Saturday, May 4, 2019

ஸ்ரீராமகிருஷ்ண இலக்கியத்தில் கொண்ட பித்தம்


1980 இருக்கும் என்று நினைவு. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் சுவாமி கபீராநந்தா அவர்களுடன் அடிக்கடிப் பேசிக்கொண்டிருப்பேன். அந்த சத்சங்கத்திற்காகவே எப்படா சாக்கு என்று ஸ்ரீரங்கத்திலிருந்து சென்னை வந்துவிட வேண்டியது. அப்பொழுதுதான் MSc Physics படித்துக்கொண்டிருந்தேன், செயிண்ட் ஜோஸஃப் திருச்சியில். அப்பாவுடைய வீணாகிக்கொண்டிருந்த ரயில்வே பாஸ்களுக்கு ஓர் உபயோகம் என்னால். மயிலாப்பூரிலேயே உறவினர் வீட்டில் கேம்ப். பிறகு திருவல்லிக்கேணியில் ஓர் உறவினர் வீட்டில். பின்னர் சென்னை மடத்திற்கே நேரடியாக வந்திறங்கி அங்கேயே லீவுப் பொழுதைக் கழித்துவிட்டுத் திரும்பியது. சென்னை மடத்திற்கே சென்று தங்கியது ஒரு சம்பவம்.

உறவினர் வீட்டில் தங்கிய பொழுது காலையில் பூஜைக்குச் சென்று விடுவேன். பிறகு விடிந்தும் விடியாத பொழுதில் அங்குள்ள துறவிகள், பிரம்மச்சாரிகள் ஆகியோருடன் தியானம். பிறகு சுவாமி கபீராநந்தாவின் அறைக்குச் சென்று அவரோடு வெறுமனேயாகவாவது அமர்ந்திருத்தல். காலை டிபன் மணி கேட்டதும் அனைவருடனும் சேர்ந்து போய்ப் பரிமாறுவது, உண்பது. இதை யாரோ பார்த்திருந்தவர் அப்பொழுது செக்ரடரியாக இருந்த சுவாமி தன்மயாநந்தாவிடம் ஏதோவிதமாகச் சொல்லிவிட்டனர் போலும்! அவர் கூப்பிட்டனுப்பி யார் என்ன என்று விசாரிக்கும் தொனியில் ஆரம்பிக்கும் போதே, 'சரி. பேச்சு காலை டிபனைப் பற்றியது போல் தெரிகிறது' என்று யூகித்துக்கொண்டு, 'தினமும் வந்து டிபன் உண்பதைப்பற்றிக் கேட்கப் போகிறீர்களா? உங்களுக்கு அந்தக் கவலை இனி வேண்டாம். இனி நான் உண்ண வரமாட்டேன். இதுவரை உண்டதற்கு ஏதாவது தொகை செலுத்த வேண்டும் என்றால் செலுத்திவிடுகிறேன்.' என்றதும் அவருக்குச் சிறிது அசிங்கமாகிவிட்டது.

'இல்லை. வந்து யாரோ சொன்னாங்க. அதான் கேட்டுவிடலாம்னு' என்றார். என்னைப் பற்றியும், நான் கொண்ட ஈடுபாடுகள் பற்றியும், சொன்னபின்னர் அவருக்கே மிகவும் அசிங்கமாகிவிட்டது.

