Thursday, May 2, 2019

பரிபாடல் திரட்டு ஒரு பாட்டிற்கான ஓர் உரைமுயற்சி

பரிபாடல் திரட்டில் முதல் பாட்டு. 

நான்மாடக் கூடல் எதிர்கொள்ளப் பெருகிய வையையாற்றின் கரையில் இருந்தையூர் அமர்ந்த செல்வனைப் பற்றியது. இந்த இருந்தையூர் என்பது இப்பொழுது இருக்கும் கூடலழகப் பெருமாளின் சந்நிதியைக் குறிப்பதாகக் கருதுவர் ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர் ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள். 

வான் ஆர் எழிலி மழை வளம் நந்த, 
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து, 
நான்மாடக் கூடல் எதிர்கொள்ள, ஆனா 
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய 
இருந்தையூர் அமர்ந்த செல்வ! நின் 
திருந்துஅடி தலை உறப் பரவுதும் தொழுது. 

இருந்தையூர் அமர்ந்த செல்வன் விரும்பி உறைவது எங்கு? என்னது? இருந்தையூர் என்றதும் அங்கமர்ந்த செல்வன் தானே? பின்னர் என்ன கேள்வி விரும்பி உறைவது எங்கு? என்று. 

பெரிய தோட்ட வீடு. நாம் அந்த வீட்டில் இருக்கிறோம். எங்கு வேண்டுமானாலும் இருப்போம். ஆனால் நமக்குப் பிடித்த இடம் என்று இருக்கும் தானே. அந்த மாமரத்துக்குக் கீழ கட்டிலைப் போட்டுக்கிட்டு உட்கார்ந்தா அதுவே சுகம் -- என்று உட்காருவது உண்டு அல்லவா! 

அது போல் இருந்தையூர் அமர்ந்த செல்வர் விரும்பி உறைவதும் ஒரு துறையில். இவ்வாறு விரும்பி உறைதல் என்பதைத்தான் 'மேய' என்னும் சொல் குறிக்கிறது. 

ஏன் அந்தத் துறைக்கு என்ன விசேஷம்? 

ஆனா மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை -- 

தீம் நீர் -- இனிய நீர்; இனிமையாய் இருந்தால் நல்லதாக இருக்காது. ஆனால் இதுவோ இனிமையும் நன்மையும் ஆம். இந்த நன்மையோ ஏதோ இருந்தால் சிறப்பு; இல்லையெனில் பரவாயில்லை என்னும் படியானதன்று. 

இன்றியமையாத மருந்து -- ஆனா மருந்து. 

மருந்தாகவும், இனிமையாகவும் இருக்கும் நீர். போக்யமாகவும், ஔஷதமாகவும் இருக்கும் நீர். 

இங்கு நீர் என்பது symbolism. உண்மையில் நீர் என்பதால் 'நீர்மை' என்பது குறிக்கப்படுகிறது. நீர்மையாவது 'சீலம்' 
நல்ல தன்மை ஸௌசீல்யம். அதாவது அனைவருடனும் புரையறக் கலந்து பழகும் தன்மை. 

மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கிட்டி அனுபவிக்க நிற்கும் குணம் ஸௌலப்யம் -- எளிமை. சுலபனாம் தன்மை. 

அவனிடம் ஸௌசீல்யம் இருந்தால்தான் அவனை யாரும் அணுகுவதற்கான ஸௌலப்யமும் இருக்கும். 

'நீர் மலி துறை' 'தீம் நீர் மலி துறை'  
'ஆனா மருந்து ஆகும் நீர் மலி துறை' 

அப்படி எதுவேனும் மருந்தாகவும், இனிமையாகவும் ஒரேசமயத்தில் உண்டோ? உண்டு . பால். பருக இனியது, பருகினால் நல்லது. 

பொதுவாக மருந்து உட்கொள்ள கடுமை. கொண்டால் நன்மை. 

அவனுடைய பரத்வ நிலை எல்லாம் புரிந்துகொள்ளவே கடினம். புரிந்துகொண்டால் நன்மை. 

அவதாரமாக அவன் வந்த பெருமை எல்லாம் அந்தக் காலத்தில் இருந்தால், புரிந்துகொள்ளும் பாக்கியம் இருந்தால் நன்மை. 

அந்தர்யாமி நிலை நெடுநாள் யோகம் பயின்று உள் சென்றால் மனம் நிலைத்தால் கிடைத்து நன்மை. 

ஆனால் என்றென்றைக்கும் பின்னானார் வணங்கும் சோதியாக அமர்ந்த அர்ச்சா அவதாரம், கோயில் மூர்த்தி நன்மையும், இனிமையும் ஒருங்கே திகழும் துறை. 

ஆனா மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை -- 

இந்த நீர் எங்கிருந்து வருகிறது? 

வான் ஆர் எழிலி மழைவளம் நந்த -- 

வான் தந்த வரம். 

அது தேன் ஆர் சிமைய மலையின் இழி தந்து. 

The mortal earth sweetens the blessings of the Divine Sky. 

Descent of the Supermind என்பார் அரவிந்தர். 

வான் தந்த வரம் 

தேன் தந்த மலை 

ஏன்று கொண்ட நான்மாடக் கூடல் 

நன்மையும், இனிமையும் ஒன்று சேரலாம். ஆனால் அது வேண்டாம் என்பார் இருந்தால் அனைத்தும் நிஷ்ப்ரயோஜனம் அல்லவா? 

அவ்வாறின்றி கொள்ளும் பயன் அறிந்த கூர்த்த மதியர், கொண்ட பயன் உவந்த கொள்கை உளத்தர் வாழும் நான்மாடக் கூடல் எதிர்கொள்ள 

இருந்தையூர் அமர்ந்த செல்வ! 

நின் திருந்து அடி தலை உறப் பரவுதும் தொழுது. 

அவன் திருத்தாள்களைத் தலையில் அணியும் ஆசாரம் எத்தொன்மையதோ அறியோம். 

பரவுதல் -- போற்றுதல்; புகழ்தல்; விரும்புதல். 

திருந்து அடி. ஏற்ற அடி. உகந்த அடி. 

வீடு பேற்றின்பம் விரும்புவார்க்கு ஒரே கதியான ஒண் நலத்து அடி. 

தன் சொத்தான ஜீவன் தன்னை வந்து அடைவதால் தனக்கு ஏதோ பெரும் பயன் கிடைத்து விட்டது போல் இறும்பூது கொள்ளும் அடி -- திருந்து அடி. 

துயரறு சுடரடி -- துயர் அறுக்கும் சுடரடி. தான் துயர் அறும் சுடரடி. 

நம்மாழ்வாரின் வரிகளும் இந்தப் பரிபாடல் திரட்டின் வரியும் ஒரே த்வனியில் பேசுகிறது எதேச்சையான ஒன்றல்லவே! 

ஒரு சார் 

அணிமலர் வேங்கை, மராஅ, மகிழம், 
பிணி நெகிழ் பிண்டி, நிவந்து சேர்பு ஓங்கி, 
மணி நிறம் கொண்ட மலை. 

ஒரு சார் 

தண் நறுந் தாமரைப் பூவின் இடைஇடை 
வண்ண வரி இதழ்ப் போதின் வாய் வண்டார்ப்ப, 
விண் விற்றிருக்கும் கயமீன் விரிதகையின் 
கண் வீற்றிருக்கும் கயம். 

ஒரு சார் 

சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு உற்று 
உழவின் ஓதை பயின்று, அறிவிழந்து 
திரிநரும், ஆர்த்து நடுநரும், ஈண்டி, 
திரு நயத்தக்க வயல். 

கவிதை என்பதைக் காண வேண்டினால் மிகச்சிறந்த கவிதைப் பகுதியாகும் இந்தப் பகுதி பரிபாடல் திரட்டின் முதல் பாட்டில். 

மலை, குளம், வயல் என்ற இந்த மூன்றும் திருமால் கோயிலின் மருங்கு எப்படி திகழ் சிறப்பின் முயக்கம் பெற்றுத் திகழ்ந்தன என்கிறார் புலவர். 

மூன்று மரங்கள் அழகிய மலர்களை அணிந்திருக்கின்றன. வேங்கை, வெண்கடம்பு என்னும் மராஅ மரம், மகிழ மரம் இந்த மூன்று மரங்களில் மலர்கள் அணிந்திருக்கின்றன. 

மலர்கள் அணிந்திருத்தால்தான் மரத்திற்கு அழகோ? 

