Thursday, May 2, 2019

பிள்ளையாரப்பா...!

பார்த்தால் எல்லாம் வினோதம்.
ஒற்றைக் கோடு. 
காதுன்னா காது அப்படி ஒரு காது 
அதுவும் இரு செவி. 
மூன்று கண். 
மேனியோ செம்மேனி. 
இப்படி ஒரு யானை திரிகிறது பார்த்தீர்களா? 
ஒற்றை யானை வேறா..படுத்துகிறது. 
நான் தான் சிறுவயது முதல் இந்த யானைப் பைத்தியம் 
பிடித்து அலைகிறேன் என்று பார்த்தால் எனக்கு முன்னர் 
கபில தேவ நாயனாரும் அலைகிறார். 
'முன்னிளங்காலத்திலே பற்றினேன்' என்கிறார். 
'அவனை ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்' 
என்கிறார் கபில தேவர். 

சிறுவயதில் திருமஞ்சனக் காவிரியின் பக்கத்தில் உள்ள பிள்ளையாரைக் கண்டுகொள்ளாமல் மாலை கடந்து போகாது. 
அது என்னமோ ஒரு வாஞ்சை! அவர் முன்னால் அந்தக் கமபத்தடி ஓரமாக உட்கார்ந்தால் ஏதேதோ கதையெல்லாம் பேசிக்கொண்டிருப்போம். 
அவரும் பேசினாரோ? இருக்கலாம்... தெரியவில்லை,,, ஆனால் நிறைய பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவருக்கு நிகர் அவரே. 

மத்தகஜம் போல் வளர்த்தாய் என்கிறார் ஸ்ரீதாயுமானவர். ஞானக் களிறு எங்கள் தலைவன். 

அப்புறம்தான் வேத புருஷன் சொன்னது தெரியவந்தது.. ஆனால் நாங்கள் முன்னமே அவனுக்கு வைத்த பெயர் ஞானக் களிறு. 

கணாநாம் த்வா கணபதி.ம் ஹவாமஹே 
கவிம் கவீனாம் 

எங்கள் கூட்டத்தின் தலைவனே வா! 
உன்னை அழைக்கிறோம் 
கவிகளுக்கெல்லாம் கவி நீயே. 

கொஞ்சம் கவிதையில் பித்து இந்த யானைக்கு. 

கவிதை மட்டும் நன்றாக இருந்துவிட்டால் ஒரு மத ஆட்டம் போடும் பாருங்கள்..அழகு..! 

ஆனால் ஐயோ! எங்களை எவ்வளவு கண்ணும் கருத்துமாய்க் காக்கும் என்கிறீர்கள்.... யாரும் முன்னரோ பின்னரோ எங்களைத் தாக்க வர முடியாது. 

வரு கோட்டு அருபெருந்தீமையும் 
காலன்தமர் அவர்கள் அருகோட்டரும் 
அவர் ஆண்மையும் காய்பவன் 

ஆனால் அன்புக்குக் கட்டுப்படும் அந்த எளிமை இருக்கிறதே அது தனி 

கூர்ந்த அன்பு தரு கோட்டரு மரபில் 
பத்தர் சித்தத் தறி அணையும் 

ஊரை என்ன உலுத்தர்களின் உலகத்தையே இந்த ஒற்றை யானை போதும் த்வம்சம் செய்ய 

ஆனால் இந்த யானையைக் கட்ட ஒரு தறி உண்டு என்கிறார் கபில தேவர். - அன்பு தரு பத்தர் சித்தத் தறி, இந்தத் தறியால் நீங்கள் கட்ட வேண்டாம், காட்டினாலே போதும் தானே வந்து கட்டுண்டு நிற்கும். 

ஒற்றைக் களிறு, ஞானக் களிறு. அதனால் ஒண்களிறு என்கிறார் கபில தேவர். 

மொழியின் மறைமுதலே! முந்நயனத்து ஏறே! என்கிறார் அதிராவடிகள். 

மலம் செய்த வல்வினை நோக்கி, உலகை வலம் வரும் அப் புலம் செய்த காட்சிக் குமரற்கு முன்னே, புரிசடைமேல் சலம் செய்த நாரைப்பதி அரன் தன்னைக் கனி தரவே வலம் செய்துகொண்ட மதக் களிறே! உன்னை வாழ்த்துவனே என்கிறார் நம்பியாண்டார் நம்பி. 

ஆனால் இவர்களையெல்லாம் விஞ்சுகிறார் நம் காலத்து தேச பக்தி நாயனார் ஆகிய பாரதி. கணப்தியைப் பாட ஒரு பாரதிதான் என்று சொல்ல வேண்டும். 

பக்தி யுடையார் காரியத்திற் 
பதறார், மிகுந்த பொறுமையுடன் 
வித்து முளைக்குந் தன்மைபோல் 
மெல்லச் செய்து பயனடைவார், 
சக்தி தொழிலே அனைத்துமெனிற் 
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்? 
வித்தைக் கிறைவா கணநாதா, 
மேன்மைத் தொழிலிற் பணியெனையே. 

ஏன் கணபதியைப் பணிகிறீர்? என்ன நோக்கம்? என்றால் பாரதியின் உள்ளம் வெளிப்படுகிறது. 

நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும் 
உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றி 
ஆள்வதும் பேரொளி ஞாயிறே யனைய 
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும் 
நோக்கமாக் கொண்டு நின்பத நோக்கினேன்; 
காத்தருள் புரிக, கற்பக விநாயகா, 
காத்தருள் புரிக.... 

அது என்னமோ... பிள்ளையார் என்றால் எல்லாருக்குமே குரலில் ஒரு தனி உரிமைதான் தொனிக்கிறது.. பாருங்கள் என்ன கட்டளை..! அன்பின் கட்டளைக்குத் தலையை ஆட்டி ஆட்டி ஆமோதனம் தெரிவிக்கும் அறிவுக் களிறு அன்றோ! 

