பாரதியார் பாட்டில் சில இடங்களில் இந்த சப்த ஜாலங்கள் வருகின்றன. ஒரு பாட்டு 'அக்னிக் குஞ்சு'. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன், அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? என்று கேட்டு பாட்டை முடித்துவிட்டவர் திடீரென்று தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்று ஓசையெழுப்புகிறார். தீப்பொறிக்கும், தழல் வீரத்திற்கும் கவிதையின் பொருளம்புக்குறி போய் வந்துவிட்டது. கவிதை இனி எந்த தளத்திற்கு போக வேண்டுமென்றாலும் முதற் சுழலின் முடுக்கத்திலேயே போக முடியும். சொல்லோய்ந்த இடத்தில் சிக்காப் பொருளைச் சுட்ட சத்தமிடும் ஓசையடுக்கை பயன் படுத்தியதாகவும் கொள்ளவழியில்லை. பின் ஏன் இந்த கிலுகிலுப்பை?
இதைப்போல்தான் 'அகவிழி' என்ற பாட்டிலும். கனவென்றும் நனவென்றும் உண்டோ? இங்கு காண்பது காட்சியல்லால் பிறிதாமோ? மனையிலிருப்பது வானம், அந்த வானத்தின் வந்தவர் தேவர் முனிவர், நினைவது செய்கை அறிவீர், எந்த நேரத்தும் தேவர்கள் காப்பது வையம், வினவிற் பொருள் விளங்காது, அகவிழியைத் திறந்திடில் விண்ணிங்கு தோன்றும் -- என்று கருத்துகளாக அடுக்கியவர் திடீரென்று தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்ற ஓசையை உருட்டுகிறார். எதற்காக?
இதைப்போல்தான் 'அகவிழி' என்ற பாட்டிலும். கனவென்றும் நனவென்றும் உண்டோ? இங்கு காண்பது காட்சியல்லால் பிறிதாமோ? மனையிலிருப்பது வானம், அந்த வானத்தின் வந்தவர் தேவர் முனிவர், நினைவது செய்கை அறிவீர், எந்த நேரத்தும் தேவர்கள் காப்பது வையம், வினவிற் பொருள் விளங்காது, அகவிழியைத் திறந்திடில் விண்ணிங்கு தோன்றும் -- என்று கருத்துகளாக அடுக்கியவர் திடீரென்று தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் என்ற ஓசையை உருட்டுகிறார். எதற்காக?
ஆனால் பாரதியின் குயில் இந்தக் குயில் அல்ல. அது எடுத்ததுமே காதல் வாழ்த்து பாடுகின்ற குயில். காதல் இல்லையேல் சாதல் என்று, மிழற்றாமல், திட்ட வட்டமாக அறிவிக்கின்ற குயில். காதலைப் பற்றி எவ்வளவு பாடினாலும் மற்றவர்களைப் பித்தேற்றுமேவொழிய தான் அந்த அந்த சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் காதலை மாற்றிக்கொள்ளத் தெரிந்த குயில். அகப்பட்டால், 'என்ன செய்வது பஞ்சை பெண் சன்மம், சூழ்நிலைக் கைதி' என்றவாறு பச்சாதாபம் சம்பாதித்துக்கொள்ளத் தெரிந்த குயில். மொத்தத்தில் காதலில் தன்னை இழந்துவிடாத நிதானம் தெரிந்த குயில். தனக்கு பிடிக்காத நிலைமையை தன்னைச் சுற்றி வரும் மானிடனைக் கொண்டு மாற்றிக்கொள்ளத் தெரிந்த குயில். இந்தக் குயிலை நீங்கள் எவ்வளவு தேடினாலும் தமிழ்ச் சோலைகளிலே காண முடியாது. இந்தக் குயில் சீமையிலிருந்து வந்த குயில். அதாவது சாஸர் சுற்றிய சோலை, அவரிடமிருந்து சாவி வாங்கிக்கொண்டு பின்னர் வேர்ட்ஸ்வொர்த் சுற்றிய சோலை. அந்த சோலையில் கக்கு, நைட்டிங்கேல் என்று பெயர்கொண்டு திரிந்த பறவைகள் ஒன்றாகி நம்நாட்டு குயில் உருவத்தில் சமைந்து நிற்கிறது. இந்த யந்திரக் குயிலை பாரதி ஏன் உண்டாக்கினார் என்று யோசித்தால் விஷயம் சுவைபடுகிறது.