'நான் காலையில் உண்ணவருவது வயிற்றுப்பாட்டிற்காக இல்லை. நான் தங்கியிருக்கும் வீட்டு உறவினரின் குற்றச்சாட்டே வந்து தங்கி ஒரு நாளாவது வீட்டில் காலை டிபனும் காப்பியும் உண்ண மாட்டேன் என்கிறேனே என்பதுதான். இங்கு நான் வரக் காரணமே துறவிகளும் பிரமச்சாரிகளுமான சத்சங்கம், காலையில் அவர்களிடை நடக்கும் நகைச்சுவைப் பேச்சுகள் இவற்றைப் பார்க்கும் பொழுது எனக்கு மெய்ப்பாடாகத் தோன்றும் தாகுர் காலத்து, பாரநாகுர், காசிப்பூர் நாட்களின் தோற்றம்தான். அதை அனுபவிக்கத்தான் வருவது. காலை நேரத்து அமைதியில் இந்தச் சத்சங்கம் எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நீங்களோ என்னை இல்லாத கொடுமைக்கு வந்து உண்பவனைப் போல் கருதியது நல்ல படிப்பினையாக இருக்கிறது. 'மடாலயங்களின் உணவை ஒருவன் உண்ணக் கூடாது' என்று சாத்திரங்கள் கூறியதன் பொருள் என்ன என்று இப்பொழுதுதான் புரிகிறது. இதுவரை சகித்துக் கொண்டமைக்கு மிக்க நன்றி.' என்று வணங்கிவிட்டுக் கிளம்பப் போனவனை அதிர்ந்துபோய் வலுக்கட்டாயமாக அமர்த்திப் பேசத் தொடங்கினார். இலக்கிய ஈடுபாடுகள் பற்றிக் கேட்டதும், தாம் ஸ்ரீராமகிருஷ்ண கதாம்ருதத்தைத் தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் என்று தமிழில் தயார் செய்வதாகவும், அதைப் பார்க்குமாறும் கூறித் தம் அறைக்கு அழைத்துச் சென்றார். மற்ற ஓர் அறையில் அமர்ந்து தனியாக எந்த தொந்தரவும் இல்லாமல் அதைச் சரிபார்க்கும்படியும், வேண்டுமென்றால் என் பாணியில் சில பகுதிகளை மாற்றி எழுதவும் பணித்துவிட்டுச் சென்றார். எந்த நேரமானாலும் சென்று மடத்தின் சமயலறையில் டீ காப்பி கேட்டு அருந்தலாம் என்று ஆணையும் அங்குள்ளவர்களிடம் சொல்லிவிட்டுப் போனார்.

சுமார் இரண்டு மூன்று பக்கங்கள் பார்த்ததுமே திருப்தியில்லை. அந்தப் பகுதிகளை முற்றிலும் ஆங்கில மொழிபெயர்ப்பின் ரீதியில் புதிதாக இலக்கியப் பாணியில், ஸ்ரீகுருமஹராஜின் பேச்சைப் பேச்சு நடையிலும், அந்தந்த பாத்திரங்களின் தன்மைக்கேற்ப பேச்சு நடையோ, எழுத்து நடையோ அமைத்து மொழிபெயர்த்து வைத்து அவர் வந்ததும் காட்டினேன். மிகுந்த வியப்புக்குள்ளானார்.

'அப்படியே பேசுவதுபோல் எப்படி உங்களால் மொழிபெயர்க்க முடிந்தது? மிகுந்த வேகமும், தத்ரூபமும் கொண்டு விளங்குகிறது உங்கள் மொழிபெயர்ப்பு. ஆனால் நூலாக வரும் போது இப்படிக் கொண்டு வர இயலுமா தெரியவில்லை. இருந்தாலும் நீங்கள் தொடர்ந்து பாருங்கள். எப்பொழுது விடுமுறை கிடைத்தாலும் நேராக இங்கு வந்துவிடுங்கள். எங்கும் தங்க வேண்டாம்.' என்றார். எனக்கு உள்ளூற ஒரு குஷி. நான் குருமஹராஜின் விருந்தினன் ஆகிவிட்டேன் போலும்!

அப்படித் தங்கியிருக்கும் நாட்களில் மாலை நேரங்களில் சுவாமி கபீராநந்தர், இன்னும் ஓரிருவர் மடத்து நூலகக் கட்டிடத்தை ஒட்டி இருந்த நடையில் மாறி மாறி நடப்பார்கள். அப்பொழுது அவர்களுடன் சேர்ந்து நடப்பதும் அவர்கள் பேசுவதைக் கேட்பதும் எனக்கு மிகுந்த உற்சாகம். அப்படிப் 'பேச்சு நடை' ஒன்றில் கபீராநந்தர் ஒரு சமயம் கூறினார். - 'ஸ்ரீராமகிருஷ்ணருடன் வந்த அவரது அணுக்க சீடர்கள் குழாம், அவர்களிடம் நடைபெற்ற அந்த mystic dialogues இவையெல்லாம் பதிவாகிப் பெரும் இலக்கியமாக ஆனதுபோல் உலகில் வேறு எங்கும் ஆனதில்லை.' என்று.

