன்னாலும் சில உதாரணங்கள் உண்டு, எஸ் வி வி, தேவன் என்று. ஆனால் கோமாளித்தனமற்ற காத்ரமான நமுட்டுச் சிரிப்பு உடாலக்கடி அம்மக்கள்ளத்தனமான நகைச்சுவை எல்லாம் முதலில் தமிழில் ஆவேசம் கொண்டது எங்கூரு ரங்கராஜன் உபயம் என்றுதான் நினைக்கிறேன். அது இயல்பிலேயே இருக்க வேண்டும். பார்வையில் ஒரு நையாண்டி கலந்த பண்பான மதிப்பீடு. (நமது தலைவர் பென் சார் இந்த வகை என்று என் அபிப்ராயம்.) சரி போகட்டும்.

இந்த ஆர்மர் கடங்காரன், ஸாரி, கடங்காரர் இருக்கிறாரே, அவருடைய இந்த ஒரு புத்தகத்தை அப்படியே முருகல் கலையாமல் மொழிபெயர்க்க முடிந்தால் அந்த ஆளுக்கு நேராக ஒரு நோபல் பரிசு தந்து விடலாம். தொட்ட தொட்ட இடம் எல்லாம், இண்டு இடுக்கு எல்லாவற்றிலும் கிண்டலும் கேலியும், குபீர் என்று நகைச்சுவையும், அதே நேரத்தில் அந்த மகா இதிகாசங்களின் உள்ளர்த்தங்கள் கெடாமலும், இதிகாச கர்த்தாக்களின் வாழ்க்கை ஆய்வுகளில் பன்னெடுங்காலமாகத் தொழிற்பேட்டை வைத்து நடத்திவரும் அவலத்தையும் ஒருங்கே ஒரு ஆசிரியரால் ஒற்றைக் கிழியில் திறந்து போட முடிகிறது என்றால், அப்பறம் என்ன சார் சந்தேகம்? எழுத்துதான் தேவ லோகத்தின் சாவி என்பதற்கு?

ஒன்றுமில்லை. ஹோமர் ஹோமர்னு ஒத்தரைச் சொல்வாங்க தெரியுமா உங்களுக்கு? ஹோம்வொர்க் பண்ணாதவர் ஹோமர் என்ற் நாங்கள் ஸ்கூலில் இருக்கும் பொழுது கிண்டலடிப்போம். ஏனெனில் வாய்க்கு வந்த படி பாடிக்கொண்டே திரிந்தவர். அவர் எங்கு பிறந்தார்? கிட்டத்தட்ட 7 நகரங்கள் உரிமை கொண்டாடுகின்றன, ஆங்யா இங்கனதான் பொறந்தாருன்னு. சரி இருக்கட்டுமே. யார் பொய் சொல்லுவா,? இந்த விஷயத்துல? என்ன தெரியறது இதுலேந்து. ஹோமர் அம்மா கனவேகத்துல நகர்ந்துகொண்டிருந்த பிரசவ ஆஸ்பத்திரி வண்டியலதான் ஹோமரைப் பெற்றிருக்கிறாள் -- இதுதானே முடிவாறது? என்னிக்குப் பிறந்தார்? இன்னிக்கு, இல்லை அன்னிக்கு, இல்லை அந்த நூர்றாண்டு, இல்லைனனா இந்த நூற்றாண்டுன்னா? இப்படியே ஆறு நூற்றாண்டு வாக்குவாதம். இப்படி பார்த்தா அவர் அம்மாவுக்கு லேபர் பெயின் ரொம்ப நாளா இருந்திருக்குன்னு தெரியறது. என்ன கிண்டலா? என்று என்னை முறைக்காதீர்கள். எல்லாம் ஆர்மர் என்ற கிறுக்கன் பண்ணும் அட்டகாசம்.

ஹோமரைப்பற்றி முதல் வாசகமே ஆரம்பிக்கிறான் பாருங்கள். Almost nothing is known about Homer, which explains why so much has been written about him. --' ஹோமரைப்பர்றி ஒரு எழவும் தெரியல்லை, அதுனாலத்தானோ என்னவோ அவரைப்பற்றி மலைமலையா எழுதிக்குவிக்கறானுக.'
ஹோமருக்குக் கண்ணு தெரியாதும்பாங்க. அதுக்கும் எழுதறாரு நம்ம கிறுக்கர் (எதுக்கும் மரியாதையா சொல்வோம். அப்பறம் நமபளைப்பற்றி எதையாவது எழுதிவச்சா?)

---ஹெரோடோடஸு, இன்னும் சிலபேரு, ஹோமரைப்பற்றிம் கண் குருடு என்று எழுதிவச்சுருக்காங்க. ஆனா அவருடைய கவிதைகளின் உள்ள நமக்கு நிறையா நிரூபணம் கிடைச்சிருக்கு, அவருக்குப் பெண்கள்கிட்ட ஒரு கண் இருந்துருக்குன்னு ---

Herodotus and others have described Homer as blind, although internal evidence in his poems suggests that he had an eye for the ladies.