அது சரி அந்த நைட்டிங்கேல் சமாச்சாரம் என்ன என்று பார்க்கிறீர்களா? அதாவது பாரதி குயிலில் ஊனுருகப் பாடும் தீஞ்சுவைக் காதல் பாட்டிசைக்கும் குயில் ஒருகணம், மறுகணம் மாடு குரங்கு என்று வித்தியாசமில்லாமல் நடைமுறைக்கு ஒத்துவரும் பிழைக்கும் வழி தெரிந்த, காதலை உயிர்ப் ப்ரச்சனையாக எடுத்துக்கொள்ளாமல் தன்னை பாதுகாத்துக்கொள்ள ஒரு தடுப்பாக பயன் படுத்தத்தெரிந்த விவரமான குயில். இந்த இரண்டு அம்சங்களைத்தான் சாஸர் காதல் உயிர் என்ற கொள்கைக்கு நைட்டிங்கேலையும், காதலாவது கத்திரிக்காயாவது அதிலெல்லாம் மாட்டிக்கொள்ளக் கூடாது என்ற மனப்போக்கிற்கு கக்கூவையும் ப்ரதிநிதிகளாக்கி கவிஞனை சந்திக்க விட்டிருக்கிறார் the cuckoo and the nightingale என்ற தமது கவிதையில். பாரதியின் கைவண்ணத்தில் கவிஞன் பாத்திரம் காதல் பித்து தலைக்கேறிவிட்டிருக்கிறது. கக்கூவும், நைட்டிங்கேலும் இருமனங்களாகக் குயிலுக்குள்ளேயே ஒன்றிவிட்டது. கக்குவிற்க்கும், நைட்டிங்கேலிற்கும் ஏற்படும் பிணக்கம் ( காதல் >< நடைமுறை வாழ்க்கையில் பிழைக்கும் வழி) என்பது மாடு, குரங்கு என்ற பாத்திரங்களைக் கொண்டு காட்டப் பட்டிருக்கிறது. இந்த சீமைச் சோலையின் பட்டரையிலிருந்து வந்த குயில் பேச்சுதான் இந்திய மனத்திற்கும், தமிழ்ப் புலமையுலகிற்கும் வெளியில் நின்று கொண்டு, "ஆன்ற தமிழ்ப் புலவீர்! சோலை , குயில், காதல், சொன்ன கதையத்தனையும் கற்பனையேயானாலும், வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதானும் சற்றே இடமிருந்தால் கூறீரோ?" என்று கேட்கிறது. பின்காலனியாதிக்க இலக்கிய கொள்கையின் நோக்கில் ஆராயத்தக்க விஷயமாகவும் ஆகிறது.
இது ஒருபுறம் இருக்க இந்தக் குயில் எதனுடைய உருவெளிப்பாடாய் இருக்கிறது என்று யோசித்தால் சில விஷயங்கள் தட்டுப் படுகின்றன. இந்தக்குயில் பெண்மையின் உருவாய் காட்டப் படுகிறது. வீரமுருகன் மகளான சின்னக்குயிலி பச்சாதாபத்தால் மாடனை மணக்க சம்மதிக்கிறாள். மணம் பேசிய முறையால் தந்தை, குடும்பத்தினர் சொற்படி குரங்கனை மணக்க ஒருப்படுகின்றாள். தன்னிச்சையாலும், காதலாலும் அரச குமாரனுக்குப் பெண்டாகிறாள். தன் பச்சாதாபத்தாலும், பணிவாலும் விளைந்த விளைவுகள் தன் காதல் ஈடேறுவதை தடுத்து தன்னையும் பாடித் திரியும் பைங்குயிலாக மாற்றி விட்டதை உணர்கிறாள். தன்னுடைய பச்சாதாபம் மாடாக தன் காதல் வழியை மறிக்கிறது. சூழ்நிலைக்கு ஒத்துச் சென்று, எதிர்த்து குரல் கொடுக்காமல் பணிந்து போகும் இயல்பு குரங்காக தன்னை அலைக்கழிக்கிறது. வழிவழியாக வந்த அமைப்புகள்பால் காட்டும் தாட்சணியம் கடைசியில் உண்ணியடிக்கும் மெத்தனத்தில் கொண்டுபோய் விடுகிறது. எத்தனை