ராம்பிரஸாத் என்னும் காளி பக்தர் காளியைத் தர்சித்தவர். அவருடைய பாடல்களை ஸ்ரீராமகிருஷ்ணர் பெரிதும் விரும்பிப் பாடுவார். அவர் பாடல்களில் மூன்று இங்கு என் தமிழாக்கத்தில்.
*
உலகத்தின் தாயே உன்னைக்
குற்றம் ஒன்று சொல்ல வேண்டும்
கண்விழித்து நானிருப்ப
காவலுக்கு நீயிருப்ப
தேகம் மனம் என்ற வீடு
கொள்ளை போகுதே!
காளி உந்தன் கண்முன்னாலே
அகங்கார மமகாரத் திருடர்களாலே
ஒவ்வொரு நாளும் உந்தன்
பேரைச் சொல்ல எண்ணியிருப்பேன்
தற்காப்புப் பலமென்று திண்ணம் இருப்பேன்
ஊடுருவும் வேளையிலே
உறுதியதும் போகையிலே
உன்னும் எண்ணம் நான் மறப்பேன்
உன்பெயரைத் தான் மறப்பேன்.
உன்விளையாட்டு தான் இதென்று
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
அம்மா காளீ உன்னை வேண்டிடவே
கருணை நீயும் தரவில்லையேல்
காதல் உள்ளம் முழுதும் நானும்
எப்படித்தான் உனக்குத்தருவேன்?
குற்றம் என்பால் இல்லையம்மா
கொடுத்தது நீ என்ன உண்டோ
அதுதானே திரும்பவரும் சொல்லம்மா!
தெய்விக நினைவில் நீயும் நில்லம்மா!
புகழும் இகழும் இன்ப துன்பம்
வாழ்வில் எல்லாம் உன் விளையாட்டே
ஆயினும் நீ கூத்தாடிக் கூத்தாடிக்
குழந்தை எமைக் குப்பையிலே எறிவதும் ஏன்?
ஞானத்தின் கதியினிலே நடத்தெமை நீ தாயே!
கவிஞன் இவன் துணிந்துவிட்டான்
காளியின் மர்மம் பாடிவிட்டான்:
மகாமாயையவள் ஜீவனுக்குள்
திருகுவேலை செய்து வைக்கின்றாள்:
சாமபல் குப்பை நான் எனதை
இனிப்புப் பண்டம் போலத் தோன்றச்
சுவைக்க சுவைக்க ஏமாற்றம்
சுவைக்கும் அதிர்ச்சி தடுமாற்றம்.
விழித்துக்கொள் நீ விழித்துக்கொள் நீ
விடுதலை ஆகிப் போய்விடு நீ!
***
காளியைத் தியானம் செய்
கவலை ஏன் உனக்கு?
மயலிருள் அகன்றது
விடியலும் புலர்ந்தது
விரிகதிர் எழுந்தது - அடரும்
வலையிருள் இரிந்தது
தலை உறை சிவனார்
அருள் பிறந்ததனால்
தாமரை மலர்ந்தன.
கண்ணில் மண் தூவும் வேதம்
கண்களைக் கட்டும் தரிசனம் ஆறும்
அவள் யாரென எதுதான் அறியும்?
வேடிக்கை விளையாட்டு யாரால்தான் முடியும்?
குருவா சீடரா கொள்ளை ஆனந்தச் சந்தை
இதில் கூறுவதெங்கே அவர் பாடத்தின் சந்தை?
நடிகர்கள் மேடை நாடகம் எல்லாம்
நாயகி அவளுக்கே சொந்தம்
நாடக உட்பொருள் யாரறியக் கூடும்?
வீரன் ஒரு பக்தன் நகரத்துள் புகுந்தான்
விஷயம் அவனுக்குத் தெரியும்
ராமப்பிரஸாதனோ சொல்லுகின்றான்:
மயல் எனக்கொழிந்தது
மூண்டெழு தீயினை
யாரிங்கே மூட்டை கட்டமுடியும்?
***
இதய கமலத்தில் ஆடுகின்றாள்
இணையற்றவள் அவள் காளி
எதை நான் எண்ணி என்ன செய்தாலும்
அவள் பெயரை விடாமல் நினைப்பேன்.
கண்ணை மூடினால் அங்கவள் இருப்பாள்
தலைகளை மாலையாய் அணிவாள்.
பொதுபுத்தி அதுதான் போனது எங்கே?
பித்தன் என்றெனைப் பலர் அழைபபார்
அழைக்கட்டுமே பித்தம் கொண்டவள் அன்னை
அவளை நான் சொல்வது எல்லாம்
அங்கேயே இதயத்தில் தங்குக தாயே!
ராமப்பிரஸாதன் கதறுகின்றான்:
அம்மா என் இதயத்தை விட்டே
அகலாதே என்றும் என் தாயே
உன் பத கமலத்தில் அர்ப்பணமான
மனித பலியிதை ஒதுக்காதே தாயே!
***
(தமிழாக்கம் - ஸ்ரீரங்கம் மோகனரங்கன்)
No comments:
Post a Comment