செயற்கரிய செய்வார் பெரியர் என்பார் செந்நாப்போதார். உண்மைதான். எத்தனை கடிய துறை இந்த வேதாந்தம் என்பது! அதை யாருக்கும் புரியவிடாமல் அடிக்க வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டால் போல்தான் இருக்கும் அந்தத் துறை சார்ந்த வித்வான்களின் நடை. அவர்களின் நோக்கம் அதைப் புரிய விடாமல் அடிக்க வேண்டும் என்பது அன்று. கருத்துகளுக்கு மிகவும் உண்மையாக மொழியை அமைக்க வேண்டும் என்ற தீவிர உண்மைத்தனம் உள்ளவர்களுக்கு அதற்கு மேல் எளிமையாக விளக்க முடியாது. சொல்ல வந்த கருத்தைக் கொச்சைப் படுத்தியாவது நடையை எளிமையாக்குவது மிகவும் பரிகாசமானது. நியாயம்தான். அதனால்தான் வேதாந்தம் என்றால் என்ன என்று பொது மக்கள் அளவில் பெரிய புரிதல் இலாமலே போய்விட்டது. அதைப் புரிந்துகொண்டு என்ன ஆகவேண்டும் என்று கேட்பாருக்கும் பதில் சொல்லப் புரிந்துகொண்டும், புரிய வைத்தும்தானே ஆகவேண்டும்.
அதனாலேயே பழைய மரபு சார்ந்த வித்வான்களுக்கு எவ்வளவு ஆசை இருந்தாலும் விஷய கனம் மிக்க துறை ஆகையாலே வேதாந்தம் என்பது பொதுமக்கள் விஷயமன்று என்ற நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் பெரிய அளவில் வேதாந்தத்தைப் பொதுமக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் திறம்பட ஆங்கிலத்திலும், தமிழிலும், அந்த அந்த பிரதேச மொழிகளிலும் கொண்டு சென்றவர்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்துத் துறவிகள்தாம் என்பதைத் துணிந்து சொல்லலாம்.
ஆங்கிலத்தில் சிறு சிறு நூல்களாக, அருமையான பதவுரை விளக்கங்களுடன் நூல்களைப் பார்த்தாலே வாங்க வைக்கும் ஆக்கத்துடன் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தார் தந்த விதம் பலரையும் சாத்திர நூல்களைக் கையில் வாங்கிப் புரட்டிப் பார்க்க வைத்தது. தமிழிலோ ஸ்ரீஅண்ணா சுப்ரமணியம் அவர்கள் சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்து வெளியீடுகளாகத் தந்த சாத்திர நூல்கள் ஒரு பெரும் உதவியாக இளைஞர், முதியோர், பெண்கள் என்று அனைத்து மக்களுக்கும் ஊக்கத்தைத் தந்தன. அதுவும் ஸ்ரீ அண்ணா அவர்களின் நூல்களில் கீழ்க்குறிப்புகள் மட்டுமே பெரும் ஆய்வு உதவிகளாக இருக்கும். படிக்கும் போதே பிரமிப்பாய் இருக்கும். இவ்வளவு விஷயம் சொல்லியிருக்கிறாரே எவ்வளவு விலை என்று பார்த்தால் ஒரு காபி விலை காணாது, பல நூல்களில்.
நான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்து நூல்களால் பெற்ற நன்மை அளவிடற்கரியது. பிறகு கடுமையான மரபு சார்ந்த அணுகுமுறையிலும், மொழிநடை துலங்கும் பழம் நூல்களிலும் பெரும் அளவிற்கு உள் நுழைந்து கற்க எனக்கு அடித்தள உதவியாக இருந்தது ஸ்ரீராமகிருஷ்ண மடத்து நூல்கள். அந்த மாதிரியான பொதுமக்கள் சேவையில் பெரும் சாதனைகள் படைத்திருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த ஒரு துறவியார், வேதாந்தம் என்னும் பெரும் துறைசார் கல்வியில், ஹிந்து மத்த்தின் சான்று நூல்கள் மூன்று என்று கருதப்படும் பிரஸ்தானத் திரயம் எனப்படும் நூல்கள் அனைத்தையும் மிக எளிய தமிழில் வெளியிட்டு முடித்துப் பெரும் சாதனையும் உதவியும் புரிந்திருக்கிறார். அந்தத் துறவியின் பெயர் சுவாமி ஆசுதோஷாநந்தர்.
