Thursday, May 2, 2019

மூதின் மகளிரும் ஆராதனாவும் !

1969 ஆம் வருஷம். திடீரென்று மாலை அலுவலகம் விட்டு வந்த தந்தை, 'சீக்கிரம் தயாராகு. ஒரு சினிமா போகிறோம்' என்றார்அவரது நண்பரும், நாங்களும் போனோம்சினிமா 'ஆராதனா'. தியேட்டரில்தான். திருச்சியில்.
அந்த மலைச்சாரல் குட்டி ரயிலும், அந்தப் பாட்டும், படிக்காத நூலில் பொருந்தாத விழியும், கூரை விரித்த காரில் பொருந்தி அமராத இளமையும் மலையைக் குறிஞ்சித் திணையாக்கினசமீபத்தில் அதே படத்தை டிவியில் பார்த்தேன்இணையத்தில் இருக்கும். ஆனால் என்னமோ பார்த்ததில்லை.

சூரஜ் பரிசு பெறும் கட்டம் அன்று போல் இன்றும் என்னைக் கலக்குகிறது. ஷர்மிளாவின் நரைவிழுந்த முடிகளும், நடுக்குற்ற விழிகளும் நடிக்காமல் நடித்துப் பிசைகின்றன. சூரஜ் பாத்திரத்தில் கன்னாவின் வித்யாசமான நடிப்பு, 'மா' என்னும் போதே நம்மை அந்த வீட்டிற்குள் ஒருவராக ஆக்கிவிடுகிறதுஇதே உணர்ச்சியை வித்யாசமான ஒரு சூழ்நிலையிலும் பெற்றேன்எதேச்சையாகப் புறநானூறு நூலைப் புரட்டினால் மூதின் மகளிரைப் பாடிய பாடல் கண்ணில் படுகிறது.

ஒரு பெண். கணவனும் போரில் பொருது இறந்துபட்டான். காபபாற்றிக் கொண்டிருந்த தமையனும் ஒரு போரில் பட்டுவிட்டான். இனி முதுமைக்கு ஊன்றுகோலாக இருக்கப் போவது ஒரே மகன். ஆனாலும் மனிதரிடைப் போரொழிந்து அமைதி யுகம் தழைக்க என்றுதான் ஆகுமோ? இதோ மறுபடியும் ஒரு போர்செருப்பறை கேட்கிறதுஇருப்பது ஒற்றை மகன்
ஆனாலும் அந்தப் பெண் தன் மகனைத் தலைவாரி எண்ணை வைத்துச் சீவிவிட்டு, குடுமி கட்டி, புதியது உடுத்திவிட்டுக் கையில் வேலைக் கொடுத்து அனுப்புகிறாள். ஏதோ பம்பாய்க்கு வேலைக்குப் போகும் மகனை வழியனுப்புவது போல்இந்தக் காட்சியைக் கண்ட ஓக்கூர் மாசாத்தியார் நான் 'ஆராதனா' பார்த்த போது அடைந்ததை விட நெகிழ்ச்சியை அடைகிறார். அவரது கற்பனையோ, நடந்ததோ, கற்பனை என்றாலும் இன்றும் ஓர் 'ஆராதனா' நிஜத்தை விடவும் நெகிழ அடிக்கிறதேபண்ணிசை எஸ் டி பர்மன், பாட்டுகள் ஆனந்த் பக்ஷி என்பது போல, இந்தப் புறப்பாட்டிற்கும் சில விவரக் கோவை இருக்கின்றன.

இந்தப் பாட்டு பாடப்பட்ட மன நிலையின் போக்கு அதாவது ஒழுக்கம் என்பது போர் வெற்றி என்பதைப் பற்றிக் அக்கறை கொண்டு பாடும் 'வாகை' திணை
அதில் என்ன பிரிவு? அதாவது 'துறை'? மறக்குடியில் பிறந்து வீரமே அன்றி வேறு பேதலிப்பு உணர்ச்சிகள் எதுவும் எழாத மகளிரின் இயல்பான உணர்ச்சிக்கட்ட நடவடிக்கைகள், அதுதான் இங்கு 'மூதின் முல்லை'.

இந்தக் காட்சியைப் பார்த்ததுமே ஓக்கூர் மாசாத்தியாருக்கு 'ச்சே!' என்ற விளிப்புதான் ஏற்படுகிறது. அதை நயம்பட அவர் உரைக்கும் விதம் -

'கெடுக சிந்தை!'

'கடிது இவள் துணிவே!'

ஐய்யோ! என்ன முடிவிற்கு இவள் வந்துவிடடாள்!

இவள் நிச்சயம் மறம் முற்றிய ஆன்ற மறக்குடியின்பாற்பட்ட மகளிர் என்பது சரிதான்.

மூதின் மகளிர் ஆதல் தகுமே!

என்னய்யா இது! மேனாள் உற்ற செருவில் இவளது தமையன் யானை எறிந்து களத்தில் ஒழிந்தான்நேற்று நடந்தது போல் இருக்கிறது ஒரு போர். அதில் இவள் கொழுநன் பெரும் அணியையே எதிர்த்து நின்று அங்கேயே பட்டான்
இவள் உண்மையில் அந்த துக்க காலம் கூட முடியவில்லை. ஆனால் செருப்பறை கேட்டதுதான் தாமதம் உடனே தனக்கிருக்கும் ஒரே கொழுகொம்பான மகனைச் சிங்காரித்து, வேலைக் கையில் கொடுத்து அனுப்புகின்றாளேஇவளை மூதின் மகளிர் என்பது சரிதான். யம்மாடி! கெடுக சிந்தை.

கெடுக சிந்தை ;
கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;

மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;

நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி, யாண்டுப்பட்டனனே;

இன்றும்

செருப்பறை கேட்டு,
விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து,
வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
'செருமுகம் நோக்கிச் செல்க'
என விடுமே!

கெடுக சிந்தை ;
கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;

அன்றைய 'ஆராதனா' போலும் இந்தப் பாடல்!. இதோ எழுதும் போதே எஸ் டி பர்மனின் பண்ணிசையும் ஒலிக்கிறதுஆனால் குறிஞ்சி நிலச் சாரலில் காருக்கும், புகைவண்டிக்கும் பதிலாக குதிரையும், சிறு ரதமும் ஓடும் காட்சி
சூரஜ் பரிசு பெறும் அந்தக் கட்டம் மூதின் மகளிர் ஆதல் தகுமே!!

*** 

No comments:

Post a Comment