அவரு கலயாணம் கட்டினாரா இல்லையான்னு தெரியல்லை. ஆனா ஒரு கிரிட்டிக், அதாவது திறனாய்வாளர் (பரவாயில்லை கொஞ்சம் பொறுத்துக்குங்க) சொல்ராரு --- இல்லை ஹோமர் ஒரு கட்டை பிரம்மச்சாரிதான்' அப்படீன்னு. ஏன் தெரியுமா? இலியட்டையும். ஒடிஸியையும் எழுதினது 'ஒற்றை ஆளு'தானாம். ஒத்தக்க்ட்டை.

*

ரிச்சர்டு ஆர்மரின் The Classics Reclassified என்ற நூலைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருந்தேன். இந்த நூல் எண்ணி 140 பக்கங்கள்தான். ஆனால் ஹோமர், வில்லியம் ஷேக்ஸ்பியர், ஸர் வால்டர் ஸ்காட், நாதனியல் ஹாதோர்ன், ஹெர்மன் மெல்வில், ஜ்யார்ஜ் எலியட், சார்லஸ் டிக்கன்ஸ் என்ற ஏழு மாதிரி ஆசிரியர்களை எடுத்துத் தம் நையாண்டி மேளத்தில் அந்த ஸப்த ராகங்களை வாசித்துக் காட்டுகிறார். ஹோமரைப் பார்த்தோமா? ஸர் வால்டர் ஸ்காட்டைப்பற்றி ஆர்மரின் மிளகுரசம் இப்படி ஓடுகிறது. ஸ்காட்டின் வேவர்லீ நாவல்கள் என்பது மிகபிரசித்தம். ஆனால் ஆர்மருக்கு

His first fat volumes were called the Waverley Novels, which, as the name indicates, were somewhat unsteady of aim. Scott considered them potboilers, and so did those readers who used them to keep the fire in the cookstove going when they ran out of coal.

இப்படியாகத்தானே ஆர்மர் கடங்காரனின் அட்டஹாஸங்கள் இந்தச் சின்னூண்டு நூலில் பக்கத்திற்குப் பக்கம் சிரிப்பைக் கிளப்புகிறது. 

*
இன்னிக்கு எடுத்துக்கற புத்தகம் என்ன தெரியுமா? 'லோட்டாங்கை அகராதி'. என்ன அப்படிப் பார்க்கிறீங்க? Left handed Dictionary. ஓஹோ இங்கிலீஷ்ல சொன்னா ஓஹோவா? தமிழ்ல லோட்டாங்கைன்னதும் புரியலையா? சரி தூய தமிழ்ல இடக்கை அகராதின்னு வச்சுக்குங்க. அதுல வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்கும். எப்படி? 

இன்னொரு டிக்‌ஷனரி -- Webster's Unafraid Dictionary. அதுல சொற்களுக்குப் பொருள் எவனுக்கும் பயமில்லை எதுக்கும் அச்சமில்லை என்றபடி இருக்கும். என்னது? லோட்டங்கை அகராதி என்னாச்சுன்னு பார்க்கிறீங்களா? என்ன பண்றது? தேடினேன் கிடைக்கலை. இதான் கிடைச்சது. அதுமாதிரியேதான் இது. அதான் ப்ளேட்டை மாற்றிவிட்டேன். சரி கேளுங்க. (நீங்க எதைக் கேட்டாலும் நான் தரப் போறதில்லை.)

courage அப்படீன்னா என்ன சொல்லுங்க பார்ப்போம்? துணிச்சல். வீரம் ஒத்தர் சொல்றாரு பாருங்க

A strong desire to live taking the form of readiness to die.

எனக்குச் சாவைப் பத்தி டோண்ட் கேர் அப்படீம்பாங்க. ஆனா ஐயோ வாழ்க்கைன்னு உள்ள அடிச்சுக்கும் -- அந்த மனநிலைக்குப் பெயர்தான் கரேஜ் என்கிறார் ஜி கே செஸ்டர்டன். cowardice அப்படீன்னா என்ன சொல்லுங்க? 
கோழைப்பய கோழைப்பய (ச ஆண்பாவம் பொல்லாது) கோழைப்பொண்ணு கோழைப்பொண்ணு -- அப்படீன்னா துணிச்சல் இல்லை அப்படீன்னு அர்த்தம் இல்லையா? ஆனா மார்க் ட்வையின் சொல்ற விதமே வேற.

Of the various protections against temptation, this is the surest.

எது? கோழைத்தனம். சபலத்துலேந்து நம்ம காப்பாத்தற பாதுகாப்புகள் அனைத்திலும் சிறந்தது எது? கோழைத்தனம். நினைச்சுப் பாருங்க. கோழைத்தனம் இருக்கப் போயிதானே நாம முக்காலே மூணுவீசம் பேரு தப்புத் தண்டா செய்யாம இருக்கோம். நம்மள அறநெறிச் செல்வர்களாக இருக்க வைத்து நம்ம மானத்தைக் கப்பல் ஏத்தாம பார்த்துக்கற இந்தக் கோழைத்தனத்துக்கு எல்லாரும் ஒரு ஓ போடுங்கோ. இந்த அச்சமில்லை அகராதி யார் தொகுத்தது என்கிறீர்களா?

Leonard Louis Levinson, Collier Books New York

***

No comments:

Post a Comment