ஹிந்து மதத்தின் மூன்று முக்கிய நூல்களுக்குப் பெயர் பிரஸ்தானத் திரயம் என்று சொன்னேன் அல்லவா? என்ன மூன்று நூல்கள் அவை?
உபநிஷதங்கள்
ஸ்ரீகீதை
பிரஹ்ம சூத்திரம்
என்னும் இவையே அந்த மூன்று நூல்கள். உபநிஷதங்கள் கிட்டத்தட்ட 108 அதற்கும் மேல் என்ற கணக்கில் உள்ளன. 60 என்ற கணக்கு வேத சாகைகளில் காணப்படும் உபநிடதங்கள் மட்டும் என்ற அளவைக் கொண்டு கணக்கிடப்படுவது. ஸ்ரீஆதிசங்கரர் தொடக்கமான ஆசாரியர்கள் பலரும், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், த்வைதம் என்று, பலரும் விளக்கம் செய்திருக்கும், ஆதாரமாகக் கையாண்டிருக்கும் உபநிடதங்கள் என்று பார்த்தால் மொத்தம் 12 அல்லது 14 அல்லது 18 வரை தேரும். அதில் எல்லாரும் தொட்டிருக்கும் உபநிடதங்கள் என்று பார்த்தால் பத்து உபநிடதங்கள் முக்கியம். அவை,
ஈசம்
கேனம்
கடம்
பிரச்னம்,
முண்டகம்
மாண்டூக்யம்
ஐதரேயம்
தைத்திரீயம்
சாந்தோக்கியம்
பிரஹதாரண்ணியகம்
என்பன. இந்தப் பத்து உபநிடதங்களுக்கும் சுவாமி ஆசுதோஷாநந்தர் எளிய தமிழில் அருமையான விளக்கத்துடன் எழுதிக் கொண்டு வந்துவிட்டார்.
மார்ச் 3 ஆம் தேதி ஸ்ரீராமகிருஷ்ண ஜயந்தி உற்சவத்தன்று கடைசியில் மிச்சம் இருந்த பிரஹதாரண்ணியகம் என்னும் உபநிடத நூலுக்கும் விளக்கம் வந்துவிட்டது. ஏற்கனவே மகத்தான முயற்சியாக பிரஹ்ம சூத்திரம் என்னும் வேத வியாசர், பாதராயணர் செய்த வேதாந்த சூத்திரங்களுக்கு எளிய விளக்கத்துடன் கொண்டு வந்தார். அதைப் பார்த்த பிரமிப்பே எனக்கு இன்னும் அடங்கவில்லை. அதற்குள் சாந்தோக்கியம், பிரஹதாரண்ணியகம் எல்லாம் முடிந்துவிட்டன. ஸ்ரீகீதைக்கு பல் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டார். ஆக ஹிந்து மத ஆதார நூல்கள் மூன்றுக்கும் எளிய தமிழில் விளக்கம். படிக்கத் தூண்டும் நடை. பண்டித கடபுடா மொழிநடையில் சிறிதும் தலைகாட்டாத உருவாக்கம். வேறு என்ன வேண்டும் வேதாந்தத்தை என்றோ மக்களின் பொதுச் சொத்தாய் ஆக்கியிருக்க வேண்டிய பணியை இன்றாயினும் செய்து முடித்த அரும் சேவைக்கு? சுவாமி ஆசுதோஷாநந்தருக்கு என் மனப்பூர்வமான நன்றிகளும், வாழ்த்துகளும் உரியன.
***
No comments:
Post a Comment