நரேன் ’விவேகாநந்தராக’ ஆனது 1863 மும்பாயில் அமெரிக்காவிற்குக் கப்பல் ஏறுவதற்கு முன்னால். ஆம் அப்பொழுதுதான் அளசிங்கமய்யங்கார் அவரைப் படிவத்தில் என்ன பெயர் போடுவது என்று கேட்ட பொழுது ‘விவேகாநந்தர்’ என்று போடுங்கள் என்றார். அவரது ரதம் வலம் வரும் வேளையில் நாம் ஏன் வெண்பா ரதம் அவரைப்பற்றி விடக்கூடாது?
***
வியனுலகு தான்மகிழ வாய்த்தவே தாந்தன்
செயம்பெறுக கண்டகனா சீர்கொள் - புயலாகிப்
புன்மை கடிந்தான் பொருள்தந்தான் வாழ்விற்கே
என்னுக் கடவோ மியாம்.
*
யாமம் கடந்ததுவால் ஈரிருளும் இற்றதுவால்
ஓமத்தீ யென்றிங்கே உண்மை யெழுந்ததுவால்
பூமடந்தை பொறையும் பலித்ததுவால் புண்ணியனும்
சேமக்காப் பானா னிவண்.
*
வண்புகழ் நாரணனார் வாழ்வளிக்க வந்திட்டார்
கண்திறந்த காசிநாதர் காக்கவந்தார் - எண்ணரிய
யோகநிலை ஆழும் இருடியிவ ரென்றென்றே
ஆகமகிழ் ராமகிருஷ் ணர்.
*
ஆமென்றும் உளதாய் அகிலமெலாம் உள்நின்று
ஓமென்ற ஒன்றாய் நிலவுவதே - நாமென்று
உண்மை இயல்பினில் ஓங்கும் உலகென்றான்
தண்மைச் சுடர்மொழியே காப்பு.
*
கல்லூரி கற்கும்நாள் கற்றவர் தாம்வியப்ப
நல்லூற்றம் தான்கொண்டு நாடினான் - அல்லொத்த
காளியருள் காதல் கருணை அவதாரன்
தாளிணையே தான்புகலாய்க் கொண்டு.
*
கொண்டொளித்த காலந்தான் மீண்டுதவ வந்தனனோ
விண்டொளிரும் வான்கருத்தே ஈந்தனனால் - எண்கடந்த
ஐயனாதி சங்கரனார் அத்வைத போதத்தை
உய்வகையாய்த் தந்தா னுவந்து.
*
உவந்து வழிநடந்து ஊரெல்லாம் சுற்றி
அவஙகள் மலிய ஆற்றான் - பவங்கடந்த
முக்திநிலை தான்துறந்தான் மக்கள் நிலையுயர
பக்தி அதுவானான் பற்று.
*
பற்றினான் பற்றற்றான் பார்மக்கள் நன்மையே
முற்றினான் மாயமிலான் மூதறிவில் - எற்றுக்காய்
இன்புதுன்பில் எற்றுண்டு இவ்வுலகில் உற்றுழல்வாய்
அன்பவன்பால் வைத்திடு நீ.
*
நீள்துயிலும் போயிற்று நில்லா உலகிதனில்
ஆள்வார்கள் ஆண்டவரும் போயொழிந்தார் - மாளாத
ஞானத்தால் மாநிலத்தில் ஞாயிறென நம்நாடு
ஊனமின்றி ஓங்கும் உயிர்த்து.
*
உயிர்கள் உலவும் அரியென்றே கண்டு
பயிலும் பலதொண்டே பக்தி - மயர்வகற்றி
மாதவனார் சந்நிதியாய் மாநிலத்தைக் கண்டக்கால்
போதமெழும் ஆங்கே உணர்.
*
உணர்வெழுந் துள்ளக் கமல மலர்ந்து
தணவா தெழுபரிதி தானணைந்து - குண்டலினி
நாகமென தான்வளைய நிட்டையுற்ற அன்னத்தை
வேகமுறு வேலை தொழும்.