அதற்கு நான், 'அப்படியன்று. இதற்கு முன்னால் இப்படியே அச்சடித்ததுபோல் நடந்திருக்கிறது. இன்னும் விரிவான, துல்லியமான பதிவுகளும் ஏற்பட்டுப் பாதுகாக்கப்பட்டு இன்றுவரை வாழும் சம்ப்ரதாயமாக இருந்து கொண்டிருக்கிறது.'

'என்ன சொல்கிறாய்? எங்கு?' என்றார் நடையை நிறுத்திவிட்டு நேருக்கு நேர் பார்த்து.

ஸ்ரீரங்கத்தில், ஸ்ரீராமானுஜ சம்ப்ரதாயத்தில் மணிப்ரவாளத்தில் அத்தகைய பதிவுகள் மிக அற்புதமாக அமைந்து இருக்கின்றன - என்றேன்.

அவருடைய ஸ்ரீபாஷ்யம் முதலிய நூல்களே வெளியுலகம் அறிந்தவை. ஆனால் உள்கருத்தான, சாரமான mystic tradition என்பது வடமொழியைக் காட்டிலும் முழுமையாகப் பதியப்பட்டுப் பேணிவளர்க்கப்பட்டது தமிழோடு வடமொழி கலந்த மணிப்ரவாள மொழியில்தான். - என்றேன்.

'என்ன செய்துகொண்டிருக்கிறாய் நீ? ஏன் அவற்றையெல்லாம் வெளியில் கொண்டுவராமல் என்ன பண்ணுகிறாய்? இந்த விஷயமே புதிதாக இருக்கிறது நீ சொல்வது!'

ஆம் மஹராஜ். அது உண்மைதான். இந்த விஷயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இதன் அருமை தெரிந்த வித்வான்கள், ப்ரபந்நர்கள் ஆகிய குழுவினரிடமே மட்டும் புழங்கிவருகின்றன. அவர்கள் பூட்டிவைக்கவில்லை. வெளிப்படையாகத்தான் இவற்றைப் பேசி எழுதிவருகின்றனர். ஆனால் இந்தக் கருத்துகளின் நளினமும், நுட்பமும் மிகத் துல்லியமானவை. எனவே வடமொழியில் நன்கு தேர்ந்த வைணவ வித்வான்கள் சிலருக்கேகூட இதன் அருமை புரியாமல் போயிருக்கும் போது மற்ற மக்கள், மற்ற சமயப் பிரிவினர் ஆகியோருக்கு இதன் அருமை புரியாமல் போனது வியப்பே இல்லை. இந்த இலக்கியங்கள் தமிழ் மொழியின் ஆகச் சிறந்த தத்துவ ஆழத்தை பெரும் அளவிற்கு விரிவாக்கி வைத்திருக்கின்றன. தமிழ் மொழி அகப்பொருள் சிறப்பு மிக்க மொழி என்று இருந்த நிலையிலிருந்து, அது மட்டுமன்று. தமிழ் அகத்திணை மொழி மட்டுமன்று. வடமொழிக்குச் சமமாக, சில கோணங்களில் வடமொழியினும் மிக்கு விளங்கும்படியாகத் தத்துவச் செழுமை கொண்ட பயன்பாடு தமிழில் சாத்தியம் என்பதை நிரூபித்துக் காட்டியிருப்பன இந்த இலக்கியங்கள். ஆனால் இங்கு இருக்கும் தமிழ் அபிமானிகளோ அதன் வடமொழிக் கலவையைக் கண்டு விலகுகிறார்களேயன்றி உள்ளே சென்று அது தமிழுக்கு ஆக்கித் தந்திருக்கும் ஆகப்பெரிய சாதனைகளை உணர்வார் இல்லை.'

