'உள்ளது
சிறத்தல்' என்றபடி உள்நின்ற உண்மைதான் வெளிப்படுகிறது. அது ஆன்மிக தளத்திலும் அவ்வாறே. ஆனால்
அது என்ன ஆன்மிகம், ஆன்மிகமற்றது என்று ஒரு வித்யாசம்? எது ஆன்மிகம்? எது ஆன்மிகம் இல்லாதது? நம்மாழ்வார் என்னும் பிரபந்ந குலத் தலைவர் கூறியதைப் பார்த்தால் ஆன்மிகம் அற்ற பொருள் ஒன்று உண்டோ என்றுதான் கேட்கவேண்டும். கரந்தசில் இடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும் கரந்தெங்கும் பரந்துளன் என்கிறார் நம்மாழ்வார்.
ஹிந்து
மதம் உலக பொருட்களையே இரண்டாகப் பிரிக்கிறது. தனக்குத்தானே ஒளிரும் பொருள். தனக்கு ஒளிராமல் பிறர்க்கு ஒளிரும் பொருள். இந்த இரண்டு பிரிவில் அடங்கும் உலகப் பொருட்கள். அது என்ன தனக்குத்தானே ஒளிரும் பொருள்? இங்கே 'ஒளிரும்' என்ற வார்த்தைக்கு என்ன பொருள்? அகல் விளக்கு போல் சுடர் வீசுவது என்று பொருள் அன்று. ஒளிரும் என்றால் அர்த்தப்படுவது என்று பொருள். It becomes meaningful
to itself. தனக்குத்தானே
அர்த்தப்படும் பொருள். தான் பிறர்க்கே அர்த்தப்படும் பொருள்.
ஜீவன்
என்பதை எடுத்துக்கொள்வோம். உடலை எவ்வளவு கூறிட்டுப் பார்த்தாலும் சரி, மைக்ராஸ்கோப் வைத்து நுணுக்கமாகப் பார்த்தாலும் சரி உடலில் ஜீவன் என்பதைப் புறவயமாகப் பார்க்கமுடியுமோ? இல்லை சார்; மூளையில நோண்டிப் பார்த்தால் ஜீவன் அங்க இருக்கும் சார் -- என்று சொல்ல முடியாது. நாம் மூளையைத்தான் கிட்டத்திலேயே அறுவை சிகிச்சை செய்து பார்த்துவிட முடிகிறதே! அப்படி அறுவை செய்யும் போது எப்பொழுதாவது சின்னதாக ஜீவன் என்று ஒளி பள பள என்று
வருகிறதா? இல்லையே.
ஆனால்
ஜீவன் இருக்கிறதா? இந்தக் கேள்வியே அபத்தம். நாம் செய்யும் அறுவை சிகிச்சை, மூளை பற்றிய காட்சி, புரிதல், இப்பொழுது நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த எழுத்து, அதை நீங்கள் கண்டு படித்துக் கொண்டிருப்பது, கணினி, எல்லாமே, சகல பொருட்களின் காட்சி அனுபவம் எல்லாம் இந்த ஜீவன் இருக்கிறது என்ற அடிப்படையில்தான் அர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. ஜீவனே இல்லை சார் என்று நீங்கள் வார்த்தையால் சொல்வதற்கும் அங்கு முன்பு ஜீவன் இருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஜீவன் இருக்கிறது என்பதை நாம் வேறு எதையேனும் புற உதவி கொண்டு அர்த்தப்படுத்திக் கொள்கிறோமோ?
அதாவது
இந்த டேபிள் இருக்கிறது என்றால் நீங்கள் பார்க்கிறீர்கள், புறத்தில் ஒரு பொருள் இருக்கிறது; அதைக் குறிக்கிறேன் என்று நீங்கள் அதன் வடிவம் அகலம், உயரம், அமைப்பு, அடர்த்தி, பொருள் தன்மை, பயன் எல்லாம் கொண்டு 'ஆம் இது டேபிள்தான்; இருக்கிறது' என்று அர்த்தம் கொள்கிறீர்கள். அந்த டேபிளுக்குத் தெரியுமா தான் இருக்கிறோம், டேபிளாக இருக்கிறோம் என்றெல்லாம்? அது தனக்குத்தானே அர்த்தப்படும் வகையைச் சேர்ந்த பொருள் அன்று. அர்த்தம்
கொள்ளும் திறன் வாய்ந்த வேறு ஒரு பொருளுக்குத்தான் அர்த்தமாகுமே அன்றி தனக்குத்தானே அர்த்தப்பட்டுக் கொள்ளாத பொருள் புற உலகப் பொருட்கள்.