*
விவேகா நந்தவென வேதாந்த மாகும்
விவேகா நந்தவென ஆத்மபோத மாகும்
விவேகா நந்தவென வீறுகொளும் ஞானம்
விவேகா நந்தவென வினைகடிய லாகும்
விவேகா நந்தவென விரியுலகு மாகும்
விவேகா நந்தவென விரியுணர்வு மாகும்
விவேகா நந்தவென புரிந்துணர்வு மாகும்
விவேகா நந்தவென புரிந்துள்ள மாழும்
விவேகா நந்தவென விஞ்சுணர்வு மாகும்
விவேகா நந்தவென பிஞ்சுளமு மாகும்
விவேகா நந்தவென கொஞ்சும்பர பக்தி
விவேகா நந்தவென மஞ்சம்பர ஞானம்
விவேகா நந்தவென அஞ்சுமொன் றாகும்
விவேகா நந்தவென தஞ்சமொன் றாகும்
விவேகா நந்தவென நஞ்சிரியும் கருமம்
விவேகா நந்தவென தன்துரிய ஞானம்
விவேகா நந்தன்மொழி விரிகவுல கெங்கும்
விவேகா நந்தன்மொழி வெல்கவெந் நாளும்
விவேகா நந்தன்மொழி தங்குகநம் முளத்தில்
விவேகா நந்தன்மொழி பொங்குகநம் குணத்தில்
விவேகா நந்தம் உலகெங்கு முறவெங்கும்
விவேகா நந்தம் உளமெங்கு முரையெங்கும்
விவேகா நந்தம் உயிர்ப்பாகும் உணவாகும்
விவேகா நந்தம் உயர்வாகும் உணர்வாகும்
விவேகம் ஆநந்தம் விவேகா நந்தம்
விவேக ஆநந்தம் விவேகா நந்தம்
விவேகம் ஆநந்த விவேகா நந்தம்
விவேக ஆநந்த விவேகா நந்தம்.
*
தொழப்போம் பொழுதில் தனதுயர் எண்ணான்
விழப்போம் மனிதகுல வீறாய் -எழுமினென்றான்
தீரமே ஆன்றவழி திண்மைவிவே காநந்தன்
சாரமொழி சிந்தைசெய் வாம்.
*
வாம்பரித்தேர் தாம்செலுத்தும் தாமோ தரனானார்
ஆம்பரிசாய் அன்றளித்தார் கீதையே - நாமறிய
நானில மெங்கெங்கும் நாரா யணநரனாய்
ஆனார் இராம கிருஷ்ணர்.
*
குமரியன்னை நோக்கக் கடுந்தவத்தில் ஆழ்ந்தான்
அமரிக்கர் அவைநடுவண் ஆன்மிகத்தூ தானான்
தமதுள்ளப் போதேறித் தூயன்வீற் றானால்
நமதுள்ளம் வீற்றா ரவர்.
*
நல்லவராய் நிற்பீர் துணிவுடன் வாழ்வீர்
பலவித சித்தாந்த அல்லல் தலைவலியேன்?
கோழைகளே பாபம் புரிவர் குவலயத்தில்
வாழும்வழி அன்பொன்றே யாம்.
*
மனிதராய் நில்லுங்கள் மக்களையே ஊக்கி
துணிவில் கனிவினில் நன்மையில் நின்றிடவே
செய்தல் கடனாம் மதம்வே றுமக்கில்லை
உய்வகையும் தானே உறும்.
*
தலைவரென தாம்நடத்தல் எத்தகை யோர்க்குமாகும்
ஆகாவாம் தொண்டின் திறம்.
*
நின்றான் நிலவுலக நல்லோர் அவைக்கணத்தே
பொன்றாப் புகழ்ப்புலரி பூவிரிய - வென்றான்தன்
ஆன்மிகத்தால் மன்பதையை ஆண்டான்தன் அன்பினால்
ஊனமற உண்மையால் அன்று.
*
அன்றிவ் வுலக மளந்தான்கொல் அன்புடனே
சென்றிவ் வுலகம் நடந்தான்கொல் - கன்றுடனே
தீங்குழலும் தெய்வத்தண் கீதையும் சொற்றான்கொல்
ஈங்கிவன் பேசியநல் மாண்பு.