அழகு என்பது அணிவதிலும் இருக்கிறது; கட்டவிழ்வதிலும் இருக்கிறது என்கிறார் புலவர். அணிந்த மலர்களால் அழகு என்பதை வேங்கை, மராஅ, மகிழம் காட்ட, கட்டவிழ்ந்த மலர்களால் அழகு என்பதை பிணி நெகிழ் பிண்டி என்னும் அசோக மரம் காட்டுகிறது.  


குளத்தில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. 

போதுகளின் இதழ்களில் வண்டுகள் ரீங்கரிக்கின்றன. 

மலர்களின் இடைப்பட்ட குளப் பரப்பானது, நடுநடுவில் தாமரை மலர்கள் மலரக் காண்பது அபூர்வமான காட்சியாய் இருக்கிறது. விண்ணின் கய மீன் என்பது நட்சத்திரங்கள். கய மீன் - பெரிய நட்சத்திரங்கள். காட்சி மயக்கம் ஏற்படுகிறது. 

மலர்களை மொய்ப்பது விண்மீன்களா? 

அல்லது வண்டுகள் மொய்ப்பதும் விண்ணிலா? 

விரிந்த விண் எப்படி இந்தக் கயத்தில், குளத்தில் அடங்கியது.? 

பரம்பொருள் எப்படி இந்தக் கோயிலில் மக்கள் காணத்தக்க விக்கிரகத்தில் கோவில் கொண்டான்? 

இயற்கையின் மர்மமும் நமக்குப் புரியவில்லை. 

இயற்கைக்கு அதீதமான வஸ்துவின் தர்மமும் நமக்குப் புரியவில்லை. 

இயற்கையின் மர்மம் காட்சித் தோற்றம் என்னில், கோயில் கொண்ட பிரான் காணாத் தோற்றம். 

வயல்களோ என்னில் கரும்பின் சாறு பிழியும் ஒலி; 

அதை விஞ்சி உழவர்களின் உழவு ஒலி; 

கள்ளுண்டு அறிவிழந்தவர்களும், ஒலி எழுப்பிக் கொண்டே நாற்று நடுநரும் செறிந்த வயல்கள். 

வினையில் ஊன்றியவர்களும், வினைப்பயன் உண்ணும் இனிமை மிக்கவர்களும் குழுமிய வயல்கள். 

அவனிடம் தங்கள் நோக்கங்களைத் தவம் செய்து பெற பல்லாற்றானும் முனையும் உபாஸகர்களும், அவன் அருளே வாழ்வு நமக்கு என்று நிச்சயம் அடைந்தவர்களாய் அவன் அன்பில் திளைத்துத் தம்மை மறந்து கடவுட் காதலில் தம்மை இழந்தவர்களும் அந்த ஊரில் நிறைந்திருப்பர். 


ஒரு சார் 

அறத்தொடு வேதம் புணர்தவம் முற்றி, 
விறல்புகழ் நிற்ப, விளங்கிய கேள்வித் 
திறத்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி, 
அறத்தின் திரியா பதி. 

மரங்கள், வயல்கள், உழவின் ஓதை, உழைப்பவர், உழைப்பின் பயனில் களிப்பவர் என்று சித்திரம் தீட்டிய புலவர் அறம் பொருள் காமம் என்று முப்பாலின் திறத்ததாகிய உலக இயற்கையைக் கடந்து, நில்லா உலகில் நிலைத்தது எது என்ற தேட்டம் பிறப்ப, அதனால் வீடு பேறு என்னும் உயர்ந்த உறுதிப்பொருளில் நாட்டம் சென்ற அந்தணர்களின் காட்சியைக் காட்டுகிறார். 

அந்தணர் என்போர் வேதமே தமது வீடுபேறு என்னும் தேட்டத்திற்குச் சிறந்த கண்ணாய்க் கொண்டவர்கள். வேதங்களில் வேள்விகள் என்றும், பரம்பொருளைப்பற்றிய வர்ணனை என்றும் பகுதிகள் உண்டே. அதில் வேள்வியைக் கைக்கொண்டு அதனால் சொர்க்கம் முதலிய நெடுங்கால சுக உலகுகளை ஆசைப்பட்டு அதற்கு உறுப்பாக, பல காம்ய யாகங்களை இயற்றிச் செல்லுபவரும் உண்டு. அவரும் வேதம் என்ற கண்ணைக் கொண்டு சரியான பார்வையை அடையாமல் வழி தவறியவரே. ஏனெனில் சிறந்த பொருளை இழிந்த நோக்கத்திற்குப் பயன் படுத்துவோர் அறியாதார் தாமே! 

பின் வேதம் எதற்கு ஏற்பட்டது? சின்னாள் இருந்து பின் மறைந்து படும் உலக சுகங்களை அடைய வேதம் எதற்கு? நிலையாமையே நிலைத்த உலகின் தாழ்வை உணர்ந்து நிலைத்த பரம்பொருளை அடைவது அன்றோ வேதங்களைக் கற்றலின் பயன். 

வேதாத்யயன முகத்தாலே பகவத் லாபத்திற்கு உறுப்பு என்று பிராம்மணர்க்கு சிறப்பு கூறப்பட்டதே அன்றி, அவ்வாறு பகவானிடம் பக்தியை அடையாமல், வெறுமனே சாதிச் செருக்கு கொள்வதற்கு அந்த பிராம்மணத்வம் பயன்பட்டது என்றால் அந்த பிராம்மண்யத்தால் ஆய பயன் ஒன்றும் இல்லை; அந்த வேதாத்யயனம் செருப்பு குத்த கற்றவோபாதி எந்தச் சிறப்பும் இல்லையாகிவிடும் -- என்று முக்கோல் பகவர்களான ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்கள் கூறியதும் அதனாலன்றோ! 

அவ்வாறு வேதாத்யயனம் செய்து தம் கல்வியை வீணடிப்பவர்கள் அங்கு எவரும் இலர். வேதம் கூறுகின்ற பல விக்ருதி யாகங்களை, பல உபாஸனைகளை உலக நன்மைக்காக பரம்பொருள் இட்ட ஆணை என்று கொண்டு பரம்பொருளின் வழிபாடாகக் கருதி இயற்றும் புகழ் மிக்கவர்கள் அந்தணர்கள். வேதம் அறத்தொடு புணர் தவம் முற்றி, விறல் புகழ் நிற்ப -- (விறல் --ஆணை). 

கேள்வி என்பது சுருதி. ஆரண்யகங்கள், உபநிஷதங்கள் என்னும் பகுதியைச் சிறப்பாக சுருதி என்பது மரபு. வேதாந்தம் என்பதும் இவையேயாம். 

வேதாந்தக் கல்வி பிரஸித்தமாக இருந்தது மதுரையம்பதி. -- விளங்கிய கேள்வி. 

பெரியாழ்வார் வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்ததும் இந்தப் பதியிலன்றோ!

ஏனெனில் வேதாந்தக் கல்வியின் திறத்தின் திரிபு இல்லாத பழுத்த அறிஞர்கள் பல ஊர்களிலிருந்தும் விரும்பி வந்து வதியும் இடமாக அது திகழ்ந்தது. 

வேதாந்தக் கல்வியைக் கற்று, வேதம் வெறும் கர்ம காண்டம், உலகம் வெறும் மாயை, நானும் பொய் நீயும் பொய், என்றெல்லாம் திறத்தின் திரிந்து போனவர்களாய் இல்லாமல், 

விளங்கிய கேள்வித் திறத்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி -- 

வேத அறத்தின் திரியா மதுரையம்பதி. 

வேதத்தை விட்ட அறம் இல்லை 
வேதத்தில் ஓதத்தகும் அறம் எல்லாம் உள -- 

என்று கூறினார் அன்றோ திருமூலர். 

(குறிப்புகள் -- 

விறல் --ஆணை -- "ஏவல் மெய்ப்பாடு இலாஞ்சனை சூளே ஆவயின் விறல் செயல் ஆணைக் கிளவி"  (திவாகர நிகண்டு: 11: 242) 

இந்த விறல் கொஞ்சம் நோண்டப்பட வேண்டிய விஷயம் போல் தெரிகிறது. 

அதாவது டாக்டர் உ வே சா பதிப்பித்த பழைய உரைகள், மற்ற சங்கப் பாடல்களுக்கான குறிப்புரைகள் எல்லாவற்றிலும் விறல் என்றால் வெற்றி, பெருமை, சிறப்பு,  என்றுதான் போடுகிறார்கள். 

