பெண்களுக்கு மாமியார் வீட்டில் கொஞ்சம் ஏச்சும் பேச்சும் இருக்கத்தான் செய்யும் போலும்! ஒரு பெண் தம் பிறந்த வீடு விடுத்து கணவனுடைய வீடு செல்கிறாள் என்றால் அதுவே அவளுக்கு ஒரு புதிய அறிமுகமல்லாத உறவுகளின் தொடர்புகள். அதுவும் யாரைப் பார்த்தாலும் என்ன விமரிசனம் சொல்லி விடுவார்களோ என்று அச்சம். நன்கு வேலைகள் செய்து வந்தாலும் இருக்கவே இருக்கிறது, உள இயல், பாசப் போராட்டம், தேவையற்ற ஆங்காரமும் வேலை செய்யும். செய்யும் சீர் செனத்தியில் ஏதாவது குறைவு என்றால் நெடுநாள் அதுவே அம்புகள் கணக்காய் சொல் வில்லில் வைத்து எய்யப் படும். எல்லாவற்றிலும் வீரம் பேசும் ஆண் மனம் அப்பொழுது என்றால் மட்டும் தாயை விட்டுத் தர முடியுமா, நீயும்தான் கொஞ்சம் அனுசரித்துப் போக வேண்டும் என்று வேதனையில் இன்னும் வேதனையாக விளக்கெண்ணை வழியும். அந்தக் காலத்திலும் சரி. இன்று கூடுதலாய் ஒரு அம்பு - படித்துவிட்டாளல்லவா அதுதான் திமிர்! தன் வீட்டுப் பெண்ணும் வெளியில் போய் இப்படித்தானே கஷ்டப் படுவாள் என்ற எண்ணம் தோன்றினாலும்.. ஆனால் நம்காலத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மாமியாரிடம் பாசம் மிக்க மருமகள், மருமகள் என்றாலே மகளினும் பாசம் பொழியும் மாமியார் என்று இன்று அங்கங்கே நாம் பார்க்க முடிகிறது.
ஸ்ரீராமாநுஜரின் காணாத குரு ஸ்ரீஆளவந்தார். அதாவது காண வேண்டும் என்று போய் ஸ்ரீரங்கம் அடைவதற்குள் ஸ்ரீஆளவந்தார் பரமபதம் எய்திவிட்டார். ஆனாலும் ஸ்ரீராமாநுஜருக்கு ஆன்ற உபதேசங்கள் செய்ய ஐந்து ஆசாரியர்களை நியமித்துவிட்டுத்தான் போனார். அதில் முக்கியமான நாராயண மந்திரமாகிய அஷ்டாக்ஷர மந்திரம் என்னும் திருமந்திர உபதேசம் செய்வதற்கு பெரிய நம்பிகள் என்னும் ஆசாரியரை நியமித்திருந்தார். எனவே ஸ்ரீராமாநுஜராகிய எம்பெருமானாருக்கு நேரே ஆசாரியர் என்று ஒருவரைச் சொல்ல வேண்டும் என்றால் அது பெரிய நம்பிகளைச் சொல்லலாம்.
பெரிய நம்பிகளுக்கு அத்துழாய் என்னும் பெண் இருந்தாள். அவளுக்குத் திருமணம் நிச்சயித்துக் கலியாணம் ஆகி புக்ககத்திற்கு அனுப்பி வைத்தார்கள். மாமியாருக்கு என்ன மனக் குறையோ தெரியவில்லை. கொஞ்ச நாள் சென்றதும், ஒரு நாள் விடியற் காலையில் நீராடச் செல்ல வேண்டும், ஆற்றங்கரை வரையில் வந்து துணைக்குக் கூட வருவதற்கு யாரையாவது அழைத்துச் செல்ல வேண்டும். மாமியாரிடம் சொன்னார். அவருக்கு இருந்த மனப்பான்மையில், "அதுக்கு கல்யாணத்தின் போது உங்க பிறந்த வீட்டில் கூடவே அனுப்பி வைத்தார்களே அந்த சீதந வெள்ளாட்டியை அழைத்துக் கொண்டு போ" என்ற சுடுசொல் வந்தது. சீதந வெள்ளாட்டி என்பது கல்யாணத்தின் போது பெண்ணின் கூடவே பணிவிடை செய்வதற்கு என்று பணியாட்கள் யாரையாவது அனுப்பி வைப்பார்கள் வசதி உள்ளவர்கள். அப்படி வசதியான குடும்பத்தில் தன் மகனுக்குப் பெண் எடுக்க வேண்டும் என்று மாமியாரின் கனவு போலும்! வந்து வாய்த்தது இந்த மாதிரி சாதுவான ஸ்ரீவைஷ்ணவராத்துப் பெண் என்றதும் மாமியாருக்கு எரிச்சல்.