அழகுக் கனவுகள் வழிவழி வந்த வழக்கத்தின்பால் உள்ள தாட்சணியத்தின் காரணமாக கடைசியில் அந்தக் கனவுகளை பதர் தூற்றி வெறுமையின் முறம் புடைக்க நீளும் நெடுமூச்சுகளாக ஆகிவிட்டிருக்கின்றன என்பதும் பெண்மையின் அகவெளியில் கல்வெட்டான பதிவுகளன்றோ! ஏன் தாட்சணியம் கொள்ளவேண்டும் என்ற ஒற்றைக் கேள்வி எந்த வித சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவோ, எந்த வித நியாயத்தையும் எந்த தரப்பிற்கும் வழங்கவோ செய்வதாகத் தெரியவில்லை. தாட்சணியமும், தவறிழைப்பதும்கூட ஆணின் புறவெளியில் பல சூழ்நிலை அனுதாபங்களுக்கு உரியதாகக்கூடியது என்னும் பொழுது பெண்ணின் அகவெளியில் கூட அவளுடைய மனமாற்றங்கள் ஏன் அவளை சபிக்கப் பட்ட உயிராக காட்டவேண்டும். 'கற்புநிலை என்று சொல்ல வந்தார் அதை இரு கட்சிக்கும் நடுவில் பொதுவில் வைப்போம்' என்றால் கற்புநிலை பிறழ்தலும் இருகட்சிக்கும் பொதுதானே. சூழ்நிலை, மனப்பான்மை, காலத்தின் கட்டாயம், மனோரீதியான கட்டாயங்கள் என்ற ஒத்தடங்களெல்லாமும் இருகட்சிக்கும்தானே.
வழக்கத்தின்பால் கொள்ளும் பச்சாதாபம், அதிகாரத்தின்பால் காட்டும் பணிவு என்பது காதலுக்கு தடை என்றாலும், உயிர் வாழ்க்கையை சுலபமாகக் கொண்டு செல்ல இவைதானே நடைமுறைக்கு வாகாக இருக்கின்றன. இலட்சியத்திற்கு உயிரை விடுவது, காதலுக்கு உயிரை விடுவது, கொள்கைக்கு உயிரை விடுவது, தலைவனுக்கு உயிரை விடுவது என்று இந்த உயிரை அறைந்துவிட எத்தனை சிலுவைகள் அலைகின்றன. இதில் சில சிலுவைகளை நாமே தேடி வந்து நம்மை நாமே அறைந்து கொள்கிறோம். உயிர் போனபின்பு இவை எதற்குமே பொருளில்லை என்பதை நாம் எண்ணுவதில்லை. உயிரின் மீது நமக்கு பிடிப்பு இருக்குமானால் பல வக்கிரத்தனங்களை நாம் தொடர்ந்து வைத்துக் கொண்டு வந்திருப்போமா தெரியவில்லை. எனவே நடைமுறைக்குத் தகுந்தாற்போல் சரிசெய்து கொண்டு போய்விடுவதை அசிங்கம் என்று முகம் சுளிப்பதால் ஆவதொன்றில்லை. எனவே வழக்கத்தின் கொம்பொடிக்கவும், அதிகாரத்தின் அட்டகாசத்தை ஒடுக்கவும் புதிய ஆண்மைத்தனம் முற்படாதவரையில், பெண்மை புழங்க வேண்டிய கட்டாயங்களை நோக்கி நீளும் எந்த சுட்டு விரலையும் மடக்கிக் கொள்ளுதல் நலம். நீசக் குயிலியைத் தண்டிக்க முற்படும் போதெல்லாம் பொறுமை காத்தலே சரியானது. அந்தப் பாட்டுக்குயில் நாம் கேட்டு ரசிப்பதற்கா சுற்றுகிறது? சாபத்தால் அதை குயிலாக்கி, சபலத்தால் அதை அழகாக்கி, சுகத்திற்காக அதின் ஏக்கக் குரலை கீதமாக்கி, எதிர்பார்ப்புகளுக்கு மாறும்பொழுது கோபம் விடைபோல் எழுகிறது. குயிலுக்குள் பெண்மை மறைந்திருப்பது கவிஞன் கண்ணுக்கு மட்டும் புலனாகிவிடுகிறது.
***
No comments:
Post a Comment