ஆனால்
ஜீவன் எப்படி? ஜீவன் இருக்கிறது என்பதை அர்த்தப் படுத்திக்கொள்ள வேறு ஒரு பொருளின் உதவியை நாட முடியாது. தானே தனக்கு அர்த்தப் படும் பொருள் ஜீவன். தான் இருக்கிறோம் என்பதும், தான் ஜீவன் என்பதும், தனக்கே அர்த்தமாகிற காரணத்தால்தான் புறத்தில் வேறு ஒரு வடிவத்தில் ஜீவன் இருக்கிறதா என்று புறத்தடயங்களை வைத்து அறியும் போதும் அடிப்படையாகத் தானே தனக்கு சாட்சியாக நின்று அர்த்தப்படுவதை ஒப்பிட்டேதான் பிறிதொரு ஜீவனையும் அறிகிறது.
ஆக
தனக்குத்தானே அர்த்தப்படும் பொருள் என்பதையே 'தனக்கே ஒளிரும் பொருள்' என்று உருவகமாகக் குறிப்பது வழக்கம். ஒளி கூட ஏன் ஒளியாகிறது? பொருட்களை அர்த்தப்படுத்தும் காரணத்தினால்தானே.? இவ்வாறு தனக்குத்தானே அர்த்தப்படும் பொருளுக்குப் பெயர் 'ப்ரத்யக்' என்பதாகும். Pratyak. இவ்வாறின்றி தனக்குத் தானே அர்த்தப் படாமல் பிறிதொன்றுக்கே அர்த்தப்படும் பொருள் (அதாவது உலகப் பொருட்கள் எல்லாம்) அதற்குப் பெயர் 'பராக்'.
ஆக
உலகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் இரண்டு வகையில் அடக்குகிறது ஹிந்து மதம். (இங்கு ஹிந்து மதம் என்று எதைக் குறிக்கிறேன்? வேத வேதாந்தங்கள், ஆகம சித்தாந்தங்கள் ஆகியவற்றின் கூட்டுறவு இயக்கத்தை.) ஆக பராக், ப்ரத்யக்
என்ற இரு பிரிவில் பிரபஞ்சம் அடக்கம். ப்ரத்யக் என்ற பிரிவில் ஜீவன், பரம்பொருள் என்பன வரும். ஆக ப்ரத்யக் என்ற
வகையைச் சேர்ந்த ஜீவன், பராக் என்ற வகையைச் சேர்ந்ததாக ஆக நினைத்தால் தர்மத்திலிருந்து
தவறுதலாகும்.
Subjective >< Objective என்ற சொற்கள் இந்த ப்ரத்யக் >< பராக் என்ற இரட்டையைக் குறிக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. ஏதோ ஒருவகையில் குறிப்பதாகக் கொள்ளலாம். சரி. மனம், சித்தம், புத்தி, அஹங்காரம் ஆகியவை எல்லாம் உள்ளம் சம்பந்தப்பட்டவைதானே? எனவே ப்ரத்யக் கோஷ்டியில் சேர்க்கலாமா? கூடாது. அந்தகரணங்கள்
நான்கும் பிரத்யக் அல்ல. பராக் என்ற வகையையே சாரும். ( பராக் மட்டுமன்று. ஜடம். ஜடம் என்பது தானே ஒளிராது; தனக்காகவும் ஒளிராது. அஜடம் என்பது தானே ஒளிரும்; ஆனால் தனக்கு ஒளிராது) அவற்றினிடத்தில் இருப்பது போல் நாம் மயங்கும் ஒளியானது ப்ரத்யக் ஆன ஜீவனிடமிருந்து கடன்
வாங்கி ஜொலிக்கும் ஒளியாகும். அதாவது அந்தகரணங்கள் நமக்குக் காட்டும் அர்த்தப்பாடு அவற்றின் சொந்தத் திகழ்ச்சி அன்று. ஜீவனின் அண்மையினால் அவையும் தமக்குத்தாமே அர்த்தப்படுவனபோல் தோற்றம் காட்டுகின்றன.They shine in
borrowed light from the Jiva. அவற்றின்
ஒளியை ஹிந்து மதம் சிதாபாஸம் என்று கூறுகிறது. சித் என்றால் ஜீவனுக்குப் பெயர் -- அறிவுப்பொருள். ஆபாஸம் -- பிரதிபலிப்பு.
அந்தகரணங்களில்
தெரியும் ஒளி சிதாபாஸம். சுய ஒளியன்று. அந்தகரணம் என்றால் என்ன என்று பார்க்கிறீர்களா? இப்பொழுது சொன்னோமே, மனம் சித்தம், புத்தி, அஹங்காரம் என்று, இந்த நான்கும் தான் அந்தகரணம். அந்த என்றால் உள்ளே; கரணம் என்றால் கருவி. Internal
instruments -- அந்தகரணங்கள்.
***
No comments:
Post a Comment