ஒரு வரியில் முதல் பகுதியில் வென்றி என்று வரும். அடுத்த பகுதியில் விறல் என்று வந்தால் யோசிக்க மாட்டார்களோ -- உடனே அதற்கும் வென்றி என்று பொருள் என்று போடுகிறார்கள். 

அந்த மாதிரி பல இடங்களில் இந்த விறல்==ஆணை என்ற பொருளைப் பொருத்திப் பார்த்தால்தான் சிறப்பாக இருக்கிறது. இல்லையேல் சொன்னதையே சொல்வதுபோல் ஆகிவிடுகிறது. 

ஓர் இடத்தில் 'விறல்படை' என்று மன்னனின் அணுக்கப்படையைச் சொல்கிறார்கள். அதற்கும் வெற்றிப்படை என்று பொருள். அங்கு ஆணைப்படை என்று வைத்துப்பார்த்தால் மன்னனின் அணுக்கப்படை மன்னனைக் காப்போம் அன்றேல் உயிர் துறப்போம் என்று சூளுறவு பூண்டு நின்ற படை என்பது மிகப் பொருத்தம் வாய்ந்தது ஆயிற்றே! 

பெருங்கதையில் ஓரிடம் --- 1 உஞ்சைக் காண்டத்தில் 151,152 வரிகள். 

"வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும் 
ஒன்றிய நண்பும் ஊக்கமும் உயர்ச்சியும் 
ஒழுக்க நுனித்த உயர்வும் இழுக்கா 
அமைச்சின் அமைதியும் அளியும் அறனும்" 

என்று வருமிடத்தில் வென்றியும், விறலும் வேறு வேறு என்று தெளிவாய்க் காட்டித் தனியாய்ப் படித்திருக்கிறார்கள். ஆனாலும் பொருள் சொல்லும் போது வென்றியும் விறலும் ஒன்றுதான். 

ஒன்றுமில்லை. இங்கு ஆக்ஞா என்னும் ஆணை என்ற இயல்பான ராஜரீகத்தை நினைத்துப் பாருங்கள். அவன் ராஜ்ஜியத்தை ஆண்டாலும் சரி இல்லையானாலும் சரி காட்டில் மரவுரி தரித்து அலைந்தாலும் சரி, அவன் பிறவி வேந்தன் என்றால் அவன் இயல்பிலும், பேச்சிலும் ஆணை இருக்கும். அவன் சொல்லைக் கேட்டோர் கீழ்ப்படிதலையே விரும்பிச் செய்யும் அளவிற்கு ஆணைக் குணம் உடையவன். ஏவல் புரியும் உள்ளக் கிளர்ச்சியைத் தன் இயல்பாலேயே மற்றவ்ரிடம் ஏற்படுத்த வல்லவன். இந்தப் பொருள் படும்படியாக விறல்==ஆணை என்ற நிகண்டுப் பொருள் போட்டுப் பார்த்தால்தான் பல இடங்களில் சிறக்கிறது. 

இதுபோல் பல இடங்கள் இந்த பரிபாடல் விளக்கம் எழுதப்புகும் போது குறித்து வைத்தேன். ஏனெனில் இந்தப் பரிபாடலில் விறல்புகழ் நிறுத்தி என்பது விளங்கிய கேள்வி என்னும் வேதாந்தத்தின் முன்னர்  வருகிறது. அங்கு வெற்றி என்ற பொருள் என்ன சிறப்பு? அந்தணர் வேதாந்தத்தின் வெற்றியை நிறுத்தி என்று பொருள் சொன்னால் ஏதோ ஒப்புக்குப் பொருள் சொன்ன கணக்காய் இருக்கிறது. முதல் வரிகளான 'அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி' என்பதன் பின்னர் 'விறல்புகழ் நிறுத்தி'. என்ன பொருள்? 

அறத்தொடு வேதம் புணர் தவம் என்றால் என்ன? 

பழைய சங்கப் பாட்டுகளில் 'புணர்த்த' என்னும் சொல் ஆளப்பட்டிருக்கும். பொருந்துவித்த, கூட்டியமைத்த என்னும் பொருள். fixing tea, fixing coffee, orchestrating an event, a symohony இந்த இடத்தில் ஃபிக்ஸிங், ஆர்கஸ்ட்ரேடிங் என்னும் சொற்கள் காட்டும் பொருள் சாயை உடையது 'புணர்த்தல்'. 

புலவர் இங்கு வேதம் புணர்த்த என்று கூறுகிறார். வேதம் எதைப் புணர்த்தது? தவம். வேதம் அறத்தொடு தவத்தைப் புணர்த்துகிறது. இங்கு பூர்வ மீமாம்ஸை என்னும் ஜைமினியின் சூத்ரங்களின் பொருளை சபர பாஷ்யத்துடன் நன்கு கற்றவர்க்குப் புலவர் கூறும் பொருள் புரியும். பூர்வ மீமாம்ஸையில் பிரகிருதியாகம், விகிருதியாகம் என்று வேள்விகளை எப்படிப் புணர்ப்பது என்று பெரும் விதி முறைகள்-- அல்காரிதம்ஸ்-- சொல்லி வைத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் அடிப்படையாக 'தர்மம்' என்றால் அதன் டெஃபெனிஷன் என்ன என்றும் முதன்முன்னம் கூறுகிறார். 

தர்மம் என்றால் என்ன? -- சோதனா லக்ஷணோSர்த: தர்ம: 

தர்மம் என்பது சோதனைப்பொருளையே லக்ஷணமாக உடையது. 

சோதனா என்றால் என்ன? இந்தச் சோதனா च என்னும் எழுத்தின் ஓகாரமான 'சோ' 

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி -- இந்தப் பாட்டில் வரும் சோதனை श என்னும் எழுத்தின் ஓகாரமான 'சோ'. த வும் ध என்னும் எழுத்தின் ஆகாரம். शॉधना

அதாவது இந்த சோதனாவும் நமது 'சோதனா லக்ஷணோSர்த:  தர்ம:' என்னும் பூர்வ மீமாஸா சூத்திரத்தில் வரும் சோதனாவும் வேறு வேறு சொற்கள். இங்கு चॊदना लक्षणॊSर्त: दर्म: என்பது தர்மம். இந்த चॉदना சோதனா என்றால் ஆணை, ஏவல். செயல் செய்யத் தூண்டுதல், ஆர்டர் என்னும் பொருளினது. ஆங்கிலம் வழிக் கற்பாருக்கு ஒப்பு நோக்க --- 

"Codana makes action begin and so Sabara describes 'codana' as kriyAyA: pravartakam vacanam, "a declaration which instigates action" 

To a certain extent it is entirely correct to translate codana as "injunction", since it is an injunction, in ordinary usage, which prompts one to action. "

(pp 137 Thinking Ritually -- Rediscovering the Purva Mimamsa of Jaimini -- by Francis X Clooney, S J. Vienna 1990 ) 

எனவே வேதம் ஆணையே தன் இலக்கணையாய் உடைய அறத்தைத் தவத்துடன் புணர்த்தி, அந்தத் தவம் முற்றி, விளங்கிய கேள்வி --என்று தம் பாடலின் வரிகளை அமைக்கிறார் புலவர். 

'விளங்கிய கேள்வி' அதற்கு முன் வருவதுதான் நமது 'விறல்புகழ் நிறுத்தி' என்ற சொற்றொடர். 

இப்பொழுது புரியும் என்று நினைக்கிறேன் ஏன் இங்கு விறல் என்பதற்கு 'ஆணை' என்ற பொருளைத்தான் கொள்ள வேண்டும் என்று. ச்ருதிர் ஸ்மிருதிர் மம ஏவ ஆக்ஞா: என்று பரந்தாமன் உரைத்ததற்கேற்ப ஆக்ஞா என்பதன் பாகத வடிவான ஆணை என்பதன் பொருள் சாயை உடைய விறல் என்னும் சொல்லை இங்கு புலவர் ஆண்டிருக்கிறார்.) 


இவ்வாறு வேத அறத்தின் ஆணை கடவாத வேத ஒழுக்கத்தின் புகழை நிலைநிறுத்தி, உணர்வின் சுருக்கம் நீங்கி விளங்கிய உணர்வைத் தரும் கேள்வியாகிய வேதாந்தத்தின் நேரிய தத்துவ விசாரத்தில் திரியாத அந்தணர்கள் ஈண்டித் தம் அறத்தில் மாறுபடாமல் வதிந்த தெருக்களை உடைத்தாய் இருந்த பதி மதுரை என்பதைக் கூறினார் புலவர். 

