Thursday, May 2, 2019

சூடிக் கொடுத்த நாச்சியார் தோத்திரப் பாமாலை

பழந்தமிழர் நூல் செய்யப் புகுமுன் தாம் செய்யும் நூல் தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்ப்பு என்னும் நால்வகை நூல்யாப்பினுள் யாதானும் ஒன்று பற்றி நூல் செய்வது வழக்கம். அவ்வழக்கத்தை ஒட்டி 1930களில் சேற்றூர்ச் சமஸ்தான வித்வானும், மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் அங்கத்தினர் ஒருவரும், அப்புவையங்கார் என்று அறியப்பட்டவருமான கவிபூஷணம் நரசிம்மாசாரியாரால் இயற்றப் பட்ட மொழிபெயர்ப்புச் செய்யுள் நூலே இந்த சூடிக்கொடுத்த நாச்சியார் தோத்திரப் பாமாலை என்பது

இதனுடைய முதனூல் ஆவது ஸ்ரீவைஷ்ணவ சமயாசாரியர்களுள் ஒருவரும், கவி தார்ர்க்கிக கேசரி என்று கொண்டாடப்பட்டவருமான ஸ்ரீநிகமாந்த மகாதேசிகன் என்பவரால் இயற்றப்பட்ட வடமொழி செய்யுளான கோதா ஸ்துதி என்பதாகும். மொத்தம் 29 சுலோகங்கள் அடங்கிய கோதா துதியினை ஒரு காரணம் பற்றி ஆசிரியர் தமிழில் இவ்வண்ணம் பாமாலையாக ஆக்கியுள்ளார். அதாவது நண்பர் ஒருவர் தாம் தினமும் ஆண்டாளைப் போற்றித் தொழுது ஜபிக்கும் விதத்தில் தமிழில் ஒரு தோத்திரம் இருந்தால் தர வேண்டும் என்று கேட்க, ஆசிரியர் இங்ஙனம் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் என்று தெரிகிறது.

மூல நூலான கோதா ஸ்துதிக்கு வடமொழியில் இரண்டு வியாக்கியானங்கள் உள்ளன என்பர். ஆசிரியர் தாம் மொழிபெயர்ப்பாக யாத்த பாமாலைக்கும் அந்த உரைகளின் கருத்துகள் வேண்டியன கொண்டு ஓர் நல்லுரையும், பத உரையோடு தந்துள்ளார். அதுவும் வடமொழி சொற்கள் பெரிதும் கலவா வண்ணம் தமிழ் நெறி துலங்க தமது உரையை யாத்துள்ள பண்டித அப்புவையங்கார் பாராட்டிற்குரியவர்இந்தப் பாமாலை நூல் செந்தமிழ்ப் பிரசுரமாக 1938ல் வெளிவந்துள்ளது. இதற்கு வாழ்த்து கூறும் செந்தமிழ் பத்திராசிரியரான திரு நாராயணய்யங்கார் கூறுவது

வேத விதிதவறா வேதாந்த தேசிகன்செய்
கோதை துதிதமிழாற் கூறினான் - ஓதரிய
நற்றமிழ்நூன் முற்றும் நவைதீர் வடமொழியும்
கற்றநர சிம்ம கவி

காப்பு செய்யுட்களாக நம்மாழ்வார், பெரியாழ்வார், இராமானுஜன், மணவாள மாமுனிகள், கோயிற்கந்தாடையண்ணன் ஆகியோரைத் துதிக்கிறார் ஆசிரியர். நூல் முழுதும் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களாகச் செய்துள்ளார் ஆசிரியர்.முதல் பாட்டும் அதன் மிக நீண்ட உரைப் பகுதியும், அந்த உரைப்பகுதியில் ஆசிரியர் செறிவுற வைத்திருக்கும் அருமையான தமிழிலக்கணக் குறிப்புகளும், திணை, துறை. அணி இலக்கணங்கள், பத்துவகைப் பொருத்தப்பாடுகள் ஆகியன தமிழுக்கு மிக நல்ல வரவு.

திருவளர் முகுந்த நந்தனன் இனமாம்
தேம்பொழில் கற்பகக் கொடியைக்
குருவளர் அரங்கத்து அரசு எனும் தருவில்
குலவலால் காண்டகையாளை
உருவளர் பொறையை
அருளினால் பிறிதோர்
ஒண்மலர் மடந்தைபோன்று உளாளை
மருவளர் குழல்பூங் கோதையைப்
புகலோர் மற்றிலேன்
புகல் புகுகிறேனால்.

