தேசியம் என்ற விழிப்புணர்விற்கு, இந்தியத் திருநாட்டில், ஈன்ற தாய் விவேகாநந்தா என்றால், மொய்ம்புடனே வளர்த்த இதத்தாய் சகோதரி நிவேதிதா ஆவார். 'எதிர்கால இந்திய மகற்கு நற்செவிலியாய், தாதியாய், நண்பியாய் ஆகிநிற்பாய்' என்று தம் சிஷ்ய ரத்தினத்தை வரவேற்கிறார் விவேகாநந்தர்.
அயர்லாந்தில், கௌண்டி டைரோன் என்னும் இடத்தில், துங்கன்னோன் என்னும் டவுனில் பிறந்தவர் மார்க்கரட் எலிஸபெத் நோபிள். பிறந்த தேதி 28 அக்டோபர் 1867. மேரி இஸபெல் தாய்; சாமுவெல் ரிச்மாண்ட் நோபிள் தந்தை. நான்கு வயது வரை அயர்லாந்தில் தாத்தா வீட்டில் வளர்ந்தவர் அதற்குப் பின் மான்செஸ்டரில் வாழ்ந்த பெற்றோருடன் வளரத் தொடங்கினாள். பல நூற்றாண்டுகளாக ஸ்காட்டியப் புகழ் வாய்ந்தது நோபிள் குடும்பம். செல்டிக் ரத்தம் ஓடுகின்ற வீராங்கனை என்று பின்னாளில் அந்த வீராங்கனையின் குருநாதர் பாராட்டுகின்ற தீரம் இளம் வயதிலேயே புலரும் கதிராய்த் தெரிந்தது குழந்தை நோபிளிடம். ஆனால் அன்றைய பிரிட்டிஷ் தேசமும் பெண்கள் தன்னிச்சையாய்ச் சுதந்திரமாக அறிவும் ஆற்றலும் திகழ வளர்வதற்கு ஏற்ற இடமாய் விளங்கியதும் ஒன்று.
மிஸ் நோபிளுக்குப் பத்து வயதுவரை தந்தை இருந்தார். பின்னர் அவர் இயற்கை எய்தியதும் மீண்டும் தாத்தாவின் அரவணைப்பு. போர்டிங் ஸ்கூல், காலேஜ் எல்லாம் முடித்து, தத்துவம், இலக்கியம், விஞ்ஞானம், கலைகள் என அனைத்துத் துறைகளிலும் திகழ்ந்தவர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டார். விம்ப்ளிடனில் தாமே ஒரு ஸ்கூல் தொடங்கி, தமது கருத்துக்கேற்ப புதிய கல்விச் சிந்தனைகளை நடைமுறைப் படுத்தினார். லண்டன் வட்டார அறிவுக் குழாங்கள் எல்லாவற்றிலும் மிஸ் நோபிள் முக்கியப் புள்ளியாக ஆகிவிட்டார். வெல்ஷ் இளைஞர் ஒருவருடன் திருமணம் செய்துகொள்ள நிச்சயித்திருந்த காலகட்டத்தில் திடுமென நோய்வாய்ப்பட்டு அந்த இளைஞர் இயற்கை எய்தவே, மிஸ் நோபிளின் மனம் ஆழ்ந்த அமைதியை அவாவத் தொடங்கியது.
அப்பொழுதுதான் அமெரிக்காவிலிருந்து ஒரு துறவி வந்திருப்பதாகவும், லேடி இஸபெல் மார்க்கஸென் என்னும் தமது நண்பியின் வீட்டில் அவர் உரையாற்றுவதாக்வும் கேள்விப்பட்டார்.
சொற்பொழிவுக்கு வந்தவர்கள் தனக்கு ஐயங்கள் இருப்பினும் அவற்றை வெளியிடாது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருக்க, மிஸ் நோபிள் மட்டும் விடாமல் தமது ஐயங்களைத் தயங்காது கேட்டுத் தெளிந்தவண்ணம் இருந்தார். அவரது நண்பர்கள் வேண்டாம் என்று குறிப்புணர்த்தியும் பயனில்லை. எனக்குக் கிடைத்த நல்வாய்ப்பு இது; நழுவ விட மனமில்லை என்று மிஸ் நோபிள் ஆர்வமாக இருந்ததை அந்தத் துறவியும் பாராட்டித் தாமும் இவ்வாறுதான் தம் குருவிடம் கடுமையாகக் கேள்விகள் போட்டுத் துளைத்தெடுத்துக் கற்றதாகவும், அதற்குத் தம் குருநாதர் தம்மை, நகை வியாபாரி பரிசோதித்துப் பார்த்துப் பொருளை வாங்குவதுபோல் தம்மையும் நன்கு பரிசோதித்தே ஏற்க வேண்டும் என்று கூறி மகிழ்ந்ததையும் நினைவு கூர்ந்து மிஸ் நோபிளைப் பாராட்டி மகிழ்ந்தார். அந்தத் துறவி சுவாமி விவேகாநந்தர்.
