Thursday, May 2, 2019

பாரதியார் பாடல் ஒரு கேள்வியும் பதிலும்

பாரதியாரின் இந்தப் பாட்டு உங்களுக்குத் தெரிந்திருக்குமே...


சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக்கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா

 சரி இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற மனத்தில் இசைத்துக் கொள்ளலாம் என்கிறீர்களா?

கிளைவ் வியரிங் என்பவர் பெரும் இசை மேதை. ஒழுங்காகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று மூளையில் ஏதோ நோய்க் கூறுகள் தாக்கி கடந்த காலம், எதிர்காலம் என்ற பதிவுகள் ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.

I am completely awake now என்று எழுதிவிட்டுச் சில நிமிஷம் கழித்துக் கூடத் தான் தான் அவ்வாறு எழுதினோம் என்பது மறந்து போயி யாரோ எழுதியது என்று நினைத்து அதைக் குறுக்கே அடித்துவிட்டு I am completely awake now என்று மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருப்பார்.

மனைவியைப் பார்த்து இப்பொழுதுதான் பார்க்கிறேன் ஹலோ டார்லிங் என்று ஒரு நாளில் திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருந்தால் அந்த மனைவிக்கு எப்படி இருக்கும் மனநிலை

கடந்த காலம் எல்லாம் வேண்டாம் என்று இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமுற நினைக்கத் தொடங்கினால்.......கிளைவ் வியரிங் கதை மாதிரியான்னு ஒரு சின்ன பயம் தோணுது...

நீங்க எப்படி இதை விளக்குவீங்க? வியரிங் கதையை விடுங்க.. பாரதியார் வரியை விளக்குங்கள்.

கவலை இல்லாத மனிதர் உண்டா? கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும் நினைத்துத்தானே நிகழ்காலம் சாத்தியம் ஆகிறது. மூடர் என்பது தமக்கே தீங்கு விளைவித்துக்கொள்ளும் அளவிற்குச் சென்றதையே சிந்தை செய்து குமையும் மக்களை அறிவுறுத்த வேண்டி பாரதியார் விளிப்பது.

ஆனால் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று ஒவ்வொரு நாளும் ஒருவர் திண்ணமாக அந்த எண்ணத்தை திடமாக மனத்தில் கொண்டு கடந்த காலத்தை விட்டால் பின் அந்த மனநிலை எப்படி இருக்கும்? நேற்று பற்றி மனத்தில் இல்லை. இன்றுதான். எப்பொழுதும் என்றும் அன்றைக்கு இன்றுதான். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அன்று பிறந்த குழந்தையாக மன்நிலை அமைவது என்றால் அதுவே மிகவும் மூட நிலையாகத்தானே இருக்கும்? கஷ்டம், அதைச் சொல்லத் தெரியாமல் அழுகை, தூக்கம், முகம் பார்க்க முடியாமல் இலக்கு அற்ற பார்வை இதெல்லாம் சின்னக் குழந்தையிடம் நம் பாசத்தை ஊற்றெடுக்க வைக்கும். ஆனால் வளர்ந்த ஒருவர் 'நான் இன்று புதிதாய்ப் பிறந்தேன்' என்று ஒரே எண்ணத்தைத் திண்ணமுற இசைத்துக் கொண்டால் பின்னர் அவரது மனநிலை வியரிங் மனநிலை போல்தானே? மேம்போக்கா படித்துவிட்டுப் போ என்கிறீர்கள். ஆனால் பாரதியார் பாட்டு ஆயிற்றே! சொல் புதிது, பொருள் புதிது, சோதி மிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை என்றால் ஆழ்ந்து பார்க்காமல் எப்படி? ஆழ்ந்து கூட வேண்டாம். கொஞ்சமாவது யோசிக்காம எப்படிப் புரிந்து கொள்வது?

பாரதியார் சொல்கிறார் - இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு - என்று.

நாமும் அப்படியே நடைமுறைப் படுத்தலாம் என்று பார்த்தால் வியரிங் என்பவருடைய மூளை நோய் பற்றிய குறிப்பு மிரட்டுகிறது.