*
பூத்துக் குலுங்குக பாரதம் புன்மையை
நீத்துக் குலுங்குக நன்னெறி - ஆத்தும
ஞானத்தில் ஒன்றும் மனிதரின் ஞாலமிங்கு
வானத்தை நேர்கொண்ட தால்.
ஆல்கீழ் அமர்ந்தான் இலைஆல் துயின்றானால்
நால்வர்க் குணர்த்தியகைக் காட்டுகொல் - வாலறிவன்
போந்தான்கொல் பொங்கொளி வீசும் புதுமொழியில்
ஓம்தான் உலவிய தால்.
*
உலகமோர் ஆரஞ் சுறுரசச் சொட்டும்
விலகாமல் வேட்பனென்றார் இங்கர்சால் - உலகப்
பழத்தினைநீர் என்வழியால் பூரணமாய்த் துய்ப்பீர்
அழகாக வென்றார் நரேன்.
*
வேத விளக்கம் பரமஹம்சர் வாழ்வாகும்
நாதனவன் நீண்டயுக பாரதத்தின் சாரனவன்
சாரதா தேவியருட் சத்தியத்தால் பெண்குலமே
பூரணமாய் போதமெழும் பார்.
*
பார்த்தான் பரவசத்தான் பங்கயத்தாள் பாரிப்பப்
பேர்த்தான் பெருங்கலியைப் பாரினின்றும் - ஆர்த்தார்
அநவரதம் ஆன்றோர்கள் ஆன்மிகத்தால் சீர்த்த
மனமுடைய ராகிச் சிறந்து.
*
முனிவனும் கண்மலர்ந்தான் முத்திமுகிழ் சேயும்
கனிந்தொரு சொல்மலரப் பூத்தான் - புனிதனவன்
புன்னகையே பொன்யுகத்தின் அச்சாரம் ஆயிற்றால்
உன்னதமே எய்தும் மனம்.
*
மனமாசு நீங்கும் மதிவிளங்கும் உண்மை
அனவரத மாகத்தி லோங்கும் - வனமறைகள்
உள்ளம் விளங்கும் உயர்விவே கானந்தன்
விள்ளமுதப் பேருரைத்தக் கால்.
*
மனிதனெனச் சொல்வர் அறியாதார் மற்று
மனிதனென நிற்பதுவோ தெய்வம் - மனிதனந்த
தெய்வத்தின் தொண்டர்யாம் ஆலயமோ இவ்வுலகம்
பொய்க்காத பூசை நெறி.
*
நெறியாகத் தொண்டறத்தைத் தூய துறவை
நெறிதந்தான் நன்மடம் என்றே - அறிவார்தம்
முக்தியும் மாநிலத்தின் நன்மையும் சேவையெனும்
பக்தியால் உண்டாகு மாறு.
*
(ஒரு போன் அரட்டை -- ஏனய்யா? விவேகாநந்தரை விடமாட்டேங்குறீரு. சரி. மத்தபாட்டெல்லாம் சரி. அது என்ன? விவேகாநந்த பஜனை மாதிரி, விட்டல, விட்டல விட்டல ஹரி விட்டல பாண்டுரங்கன்னு சிப்ளா கட்டை தட்ற மாதிரி ஒரு நாலு வரி போட்ருக்கீரு? என்னய்யா அர்த்தம் அதுக்கு.. அதே வார்த்தை...விவேகாநந்தம், விவேகாநந்தம்..அதை அப்படியும் இப்படியும் பிரிச்சு எழுதிட்டா...அது பாட்டா.....யோவ்...
உங்களுக்கு அந்தப் பாட்டுனோட அர்த்தம் தெரியணுமா?
எது...அந்த.,...விவேகாநந்தம் விவேகாநந்தம்...னே நாலு வரியும் எழுதியிருக்கீரே...அதுவா?
ஆமாம். அந்தப் பாட்டுக்குத்தான்...
என்ன அர்த்தம்?...விவேகாநந்தம்... அவ்வளவுதானே....
தலைவா... அந்த மாதிரியெல்லாம் ...அர்த்தம் இல்லாம எழுதற பழக்கமே கிடையாது என்கிட்ட.... அதுக்கு அர்த்தம் உமக்கு வேணுமா... இல்லை புரிஞ்ட்சுகிட்டே சும்மா சதாய்க்கிறீரா? சொல்லும்.