("வைதிக ஸித்தாந்தமே மிகச் சிறந்தது; வேதத்தில் புகழப்படும் திருமாலே பரம்பொருள்" என்று நிலைநாட்டி, அவ்வெற்றியின் புகழ் நிலைநிற்கும்படியாக இருந்தார்கள். பெரியாழ்வார் பரதத்துவ நிர்ணயம் செய்ததும் இவ்வூரிலன்றோ -- இவ்வாறு கூறுவர் ஸ்ரீ உ வே கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார், ) 

ஆங்கு ஒரு சார் -- 

உண்ணுவ, பூசுவ, பூண்ப, உடுப்பவை, 
மண்ணுவ, மணி பொன் மலைய, கடல, 
பண்ணிய, மாசு அறு பயம் தரு காருகப் 
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒரு சார்; 
விளைவதை வினை எவன் மென் புல வன் புலக் 
களமர் உழவர் கடி மறுகு பிறசார்; 
ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் 
இயல் கொள நண்ணியவை. 

வேத ஒழுக்கமும், வேதாந்த விசாரமும் நிறைந்த அந்தணாளர்கள் ஒரு சார் ஈண்டிய பதி என்றால், அதனோடு வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துச் சிறப்புகளும், அத்தியாவசியமான பொருட்களும் குற்றம் இல்லாமல் நிறைந்த பயனுடன் கிடைக்கும் கடைவீதிகளும், தொழில் செய்வோர் பலரின் சார்புகளும் திகழ்ந்ததைக் கூறுகிறார். 

உண்பதற்கான சிறந்த பண்டங்களும், பூசும் நற்சாந்து போன்ற போகப் பொருடகளும், அழகு மிகப் பூணத்தக்க நகை முதலியவைகளும், தம் ஆளுமை மிக உடுக்கத்தக்க உடைவகைகளும், நீராடுங்கால் உடலில் தேய்த்துக்கொள்ளத்தக்க வாசனை திரவியங்களும், மலையில் உண்டான மணி பொன் முதலியவை, கடலில் உண்டான முத்து, பவழம் போன்றவை, கைத்திறமையால் பண்ணப்பட்டவை ஆகியவை எல்லாம் மாசு அறு நிறைந்த பயனோடு செறிந்த மறுகுகள் ஒரு சார்; புண்ணியச் செயல்கள் நிறைந்த ஆடை நெய்யும் தொழில் வல்லாரும், வணிகரும் நிறைந்த மறுகு ஒருசார்; 

மென்புலம் எனப்படுவன மருதமும் நெய்தலும். வன்புலம் எனப்படுவன குறிஞ்சியும் முல்லையும். இந்த மென்புலம் வன்புலம் இரண்டிலும் களத்தில் வேலை செய்யும் களமரும், அவர்களைக் கொண்டு பயிர் முதலியன விளைத்துப் பயனுண்டாக்கும் உழவரும் கூடி வாழும் மறுகுகள் ஒரு சார். 

ஆங்கு அவ்வாறு அத்தகைய நல்லவை அனைத்தும் இயல்பு தவறாமல் மிகச் செறிந்து இன்பம் கூடும் பதியாகக் கூடல் மாநகர் இருக்கும் பொழுது அங்கு தீவினை எப்படி விளையும்? என்று கேட்கிறார் புலவர். 

பொருட்களின் இயல்பு தவறச் செய்து பண்டம் விற்பாரும் இலர்; பண்ணிய தொழில்களின் இயல்பு தவற வாணிகம் செய்வாரும் இலர்; மென்புல வன்புலங்களில் உழைப்பவர்களும் இயல்புற உழைத்துக் களித்ததை முன்னரும் காட்டினார் திரு நயத்தக்க வயல் என்னும் கொச்சகத்தில். வேத ஒழுக்கத்திலும் வேத தர்மங்களின் ஆணை கடவாத புகழிலும், வேதாந்த நிர்ணயத்திலும் திரியாத அந்தணர்களும் இயல்பு தவறாமல் இருந்தார்கள். இவ்வாறு அனைத்துத் தரப்பினரும் இயல்பு தவறாமல் இன்பம் துய்க்கும் இடத்தில் தீவினை எவன் விளைவதை? என்பது புலவர் காட்டும் நிச்சயம். 

வண்டு பொரேரென எழ, 
வண்டு பொரேரென எழும்; 
கடிப்புகு வேரிக் கதவமிற் றோட்டி, 
கடிப்பு இகு காதில் கனங்குழை தொடர --- 
மிளிர் மின் வாய்ந்த விளங்கொளி நுதலார் 
ஊர் களிற்றன்ன செம்மலோரும் 
வாய் இருள் பனிச்சை வரிசிலைப் புருவத்து 
ஒளி இழை ஒதுங்கிய ஒண்ணுதலோரும் 
புலத்தோடு அளவிய புகழணிந்தோரும், 
நலத்தோடு அளவிய நாணணிந்தோரும், 
விடையொடு இகலிய விறல் நடையோரும், 
நடை மடம் மேவிய நாணணிந்தோரும், 
கடல் நிரை திரையின் கரு நரையோரும், 
சுடர்மதிக் கதிரின் தூ நரையோரும் -- 
மடையர், குடையர், புகையர், பூ ஏந்தி, 
இடை ஒழிவு இன்றி, அடியுறையார் ஈண்டி, 
விளைந்தார் வினையின் விழுப்பயன் துய்க்கும் 
துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும் --- 
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் 
வரை கெழு செல்வன் நகர். 

இருந்தையூரில் இருந்த ஆதிசேஷன் சந்நிதியில் பலவகை மக்கள் திரண்டிருந்த காட்சியைப் படமாக்குகிறார் புலவர். 

கடிப்பு என்பது மகளிர் காதுகளைப் பெருக்கிக்கொள்ள அணியும் ஆபரணம். கனங்குழை என்பது பெருக்கிய காதுகளில் மகளிர் அணியும் ஆபரணம். 

கடிப்பு இகு காதில் கனங்குழை தொடர, வண்டு பொரேரென எழ ----- 

காதைப் பெருக்கிக்கொள்ள மகளிர் காதில் தொங்கிய கடிப்பு என்னும் ஆபரணத்தைக் கழட்டிவிட்டு, கனங்குழை ஆபரணத்தைக் காதுகளில் இட்டுக் கொள்ளும் போது கைவளைகள் பொரேரென ஓசையிடுகின்றன. 

(வண்டு -- வளைகள்; இகு -- தொங்கு; தொடர -- அணிய; தொடுதல் -- அணிதல்; முன்னர் கலந்தொடா மகளிர் பாட்டிலும் வந்த 'தொடா'வை இங்கு நினைவு கொள்க) 

கடி வேரி தோட்டிக் கதவம் புகு இல் வண்டு பொரேர் என எழும் --- 

மணமும் தேனும் மாறாமல் விளங்கும் இதழ்களே மனைவாயில் கதவுகள் பூ என்னும் இல்லிற்கு. அந்த பூ இல்லத்தில் படிந்த வண்டுகள் வளையொலியைக் கேட்டுப் பொரேர் என எழுந்திருப்பன. 

மிளிர்கின்ற மின் ஒளிர்வது போன்ற விளங்கிய நெற்றியை உடைய பெண்கள் படர்ந்து செல்லும் கொடி போல் தம் நடையின் மெய்ப்பாடால் தமது காதலர்களாகிய களிறுகளில் ஊர்ந்து செல்லுவது போல் அவர்தம்மைச் சர்ந்து செல்கின்றனர். 

இருள் போன்ற முன்மயிர்த் தொகுதி, வளைந்த வில்லொத்த புருவம், மிகுந்த ஒளிவிளங்கும் அணிகள் இவை பொருந்தச் செல்லும் ஒண்ணுதலோர்கள். 