அன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் நெடுநேரம் நடை.
கோவிலில் மாலை பூஜைக்கான மணி கேட்டதும் விரைந்தோம்.
வழக்கப்படி நான் தாகுரின் அறையில் சென்று என் பாதி இருட்டு மூலையில் அமர்ந்துகொண்டேன்.

*

பன்னிரு வயதில் ஆரம்பித்த பைத்தியம். பாயைப் பிறாண்டும் நிலையையும் கடந்து போய்க் கொண்டிருக்கிறது. என்னோடு சேர்ந்து பைத்தியமானவன் ஒரு நண்பன். ஆனால் நல்ல புத்திசாலி. இது உதவாது என்று ஒரு நிலையில் கழண்டு கொண்டான். இருவர் வீட்டிலும் உறவினர் வந்துவிடக் கூடாது - அதுவும் அவன் வீட்டில் அவனுடைய தாத்தா, என் வீட்டில் என்னுடைய சின்னப் பாட்டி இவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர் காமதேனு. எங்களுக்குள் கோட் வேர்டில் கேட்டுக் கொள்வோம். 'என்ன காமதேனு வந்தாயிற்றா?'
எதற்கு? வைகுண்ட ஏகாதசி என்றால் இவர்கள் கட்டாயம் வருவார்கள். அப்பொழுது அவர்கள் நல்ல மனத்தோடு இருக்கும் நேரம் பார்த்து பிட்டைப் போட்டால் ஸ்ரீராமகிருஷ்ண விவேகாநந்த இலக்கியம் வாங்க வேணப்பட்ட காசு பேரும். பெரிய புத்தகங்களை எல்லாம் அதற்காகவே வெயிட்டிங்கில் வைத்திருப்போம். 5 ரூபா வரை புத்தக விலை இருந்தால் எங்கள் கைக்காசை மீதம் சேர்த்தே எப்படியாவது வாங்கிவிடுவோம். 30 ரூ, 50 ரூ என்றால் காமதேனு வந்தால்தான் உண்டு. அன்றைய நாட்களில் அவ்வளவு தான் நூல்களின் விலையும் இருந்தன. ரூபாய் புழக்கமும் அப்படித்தான் இருந்தது. 100 ரூபாய் பெரிய பணம்.

அப்படித்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் போட்ட சுவாமி விவேகாநந்தர் - ரா கணபதி எழுதியது, சுமார் 15 ரூ இருக்கும் என்று நினைவு, அதை வாங்குவதற்கே எவ்வளவு கிடைச்சுது? எவ்வளவு கிடைச்சுது? என்று கேட்டுக் கேட்டுச் சேர்த்து ஓட்டமும் நடையுமாக ஸ்ரீரங்கத்திலிருந்து மலைக்கோட்டைப் பிள்ளையார் கோயில் வரை சென்று அங்கு மலை மீது இருக்கும் திருப்பராய்த்துறை தபோவனம் புக் ஸ்டாலில் வாங்கியது ஒரு பெரும் மகிழ்வான நிகழ்ச்சி


அப்படித்தான் காமதேனுக்களின் தயவில் ஓர் அற்புதமான நூல் வாங்கினோம். ஸ்ரீரங்க விலாஸ் ராயர் புத்தகக் கடை அப்பொழுது எங்களுக்கு ஒரு தங்கச் சுரங்கமாக மாறியது. சின்ன கடைதான். ஆனால் பழைய முக்கியமான நூல்கள் அவரிடம் வந்து சேரும். ஏதாவது லாபம் வைத்து விற்பார். ஆனால் போய்க் கேட்டால் யாரிடமும் சட்டென்று எடுத்துக் கொடுத்துவிடமாட்டார். பணம் தருகிறேன் என்றாலும் அவருக்கு மனத்தில் தோன்ற வேண்டும் அப்பொழுதுதான் பரணில் கட்டிப்போட்ட நூல்களிலிருந்து புத்தகம் கீழே இறங்கும். இல்லையென்றால் அதெல்லாம் யார் இப்ப கீழ இறக்குறது? அப்பறம் பார்க்கலாம் என்று பதில்.