சரியப்பா... ரொம்ப அலட்டிக்காதே... பாரதியார் சொல்வதன் சாராம்சம் என்னவெனில் பழைசைப் போட்டு மனத்தில் குமையாதே. போனது போகட்டும் என்று இன்றைய நாள் புதிய நாள் என்று வேலையைப் பார்... அதான் டேக் இட் ஈஸி பாலிஸின்னு சினிமாவுல பாட்றாங்களே.. என்று சொல்கிறீர்களோ? அதுவ் உம் சரிதான்.

ஆனால் ஒரு கிராமத்தானுக்கே சர்வ சாதாரணமாகத் தெரிந்த ஒரு விஷ்யத்தை இப்படிப் பாட்டு போட்டு சொல்ல பாரதியார் தேவையா? எல்லாருக்குமே தோணுகிற விஷயம்தானே இது?
'அட விடம்மா.. சும்மா அதைப் பத்தியே போனதைப் பத்தியே பேசிக்கினு இருக்க.. இன்னைக்கு என்னன்னு பாரு' இந்தப் பேச்சு நடக்காத வீடு உண்டா?

மிகப்பெரிய கவிஞர்களில் எல்லாம் இதுமாதிரி சாதாரணப் பேச்சு மாதிரி இருக்கும். ஆனால் எங்கயோ ஒரு ஆச்சரியமான ட்விஸ்ட் ஒன்றும் இருக்கும். தாகூரில் இதை நிறையப் பார்க்கலாம். தாகூரில் இருந்தா பாரதியில் இருக்கணுமா? என்று சண்டைக்கு வந்தால் நான் பதில் இல்லாதவன். பெரும் கவிஞர்களில் பொதுவாக இப்படி இருக்கும் என்று சொல்ல வந்தேன் அவ்வளவே.

எனவே பாரதியாரின் வரிகளில் சாதாரண மக்களின் புழங்கு கருத்து வெறுமனே versify ஆனதுதான். வேறு ஒன்றும் இல்லை என்று தீர்மானம் செய்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. காரணம் இதைத்தாண்டி ஏதோ ஒன்று இருக்கு. இது போதாது என்று நினைக்கும் கருத்தூன்றிய கவன கணம் ஏற்பட்டால்தான் மேற்கொண்டு போக முடியும். இதுவே போதுமே என்று நினைக்கும் மனது இதைத்தாண்டி என்ன சொன்னாலும் அதைக் கவனம் கொள்ளாது.


விளக்கம்

'சென்றதினி மீளாது' என்ற பாடலில் பாரதியார் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்' என்று வழி சொல்கிறார்.

அப்படியே அவர் சொன்னபடிக்கே நடந்தால் சென்றதைக் கருதாமல் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று திண்ணமாக மனத்தில் இசைத்துக்கொண்டு நடைமுறைப் படுத்தினால் எப்படி இருக்கும்? என்று யோசிக்குங்கால் ஓர் உளவியல் நோய் பற்றிய மருத்துவச் சரிதம் ஊடே வந்து மிரட்டுகிறது. வியரிங் என்னும் இசை மேதை ஒருவரின் மூளை நோய் பற்றியது. அவர் இப்படித்தான் சென்றது அவர் மனத்தில் நிற்காது. எதிர்காலம் தோன்றாது. நிகழ்காலம் மட்டுமே நினைவில் நிற்கும். அப்படி நித்திய நிகழ்காலம் ஆனால் என்ன பிரச்சனை ஆகும் என்று அவருடைய கேஸ் ஹிஸ்டரி சொல்லுகிறது.

அப்படி என்றால் மனிதனுக்கு நிகழ்காலம் என்பதே கடந்த காலம், எதிர்காலம் ஆகியவற்றின் நினைவில்தான் அர்த்தமே ஆகிறது. இல்லையென்றால் அவன் வாழ்வே எந்தக் காலமும் அற்ற வெறும் தாவர கைமா நிலைக்கு வந்துவிடும். Just a jelly from moment to moment.

மேலும் இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்றால் அதை அப்படியே நடைமுறைப் படுத்தினால் ஒவ்வொரு நாளும் பிறந்த குழந்தையின் மனநிலை என்றாலும் அதுவும் பெரும் மூட நிலைதானே! குழந்தையாய் இருக்கும் போது அது அழகு. வயதானால் அந்த நிலை தாங்க முடியுமோ?