அறிவினால் புகழ் பெற்று அந்தப் புகழையே தமக்குற்ற ஆபரணமாய் அணிந்தோரும்; 

கற்பு, முதலிய நலங்களுடன் கலந்து ஒளிரும் நாணம் என்பதையே ஆபரணமாய்க் கொண்டவர்கள்; 

விடையோடு இகலிய விறல் நடையோர் ---  

நடையின் மெய்ப்பட்டால் எருதோடு போட்டியிடும் நடை வாய்ந்த இளஞர்கள்; 

(விறல் -- மெய்ப்பாடு என்ற பொருள் இங்கு சிறக்கும். ஆனால் உரைகளுக்கு ஒரே பல்லவி விறல் என்றால் இங்கும் வெற்றி) 

நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் -- 

தாம் ஒழுக்கத்தால் சிறந்திருந்தும் அதனால் சிறிதும் தருக்குறாமல் தம் சிறப்பைப் பற்றிய சுய பெருமித உணர்ச்சி காட்டாமல் இயல்பான நாணம் திகழச் செல்பவர்கள். 

(இங்கு உரைகளிலிருந்து வேறு படுகிறேன்) 

கடலில் வரிசையாய் எழுகின்ற திரைகளைப் போன்ற கருமையும், வெண்மையும் கலந்த நரைகளை உடைய நடுத்தர வயதினரும், 

சுடருகின்ற சந்திரனின் கதிர்கள் போன்று முழுதும் நரைத்த தலைமயிர் உடைய முதியவர்களும் 

ஆதிசேஷனின் அமுதுபடியாக பிரஸாதத் தட்டுகளும். 

குடைகளும், 

தூபக்கால் புகைகளும், 

புஷ்பங்களையும் ஏந்தியவராய்; 

(மடை -- சோறு) 

இடைவெளியின்றி, ஓய்வுக்காலம் இன்றி மக்கள் திரண்ட வண்ணம் உள்ளனர் அவனது திருவடி நிழலில் வாழவேண்டித் திரளும் அடியவர்கள். 

எங்கே? 

இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் வரை கெழு செல்வன் நகரில். 

நகர் -- கோயில் 

இரண்டு கருநிறப் புள்ளிகள் திகழும் பணாமண்டலம் அணிந்த தலையை உடையவனான, மலை போன்ற வடிவை உடையவனான ஆதிசேஷனுடைய கோயிலிலே இவ்வாறு அடியவர்கள் திரண்டு உள்ளார்கள். 

அவ்வாறு திரண்ட மக்கள் தம் வாழ்வின் பயனை எய்திய களிப்பில் அங்கு திரண்டிருப்பதைக் காணுங்கால் அந்தக் கோயிலானது எதைப் போன்று இருக்கிறது என்னில், 

விளைந்தார் வினையின் விழுப்பயன் துய்க்கும் 
துளங்கா விழுச்சீர்த் துறக்கம் புரையும். 
(புரையும் --ஒக்கும்)

தன் பயனைக் கொடுக்கும் காலம் முதிர்ந்து ஜீவர்களைப் பொருந்தி வரும் இருவினைப் பயன்களைக் காட்டிலும் சிறந்த நல்ல பயனைத் துய்க்கும் இடமானதும், மாறுபாடுகள், திரும்பி வருதல் முதலிய குற்றங்கள் ஏதுமற்றதும், நிலைத்த பேரின்பம் முதலிய விழுச்சீர் வாய்ந்ததுமான மோக்ஷ உலகமான ஸ்ரீவைகுண்டத்தை ஒத்து இருக்கிறது ஸ்ரீஆதிசேஷனின் கோயில். 

(குறிப்பு -- 

ஆதிசேஷனே மலை என்ற வடிவில் இருக்கிறான் என்பது அடியார்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை பரிபாடல் காலத்தும் இருந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. 

திருமலை (திருவேங்கடம்) ஸ்ரீஆதிசேஷனின் திரு உருவமே என்ற நம்பிக்கையின் காரணமாகவே ஸ்ரீராமானுஜர் அந்த ம்லையின் மீது கால்மிதித்து ஏறத் தயங்கியதும், இரவு மலை மீது தங்காமல் தாம் திரும்பி வந்ததும் என்பது அவர்தம் வாழ்க்கைக் குறிப்புகள் உணர்த்தும் செய்தி.  

இங்கும் அந்த நம்பிக்கை சுட்டப்படுவதாகக் கொள்வது பொருத்தம். 

இந்த, தமிழ் மக்களின் சமய வாழ்வியல் சார்ந்த செய்தி ஊருக்கு மலை உவமை என்று கொள்ளும் போது மறைந்துவிடும். ) 

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப, 
விண் கட கரி மேகமொடு அதிர, 
தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப, 
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப் 
புரியுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற, 
சூடு நறவொடு காமம் முகிழ் விரிய, 
சூடா நறவொடு காமம் விரும்ப, 
இனைய பிறவும், இவை போலவனவும், 
அனையவை எல்லாம் இயையும் - புனை இழைப் 
பூ முடி நாகர் நகர்.  

வரை கெழு செல்வன் கோயில் என்றார் போன கொச்சகத்தில். செல்வன் என்று ஏன் சொன்னார் ஆதிசேஷனை? 

அருஞ்செல்வத்தைப் பெற்று அழியாமல் காத்துப் போற்றும் பாக்கியவான்களைச் செல்வர்கள் என்று சொல்வோம். ஆதிசேஷனும் அருமையிலும் அருஞ்செல்வமான திருமாலைத் தன் குலதனமாகப் பெற்று அதன் அருமைப்பாட்டை நன்கு உணர்ந்தவன் ஆகையாலே அதைச் சுற்றி வளைத்துக் கஞ்சன் பெற்ற புதையலைப் போல் காத்துக்கொண்டு நிற்பவன் ஆகையாலே செல்வன் என்று கூறுகிறார். 

லக்ஷ்மணோ லக்ஷ்மீ ஸம்பந்ந: -- என்று வடமொழி மேற்கோளை ஈண்டு ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனர் கிருஷ்ண ஸ்வாமி ஐயங்கார் உதாரணமாகக் காட்டுவது மிகவும் ரசிக்கத்தக்கதாகும். 

இந்தக் கொச்சகத்திலோவென்னில் புலவர் நாகர் நகர் -- ஆதிசேஷனின் திருக்கோயில் என்று குறிப்பிட்டுக் காட்டி, அங்கு நடை பெற்ற கலை, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளைச் சித்திரம் தீட்டுகிறார். 

பண்டைத் தமிழகத்தில் ஏழிசையின் ஒலிகளைக் குறிக்குமிடத்தில் இளி, விளரி, தாரம், குரல், துத்தம், கைக்கிளை, உழை என்னும் கிரமத்தில் பெரும்பான்மை கொண்டனர். இந்த ஒலிகளைச் சுட்டும் போது இயற்கையில் மிருக பட்சிகளின் ஒலிகளில் இந்த இசைகள் நிற்கும் பொருத்தம் கருதி அந்தந்த மிருகம் பட்சிகளின் பெயரால் குறித்தனர். இளி - மயில், தவளை; விளரி -- பசு; தாரம் -- ஆடு; குரல் -- வண்டு, கொக்கு; துத்தம் -- கிளி, குயில்; கைக்கிளை -- குதிரை; உழை -- யானை, இவ்வாறு நிரலே குறித்தனர். 

ஈண்டு கலையால் பக்தியை வளர்த்த தமிழகத்தின் காட்சி தெரிகிறது. செவ்வரியோடிய கண்களைக் கொண்ட ஆடல் மகளிரும், அவர்களுக்கு ஈடு கொடுத்து ஆடல் பாடல் வல்ல ஆடவரும் மக்கள் விரும்பத்தக்க பாடல்களாலும், அதற்குப் பொருந்தக் கூடிய ஆடல்களினாலும் பாடலின் கருத்தும், உள் மனோபாவமும் பார்ப்பவர் கேட்பவர் மனத்தில் நன்கு தோன்றும்படிக் கலை நிகழ்ச்சி நடத்துகின்ற காட்சி அங்கு திருவாபரணங்கள் பூண்டு திகழும் அழகிய பணாமுடிகளை உடைய ஆதிசேஷனின் கோயிலில் நடப்பதைக் காட்டுகிறார் புலவர். 

அந்தக் கலை நிகழ்ச்சியில் பக்க வாத்தியங்கள் முழங்குமே!. யாழும், குழலும் சேர்ந்து இயைந்து ஒலிப்பதைச் சுட்டுமிடத்து வண்டொடு தும்பியும் சேர்ந்து மிழற்றும் இனிய நாதத்தை உவமையாக்குகிறார். 