ஒரு சமயம் நானும் நண்பனும் போய் நின்று நோட்டம் விட்டோம். மேலே பரணில் என் கண்ணில் ஒரு தடி புத்தகம் கண்ணில் பட்டது. அவரிடம் எப்படிக் கேட்டு வாங்குவது? என் மனம் என்னவோ அது முக்கியமான அதாவது ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய நூல் என்று தோன்றிக்கொண்டிருந்தது. அவராகவே ஏதோ நல்ல மூடில் பேசத் தொடங்கினார். 'என்ன படிக்கிறீங்க பசங்களா?' போதும் சந்து கிடைத்தால் நுழைந்து விடுவேன். போட்டுக் குளிப்பாட்டின குளிப்பாட்டில் மனிதர் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஸ்டூல் ஒன்றைப் போட்டு ஏறி எடுத்தார். வாங்கிக் கையில் பார்த்ததும் நண்பன் முதுகில் ஓர் அறை அறைந்தான், செல்லமாக. நூல் - The Gospel of Sri Ramakrishna, by M, Tr by Swami Nikilananda. - பழைய அச்சு ப்ரதி. ஆஹா! என்ன குஷி! ஆனால் அடுத்த கணம் சோகம். கையில் காசு கிடையாது. மனிதர் ஏகப்பட்ட விலை சொல்கிறார். அவரிடம் கெஞ்சிக் கேட்டு அந்த நூலைத் தனியாக வைத்திருக்குமாறும், யாருக்கும் தந்துவிடாமல் இருக்குமாறும் கூறிவிட்டு ஓடி வந்தோம்.

காசைத் திரட்ட வேண்டுமே. என்ன செய்வது? கோயிலில் கருட மண்டபத்தில் அமர்ந்து யோசனை. சரி எப்படியும் நழுவ விடக் கூடாது. வாங்கி விடவேண்டும். வீட்டிற்குப் போனேன். பழைய பேப்பர் கட்டிற்கு எவ்வளவு உபயோகம் என்று அன்றுதான் புரிந்தது. மோழி மோழியாகப் பழைய கட்டுகள் இருக்கும். எல்லாவற்றையும் வேண்டிய அளவு, அதாவது சந்தேகமும் வராத அளவு அப்புறப் படுத்தி விலைக்குப் போட்டேன். கொஞ்சம் காசு தேறியது. அம்மாவிடம் ப்ராணனை எடுத்து அதை வாங்க வேண்டும், இதை வாங்க வேண்டும் என்று சொல்லி அதில் சில ரூபாய்கள், ஏற்கனவே கையிருப்பு கொஞ்சம், என்ன செய்வது மிச்சத்திற்கு? அப்பொழுதுதான் ஓடிவந்தான் நண்பன். அவனுக்கும் எனக்கும் சங்கேத சீட்டி உண்டு. ஒரு மாதிரி வாய் விசில் அடிப்பான். அப்படி என்றால் கூட்டாளி வந்துவிட்டான் என்று அர்த்தம். நான் தயார். நீயும் வீட்டிலிருந்து நைஸாக நழுவி வா என்று முழுப்பொருள். தந்தை என்ற பெரும் ஸ்கார்லண்ட் யார்டு, அக்கா தங்கை என்ற ஒற்றர் படை இவர்கள் கண்ணில் மண்ணைத் தூவுவது லேசுபட்ட காரியம் இல்லை. (இவர்கள் கண்ணில் எல்லாம் மண்ணைத் தூவிவிட்டுக் கடைசியில் என் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டுவிட்டேன் என்பதும் உண்மை). போய்ப் பார்த்தால் சொல்லுகிறான் சந்தோஷச் செய்தி. அவன் வீட்டில் யதேச்சையாக காமதேனு வருகையாம்! ஆஹா! ஏதாவது வழியைத் திறந்து விடுகிறார் ஸ்ரீராமகிருஷ்ணர். அவனுடைய தாத்தா ஏதோ அவசரமாக வந்திருக்கிறார் ஊரிலிருந்து. நாளை காலையிலேயே கிளம்பிவிடுவார். 'எப்படிடா வந்த உடனே கேட்கறது?'