என்று அருமையாகத் தொடங்குகிறது முதல் பாட்டு.இதற்கான மூல நூலான கோதா ஸ்துதியின் சுலோகம் -

ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தந கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தந யோக த்ருச்யாம் |
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாம் அநந்யசரண: சரணம் ப்ரபத்யே ||

எனக்கு இவருடைய சிறப்பு என்ன என்று முக்கியமாகச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த 29 சொச்சம் பாட்டுகளுக்கும் இவர் எழுதியிருக்கும் உரையை மட்டுமே ஒருவர் கற்பார் என்று வைத்துக் கொள்வோம். அவரை மற்றவர்கள் ஏதோ பெரும் தமிழ் வித்வான் பரிட்சையில் தேரியவரோ என்று ஐயப்படுவர். அந்த அளவிற்கு தமிழ் மரபு சார்ந்த இலகக்ண இலக்கியக் கல்வியை இந்த நரசிம்ம கவியால் தமது இந்த மொழிபெயர்ப்பு நூலில், அதன் உரை வளத்தில் கொண்டு தர முடிகிறது.இந்த ஒரு பாட்டிலேயே எடுத்துக் கொண்டால், எவ்வளவு அணிகள், இந்தப் பாடலில் எங்கு எங்கு இருக்கின்றன, இந்தப் பாடலின் தொடக்கச் சொல் திருவளர் என்று இருக்கிறதே அதன் பொருத்தப்பாடுகள் என்னA whole traditional structural analysis of the verse is indited by the author Narasimha Kavi.

இத்தகைய செறிவான தமிழ் மரபு தழீஇய உரையை நான் இதுவரை பார்க்கவில்லை.முதன்முறையாக பத்துவகைப் பொருத்தப்பாடுகளை ஒரு பாட்டில் எப்படிக் காண்பது என்ற நிகழ்த்து மாதிரியை இந்த உரையில்தான் காணமுடிகிறது.அலகு அலகாக பதவுரையை அளித்த ஆசிரியர் அடுத்து கருத்து என்ன, விசேடக் குறிப்பு என்ன, என்று சொல்லும் வாய்ப்பில் ஆசிரியர் அள்ளித்தரும் மொழி இயல் அம்சங்கள் அருவிருந்துஉதாரணத்திற்கு, தேம்பொழில் என்னும் சொல்லை ஆராய எடுத்துக் கொண்ட ஆசிரியர் எழுதுவதைப் பாருங்கள்

தேம்பொழில் என்பதற்கு நந்தனம் என்று பொருள் கொண்டது, தே என்பது தெய்வப் பொதுவையும், பொழில் என்பது உய்யானத்தையும் குறிக்குமாகலின், தேவோத்தியானத்திற்கே நந்தனம் என்னும் பெயருண்மையுணர்க. இஃது ஆறாம்வேற்றுமைத் தொகைநிலைத் தொடர். மெலித்தல் விகாரமுற்றுள்ளது. இதுவன்றி, வண்டு, மது, மணம் என்னும் பலபொருள் குறிக்கும் தேன் என்பது பொழில் என்னும் வருமொழியுடன் புணருமிடத்து, ‘தேன்மொழி மெய்வரின்என்ற சூத்திர விதிப்படி வேற்றுமைவழியில்தேம்பொழில்என ஆயிற்று என்றும் கொள்ளலாம். கொண்டால் மேல்வரும் கற்பகக் கொடி என்ற குறிப்பினால் நந்தனவனத்தைக் குறிக்குமென்க. கற்பகக் கொடி நந்தனவனத்திருத்தல் வெள்ளிடைவிலங்கலாம்.’ 

மேலும் பாட்டியல் நூல்கள் ஒரு பாட்டிற்கு உள்ள பத்து விதப் பொருத்தங்களாகக் கூறுமிடத்து 

பகர் செய்யுள் மங்கலம் சொல் எழுத்துத் தானம் பால் உண்டி வருண நாள் கதியே என்றாப் புகரில் கணம் எனப் பத்தும் பிறங்கு கேள்விப் புலவர் புகழ் முதன்மொழிக்குப் புகல்வர்’ 

என்று கூறும் பத்துவகைப் பொருத்தங்கள் ஆவன மங்கலப் பொருத்தம், சொற்பொருத்தம், எழுத்துப் பொருத்தம், தானப்பொருத்தம், பாற்பொருத்தம், உண்டிப்பொருத்தம், வருணப்பொருத்தம், நாட்பொருத்தம், கதிப்பொருத்தம், கணப்பொருத்தம். இத்தனைப் பொருத்தங்களும் முதல்பாட்டில் எடுக்கப்படும் முதல் சொல்லுக்கான பொருத்தப்பாடுகள். இத்தகைய பாட்டின் தொடக்க மங்கல ஆய்வுகள் வடமொழியில் பிரபலமாக நூல்கள் இயற்றி வைத்துள்ளனர். தமிழ் மரபிலும் இத்தகைய ஆய்ந்த இலக்கணக் கோட்பாடுகளும் அவற்றைத் தழுவிய விரிவான உரைகளும் உண்டு என்று காட்ட நம்மிடம் மிஞ்சிய நூல்கள் மிகக் குறைவு. இவையெல்லாம் பெரிதும் கல்வியின்பால் அலட்சிய மனப்பான்மை காரணமாக நாம் இழந்தவை போக இது போன்று தப்பிப் பிழைத்த உரைகளையாவது போற்றுவோமாக.

***


No comments:

Post a Comment