ஞானாகாசத்து நடுவே நின்று நான் 
'பூமண்டலத்தில் அன்பும் பொறையும் 
விளங்குக, துன்பமும் மிடிமையும் நோவும் 
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம் 
இன்புற்று வாழ்க' என்பேன்! இதனைநீ 
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி 
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே! 
இந்நாள், இப்பொழு தெனக்கிவ் வரத்தினை 
அருள்வாய்; 

அவரோடு நாமும் சேர்ந்து இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் உளம் கலப்போமாக! 

*** 

பிள்ளையாரைப் பற்றிய ஸ்ரீராமலிங்க வள்ளலாரின் அநுபவம் மிகவும் சுவையானது. 

அருள் பெருவெள்ளமே ஞானக் களிறின் ஒழுகு மதப் புனல் என்கிறார் வள்ளலார். எத்தகைய அருள்? உலகெலாம் தழைப்ப அருள் மதம். 

உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி ஒழுகுமாமத முகமும் ஐங்கரமும் இலகு செம்மேனிக் காட்சியும், இரண்டோடிரண்டு என ஓங்கு திண் தோளும் கண்டவர் ஒன்றை விழைகிறார் அது என்ன? 

உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும் நின் தனக்கே கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி, கழல் இணை நினைந்து, நின் கருணை வெள்ளம் உண்டு, இரவு பகல் அறியாத வீட்டினில் இருந்து, நின்னோடு விள்ளல் இல்லாமல் கலப்பனோ? என்று விழைகிறார். 

மருள் உறு மனமும் 
கொடிய வெங்குணமும் 
மதித்தறியாத துன்மதியும் 
இருள் உறு நிலையும் நீங்கி 

நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன்? 

அந்த ஞானக் களிறு, அதன் இயல்பு என்ன? 

அது முதலில் ஏதோ மிருகமோ, அல்லது யானைத்தலையும், தேவ உடலும் கொண்ட ஐங்கரன் என்னும் வடிவு அதெல்லாம் இல்லை. பின் என்ன? 

சொல்லுகிறார் வள்ளலார் -- 

அதுவா? அது முதலில் ஒளி. 

ஒளியா? இயற்கையில் எத்தனையோ ஒளிகளைப் பார்க்கிறோம். மிகவும் பிரகாசமாய் இருக்கும் பேரொளி போலும்! 

இல்லை. இது யாரும் இயற்கையில் காணாத ஒளி. ஒளி என்றால் பொருட்களை விளங்கச் செய்யும். இது மெய்ப்பொருளை விளக்கும், பொய்ப்பொருளை அகற்றும் அற்புத ஒளி. அது மட்டுமன்று அருளே வடிவான ஒளி. 

நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு முன்னால் ஓர் ஒளி வந்து நிற்கிறது. அது என்ன என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். உண்மையெலாம் விளங்குகிறது. இதுவரை ஆட்சி செய்த பொய்யுலகம் எங்கே காணவில்லை. அந்த ஒளிக்கு உடல், கை கால் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் இதயம், பேரிதயம் இருக்கிறது. ஏன்? ஆம். அருளே ஒளியாக ஆகி நிற்கிறதோ என்று அருள் ததும்ப நிற்கிறது. 'அருளேயாம் நல்லொளியே, ஒளி போமாயின் ஒளி போமாயின் இருளே இருளே' என்கிறார் பாரதி. 

அந்த ஒளியும், அருளுமான ஒன்றுதான் பிள்ளையார் என்னும் மூர்த்தி என்கிறார் வள்ளலார். 

அருள் உறும் ஒளியாய்! 
அவ்வொளிக்குள்ளே அமர்ந்த 
சித் பர ஒளி நிறைவே! 

ஆனால் அந்த ஒளி-அருள் வடிவ விநாயகம் நமை ஏற்க வேண்டுமே! 

அது என்று மறுத்தது? நாம் தானே அதை மறுத்து ஓடுகிறோம். ஆனால் ஜீவனுக்கு அது ஏற்குமோ ஏற்காதோ என்ற பதைபதைப்பு. ஏன்? 

கானல் நீர் விழைந்த மான் என 
உலகக் கட்டினை நட்டுழன்று அலையும் 
ஈன வஞ்சக நெஞ்சகப் புலையேனை 
ஏன்று கொண்டருளும் நாள் உளதோ? 

ஆமாம் அது என்ன விதமான ஒளி என்று சொன்னீர்? 

ஊனம் ஒன்றில்லா உத்தமர் உளத்தே 
ஓங்கு சீர் பிரணவ ஒளியே! 

ஓ அதுதான் பிள்ளையாரோ! 

பெரும் பொருட்கு இடனாம் 
பிரணவ வடிவில் பிறங்கிய 
ஒருதனிப் பேறு! 
அரும்பொருள் ஆகி 
மறைமுடிக் கண்ணே அமர்ந்த 
பேர் ஆனந்த நிறைவு! 

தரும் பரபோக சித்தியும் 
சுத்த தருமமும் முத்தியும் 
சார்ந்து விரும்பினோர்க்கு அளிக்கும் 
வள்ளல் சித்தி விநாயக விக்கினேச்சுரன் 

என்கிறார் வள்ளலார். அவரது அநுபவம் நமக்கெலாம் ஒளியும், அருளும், ஓங்குயர் மதியும், உலகிடை அமைதியும், உள்ளத்தெழுச்சியும், உவகையும், அன்புமே தந்து சிறக்கட்டும். 
ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் 

*

No comments:

Post a Comment