'இதோ பார்! ஆபத்துக்குப் பாவம் இல்ல. நான் அப்படி இப்படியுமாக கொஞ்சம் ரூ திரட்டிவிட்டேன். நீ போ. தயங்காதே. யாரும் பக்கத்தில் இல்லாத சமயம் பார்த்து உன் தாத்தாவிடம் அர்ஜண்ட் குரலில் 'தாத்தா! அவசரமாக ஒரு ரூ கொடு. ஓர் அவசரம். புத்தகம் ஒன்று மலிவான விலையில் வந்திருக்கிறது. அவர் கொடுக்கும் வரை வெயிட் பண்ணிக்கொண்டு நிற்காதே. அவருடைய பண பெல்டை, பச்சைப் பெல்டை எடுத்துக் கொடு. வொர்க் ஔட் ஆகும் போ' என்றேன். அப்படியும் முழுப்பணம் சேரவில்லை. சரி ஒரு வேலை செய்யலாம் என்று நேரே ராயரிடம் போய் இவ்வளவு ரூ தான் கிடைத்தது. தயவு செய்து அந்த புத்தகத்தைத் தாருங்கள். மிச்சம் கிடைத்ததும் கொண்டு வந்து தருகிறோம் என்றோம். என்ன தோன்றியதோ ராயருக்கு! கொடுத்துவிட்டார். 'போங்க வைத்துக்கொள்ளுங்கள். நல்லா படிங்க'. இன்றும் அவர் எங்களுக்கு புண்ணியவான்.! 

அந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு அர்ச்சுன மண்டபத்துப் படிக்கட்டுகளில் உட்கார்ந்து கொண்டு முதலில் படங்களாகப் பார்த்து முடித்தோம். எங்கள் சொந்தக் காரர்களின் படங்கள்! ஆமாம் கமார்புகுர், தக்ஷிணேஸ்வரம், கல்கத்தா எங்கள் சஞ்சார ஸ்தலங்கள். அந்த ஜீவித பாத்திரங்கள் எல்லாம் எங்கள் உறவினர்கள் போலத்தான்! அதான் பைத்தியம் என்று முதலிலேயே சொல்லிவிட்டேனே.! 

அந்த நண்பன் ஒரு பகிர்வுத் தபால் அனுப்பியிருக்கிறான். மரணத்திற்கு அப்பால் என்ன இருக்கிறது என்று ஒரு நகைச்சுவையான ஆனால் சிந்திக்க வைக்கும் ஒரு துணுக்கு. 

 ~DEATH~

 WHAT A WONDERFUL WAY TO EXPLAIN IT.
 
A sick man turned to his doctor as he was preparing to leave the examination room and said,

'Doctor, I am afraid to die. Tell me what lies on the other side.'

Very quietly, the doctor said, 'I don't know.'

'You don't know? You're a Hindu man, and don't know what's on the other side?'

The doctor was holding the handle of the door; On the other side came a sound of scratching and whining.
And as he opened the door, a dog sprang into the room and leaped on him with an eager show of gladness.

Turning to the patient, the doctor said, 'Did you notice my dog? He's never been in this room before. He didn't know what was inside. He knew nothing except that his master was here, and when the door opened, he sprang in without fear. I know little of what is on the other side of death, But I do know one thing...

I know my Master (the Creator ) is there and that is enough.'

*
அப்படித்தானா? கதவிற்கு அந்தப் பக்கம் தாகுர் நிற்பாரா? உண்மையைச் சொன்னால் எனக்கு அந்த நிச்சயம் இல்லை. என்னுடைய இப்பொழுதைய நிலை என்னவோ தாகுர் அறையில் மூலையில் பாதி இருட்டில் அமைதியாக, அவர் உதாசீனப் படுத்தினாலும் பரவாயில்லை என்று நான் உள்ளது உள்ளபடி!

*

No comments:

Post a Comment