கண்ணைத் துடைத்துக் கொண்டே அத்துழாய் தந்தையான பெரிய நம்பிகளிடம் வந்து விட்டார். கேட்டால் நடந்த விஷயத்தைக் கூறினாள். பெரிய நம்பியோ, 'எனக்கு என்னமா தெரியும்.. போய் சீயரைப் பார்' என்று ஸ்ரீராமாநுஜரிடம் அனுப்பி விட்டார். ஸ்ரீராமாநுஜரிடமோ அத்துழாய்க்கு அண்ணனிடம் உள்ள உரிமையும் பாசமும். பார்க்கப் போனால் தந்தையிடம்தான் கொஞ்சம் தயங்கிக் கேட்க வேண்டும். இங்கோ சுவாதீனமாகக் கேட்கலாம். சொல்வதைக் கேட்டார் ஸ்ரீராமாநுஜர். பக்கத்தில் இருந்த முதலியாண்டானைப் பார்த்து, 'குழந்தையுடன் துணைக்குப் போய் வாருங்கள்.' என்றார். அத்துழாய்க்கு ஸ்ரீராமாநுஜரின் உறவினரும், மிகச் சிறந்த கல்வி கற்ற வித்வானுமாகிய ஒருவரே சீதந வெள்ளாட்டியாகக் கிடைத்து விட்டார்.
முதலியாண்டான், சென்று, இட்ட அனைத்துப் பணிகளையும் முகமே மாறாமல் செய்வது என்று முழுநேரப் பணியாளாக வேலைக்கு அமர்ந்ததும் அந்த மாமியார் வீட்டுக்காரர்கள் பயந்துபோய் வெலவெலத்து விட்டார்கள். இந்தப் பெரும் வித்வான் ஏன் நம் வீட்டிற்கு வந்து இப்படி எடுபிடி வேலை, தோட்டத்து வேலை, இட்ட ஏவலைச் செய்யும் பணிகள் என்று இப்படிச் செய்கிறாரே! ஐயோ என்ன காரணம் என்று தெரியவில்லையே! இதனால் நமக்கு என்ன கேடு விளையுமோ?' என்று அஞ்சிப் போய் 'ஏன் ஐயா? இப்படிச் செய்கிறீர்? நீங்கள் எவ்வளவு பெரிய வித்வான்! எங்கள் வீட்டிற்குப் பெரும் கேடு அன்றோ விளையும் இப்படி உங்களை நாங்கள் பணிகொண்டால்?' என்று கேட்டதற்கு முதலியாண்டான், 'எனக்குத் தெரியாது. என்னுடைய ஆசாரியர் இட்ட கட்டளை. எங்கள் வீட்டு இளவரசிக்கு நான் செய்ய வேண்டிய பணி. இதில் குறுக்கிட எனக்கு உரிமையில்லை' என்று அவர் பாட்டுக்குத் தம் பணியே கருத்தாக இருந்து விட்டார்.
பெரிய நம்பிகளிடம் ஓடி வந்தார்கள். அவரோ 'எனக்கு ஒன்றும் தெரியாது. உங்கள் வீட்டிற்குக் குழந்தையை அனுப்பியதுதான் தெரியும். மற்றவற்றையெல்லாம் நீங்கள் ஸ்ரீராமாநுஜரிடம் சென்று விசாரித்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லி விட்டார்.
ஸ்ரீராமாநுஜரிடம் நடையாய் நடந்தார்கள். அவர் பார்த்தார், 'அப்படியா! உங்களுக்குத் தேவை என்று சொன்னீர்களே என்பதற்காக அங்கிருந்து பணிவிடை செய்ய ஏவினேன். உங்களுக்கு அது சங்கடமாய் இருந்தது என்றால் அவரை இங்கிருந்தே பணிவிடை செய்யுமாறு சொல்லி விடுகிறேன். எப்படியும் உங்களுடைய திருப்திதான் முக்கியம்' என்றதும் அவர்கள் தம்முடைய தவறுக்கு வருந்தி நாணித் தலை கவிழ்ந்தனர். முதலியாண்டானும் முகம் மாறாதவராய் ஆசாரியனிடமே வந்து சேர்ந்தார். அப்புறம் அந்தப் பெண்ணின் நிலைமை அந்த வீட்டில் எப்படி இருந்திருக்கும் என்று புரிகிறதல்லவா? ஸ்ரீராமானுஜரும் எழுத்தால், உபதேசத்தால், தம் வாழ்வால் பலவித மக்களையும் சீர்மை படுத்தினார் என்பதையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நேரும் சூழ்நிலைப் பிரச்சனை ஒன்றை மிக நேர்த்தியாக, சம்பந்தப்பட்ட மக்களுடைய மனமாற்றத்தைத் தானே நிகழ்வது போல் ஏற்படுத்திவிடும் அருள் உளம்கொள்ள வேண்டிய ஒன்று.
***
No comments:
Post a Comment