விவேகாநந்தரின் உரைகளைக் கேட்கக் கேட்க மிஸ் நோபிள் மிகுந்த சிந்தனையும், ஆழ்ந்த அமைதியும் தெளிவும் ஒருங்கே அடைந்துகொண்டு வந்தார். தமது எதிர்கால வாழ்வின் தடம் என்ன என்று புரியத் தொடங்கியது.
பல முறை விவேகாநந்தர் மிஸ் நோபிளிடம் இந்தியப் பெண்மணிகளின் சிறப்பையும், ஆனால் அவர்கள் கல்வியும், சமுதாய எழுச்சியும் இன்றி மிகுந்த அவலத்திற்கு ஆளாகியுள்ள துர்கதியையும் மிகுந்த கவலையுடன் எடுத்துரைப்பார். அதனால் போலும் மிஸ் நோபிளுக்குத் தன் எதிர்காலப் பணி இந்தியாவில்தான், அதுவும் பெண்களின் எழுச்சி என்பது தனக்கே ப்ரத்யேகமாகக் காத்திருக்கும் பணி என்ற நிச்சயம் மலரத் தொட்ங்கியது. விவேகாநந்தரை அவளுடைய உள்ளம் தானாகவே குருநாதராக ஏற்றுக்கொண்டு விட்டது. ஆனால் அவரோ மிஸ் நோபிள் இந்தியா வருவதற்கு அவசரப்பட வேண்டாம் என்று தள்ளிப் போடுகிறார். சிஷ்யையின் மனநிலையில் நிலைத்த மிஸ் நோபிளுக்கோ அது வருத்தத்தை அளித்தது. ஒரு வேளை தாம் தகுதியற்றவர் என்று குரு கருதுகிறாரோ என்ற கவலை எழுந்தது. அவரது அறிவு வட்டார நண்பர்களோ மிஸ் நோபிளைக் கடிந்துகொண்டனர். 'உன்னைப் போல் அறிவும் ஆற்றலும் வாய்ந்த இங்கிலாந்து பெண்மணிக்கு இந்தியாவில் என்ன வேலை? உன் வாழ்க்கைதான் வீணாகும். இந்தியா என்றால் அறியாமை, நோய்கள், ப்ளேக், அழுக்கும் அநாகரிகமும். மனத்தை மாற்றிக்கொள்' என்ற உபதேசங்கள் மிகுந்த அக்கறையுடன் உரைக்கப்பட்டன. விவேகாநந்தரும் என்னவென்றால், 'அவசரப்படாதே, நன்கு யோசித்துப்பார். உற்சாகத்தில் ஏதோ செய்துவிட்டு பின்னர் நேரமும் சக்தியும் வீண் என்று வருத்தப்படுவதில் பயனில்லை' என்று நிதாநம் காட்டுகிறார். ஆம். தான் தானே இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க முடிவெடுத்தாக வேண்டும். நீண்ட சிந்தனைக்குப் பிறகு தீர்க்கமாக முடிவெடுத்து விவேகாநந்தருக்கு எழுதினார். என்ன பதில் வருமோ என்று பயந்தவருக்கு வந்த பதில் வரவேற்பு. கூடவே 'ஆனால் எதிர்காலத்தில் நீ இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபடுவாயோ இல்லையோ, அது எப்படி ஆனாலும் நான் என்றும் உன் பக்கம் இருப்பேன். இதில் மாற்றமில்லை' என்ற மிகப்பெரும் ஆதரவு நல்வார்த்தையும் கூடவே வந்தது.
மிஸ் மார்க்கரெட் எலிஸபெத் நோபிள் சகோதரி நிவேதிதாவாக ஆனதுதான் அவருடைய அடுத்த கட்ட வாழ்க்கை. இந்திய சுதேசிய எழுச்சி என்பதைத் தம் வீர உரைகளால் தோற்றுவித்தவர் குரு என்றால் சிஷ்யை அந்தக் கனலைப் பேணி வளர்த்துப் பெருந்தீயாக்கி அடிமைக் காடாம் புன்மை தாதச் சுருளுக்கு நெருப்பாகித் தாயாய், தமக்கையாய், அருந்துணையாய் பாரத நாட்டிற்கு விளங்கியவர்.
சுதேசிய எழுச்சிக்குத் தாம் தம்மை ஈடுபடுத்தியதும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் மிஷன் அமைப்பிலிருந்து தம்மை விலக்கிக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். அதாவது தம் குரு தமக்கு எச்சரித்ததைப் போன்று, 'யாரையுமே சார்ந்து நீ இங்கு இயங்க முடியாது; உன் சுய பலத்தில்தான் நிற்க வேண்டி வரும்', தம் சுய பலத்திலேயேதான் நிற்க வேண்டிய நிலையை உணர்ந்தார். ஆனால் அவருடைய குருநாதர் என்றும் அவர் பக்கம்தானே!
No comments:
Post a Comment