போதாக் குறைக்கு 'தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்' என்கிறாரா... அப்படி என்றால் எந்தப் பொறுப்பும் அற்ற ஒருவித ஹிப்பி போன்ற வாழ்க்கையா?

இப்படி இருப்பதுதானே பல தீமைகள் முளைவிடும் நிலம் என்று தோன்றவில்லையோ... ஆனால் பாரதியாரோ தீமையெலாம் அழிந்து போம் திரும்பி வாரா என்கிறாரே?

கவிஞர் சொல்வதை அப்படியே நடைமுறைப் படுத்த வேண்டும் என்று இல்லை. ஏதோ அன்றாடம் வேலையைப் பாரு. போனதை எண்ணி ரொம்ப அலட்டிக்காத என்று சொல்வதாக எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்றபடியான உபதேசம் மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் போது சரிதான். அது சாதாரண கவிதை முயற்சிக் காரர்கள் விஷயத்தில் சரிப்படும். பார்க்கப் போனால் அப்படிப்பட்ட கவிதைமுயற்சிக்காரர்கள் விஷயத்தில் அப்படி ஜென்டிலாக எடுத்துக்கொண்டு போனால்தான் நாம் தப்பித்தோம். இல்லையென்றால் நாம்தான் முட்டாளாகி விடுவோம். அப்படிப்பட்டவர்களுக்கு அந்த மாதிரி மேம்போக்கா பத்துல நாலு பழுதில்லன்னு எடுத்துக்கொள்வது சரி. ஆனால் பாரதியாரின் விஷயத்தில் அப்படிச் செய்யலாமோ? தம் கவிதைகளைப் பற்றி அவரே ஆழமாகக் கருத்து சொல்லியிருந்தும் நாம் நம் சௌகரியத்திற்காக அப்படி டேக் ஈஸி பாலிஸி என்று போனால் நஷ்டம் நமக்குத்தானே?

'ஆயிரம் காவியம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்' என்று பாரதியார் ஏசியது நம்மைக் குறித்துத்தான் என்று ஆகிவிடாதோ?

'சோதிமிக்க நவகவிதை, சொல் புதிது, பொருள் புதிது, எந்நாளும் அழியாத மாகவிதை' என்று தம் கவிதையைப் பெருமிதம் கொள்ளும் ஒரு கவிஞரிடம் போய் உம்முடைய கவிதையை ரொம்ப ஏன் எதுக்குன்னு ஆழமாகப் பார்க்காம மேம்போக்கா பொருள் கொண்டாத்தான் சரியா வருது என்று சொல்வது போலல்லவா உள்ளது நமது சோம்பல் வழி?

சரி என்று நாமாக ஏதாவது சொன்னால் 'பாரதியார் கவிதை பாமர எளிமையானது' என்ற கட்சிக்காரர்கள் என்ன சொல்வார்கள்?

'பாரய்யா இந்த அறிஞர்களை! இவர்கள் கற்ற வித்தையைக் காட்ட ஓர் அப்பாவிக் கவிஞனின் எளிமையான கவிதையைப் பிடித்து அதற்கு இப்படிப் பொருள் அப்படிப் பொருள்னு முறுக்கேற்றி பாவம் பாமரர்கள் தேமேன்னு ரசித்துஇக்கொண்டிருந்த கவிஞனைப் புரியாதவன் ஆக்கி 'புரிஞ்சுக்கணுமா எங்ககிட்ட வா' என்று கடையைப் போட்டாங்க'
என்று கோசம் போடுவார்கள்.

ஆனால் பாரதியாரே தாம் எந்தப் பொருள் வைத்துப் பாடினோம் என்று விளக்கிக் காட்டியிருந்தால் இந்த விதண்டாவாதம் எல்லாம் யாரும் பேச முடியாது.

அப்படிப் பாரதியாரே தந்திருக்கும் விளக்கம் என்ன? இதுதான் கேள்வி.


இயற்கையில் பிறப்பது என்பது ஜீவன் கர்ம பலனைத் தீர்க்க வேண்டிஎன்று சாத்திரங்கள் கூறுகின்றன.

