Friday, May 3, 2019

உறங்கும் போது காப்பவன்...

உலக மதங்களிலேயே மிகவும் உல்டாவாக விஷயங்களைப் புரட்டிப் போடுவது என்று பார்த்தால் அது ஸென் மதமாக இருக்கும். ஒரு மாட்டின் மீது ஒருவர் பயணம் செய்து கொண்டிருப்பார். பார்த்தால் மாடு ஒரு திசையை நோக்கியிருக்கும். இவர் அதன் மீது எதிர்திசையில் பயணிக்கிறவர் போன்று உட்கார்ந்திருப்பார். வாக்கியங்களும் பார்த்தால் ஏடாகூடமாக இருக்கும். ஆனால் பொறுமையாக அதனுள் நாம் அணுகிப் போனால் அது நமது பார்வையிலேயே அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்திப் புதிய பொருள்களைச் சுரக்கும். அப்புறம் பார்த்தால் இதுவன்றோ மதம் என்பது! இது நாள் வரையில் நாம் நினைத்திருந்தது வரவு செலவுக் கணக்கு அன்றோ! என்று நெஞ்சில் உறைக்கும். அது போல் பழங்காலத்திலிருந்தே வரக்கூடிய ஒரு புதுமையான மார்க்கம் ஸ்ரீவைஷ்ணவம்.

ஆழ்வார்களும், நாதமுனிகள் தொடக்கமான ஆசாரியர்களும் ஸ்ரீவைஷ்ணவத்தை உண்டாக்கினார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் அதுவரை மிகவும் சிலரே அறிந்திருந்த ஓர் அதி நுட்பமான ஆன்மிக மார்க்கத்தை விரிவாகத் திராவிட வேதங்களாலும், விளக்கமான விரிவுரைகள், தெருட்டுகள் ஆகியவற்றாலும் உண்மையான ஆன்மிக ஆர்வம் உடையாருக்கு என்றென்றைக்கும் கிடைக்கும் வழியை ஏற்படுத்தினார்கள். அதனாலேயே அவர்கள் அளவிலா பெருமைக்கு உரியவர்கள் ஆனார்கள். வேத வேதாந்தங்களில் பயின்று அதன்வழி படரல் என்பது அக்காலத்தில் பொதுவான வைதிகர்களின் ஒழுக்கம். அவ்வழியே போவதுதான் யாரும் செய்திருக்கக் கூடியது. ஆனால் ஸ்ரீராமாநுஜர் இந்த அரிய நுட்பமான, பிரதானமாக எல்லோர் கவனத்திலும் படாமல் மறைந்திருக்கும் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயம் என்னும் வேத ரகசியத்தைக் கண்டடைந்ததும், அதைத் தம் காலத்தில் பெரும்பான்மையினர் இழந்தது போல் தம் காலத்திற்குப் பின் வருவோராவது இழவாமல் பெற வேண்டும் என்று வேண்டும் வகை செய்ததும் அவருடைய சிறப்பு. எனவேதான் ஆன்மிக நெஞ்சங்களின் நன்றியும் வாழ்த்தும் அவருக்கு என்றென்றும் உண்டு.

கடவுள் என்றால் அதை நோக்கிக் கடுந்தவம் செய்ய வேண்டும். முயற்சி முயற்சி விடாமுயற்சி. ஜபம், தவம், சாதனை இவை இருந்தால்தான் நெடுங்காலத்தின் பின்னராவது கிட்டலாம். இதுதான் அன்றைக்கும் சரி இன்றைக்கும் பொதுவான ஆன்மிக உலகின் கருத்தாட்டம். ஆனால் இதற்கு நேர் எதிராக யோசித்துப் பாருங்கள். அதாவது கடவுள் என்று வந்தால், நீங்கள் பண்ணுகின்ற சாதனை என்னவாக இருக்க வேண்டும் தெரியுமோ? ஒன்றும் ஒரு முயற்சியும் நீங்கள் செய்யக் கூடாது. அது மட்டுமன்று. அவன் தான் உங்களுடைய ஆன்ம நலனுக்கு உரிய தேவையான அனைத்தையும் செய்பவன் என்றும், அவன் நிச்சயமாக உங்களுக்கான கதிப்பேற்றுக்கு ஆவன செய்கிறான் என்றும் முழுமையாக நம்பிக்கை உங்களுக்கு வேண்டும். நீங்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றோ, அல்லது எந்த வகையிலாவது உங்களை நீங்களே காப்பாற்ற உரிமையுடையவர் என்றோ ஒரு கிஞ்சித்தும் உங்கள் மனத்தில் தோன்றவே கூடாது. உங்களுடைய ஆத்மாவின் இயல்பே முற்றிலும் திருமாலுக்குச் சரீரமாகவும், சேஷமாகவும், பிரகாரமாகவும் இருப்பதுதான் என்பதை உணர்ந்து அதில் வழுவாதிருத்தல்தான் நீங்கள் செய்யக் கூடியது எல்லாம். நானும் என் பங்குக்கு ஏதாவது செய்து வைக்கிறேனே, சும்மாவாக எப்படி இருப்பது, நம்முடைய கதிப்பேற்றிற்கு நாமும் ஏதாவது உழைக்க வேண்டாமோ என்று நினைக்கவே கூடாது நீங்கள்.

