Thursday, May 2, 2019

பாரதி வாழ்க

பண்டையச் சமுதாயத்தின் நன்மைகள்
வழிவழிச் சமுதாய வழக்கின் தீமைகள்
எதிர்காலச் சமுதாயத்தின் இன்றைய தேவைகள்
நிகழ்காலச் சமுதாயத்தின் திசைகள்
இவற்றை ஒருவர் உள்வாங்கி யோசித்தால்
அதுபோதும் கிறுகிறுத்து வெறுப்படைந்து
முதுமைக்கு முந்தி முகம் வெளுக்க
இது போதும்.
ஆயினும் நீ ஆய்ந்தாய்.
அநவரதம் அதில் ஆழ்ந்தாய்;
புனரமைக்கப் பொன்னாக்கப்
புதுமைக்குப் புவி திருத்தப்
புரையோடிப் போனவற்றைப்
பொற்கதிரால் புத்துயிர்க்க
முயன்றாய் நீ!
மும்மைசால் உலகில் எல்லாம்
மனிதத்தை மீட்டெடுக்கப் பயின்றாய் நீ!
பேருந்து வழித்தடமோ, பாதையோ,
புல்லிருளின் துயர் துடைக்கப்
புல்லும்மின் சாரமோ
தாகத்தில் உயிர்நிறுத்தத் தூயநீரோ
இல்லாத காட்டில் குடிசையிலே
மாழ்கின்ற தமிழனை வையமெல்லாம்
சூழ்கின்ற அறிவில் சுடரவைக்கப்
போழ்கின்ற வச்சிரமாய் நின்னூக்கம் போந்துநிற்க
வாழ்கின்ற இந்தியனாய்
வளர்த்தெடுக்க முனைந்து நின்றாய்!
ஏழ்மையென்னும் நிலையகற்றி
ஏழையென்றால் நேரிழையார்
எவர்க்கும் அவர் இளையார்
பாழிருளாம் பெண்ணிழிவைக்
காறியுமிழ்ந்திடுவார்; கண்ணொப்பார்;
மாறிவரும் வையத் தலைமை யேற்பார்;
மண்மீது விண்ணைப்
பிறப்பிக்கும் மாண்புடையார்;
எண்ணம் சிறக்கும் ஆடவரை
இயல்துணையாய்க் கைகோத்து
வண்ணம்பல வாகை
வையத்தில் தாம்சூடும்
திண்ணம் திமிறிவரும் திறலெழிலார்;
உண்ணோக்கும் உயர்ந்த மதிநோக்கும்
என்னோக்கும் ஈடில்லா
ஏற்றமிகு கல்விநலம் ஏந்திழையார் தாம்வாய்க்க
ஊற்றமிக ஊதினாய்
விடியலின் ஒண்சங்கம்!
அதனால்
காளிக்கும் களிப்பருளும் கவியானாய்!
கன்னித்தமிழ் முன்னும் கள்வெறியில்
மன்னும் உயிர்க்குலத்தின்
மாண்புரைக்கும் அருளாடீ!
எண்ணுக்கும் எழுத்துக்கும்
மண்ணுக்குள் பூத்த தலைமுறையின்
கண்ணைத் திறந்துவிட்டால்
விண்ணை வளைத்திழுக்கும்
தெய்விகமே ஆங்கதுதான்
உய்யும் வகையறிவீர்!
உன்மத்தம் தான்தொலைப்பீர்!
உயிர்வலியில் பொய்யைப் புகுத்தாதீர்!
துயிலோயும் காலம் பிறந்ததென
துணிந்தெழுவீர் என்றுணர்த்தப்
போந்த தமிழ்க் கதிராய்,
பாரதப் புலரிசையாய்,
பாரெல்லாம் ஒன்றாக்கும்
மானிடப் பாவலவா!
ஊனம் ஒழிக்க வந்தாய்!
உலவாக் கதிரொளியால்
பேத இருள் போக்க வந்தாய்!
வேதம் புதுமை செய்ய
விளைந்தவனே!
விண்ணவனே! எங்கள்
மண்ணவனே!
வருக!

*

(பிற்பகுதி)

பாரதிரப் போர்நடத்திப் பஞ்சைகளாய் மானிடவர்
வேரழியப் போவதற்கே வேகமுடன் வேந்தர்கள்
தாரணியில் செங்குருதித் தாம்வேள்வி செய்தொழிந்தார்;
காரணியும் வானம் கதியற்ற புல்லுயிரைத்
தான்சுமந்து தாளாது தண்கதிரும் வெப்போடி
ஏனிந்த மன்குலத்தில் இப்புன்மை எனவாடிக்
காக்கும் குரலொன்றைக் கூவக் கவிப்புள்ளாய்
நீக்கமறத் தானிறையும் நித்தியத்தின் ஒத்தடமாய்
வாக்கு வடிவாகி வையமிசை தான்பூப்பப்
போக்கு வரவற்ற பூரணத்தின் பொற்குடத்தில்
போந்த வொருதுளியாய்ப் பூக்கின்ற காதலிலே
மாந்தர்தம் வாழ்வு மரிக்காமல் மீட்டுயிர்க்கும்
சூக்குமத்தைச் சொல்லத்தான் சுந்தரனும் போந்தானோ!
ஊக்கத்தால் உள்ளத்தால் ஊனைச் சுமந்தானோ!
சாதிக்கு வேலிகட்டிக் கள்ளப் பயிர்வளர்ப்பார்
சூதில் பலியாகிச் சூரியனும் அயர்வானோ!
ஏதுக்கிம் மாயையென இன்னல் வெறுத்தவனும்
ஆதிப் பரத்தில் அடங்கித்தான் போவானோ!
ஆதலினால் காதல் புரியென்ற ஆண்டகையும்
பேதலித்துப் பெண்ணொடுவாண் பிணங்கும் மதிகேட்டைத்
தூதுரைத்துச் செல்வானோ துங்கமதி நுட்பத்தீர்!
வாதுக்குச் சொல்லாமல் வாய்மைக்குச் செப்புங்கால்
துய்ய உயிர்க்காதல் தீதறுநல் மார்க்கமென
உய்ய உலகிதற்கு ஓதிவைத்த மந்திரத்தைப்
பையவே தான்விளக்கும் பாடியத்தைக் கூறானோ!
ஐய!வே தாந்தம் அதற்கும்தான் செப்பானோ!
மாய உலகின் மயக்கறுக்கும் மாநெறிகள்
ஆயும் திறல்வல்லீர்! ஆன்றபொருள் கூறீரோ!
நேயமுடன் நின்மலனார் நீள்கழல்கள் தாம்பற்றித்
தேயமிதில் தோய்ந்து திடவாழ்வு நாமியற்ற
வாய்த்த வழியுரைத்த வள்ளல் கவியானான்
மாய்த்த மனப்புன்மை மீட்டெழுப்ப முந்தாமல்
பாரதத்தால் பாரதத்தைப் பாருயரத் தான்செலுத்தும்
பாரதியை வாழ விடல்.  
***


*.

No comments:

Post a Comment