எனவே இன்னார், இன்ன நோக்கம், இன்ன கர்மம் என்றெல்லாம் திட்டவட்டமாக இருக்கும் மனத்தில் நேற்று இன்று நாளை என்ற முக்கோணம் சுழன்றபடியே இருக்கும். இந்தச் சுழற்சியின் நடுநாயகமே 'நான் செய்கிறேன்' 'எனக்கு இது வேண்டும். அதற்காகச் செய்கிறேன்' இவ்வாறு அகங்காரம் மமகாரம் இவைதான் அச்சாக நின்று இந்தக் கர்மச் சுழலையில் ஜீவனை ஆட்டும்.

அவனிடம் போய் 'இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்று எண்ணிக்கொள் என்றால் 'போய் வேலையைப் பாரு. என்னிக்கோ பொறந்து பேரு வச்சு திட்டம எல்லாம் கச்சிதமா ஓடுது. கருதிய பலன் கைகூடுமா? கடந்த காலத்துல திட்டம் ஊத்திக்கிட்டா மாதிரி இப்பவும் ஆயிடுமா? இந்தக் கவலை எதிர்பார்ப்பு எல்லாம் இல்லைன்னா மனுஷனே இல்லை. இன்னைக்கு பொறக்கறதாமில்ல இன்னிக்கு. அதெல்லாம் வேலை வெட்டி இல்லாத ஆண்டிகிட்ட சொல்லுவே... அவன்கூட அடுத்த வேளை சாப்பாடு எங்கிட்டுன்னுதான் அலைவான். தின்று விளையாடி இன்புர்று எங்கிறீரே - அதெல்லாம் எப்படி? யாரு கொடுப்பான்? ஒங்கப்பன் சொத்து வச்சுட்டு போயிருக்கானா? - இந்தப் பதில்தான் வரும்.

எனவே கர்மத் தொடர்ச்சி ஜீவர்களைப் பிணைக்கிறதா அல்லது ஜீவர்கள் கர்மச் சுழலில் தாமே குதூகலமாக உழல்கிறார்களா என்பது தெரியாதபடிக்கு ஒன்றிப்போய் குலாவிகிட்டுருக்கு.

ஆனால் கர்மச் சுழலில் பெரும் அடிகள் வாங்கும் போது ஐயோ இந்தச் சுழலில் மாட்டிக்கொண்டோமே என்று ஜீவன் பதறுகிறது. ஆனாலும் பிரசவ வைராக்கியம் போல் அடுத்த அல்ப சுகம் வந்ததும் ஆஹா என்ன இன்பம் என்று மீண்டும் மறந்துவிடுகிறது.

ஆகமொத்தம் ஜீவன் தான் உண்மையில் யார் என்பதையே மறந்துவிட்டது. கேட்டால் 'நான் கர்த்தா, இதோ இந்த செயல்களைச் செய்கிறேன். நான் போக்தா, இன்பம் துய்ப்பவன், இதோ இந்தச் சுகங்களை அனுபவிக்கிறேன். அதற்கு வேண்டும் உபகரணங்கள், சாதனங்கள் எல்லாம் என்ன என்று அறிகிறேன். பலன்களை விரும்பி நான் செய்யும் காரியங்கள் பலிக்க வேண்டும். அதுதான் எனக்கு மகிழ்ச்சி. இல்லையென்றால் எனக்கு வருத்தம்.' இப்படித்தான் தன்னைப் பற்றி ஜீவன் திடமாக நினக்கிறது. இதில் கர்மத் தொடர்ச்சியில் முக்காலத்தின் கையிலும் மாட்டிக்கொண்டு மொத்துண்டு அவ்வப்பொழுது சிறிது சுகம் அடைந்து இந்த ஓட்டத்தில் சிறைப்பட்ட துரும்பாய்த்தான் ஜீவனின் வாழ்க்கை.

இந்த ஓட்டம் அலுத்துப் போய் பெரும் அடிகள் வாங்கி, கொஞ்சம் யோசனை பிறந்து இந்தச் சுழலிலிருந்து விடுதலை கிடையாதா? இதிலேயே குமைய வேண்டுமா? என்று ஏங்கும் பக்குவம் பிறந்த ஜீவனுக்குத்தான் சாத்திரங்களே ஏற்பட்டன. இந்தப் பக்குவம் உதியாதவரை சாத்திரங்கள் இருந்தும் ஜீவனுக்கு அவற்றால் பயனில்லை.