இங்கே குழல் சொல்லப் பட்டிருக்கிறதா? வண்டொடு தும்பியும் என்றுதானே வருகிறது? யாழ் பற்றிய குறிப்பு வருகிறது. அவ்வளவுதானே என்றால் தும்பி என்னும் போதே குழல் கூறப்பட்டதாய்க் கொள்ள வேண்டும். ஏன்? 

வேறு ஒரு பரிபாடலில் நல்லழிசியார் என்னும் புலவர் இயற்கை இசையும், மனிதர் தோற்றுவிக்கும் செயற்கை இசையும் பக்கம் பக்கம் எழுந்து மயங்கச் செய்யும் சித்திரம் ஒன்றைக் காட்டுகிறார். (பாடல் 18) 

'ஒருதிறம், பாணர் யாழின் தீங்குரல் எழ 
ஒருதிறம், யாணர் வண்டின் இமிரிசை எழ 
ஒருதிறம், கண்ணார் குழலின் கரைபு எழ 
ஒருதிறம், பண்ணார் தும்பி பரந்திசையூத' 

என்று காட்டும் போது வாத்தியத்தில் எழும் இசையும், அதற்கு ஒத்த இயற்கை ஒலி எழுப்பும் உயிரினங்களின் ஓசையையும் பக்கம் நிறுத்தி அழகின் கலை மயக்கம் காட்டும் போது யாழின் தீங்குரலுக்கு வண்டின் இமிரிசையையும், குழலின் கரைபுக்கு தும்பியின் பரந்திசையையும் பக்கம் வைத்ததைப் புரிந்து கொண்டால் இந்தப் பாட்டிலும் 'வண்டொடு தும்பியும் வண்தொடை யாழ் ஆர்ப்ப' என்னும் வரியில் ஏன் பொருத்தப்பாட்டால் தும்பி குழலின் இசையைக் குறித்தது என்பது புலனாகும். வண்தொடை -- என்பது long-sustained overtones என்பதைக் காட்டுகிறது.

யானையின் பிளிறல் இசையில் நிஷாத ஸ்வரத்தைக் குறிக்கும். நிஷாதம் என்பது உழை. நிஷாத ஸ்வரத்தை அடிப்படையாகக் கொண்டது சாமகானம். இக்காரணம் பற்றியே யானைக்கு சாமகா என்று ஒரு பெயர். 

கட கரி என்பது மத யானை. கடம் - மதம். விண்ட - வாய்விட்டு 

வாய்விட்டு நன்கு பிளிறும் மதயானையின் பிளிறலும், மேக முழக்கமும் ஒத்திசைக்கின்றது. பத்துவித நாதங்களுக்குள்ளே மேகநாதம் ஒன்று. 

ஓயாத, நீங்காத அருவியின் ஓசையொடு பெரிய முழவுகளின் ஒலிகள் மெய்ப்பாடு தோன்ற ஒலிக்கின்றன. 

இவ்வாறு தம் திறமையால் இயற்கையின் மயக்கத்தை செயற்கை ஒலிகளில் கொண்டு வந்து நிறுத்தும் பக்க வாத்தியக் காரர்களின் கலை நேர்த்தியில் சிறந்த ஆடல் மகளிரும், ஆடவரும் கூடி நடத்தும் 'Operas' என்ன கருத்துச்சுவையை மையமாகக் கொண்டு நடக்கின்றன? 

'கண்ணன் பால் ஆவதே காமம்' என்று ஆழ்வார் பாடுவதற்கு ஏற்ப திருமாலின் பால் காமம் கொண்டு உயிர் ஏங்கும் பக்திச் சுவையைக் காட்சிப் படுத்துகின்றனர். 

'காமப் பகுதி கடவுளும் வரையார்' என்று தொல்காப்பியமும் உரைத்ததன்றோ! 'கடவுளும் வரையார்' என்றால் காமப் பகுதியில் பாட கடவுளையும் சேர்த்துக் கொள்வர் என்று பொருள். 

என்ன சொல்கிறது பாடல் பகுதி? 

'சூடு நறவொடு காமம் மகிழ்விரிய (முகிழ்விரிய) 
சூடா நறவொடு காமம் விரும்ப, 
இனைய பிறவும் இவை போல்வனவும், 
அனையவை எல்லாம் இயையும்' 

சூடு நறவு -- சூடத்தகுந்த நறவு என்னும் பூ 

சூடா நறவு -- சூடப்படாத நறவு அதாவது கள் என்பர்கள் உரைக்காரர்கள். அது ஈண்டு பொருளாகாமை அறிக. 

இங்கு சூடா நறவு என்பதன் மூலம் உலகியல் காமம் அல்லாத கடவுள் பால் ஆன காமத்தைக் குறிப்புணர்த்துகிறார் புலவர். 'கண்ணன் பால் ஆவதே காமம்' என்னும் ஆழ்வாரின் மனநிலையும் சங்கப் புலவர்களின் மனநிலையும் தோள்தீண்டியாய் இருததலை உணர்க. 

ச்ருங்கார ரஸம் போன்ற நாயகி நாயக பாவம் என்பதைக் குறிக்கவே 'இனைய பிறவும், இவை போல்வனவும், அனையவை எல்லாம் இயையும்' என்றார் புலவர். 

மக்களின் பக்தியுணர்வைக் கலை நிகழ்ச்சிகளால் வளர்த்த பெற்றிமை புனை இழை பூ முடி நாகர் கோயிலில் நடந்த காட்சியைப் புலவர் காட்டும் சித்திரம் உணர்ந்து சுவைத்தல் சாலும்.  

மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி 
அவிர் நிமிர் புகழ் கூந்தல், 
பிணி நெகிழ் துணையிணை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி 
மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண், வாணுதலோர் --- 
மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது 
இகழ் கடுங் கடாக் களிற்று அண்ணலவரோடு, 
அணி மிக வந்து இறைஞ்ச, அல் இகப்ப, பிணி நீங்க, 
நல்லவை எல்லாம் இயைதரும் -- தொல் சீர் 
வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக் 
குளவாய் அமர்ந்தான் நகர். 

தொன்மையான சிறப்பு பெற்றுத் திகழும் கோயில் ஆதிசேஷனின் கோயில். 

மலையின் அடிவாரத்தில் தழுவியபடி அமைந்திருக்கும் கல்லால் ஆன கர்ப்ப க்ருஹம். 

கோயிலை ஒட்டிய குளம். 

குளவாயில்தான் கோயில் அமைந்திருக்கிறதோ, வரைவாயிலேதான் கோயில் அமைந்திருக்கிறதோ என மயங்கும் படி குறிஞ்சியின் உரிப்பொருளும், மருதத்தின் உரிப்பொருளும் மயங்கும் படியான மக்களின் மன வாழ்வு. எப்படி? 

ஊடலும் ஊடல் நிமித்தமுமான தம்பதியர் தம்முள் மனம் பொருந்திச் செல்வது பக்தி நெறியில் என்பதைக் காட்டுகிறார் புலவர். 

நீலமணியின் கருநிறம் மருளும்படி அழகு மிகுந்த கூந்தல் வகை பெற முடிந்து நிற்கின்றன. சுருள், குழல், பனிச்சை, விலோதம், கொண்டை என்பன ஐவகை முடி வகைகள். 

கூந்தல் நெறிந்தும், செறிந்தும், தழைய பொலிந்தும், விளங்கியும், புகழ் போன்று மிகுந்தும் உள்ளது. 

உறுத்தாமல் நெகிழ் பிணியாகக் கட்டிய ஞெகிழாகிய சிலம்புகள், இரண்டும் ஜோடி சேர்ந்தனவாக, துணைஇணையாகத் தெளிந்த ஒளி பெற்றுத் திகழ்ந்தன. 

நன்கு ஆய்ந்து வடிகட்டிய மதுவை உண்டு அதனால் செவ்வரியோடிய தாமரையைப் போன்ற களிப்புண்ட கண்கள், ஊடலில் சிவந்த கண்களாகவும் இருந்தன. 

இத்தகைய ஒளி பொருந்திய நெற்றித்தடம் உடைய அழகிய பெண்களின் நடையும், அழகும், குரலும் மயில், அன்னம், கிளி முதலானவற்றின் அழகு, நடை, குரல் ஆகியவற்றை எதிர்த்து வெல்வனவாய் இருந்தன. 

இவர்களின் நடையும், அழகும், குரலும் அவற்றைப் பழிப்பனவாய் இருந்தன. 

அவர்களுடன் வந்த அவர்களின் கணவர் கடும் மதம் கொண்ட யானையின் பலத்தோடும், நடையோடும் போட்டியிடும் நடையும் பலமும் கொண்டவர்களாய் இருந்தனர். 