யோவ்..நெசமாத்தாம்பா.... அது சும்மா பஜனை பத்ததிதானே... அதுக்கு அர்த்தம் இருககா?
சரி சொல்றேன் கேளுங்க...
விவேகம் ஆநந்தம் விவேகா நந்தம்
விவேக ஆநந்தம் விவேகா நந்தம்
விவேகம் ஆநந்த விவேகா நந்தம்
விவேக ஆநந்த விவேகா நந்தம்.
விவேகம் என்பது நித்யமான பொருள் இன்னது, அநித்யமானது இன்னது என்று எவ்வளவு மயங்கச் செய்யும் தோற்றத்திலும் பிரித்துணரும் அறிவின் தீவிரம்.
ஆநந்தம் என்பது எல்லையற்றதும், முடிவற்றதும், மிகப்பெரியதுமானதும், நித்யமானதும் எதுவோ அதில் கொள்ளும் உவகை, ஈடுபாடு, இன்பம், மகிழ்ச்சி.
ஆ என்பது எல்லையற்ற தன்மையை உணர்த்தும்.
இந்த இரண்டும் ஒன்றோடொன்று கலந்தது. முழுக்க முழுக்க இதன் வடிவமாகவே இருப்பது விவேகாநந்தம். இது முதல் வரி.
அவ்வாறு விவேகமும் பேரின்பமும் பலருக்கு பல வடிவங்களில் ஏற்படலாம் என்றாலும் காலத்தின் புதிய ஒளியாகத் திகழும் விவேகாநந்தரிடத்தில் தோன்றும் ஆநந்தம் என்பதில் ஈடுபடுதல் விவேகமான ஒன்றாகும். இதை உணர்த்துவது இரண்டாவது வரி
விவேக ஆநந்தம் விவேகாநந்தம்
விவேகாநந்தரையும் அவரவர் தங்கள் மனச்சுருக்கத்திற்கு ஆட்பட்டுக் குறுக்கி இவ்வளவுதான் விவேகாநந்தர், பழையபடி வெறும் வழிபாட்டிற்கு ஒரு மூர்த்தி, மர்றபடி அவரை அப்படியே பின்பற்ற முடியாது என்றெல்லாம் குறுக்க முயலலாம் ஆகையாலே அப்படிப்பட்ட அபிப்ராயங்களுக்கு எல்லாம் ஆட்படாமல் அவர் உள்ளபடியே அகண்டமான எல்லையற்ற இயல்பில் அப்படியே உள்வாங்கி அதனால் ஏற்படும் ஆநந்தமே நாம் ஜாக்கிரதையாக இருந்து செய்யத்தக்க விவேகம் என்பது அடுத்த வரிக்குப் பொருள் -- விவேகம் ஆநந்த விவேகாநந்தம்.
இவ்வாறு நாம் ஆன்மிகத்தின் நெறிகள் பலவற்றிலும் விவேகாநந்தரைத் தேர்ந்து ஈடுபடுதல் விவேகமானது என்றும், அப்படி விவேகாநந்தரில் ஈடுபடுவதிலும், அவரைப் பற்றிப் பலரும் தம் மனச்சுருக்கங்கள் காரணமாக குறுக்கி உரைத்து, உள்ளபடியான அவருடைய எல்லையற்ற இயல்பான த்ன்மையை உணரவிடாமல் செய்துவிடக் கூடும் ஆகையாலே அவ்வாறு விவேகாநந்தரை உள்ளபடி ஓர்ந்து உணர்தல் மிக விவேகம் ஆகும் என்ற கருத்தைக் கொண்டு நாலாவது வரி
விவேக ஆநந்த விவேகாநந்தம்.
என்னய்யா... புரிஞ்சுதா....
சரிப்பா... அர்ஜண்டா ஒரு வேலை.. நான் அப்பறம் பேசறேன்.... வச்சுட்றேன்...
செல் பேச்சு நின்றது.. )
*
அத்வைதம் நல்கவிதை ஆன்ற அறம்புராணம்
மெத்தமயல் யோகம் உளவியலாய் - ஒத்திசைய
கோதுநீக்கிக் கொள்ளற் கெளிதாய் எளியோர்க்கும்
தோதுபட ஆக்கல் செயல்.