பாரதியாரும் இந்தப் பக்குவம் பிறந்து கவலையில் இருந்து விடுபடத் தவிக்கும் ஆட்களுக்குத்தான் தமது யோசனையைக் கூறுகின்றார். அல்லது மனத்திற்கு உரைப்பது என்னும் உத்தியில் கூறுகிறார்.

என்ன கூறுகின்றார்?

ஒரு பொருள் தன் இயல்பு கெட்டுப் போதல்தான் அதன் அழிவு. ஜீவர்களாகிய நீங்கள் உங்கள் இயல்பு என்ன என்று மறந்து வெறும் கர்மத் தொடர்பை நீங்கள் என்று மதிமயக்கம் கொண்டுவிட்டீர்களே! அவ்வாறு மதிமயக்கம் கொண்ட மூடர்களே! அந்த மயக்கத்தினின்றும் தெளிவீர்களாக! நீங்கள் கர்மத் தொடர்பால் பற்ற முடியாத, முக்காலத்திலும் இயல்பு கெடாத ஆன்மா என்று உணருங்கள். அதுதான் நீங்கள் உண்மையாகப் பிறப்பது என்று பொருள். உடல் ரீதியாக நீங்கள் பிறந்தது ஆன்மாவாகிய உங்கள் இயல்பை மறந்து கர்மத் தொடர்பை நீங்கள் என்று மயங்க வழிவகுத்துவிட்டது. 'நான் கர்மத் தொடர்ச்சி இல்லை. என்றும் மாறாத ஆன்மா' என்ற உண்மை உணர்வு உங்களுக்கு ஏற்பட ஏற்பட நீங்கள் புதிதாகப் பிறக்கின்றீர்கள். உடலுக்கு எப்படி மாறிக்கொண்டே இருப்பது இயல்போ அதுபோல் ஆன்மாவிற்கு என்றும் மாறாமல் இருப்பது இயல்பு. நீங்கள் மயக்கத்திலிருந்து விழித்து உங்கள் இயலபை உணரும் ஒவ்வொரு கணமும் புதுப் பிறவிதான்.

இது நோயில்லை. இதுதான் ஸ்வஸ்தம் என்பது. தன்னிலையில் நிலைத்தல் என்னும் உண்மையான ஆரோக்கியம்.

இந்த விளக்கத்தைப் பாரதியார் எங்கே கூறுகிறார்?

பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் (2413, 32) இந்தப் பாட்டையே மீண்டும் எடுத்துக்கொண்டு இதன் நுட்பத்தை விளக்குகிறார். அந்தப் பகுதியை வருமாறு காண்க -



சென்றதினி மீளாது;மூடரே,
நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்;
சென்றதனைக் குறித்தல் வேண்டா;
இன்று புடிதாய்ப் பிறந்தோம்
என்று நெஞ்சில் எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.
மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!
மேதையில்லா மானுடரே!மேலும் மேலும் மேன்மேலும்
புதியகாற் றெம்முள்வந்து மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.
ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி
அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!
மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி
வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.
சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;
'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ?
நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;
நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்'
என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே
இயன்றிடுவார் சித்தரென்பார்;
பரம தர்மக் குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து
குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.
குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்
குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி
வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்
வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச்
செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்
தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர்,
அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி
அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்.


இந்தப் பாட்டு கடைசி வரி மாறி 'தீமையெலாம் அழிந்து போம்..' என்ற குறிப்புடன் 'மனத்திற்கு' என்ற தலைப்புடன் வேதாந்தப் பாடல்கள் என்னும் பிரிவில் இருக்கிறது

இந்தப் பாடலுக்கான விளக்கமாக பாரதி அறுபத்தாறு என்னும் பகுதியில் உள்ள விரிவான வடிவம் அமைந்துள்ளது.

அதாவது பாரதியாருக்கு பாரதியாரிடமே விளக்கம் காணலாம் என்பது தெரிகிறதன்றோ!

***



No comments:

Post a Comment