பாருங்கள். உலக ஆன்மிக வழிகள் எல்லாம் ஒரு வழி என்றால் ஸ்ரீவைஷ்ணவத்தின் மார்க்கம் எப்படி இருக்கிறது பாருங்கள்! பார்த்தால் மிகச் சுலபம் போல் தோன்றக் கூடிய இது ஒரு கணம் யோசித்துப் பாருங்கள் எவ்வளவு கடினம் என்பது தெரியும். ஒன்றுமே செய்யாமல் இருப்பது பெரிய கடினமா? என்று தோன்றலாம். ஆனால் கூடவே அந்த திட நம்பிக்கை, மாறாத ஆன்ம இயல்பைப் பற்றிய தெளிவு, திருமாலே எனக்கு ரக்ஷகன், நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உரிமையுடையவன் இல்லை என்ற மகா விசுவாசம், அதற்கு எங்கே போவது? நாம் தான் நம்மையே நம்ப மாட்டோமே! அப்புறம் யாரை நம்புவோம்? அவனே நம்மிடம் வந்து போ நான் எல்லாம் கவனித்துக் கொள்கிறேன். கவலைப் படாதே' என்று சொன்னாலும், அப்படி போகிறாற் போல் போய் விட்டுக், கள்ளத் தனமாக நாம் அவன் நமக்காக ஒழுங்காகக் காக்கும் முயற்சியில் ஈடுபடுகிறானா இல்லையா என்று நோட்டம் விட்டு, மறந்து விடுவானா, ஞாபகப்படுத்த வேண்டுமா என்று சந்தேகம் பிடித்தல்லவா அலைவோம்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால் ஸ்ரீவைஷ்ணவம் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கிறது. நனவில் பேசுகிறோம். நடக்கிறோம். அங்கு போகிறோம். இங்கு வருகிறோம். ஏதாவது ஒன்று என்றால் உஷாராகக் கவனிக்கிறோம். அதெல்லாம் சரி. நன்றாக உறங்குகிறோமே அப்பொழுது கதை என்னவாக ஆகிறது? உடலுக்கு நாம்தான் உயிர். ஆனால் உறங்கும் போது இந்த உடல் ஒட்டில் இருந்து உருண்டு விழுமே என்று கூட அறியாமல் இருக்கிறோமே அப்பொழுது, நம் கட்டிற்குள் உடல் என்ன? நாமே இல்லையே அப்பொழுது? அப்பொழுது யார் காப்பாற்றுகிறார்கள் என்ற நம்பிக்கையில் நாம் உறங்கப் போனோம்சிறிய சாக்காடு போல் இருக்க கூடிய உறக்கமே நமக்கு ஸ்ரீவைஷ்ணவ நெறியைத்தானே போதிக்கிறது. அப்படியென்றால் பெரும் உறக்கமான சாவிலும் காக்கும் கரம் திருமாலே அன்றி நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள ஆள் இல்லையே.! இதைப் புரிந்து கொண்டாலே ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தின் ரகசியம் என்ன என்பது புரிந்து விடும். இதைத்தான் சொல்கிறது கீழ் வரும் வார்த்தாமாலையின் பகுதி -

"தர்சன ரஹஸ்யம் இருக்கும் படி - 'உறங்குகிற போது நம்மை நோக்குகிறவன் உணர்ந்தாலும் நம்மை நோக்கும்' என்று கந்தாடை ஆண்டான்."

***




No comments:

Post a Comment