*
செயல்முறை வேதாந்தம் செய்தளித்தான் சேவை
முயற்றித் தொழும்நெறி மாட்சி - உயப்போம்
உணர்வினர் உள்ளம் களிப்ப உலகோர்
வணங்கிடும் வாய்மைத் ததே.
*
தெய்வம் தொழுமடங்கள் வேண்டிய பல்கிநிற்ப
மெய்யுணர் வாகிநிற்கும் அத்வைத - முய்வகை
ஒன்றிற்கே ஓர்மடம் நல்லிமயத் தாக்கினான்
மன்பதை மாண்புற் றதால்.
*
ஏழைகளின் நல்லுழைப்பால் கல்விகற்று சீர்பெற்று
வாழ்வின்றி அன்னார் கவலுங்கால் -- ஊழென்று
சொல்லி உதவாமல் உற்றசுகம் பேணிடுவார்
பொல்லார் துரோகி யவர்.
*
பெண்களின் முன்னேற்றம் கல்வியால் போதரும்
கண்ணதைத் தந்துவிட்டு எட்டிநில் - எண்ணற்க
அன்னார் உரிமைகள் உன்னா லென;பெண்தான்
தன்னாலே தானுயரும் தான்.
*
பாமரர் தம்மையே புன்மையாய் எண்ணியதால்
நாமிந்த ஈனமுற்றோம் நீண்டகாலம் - ஆம்வழியும்
மக்கள் உயர்வில் மனம்வைத்தே தொண்டாற்ற
புக்க யுகமாகும் பொன்.
*
ஜீவதயை என்றார் பரமஹம்ஸர் என்றலுமே
ஜீவசேவை என்றே திருத்திதம்முள் - மேவியன்று
சொல்லிய வாக்கின் திறமறிந்தார் சீடரவர்
நல்வகையால் நாட்டினார் வாழ்ச்சி.
*
பெண்ணுயர ஆவன செய்தலே சக்திபூஜை
மண்ணுயரும் மானம் உயருமே - எண்ணரிய
நன்மையெலாம் உண்டாகும் நங்கையவள் தானுயர்ந்து
தன்னுளம் தான்குளிர்ந்தக் கால்.
*
இன்னுமொரு நூற்றாண்டும் இந்நாடு நுந்தமக்கே
மன்னும் கடவுளென ஆகட்டும் - என்றுரைத்தான்
சென்னையில் அன்றந்தச் செந்துறவி செப்புமொழி
இன்னுமொரு நூற்றாண் டிரும்.
*
இருங்கடல் சூழ்வையம் வாழ இனித்தான்
வருகின்ற மானிடரும் ஓங்க - வருத்தமெலாம்
நீங்கி நிலைத்தநன்மை நிச்சலும் பல்கிடவே
ஆங்குறுதி ஆமவன் சொல்.
*
சொல்லில் சுடர்விடுக்கும் சொன்னவண்ணம் செய்தக்கால்
அல்லகன்றே ஆன்மவொளி ஆக்கும் - பல்கலையும்
பாங்குறவே பொன்றாப் பொருளில் பொருந்திவரும்
ஓங்குவிவே கானந்த மோது.
*
ஒன்றே மதமதில் ஓர்ந்திடுவார் தன்மையினால்
சென்றே பலவாகும் நன்னெறிகள் - என்றாலும்
செல்லும் வழியெல்லாம் சேர்கின்ற உண்மையதாய்ப்
பல்கும் பரம்பொருளே தான்.
*
உள்ளிருக்கும் தெய்விகத்தை உற்றதாம் வாழ்விதனில்
தெள்ள வெளிப்படுத்தல் தீர்மானம் - உள்ளவழி
அத்தனையும் உற்றசெயல் அன்பறிவு யோகத்தால்
வித்தகமாய் ஆற்றல் விறல்.
*
வீறுகொண் டேற்றம் விளங்கவே வேதாந்த
ஆறெமக் கீந்தான்நல் ஆன்மிகத்தால் - ஏறுபுகழ்
நாடேற அன்றாட வேதாந்த நன்னெறியால்
ஈடேற வைத்தான் எமை.