அவர்களும் ஊடலில் கவன்றதால் ஏற்பட்ட மனநிலையில் இருந்தனர். 

ஆனால் ஆதிசேஷனின் கோயிலுக்கு வந்ததும், நகைகளை மிகுத்து அணிந்து தம் கணவரொடு வந்து தொழுத பெண்களும், அவர்களோடு வந்த கணவரும் ஒன்றை உணர்ந்தனர். 

மனத்தின் அல்லல் போய் மறைந்தது. 

உடல் பிணியெல்லாம் நீங்கியது. 

நல்லவை எல்லாம் நன்கு பொருந்தி வாழ்வில் இயைந்தது. 

என்ன காரணம்? என்று வினவினால் பெரியோர் கூறுகின்றனர். 

ஓஹோ! ஆதிசேஷனின் வரைவாய் அமர்ந்த குளவாய் கிடந்த கோயிலுக்குப் போனீர்களா? சரி சரி. நியாயம்தான். பண்டைய காலம் தொட்டே அந்தக் கோயிலின் சிறப்பே அதுவன்றோ! 

தீராத அல்லல்களும், நோய்களும் தீர்ந்தொழிய அருளும் பெருமானன்றோ! 

இத்தகைய தொல்சீர் விளங்க நின்றது இருந்தையூரில் ஆதிசேஷனின் கோயில். 

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக்கால், வெற்புத் 
திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி, 
மகர மறி கடல் வைத்து நிறுத்து, 
புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் 
அமுது கடைய, இரு வயின் நாண் ஆகி, 
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க, 
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் 
அறாஅது அணிந்தாரும் தாம்; 
மிகாஅ மறலிய மே வலி எல்லாம் 
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்; 
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் 
அணி போல் பொறுத்தாரும் தாஅம்; 
பணிவுஇல சீர்ச் 
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி, 
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித் 
தொல் புகழ் தந்தாரும் தாம். 

திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக்கால் -- திகழும் ஒளி மிகுந்த முந்நீர்களை உடைய பாற்கடலை முன்னொரு கால் கடைந்த பொழுது, 

முந்நீர் -- ஆற்று நீர் ஊற்று நீர் மழை நீர்; இங்கு பாற்கடல் ஆகையாலே ச்ருஷ்டிக்கு முன்னிருந்த நீர், படைப்பில் சேரும் நீர், சம்ஹாரத்தில் வெளிப்படும் நீர் எனல். 

வெற்புத் திகழ்பு எழ வாங்கித் தம் சீர்ச் சிரத்து ஏற்றி ---- மந்த்ரமலையை நன்கு விளங்கும்படி எடுத்துத் தன் சிறப்புமிக்க தலையிலே ஏற்றி 

சீர்ச்சிரம் -- உலகத்தைத் தாங்கி நிற்கும் சிரம் 

மகர மறி கடல் வைத்து நிறுத்து -- மகரங்கள் உலவாநிற்கும் கடலில் நன்கு பொருந்த வைத்து நிலைப்படுத்தி, 

புகழ்சால் சிறப்பின் இரு திறத்தோர்க்கும் 
அமுது கடைய ---- தேவர் அசுரர் ஆகிய இரு திறத்தர்களுமே புகழும், அதற்கேற்ற சிறப்பும் மிக்கவர்கள். அந்த இரு திறத்தோர்க்கும் அமுதம் பெற வேண்டிக் கடையும் பொழுது 

இரு வயின் நாண் ஆகி ---- இரண்டு பக்கமும் நன்கு பலம் பொருந்திய நாண் கயிறாகத் தானே ஆகி, 

மலையைக் கடைய நாண் கயிறாக ஆனது வாசுகி என்றும் புராணம் கூறினாலும், அந்த வாசுகியின் உள்ளே ஆதிசேஷனே நின்று பலம் தந்தான் என்பது சங்கப் புலவரின் கொள்கை. 

மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க --- சக்கிராயுதம் ஏந்திய மஹாவிஷ்ணுவானவர் அந்த இருபுறமுமான வடத்தைத் தாம் ஒருவரே பிடித்துக் கடைய 

உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் 
அறாஅது அணிந்தாரும் தாஅம் ------ 

சிறிதும் அயர்வு ஏற்படாமல் மிக நீண்ட காலமான தோழம் என்னும் அளவைக் கொண்ட காலம் மலை கடையப்பட்ட பொழுதும் பொறுமையாக அந்த மலையைத் தம் சிரத்தில் ஓர் அணிகலனைப் போன்று சிறிதும் ஆயாசம் இல்லாமல் அணிந்தாரும் யார் என்றால் இந்த ஆதிசேஷனே ஆகும். 


மிகாஅ மறலிய மே வலி எல்லாம் 
புகாஅ, எதிர் பூண்டாரும் தாம்; 
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் 
அணி போல் பொறுத்தாரும் தாஅம்; 

மிகுந்த வேகம் கொண்டு காற்றுத்தேவன் ஆகிய வாயு வீச, அந்த வேகத்தில் சிறிதும் அசையாதவாறு முன்னொரு காலத்தில் மேருமலையைக் காத்து நின்ற விறல் மிக்கவரும் ஸ்ரீஆதிசேஷனேயாகும். 

முன்னொரு காலம் வாயுவுக்கும், ஸ்ரீஆதிசேஷனுக்கும் போட்டி ஏற்பட மேரு மலையின் சிகரங்கள் மூன்றைத் தான் ஊதித் தள்ளுவதாகவும், முடிந்தால் அவற்றைக் காப்பாற்றி ஆதிசேஷன் தன் வலிமையைக் காட்டலாம் என்று ஏற்பட்ட போட்டியில், ஸ்ரீஆதிசேஷன் அந்த மலைச் சிகரங்களைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி அந்தச் சிகரங்களைக் கொண்ட மேருமலை, அந்த மேருமலையைத் தாங்கி நிற்கும் இவ்வுலகம் என்ற அனைத்தையும் விளங்கி நிற்கும் படைப்புக் காலம் முழுதும் தம் சிரத்தில் ஓர் அணிகலனைப் போன்று தாங்கி நிற்பவரும் ஸ்ரீஆதிசேஷனே என்க. 

வாசுகியின் உள்ளே ஆவிர்பவித்து நாண் ஆகி நின்றும், மலயைத் தன் சிரத்தே தாங்கியும் நின்றதும் மட்டும் அன்றி வேறொரு பெருமையும் ஸ்ரீஆதிசேஷனுக்கு உண்டு. அது --

பணிவு இல் சீர்ச் 
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி, 
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித் 
தொல் புகழ் தந்தாரும் தாம் ----- 

பணியுமாம் என்றும் பெருமை என்பதுதான் பொதுவாக வழங்கும் வழக்கு. ஆனால் செல்விடைப் பாகனாகிய சிவபெருமான் விஷயத்திலோ என்னில் பணியாமல் இருப்பதுதான் சிவனுக்குப் பெருமை. 

'நில்லாதோடும் நெடுந்தேர் உருட்டி' ஏகும் பரிதி போன்று செல்விடைப் பாகன் சிவன். 

சென்று கொண்டே இருக்கும் தனமையதான எருதை வாகனமாக உடையவர். அதாவது காலத்தை வாகனமாக உடையவர் என்று பொருள். 

அந்தச் சிவனார் திரிபுரம் அழித்தபோது உயர்ந்த சிகரத்தை உடைய மலையான இமய மலையையே வளைத்து வில்லாகப் பயன்படுத்தினார். ஆனால் அதில் பூட்ட சரியான நாண் வேண்டுமே! என் செய்வது? 

முன்னர் ஒரு கால் இவ்வாறு வில் வளைக்க நாண் கயிற்றைக் கரையான்கள் அரித்துவிட்டதால் வில் நிமிர்ந்து ருத்ரனின் சிரத்தை அறுத்துவிட்டது என்று வேதம் கூறுகிறதே. இந்திரன் அன்றோ அன்று கரையானாகி அவ்வாறு நாண் கயிற்றை அறுத்தது. (தைத்திரிய ஆரண்யகம் 1--5) 

அது போல் இப்பொழுது ஆகாமல் சிவன் தலையைக் காத்து, இமயத்தை வில்லாக்கித் திரிபுரம் அழித்தார் சிவன் என்ற தொன்மையான புகழைச் சிவனுக்கு ஏற்படுத்தித் தந்தது ஸ்ரீஆதிசேஷனே என்கிறார் சங்கப் புலவர். 

