புரிதல் -- செய்தல்; செய்கை என்பதனோடு சம்பந்தமுள்ள விதத்தில் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகிறது. understanding என்பது மனோகாரியம். மனத்தினால் செய்யும் செயல். இதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாமா? ஏதோ எதேச்சையாகத் தற்காலத் தமிழில் இந்த விதமான பயன்பாடு வந்துவிட்டது. ஆனால் தமிழ் இலக்கியத்தில் இதற்கு ஏதேனும் ஆதரிக்கும் விதமாக இலக்கியப் பயன்பாடு இருக்கிறதா? என்றால், உண்டு என்பதே விடை. புரிதல் என்ற வினைச்சொல் புறச்செய்கை என்பதற்கு மட்டும் பயன்படுத்தப் படாமல், மனத்தின் செயலான விருப்பம், தியானம், இறைஞ்சுதல் ஆகியவற்றிற்கும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. உதாரணங்கள் பல என்று சொல்லலாம்படி இருக்கின்றன.
முதல் உதாரணம் --
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.(5)
இங்கே புரிதல் -- விரும்புதல் என்பது முதற்பொருளாகவும், புரிதல் -- எப்பொழுதும் சொல்லுதல் என்பதி இரண்டாவது பொருளாகவும் பரிமேலழகரால் சொல்லப் பட்டிருப்பதை அவர்தம் உரையில் காணலாம்.
புகழ் புரிந்தார் மாட்டு -- இறைவனது மெய்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து. புரிதல் -- எப்பொழுதும் சொல்லுதல்.
இரண்டாவது உதாரணம் --
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார் (143)
தீமை புரிந்து ஒழுகுவார் -- பாவம் செய்தலை விரும்பி ஒழுகுவார் என்பது பரிமேலழகரின் உரை. இங்கு விரும்புதல் என்னும் மனத்தின் நிகழ்வு மட்டுமே புரிந்து என்பதற்குப் பொருளாகக் கூறப்பட்டிருக்கிறது. ’புரிதல்’ என்பதே மனத்தின் நிகழ்ச்சியாகிய ’விரும்புதல்’ என்னும் பொருளில் ஆளப்பட்ட இடங்களும் இலக்கியத்திலும், இலக்கணத்திலும் உண்டு.
தொல்காப்பியம், மெய்ப்பாட்டியலில் சூத்திரம் 257 --
“புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.”
இதில் ‘புகுமுகம் புரிதல்’ என்பதற்கு “ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழித் தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி” என்று உரை வரைகிறார் பேராசிரியர். மேலும் விளக்குவதற்காக அவர் கூறுவது, “புரிதல் என்பது மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம்”.
சங்க இலக்கியமும் ’புரிந்த’ என்பதற்கு புறச்செய்கை, மனத்தின் நிகழ்வு என்ற இரு பொருளிலும் ஆண்டிருக்கிறது.
புரிந்த -- புறச்செய்கை
“பெண்கொலை புரிந்த நன்னன் போல” (குறுந்தொகை 292)
புரிந்த -- உள்ள நிகழ்ச்சி
“வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து நம்வயிற் புரிந்த கொள்கையொடு” (நற்றிணை 59)
குறுந்தொகை ’புரிந்த’ என்பதை உள்ள நிகழ்ச்சிச் சொற்களுடன் ஒரு கோவையாக்கியே ஆட்சி செய்கிறது இந்த இடத்தில் --
“நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி” (குறுந்தொகை 400)
ஆனால் இந்தக் காரணங்களால் தறகாலத் தமிழில் புரிதல் என்பதற்கு understanding என்ற பொருளில் ஆட்சி ஏற்பட்டதா என்றால் இல்லை. இப்படித் தங்களுக்கு இலக்கிய, இலக்கணங்களின் பக்கபலம் உண்டு என்பதே தற்காலத் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பெரிதும் தெரியாது. இருந்தாலும் ‘புரிதல்’ என்பது தற்காலத் தமிழின் தாந்தோணியான சொல்லாட்சி என்று நினைத்து ஒதுக்குவோர் ‘புரிந்துகொள்ளுதல்’ என்று பயன் படுத்தலாம். ‘புரிதல்’ என்பதையே பயன் கொள்ள நினைப்போர் இவ்வாறு இலக்கிய, இலக்கண ஆதாரம் தமக்குச் சார்பாகச் சொல்லிக்கொள்ளவும் உண்டு என்பதை உணர்ந்து நிம்மதி அடையலாம். அவரவர் ‘புரிதல்’ அவரவர் பயனே.
***
No comments:
Post a Comment