*
புதியதவம் தந்தான் பரமனருள் கூர
யதிவிவே கானந்தன் யாத்தான் - அதிசுலபம்
ஐயே அவனிமாந்தர் சேவையினில் துய்யபெரும்
மெய்ஞானம் தானே வரும்.
*
காளிக்கே அர்ப்பணித்தான் ஆன்ற குருநாதன்
மீளா முனிவனும் ஒத்திசைய - வேளைவர
அன்னைபணி தான்முடிய அத்வைத ஆழ்விரிவில்
தன்னையற்று நின்றான் தவம்.
*
பலவீனம் நீங்க மருந்தாம் வலிமை
பலவீனன் என்ற நினைவை அகற்றி
வலிமையெலாம் தன்னுள் விளங்குதல் கண்டே
பொலிவடைதல் புத்திக் கழகு.
*
நல்லொழுக்கம் நல்ல மனவலிமை நல்லறிவு
அல்லல் வருங்கால் அமுங்காமை - கல்வியாகும்
எப்பொழுதும் தன்னிலையில் தன்வலியால் நிற்பதுவே
இப்பொழுது கல்வி நமக்கு.
*
உள்ளத்தை நீதிறந்து வைத்தால் உலகத்தில்
உள்ளதாம் நற்கருத் தெல்லாமும் - வெள்ளமென
உன்னுள்ளே பாய்ந்து விளங்கிடுமே ஓங்குபெரு
உன்னதமும் ஆகும் உணர்.
*
தேசத்தை நேசித்தல் தேசமக்கள் மேம்படவே
ஆசகற்றி ஆன்றதொண்டு செய்தலாம் -- மாசற்ற
உள்ளத்தால் இந்தியாவே தெய்வமென ஓர்ந்ததன்பால்
கொள்கின்ற பக்தியது தான்.
*
பொதுமக்கள் வேதாந்த வாழ்க்கை பெறவே
எதுவழியாம் என்னில்பெண் வாழ்ச்சி - புதுயுகத்தில்
போதமிகு புத்தராதி சங்கரர்தம் போதனைகள்
சாதிப்பாள் மக்களுக்குப் பெண்.
*
நிகழ்வதெலாம் மிஞ்சியதோர் நேர்த்தியினால் ஆகும்
தகவுபெறப் பின்னவற்றை ஆயும் - பகுத்தறிவாம்
தோற்றத்தின் காரணம்தான் ஆகாதாம் தோன்றியதின்
தேற்றவர லாறுரைக்கும் தான்.
*
சொந்தமாம் சங்கல்பம் தானே அருட்கரமாம்
எந்தவுரு வேண்டினும் அவ்வணமே - முந்தியுரை
ஓத்துகளும் உன்னதமாம் தெய்விகரும் உன்னான்மா
ஆத்திகனாய் உன்னைநீ ஓர்.
*
பகுத்தறிவை ஆன்மிகமும் தான்கடக்கும் பார்த்தால்
பகுத்தறிவால் சோதித்தல் நன்றே - பகுத்தறியில்
மிஞ்சுவதும் எத்துணையோ அத்துணையே மிக்கபயன்
நஞ்சுபிற வீடல் நலன்.
*
உணர்வைக் கடந்துளதை உன்னி யுணர்ந்தே
உணரார்க் குணர்த்துதல் தொண்டாம் - உணராமல்
பல்வகையால் பாரோர் பரவுவர் உள்ளுணர்வில்
நல்வகையால் நாளும் நினைந்து.
*
சமாதியெனும் நன்னிலை சாரா தறிவில்
சமாதிக்குச் சத்வழியும் நம்மறிவே - சம்மதமாய்
நல்லறிவைச் சாரார் நலிவர் உணர்ச்சிகளால்
வெல்வார்க் கறிவே துணை.
*
என்றும்நீ ஆன்மா எதனால் துயருனக்கு
மன்னும் உனக்கேன் மரித்தலெனும் கற்பனைதான்
உன்னுங்கால் உன்னிலையில் ஊன்றியே நின்றிடுக
தன்வழியே வீடாகும் தான்.
*
No comments:
Post a Comment