பணிவுஇல சீர்ச் 
செல்விடைப் பாகன் திரிபுரம் செற்றுழி, 
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித் 
தொல் புகழ் தந்தாரும் தாம்.  



அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த 
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி, 
நல் அடி ஏத்தி நிற் பரவுதும் --- 
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. 


கண்டவர்க்கு அயிர்ப்பும் அச்சமும் ஒருங்கே ஏற்படும் வகையில் அணங்குத் தனமை கொண்ட, காணுதற்கரிய எழில் பொலிந்த தலைகள் ஆயிரமும் விரித்து ---- 

மிகப் பெரிய தத்துவத்தைத் தன் மடியிலேயிட்டுக்கொண்டு பேணிப் பாதுகாப்பவன் ஆகையாலே ஸ்ரீஆதிசேஷ பகவான் மிகவும் சீற்றத்துடன் எப்பொழுதும் காணப்படும் என்று ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் வியாக்யானங்களில் அருளிச் செய்வது இங்கு நினைக்கற்பாலது. 

பகவத் விஷயத்திற்கு என் வருகிறதோ என் வருகிறதோ என்று பதண் பதண் என்று மடிபிடித்து இருப்பான் ஒருவன் இறே ஆதிசேஷன். பகவத் விஷயத்தில் பயப்பட ஒன்றும் இல்லை. பயப்பட்டு ஜீவர்களால் ஆகப்போவதும் ஒன்றும் இல்லை. ஆயினும் பக்தியின் ஈடுபாட்டாலே தான் உணர்ந்த பகவத் விஷயத்தின் சிறப்பு அவ்வாறு இடமல்லாதவிடத்திலும் ஏதோ ஒரு பயம் கொள்ளச் செய்யும். அந்த பயத்திற்கு அஸ்தானே பய சங்கை -- இடமல்லாவிடத்தில் பயத்திற்கான சந்தேகம் -- என்று அருளிச் செய்வர்கள் பூர்வாசாரியர்கள். பரிபாடலில் உரையைக் கவனித்து வருவார் ஒன்றுணரலாம். சங்க காலத் தமிழர் சமயமான ஸ்ரீவைஷ்ணவம் சங்க நூல்களில் பேசப்படும் த்வனியும், சிறிது காலம் இடைப்பட்டுப் பின்னர் ஆழ்வார்களின் பாசுரங்களில் பக்திப் பெருக்காய் வந்து பொழியும் த்வனியும் சிறிதும் மாறுபடாமல் இருக்கக் காணலாம். இடைப்பட்ட காலம் சிறிது சுருதிபேதமும் அபஸ்வரமும் எழுந்ததும், பின்னர் சங்கத் தமிழ் தன் சொந்தக் குரலுக்கு வந்து சேர்ந்ததும் களப்பிரர் கால இருட்சியினால் என்க. 

அப்படி அணங்குடை தோற்றத்து அருந்தலை அண்ணல் தனியாக பகவத் விஷயத்தை அனுபவிப்பானோ என்னில் இல்லை, தன் கணங்கொள் சுற்றமெலாம் சூழ அனுபவிப்பன். எல்லைப்புறத்தில் எப்பொழுதும் துப்பாக்கியும் கையுமாகத் திரியும் வீரனுக்குச் சக வீரர்கள் கூட்டாளிகள் இறே. 

அத்தகைய அண்ணலை வணங்க நாமும் தனியாகப் போனால் சந்தேகப்பட்டாலும் படுவான். எனவே திருப்பாவை பாடி அனைவரையும் எழுப்பித் திரளாகக் கூட்டிக்கொண்டு போனால் மகிழ்வான் போலும். 

ஆம் உலக இன்பத்தை அனுபவிக்கத் தனிமையே வேண்டியதாய் இருக்கும். ஆனால் நலந்தரும் பேரின்பமான பகவத் விஷய அனுபவத்திற்கோ கூட்டமே தேட்டமாய் இருக்கும் என்று வியாக்யாதாக்கள் ஈடுபடுவதும் எவ்வளவு ரசமிக்கது! 

நின் நல் அடி ஏத்திப் பரவுதும் -- நின்னினும் மிக்க அருள் பொழியும் நின் திருவடிகளை ஏற்றி நாம் போற்றுவோமாக. 

துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே - என்ற சடகோபன் வாக்கு முளை கட்டும் பாரி இதுவோ! 

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே --- 

எந்தை தந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி வந்து வழி வழி ஆட்செய்யும் நாங்கள் 

ஏழாட்காலும் பழிப்பிலோம் -- நடுவில் பிரிதல் என்ற பழி எங்கள் மீது சொல்லவொண்ணாது. -- பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. 

ஒருங்கே -- ஒருவர் நினைந்தது ஒருவர் செய்கை; ஒருவர் செய்ததை ஒருவர் பேணுதல். 

ஏன் ஏத்திப் பரவுவது? ஏதேனும் பயனை எண்ணியோ என்னில் அஃதன்று, அவ்வாறு ஏத்திப் பரவுவதே பயனும் பான்மையுமாய் இருக்கை. 

மங்களாசாஸன பரை: மத் ஆசார்ய புரோகமை: 

-- மங்களாசாஸனம் என்பது பிதுரார்ஜிதமான பழக்கம். 

நாதமுனிகள் தொடங்கி எம்பெருமானார், ஸ்ரீஸ்ரீமணவாள மாமுனிகளின் அஷ்ட திக்கஜங்கள் பரியந்தம் ஈடுபாடு பொலியச் செய்த கைங்கர்யம் போல என்னுதல். 

அப்படிச் சேர்ந்தவர்களே ஒருநல் சுற்றம் எனப்படும் தன்மையர். 

எம் சுற்றமொடு ஒருங்கே. 

தொடக்கத்திலும் 'நின் திருந்துஅடி தலை உறப் பரவுதும், தொழுது' என்றார் சங்கப் புலவர். 

ஈற்றிலும் 'நின் நல் அடி ஏத்திப் பரவுதும்' என்று முடிக்கிறார். 

சங்க காலத் தமிழ்ச் சான்றோர் ஆழ்ந்து தோய்ந்த நெறி திருமாலவன் நன்னெறி என்பதைப் போரப்பொலியச் சுட்டிக் காட்டுகிறார் பொய்யறு சிந்தையரான ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் அவர்கள். 

" 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு உற்றோமேயாவோம், உனக்கே நாம் ஆட்செய்வோம்' என்னும் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தின் பரமஸாரமான பரமார்த்தத்தைக் கூறி இப்பாடலை முடித்தராயிற்று. 'நின் திருந்தடி தலையுறப் பரவுதும்' என்று தொடங்கியவர், 'நல் அடி ஏத்தி நிற்பரவுதும்' என்று முடிக்கிறபடியால், ஸ்ரீவைஷ்ணவ ஸித்தாந்தம் சங்க காலத்தில் தமிழர்களிடையே மிகப்பரவியிருந்தது என விளங்குகிறது. திருமாலின் அடியவனான ஆதிசேஷனின் திருக்கோயிலைத் துளங்கா விழுச்சீர்த் துறக்கமான மோக்ஷலோகத்திற்கு ஒப்பிடுவதிலிருந்தும், சிவனுடைய திரிபுரம் எரித்த பெருமையும் ஆதிசேஷனால் வந்தது என்று பாடுவதிலிருந்தும் சங்க காலத் தமிழர்கள் திருமாலையே பரம்பொருளாகக் கருதினர் என்றும், சிவன் முதலான தேவர்களை அப்படிக் கருதவில்லை என்றும் விளங்குகிறது." 
(சாதிமத ஆராய்ச்சி, பக் 189, ஸ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் வெளியீடு, 1977, 3, புத்தூர் அக்ரஹாரம், திருச்சி -- 1) 


என்னோடு பொறுமையாக இந்தப் பரிபாடல் திரட்டு முதல் பாடலுக்கான உரையை எழுதுவதில் விடாமல் படித்து உற்சாகம் அளித்த, மற்றும் அமைதியாகப் படித்து அனுபவித்த அன்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள். 

இத்துடன் என் உரை நிறைவு. 


அணங்குடை அருந்தலை ஆயிரம் விரித்த 
கணங்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி, 
நல் அடி ஏத்தி நிற் பரவுதும் --- 
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment